ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இன்றைய கேரளமான திருவிதாங்கூகளின் ஒரு பகுதியாக இருந்தது. நாடு முழுவதும் சுதந்திரக் கனல் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த அந்நேரத்தில் நாஞ்சில் நாடு திருவிதாங்கூர் மன்னராட்சியின் இரும்புப் பிடியில் சிக்கி மூச்சுத்திணறிக் கொண்டிருந்தது.
மன்னராட்சியின் அக்கிரமங்களை, அநியாய வரிகளை எதிர்ப்பதாகவே மக்களின் போராட்டங்கள் இருந்தது. அந்த வகையில் நாஞ்சில் நாட்டின் விடுதலைப் போராட்டம் என்பது பெரும்பகுதி தொழிலாளர்களின் உழைப்பாளிகளின் உரிமைப் போராட்டத்துடன் இணைந்திருந்தது.
1939களில் இந்திய தேசிய காங்கிரசின் விளவங்கோடு தாலுகா செயலாளராக ஜி.எஸ். மணி இருந்தார். அன்றைய தினம் மார்த்தாண்டம் சந்தையில் விற்பனை செய்வதற்காக பொருட்களை கொண்டு வருபவரிடம் அநியாயமாக சுங்கம் வசூலிப்பது வாடிக்கையாக இருந்தது. யாரும் இதனை கேள்வி கேட்க முடியாது. சுங்கம் வசூலிப்பவர்கள் நிர்ணயிப்பதுதான் கட்டணம். இதனை செலுத்த வேண்டுமென்பது மட்டுமல்ல, சரியான சில்லரை கொடுக்காத போது மீதி பணத்தை சுங்கம் வசூலிப்பவர்கள் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள்.
இதற்கெதிராக சந்தை கூடும் செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் மக்களைத் திரட்டி மறியல் உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடைபெற்றன. ஜி.எஸ். மணி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில் சிறுவனாய் இருந்த ஜி.எஸ். மணியின் தம்பியான டி. மணியும் பங்கெடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்தபோது டி. மணியை சிறுவன் என்று சொல்லி காவல்துறையினர் கைது செய்யவில்லை. அதே நேரம் சுங்கம் வசூலிப்பவர்களின் அடியாட்கள் மிரட்டினர். ஆனாலும் டி. மணி இத்தகையப் போராட்டங்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்தார். 1944ல் தனது 17வது வயதில் டி. மணி காங்கிரஸில் உறுப்பினராகி நாட்டு விடுதலைக்காகப் போராடினார்.
மகாத்மா காந்தி தலைமையில் நாடு முழுவதும் சட்டமறுப்பு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், ஆங்கில நீதிமன்றம், அலுவலகம் மற்றும் கல்வி நிலைய புறக்கணிப்பு போன்ற வடிவங்களில் சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட்டு வந்தபோதிலும் இந்தியாவிலிருந்த நூற்றுக்கணக்கான சமஸ்தானங்களில் (மன்னராட்சி பகுதிகளில்) அந்த இயக்கம் நடத்தப்படவில்லை. மன்னர்கள் எனப்படுபவர் இந்தியர்கள். அவர்கள் சமஸ்தானங்களில் போராட்டம் நடத்தினால் அந்த மன்னர்களின் ஆதரவை காங்கிரஸ் இழந்துவிடும். எனவே அங்கே போராட்டம் எதுவும் நடத்தக்கூடாது என்று காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இதை காங்கிரஸிலிருந்த சோசலிஸ்ட்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் கடுமையாக எதிர்த்தனர். சுதேச மன்னர்கள் ஆங்கிலேய அரசாங்கத்தின் துதிபாடிகள் அவர்கள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் எதேச்சதிகாரம் தான் நிலவுகிறது என்று கம்யூனிஸ்ட்டுகள் வாதிட்டனர்.
ஆனாலும் காந்தியும், காங்கிரஸ் கட்சி தலைமையும் மன்னராட்சி பகுதிகளில் போராட்டம் நடத்த மறுத்தனர். கம்யூனிஸ்ட்டுகளும், காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகளும் நாடு முழு சுதந்திரம் பெறவேண்டும், மன்னராட்சி முறை முற்றிலும் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
கே.சி. ஜார்ஜ், பி.டி. புன்னூஸ், எம்.என். கோவிந்தன் நாயர், பி. கிருஷ்ணபிள்ளை, பி.எ. சாலமன், பொன்னர ஸ்ரீதர் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் திருவிதாங்கூர் மன்னராட்சிக்கு எதிராக அதன் திவானாக இருந்த சி.பி. இராமசாமி ஐயருக்கு எதிராக தொழிலாளர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினர். ஆலப்புழை, சேர்த்தலை போன்ற இடங்களில் கயிறு திரிக்கும் தொழிலாளர்களை திருவிதாங்கூர், கொச்சி பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களை அமைப்பு ரீதியாகத் திரட்டி சங்கம் அமைத்து போராடினர்.
இதன் வீச்சு நாஞ்சில் நாட்டிலும் பிரதிபலிப்பை ஏற்படுத்தியது. அத்தகைய தாக்கத்திற்கு முதலில் ஆட்பட்டவர் ஜி.எஸ். மணி ஆவார். அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களான கே.சி. ஜார்ஜ், பொன்னரை ஸ்ரீதர் போன்றவர்களுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. இதன் விளைவாக கம்யூனிஸ்ட் கட்சியில் ஜி.எஸ். மணி தன்னை இணைத்துக் கொண்டார். அத்தோடு தனது சகோதரர்கள் பாக்கியராஜ் மற்றும் டி. மணி ஆகியோரையும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக்கினார்.
இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கட்சி உறுப்பினர் அட்டையில் “பல லட்சம் புரட்சியாளர்களின் சூடான ரத்தத்தைக் கொண்டு கட்டி வளர்த்த கட்சிக்கு எந்த பங்கமும் ஏற்படுத்த மாட்டேன் என்று நான் உறுதியளிக்கிறேன்”. என்ற வாசகம் மலையாளத்தில் அச்சிடப்பட்டிருக்கும்.
அகில திருவிதாங்கூர் தோட்டத் தொழிலாளர் சங்கம் , அகில திருவிதாங்கூர் அப்பளத் தொழிலாளர் சங்கம், பீடித் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் நகரில் வர்த்தகத் தொழிலாளர் சங்கம், பயோனியர் பஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கான சங்கம், அச்சகத் தொழிலாளர் சங்கம், வடசேரி எரிசாராயத் தொழிலாளர் சங்கம் போன்ற சங்கங்களை உருவாக்கி தொழிலாளர்களின் உரிமைக்காய், கூலி உயர்வுக்காய் போராடியதோடு, மன்னராட்சிக்கு எதிராகவும், நாட்டு விடுதலைக்கான போராட்டங்களையும் கம்யூனிஸ்ட்டுகள் முன்னெடுத்தனர். இத்தகைய பணியை விளவங்கோடு தாலுகா பகுதிகளில் நிறைவேற்றுவதில் ஜி.எஸ். மணி மற்றும் டி. மணி ஆகியோர் பெரும்பங்கு வகித்தனர்.
இந்தியா விடுதலை பெற்றபோது திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்தியாவோடு இணையாது. தனி சுதந்திர நாடாக இருக்கும் என்று திவான் சர்.சி.பி. இராமசாமி ஐயர் அறிவித்தார். கம்யூனிஸ்ட்டுகள் இந்த அறிவிப்பை எதிர்த்து சமஸ்தானம் முழுவதும் போராட்டங்கள் நடத்தினர். நாஞ்சில் நாட்டில் காங்கிரஸ் தலைவர்களான நேசமணி பொன்னப்பநாடார் ஆகியோர் திவானுக்கு அறிப்பிற்கு ஆதரவாக இருந்தபோது ஜி.எஸ். மணி, டி. மணி உள்ளிட்ட கம்யூனிஸ்ட்டுகள் திவானை எதிர்த்து இந்தியாவுடன் இணைய வேண்டுமென போராட்டத்தை நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர்கள் சர்.சி.பி இராமசாமிக்கு ஆதரவான கூட்டங்கள் நடத்தியபோதெல்லாம் அங்கே சென்று அதற்கெதிராக கோசங்கள் எழுப்பி தடுத்து நிறுத்தினர். சர்.சி.பி. இராமசாமி ஐயரை எருமையாக, எமதர்மனாக சித்தரித்து கருத்துப்படங்களை வரைந்து விநியோகித்தனர். இக்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்ததால் தலைமறைவாக இருந்துகொண்டே காவல்துறையிடம் பிடிபடாமல் இப்போராட்டங்களை நடத்தினர்.
தாய் தமிழகத்துடன் இணைத்திடமொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டுமென வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்றது. சிலர் இதனை சாதியப் போராட்டமாகவும், மலையாளிகளுக்கு எதிரான போராட்டமாகவும் சித்தரிக்க முயன்ற போது கம்யூனிஸ்ட்டுகள் தமிழர், மலையாளி ஒற்றுமை ஓங்குக என்ற கோஷத்தோடு போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர்.
ஜீவானந்தம், ஜி.எஸ். மணி, டி. மணி, எம்.எம். அலி, திவாகரன், சோமு போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று மொழிவாரி மாநிலங்களின் தேவைகுறித்து பிரச்சாரம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பொதுக்கூட்டங்கள் நடத்தினர். மறியல், உண்ணாவிரதம் என போராட்டங்களை நடத்தினர். அன்றைய திருக்கொச்சி மாகாணத்தின் முதல்வராக இருந்த பட்டம் தாணுபிள்ளையின் காவல்துறை, போராட்டம் நடத்தியவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது.
1954 ஆகஸ்ட் 11 அன்று புதுக்கடை மற்றும் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பேரணிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் திரளாக பங்கெடுத்தனர். புதுக்கடை பேரணியில் ஜீவானந்தம் உரையாற்றினார். மார்த்தாண்டம் பேரணியில் ஜி.எஸ். மணியும், டி. மணியும் உரையாற்றினர். மக்கள் கூட்டத்தைக் கண்டு மிரண்ட காவல்துறை ஜி.எஸ். மணி மற்றும் டி. மணி ஆகியோரை கொன்றுவிடுவது என்ற முடிவோடு துப்பாக்சிச்சூடு நடத்தியது. டி. மணி மயிரிழையில் தப்பினார். இதில் இன்னொருவர் பலியானார். ஆனால் காவல்துறை டி. மணி இறந்துவிட்டார் என்று சந்தோஷப்பட்டது. டி. மணி இறந்துவிட்டார் என்ற தகவலால் கட்சி அலுவலகத்தில் செங்கொடி இறக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் கருப்பு பாட்ஜ் அணிந்து துக்கம் அனுஷ்டித்தனர்.
காவல்துறையால் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்ட டி. மணி இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்திலும், மன்னராட்சி ஒழிப்பு போராட்டத்திலும், குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கும் போராட்டத்திலும் புடம் போடப்பட்ட அவரது போராட்டம் வாழ்க்கை அத்துடன் நின்றுவிடவில்லை.
குமரி மாவட்டத்தில் தொழிலாளர்களின் உரிமைக்காய் அவர் நடத்திய போராட்டங்களும், அவரது கொடிய சிறைவாழ்க்கையும், தலைமறைவு வாழ்க்கையும், மயிற் கூச்செறியும் அவரது போராட்ட நடவடிக்கைகளும் இன்றைக்கும் இளைஞர்களுக்கு உத்வேக மூட்டக்கூடியதாய் இருந்து கொண்டிருக்கிறது.