பிறப்பு முதல் சாதியச் சமூகத்தின் இழிவுக்கும் கொடுமைகளுக்கும் முகங்கொடுத்த பீமாராவு அம்பேத்கர் எல்லாத் தடைகளையும் வென்று கல்வியில் முன்னேறியதோடு, தக்கவர்கள் துணைகொண்டு அயல்நாடுகளிலும் கல்வியைத் தொடர்ந்தார். அமெரிக்காவில் கொலம்பியப் பல்கலைக்கழகத்திலும், இலண்டன் பொருளியல் கல்விக் கழகத்திலும் ஆராய்ச்சிகள் செய்து பட்டங்கள் பெற்றார். அப்போதும் எப்போதும் தாயகத்தில் சாதிக் கொடுமைகளால் நசுக்கப்படும் மக்களை மறவாமல் நினைந்து, அவர்களின் விடியலுக்கு வழி தேடினார்.

அம்பேத்கர் வருகை

இந்தியாவுக்கு, சரியாகச் சொன்னால் தாய்மண் மராத்தி யத்துக்குத் திரும்பியது முதலே 1920களின் தொடக்கத்தி லிருந்தே அம்பேத்கர் சாதி எதிர்ப்புக் களத்தில் இயங்கத் தொடங்கினார், தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களையும் சாதியெ திர்ப்பில் மெய்யாகவே அக்கறை கொண்ட மற்றவர்களையும் திரட்டி சத்தியாகிரக வழியில் இந்துச் சமூகத்தில் மாற்றம் கொண்டுவர முடியும் என்று முதலில் நம்பினார்.

காந்தி வருகை

சற்றொப்ப அதேகாலத்தில் அம்பேத்கருக்குச் சற்று முன்னதாக அருகிலுள்ள குசராத்தில் வந்திறங்கிய ஒருவர் 1916ஆம் ஆண்டு அகமதா பாத்தில் தீண்டாமை இழிவுக்கு எதிராகச் செய்த முழக்கம் நாடெங்கும் அதிர்வலைகளைப் பரப்பிக் கொண்டிருந்தது. அவர்தாம் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. பனியா வகுப்பில் பிறந்து சட்டம் படித்து வழக்கறிஞர் தொழில் செய்வதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றவர் அப்போதுதான் இந்தியாவுக்கு, சரியாகச் சொன்னால் தாய்மண் குசராத்துக்குத் திரும்பியிருந்தார்.

தென்ஆப்பிரிக்காவில் காந்தி

அம்பேத்கர் தாமே நேராகத் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளானவர். தம்மக்களின் துயரத்தையும் பட்டுணர்ந்தவர். காந்தி பனியா மேல்சாதிக்காரர். அம்பேத்கர் போல் தீண்டாமைக் கொடுமைக்கும் இழிவுக்கும் ஆளாகிற வாய்ப்பு காந்திக்கு இல்லை. ஆனால் தென்ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற வெறியின் இனஒதுக்கலை அவரே சந்தித்தார். அவரைப் போல் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து வந்த குசராத்தி கள் மட்டுமல்ல, மற்றவர்களும் கடவுச் சட்டம் போன்ற நிறவேற்றுமைச் சட்டங்களுக்கும் பல விதமான இழிவுகளுக் கும் ஆளாகக் கண்டார். இந்திக்காரர்கள், பத்தானியர்கள், அனைவரிலும் முக்கியமாகத் தமிழர்கள் இருந்தார்கள்.

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டிலேயே சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்டு அல்லலுற்ற தமிழர்கள் இலங்கை, பிஜித்தீவுகள், மொரிசஸ் போன்ற பிரித்தானியக் குடியேற்ற நாடுகளுக்கு ஒப்பந்தக் கூலிகளாகச் சென்றது போலத்தான் தென் ஆப்பிரிக்காவுக்கும் கப்பலேறி, நட்டால் கடற்கரையில் வந்திறங்கினார்கள். பெருந்தோட்டங்களில் மட்டுமல்ல, நாடெங்கும் தோண்டப்பட்டுக் கொண்டிருந்த கனிமச் சுரங்கங்களிலும் அவர்கள் அடிமைகளாக வேலை வாங்கப் பட்டார்கள். தென்ஆப்பிரிக்காவில் தமிழ் மக்கள் அடைந்த துன்பங்களை பாரதியார் தமிழச்சாதியில் பட்டியலிட்டார். காந்தி தென் ஆப்பிரிக்காவில் சத்தியாகிரகம் என்ற எளிய வரலாற்று நூலில் விரிவாக எடுத்துரைக்கிறார்.

தென்ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் அல்லது ஆசியர்கள் என்று இனங்குறிக்கப்பட்ட மக்களில் இந்துக்களும் இருந் தார்கள்; இசுலாமியர்களும் இருந்தார்கள்; அதேபோல் பனியாக்களும் இருந்தார்கள்; பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் இருந்தார்கள். மொழியால், சாதியால், மதத்தால் வேறுபட்ட இம்மக்களை ஓரணியில் திரட்டி நிறுத்தாமல், கொடிய வெள்ளை நிறவெறியரசை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. பலதரப்பட்ட இந்த மக்களை ஒன்றுபடுத்தும் வரலாற்றுப் பொறுப்பு இளம் காந்தியைச் சார்ந்தது, எஞ்சிய தெல்லாம் நாமறிந்த வரலாறு. புதுமக்காலத்தில் தென்ஆப்பிரிக்க மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு முன்னோடியாகத் திகழ்ந்த தென்ஆப்பிரிக்க இந்தியர்களின் உரிமைப் போராட்டத்தை வழிநடத்தியவர் காந்தி! வழி நடந்தவர்கள் தமிழர்கள்! மற்றவர்கள் எல்லாம் இதற்குப் பிறகுதான்! இதன் வரலாற்றுக் குறியீடுதான் தில்லையாடி வள்ளியம் மையின் ஈகம்.ambedkar and gandhiகாந்தியின் மூன்று உத்திகள்

இந்தச் செறிவான பட்டறிவோடு தாயகம் திரும்பினார் காந்தியார். அவருக்காகக் காத்திருந்தது இந்தியத் தேசிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு. படிப்பாளிகள், தொழில் முனைவர்கள், அதிகார வகுப்பார் ஆகியோரின் சபையாக இருந்த காங்கிரசின் தலைமையிலான இந்தியத் தேசிய இயக்கத்தைப் பெருந்திரளான மக்களின் இயக்கமாக மாற்றியதுதான் காந்தியாரின் வரலாற்று வகிபாகமாக அமைந்தது. இதற்கு அவரது மூன்று உத்திகள் அல்லது அணுகு முறைகள் அடிப்படை ஆயின.

(1) இந்தியாவின் பன்மொழி இயல்பை அறிந்தேற்கும் வகையில் காங்கிரஸ் அமைப்பை மொழிவழி அலகுகளாகப் பிரித்தமைத்தல்; (2) இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலி யுறுத்தல்; (3) இந்துச் சமூகத்தின் ஓர்மைக்குத் தடையான தீண்டாமைக்கு எதிரான இயக்கம். மூன்றாவதில் ஈண்டு கவனம் கொள்கிறோம்.

இந்து என்றால் என்ன?

இந்து என்ற சொல் (1) ஒரு புவியியல் பெயராகவும், (2) ஓர் இறையியல் கருத்தினமாகவும், (3) ஒரு சமூகப் பொருளியல் கட்ட மைப்பாகவும் இருப்பதை அம்பேத்கர் தெளி வாக வெளிப்படுத்தினார்,

முதல் இரு கூறுகளிலும் தீண்டத்தகாத மக்களுக்கும் இடமிருப்பினும் மூன்றாவது கூறாகிய இந்துச் சமூகக் கட்டமைப்பில் அம்மக்களுக்கு இடமில்லை. இந்தப் பொருளில் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போதுள்ளபடி தலித்து மக்கள் இந்துக்கள் அல்ல என்றாகிறது. அவர்களுக்கு இது விருப்பத் தேர்வு இல்லை. இதுதான் கட்டாயமாகச் சுமத்தப்பட்ட தகுநிலை. இந்துச் சமூகத்தின் சாறமே நால்வர்ணச் சாதியம்தான் என்பது அம்பேத்கரின் பார்வையாக இருந்தது. இந்தச் சாதிச் சமூக அமைப்பின் நச்சு விளைச்சல்களில் ஒன்றுதான் தீண்டாமை. வர்ணம் உள்ளவரை சவர்ணர்களும் அவர் ணர்களும் இருப்பார்கள். வர்ண அமைப்பைக் கலைக்காமல் அவர்ணர்களை ஏற்றுக்கொள்ளும்படி சவர்ணர்களிடம் மன்றாடுவதால் நால்வர்ண அமைப்பை ஒழித்துவிட முடியாது. சாதிகள் உள்ளவரை சாதி கெட்டவர்கள் இருப்பார்கள், அவர்களுக்கு எதிரான இழிவும் கொடுமையும் நீடிக்கும். சாதிகள் இருக்கும் வரை புறச்சாதிகளும் இருக்கத்தான் செய்யும். வர்ண சாதியமைப்பைப் பாதுகாத்துக் கொண்டே தீண்டாமை ஒழிப்பு என்பது வெறுங்கனவே.

கடவுளின் குழந்தைகள்

இதற்கு மாறாக, காந்தியார் தீண்டாமையை இந்துச் சமூகத்தின் ஒரு பிறழ்வாக மட்டும் பார்த்தார். அவர் இந்துச் சனாதனத்தைப் போற்றினார். நால்வர்ண அமைப்பை நியாயப் படுத்தினார். தீண்டாமையைக் கைவிடும்படி இந்துக்களிடம் விண்ணப்பித்தார். அது பாவம் என்றார்; கொடுங்குற்றம் என்றார். பஞ்சமர்களை - தாழ்த்தப்பட்ட மக்களை - கடவுளின் குழந்தைகள் என்ற பொருளில் அரிஜன் என்று பெயரிட்டழைத்தார். அரிஜன் அல்லாதவர்களைக் கொண்டு அரிஜன் சேவா சங்கம் அமைத்தார். காந்தியின் அணுகுமுறை தீண்டத்தகாத மக்களை அன்பினால் கொல்வதாகும் என்றார் அம்பேத்கர்.

காந்தி-அம்பேத்கர் கருத்து முரண்

காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே சாதியம் தொடர்பான இந்தக் கொள்கை முரணே தொடக்கம் முதல் இறுதிவரை இருவருக்கும் இடையிலான கருத்தியல் - அரசியல் பிணக்கின்மைய இழையாக ஓடிக்கொண்டிருந்தது. சாதியம், அதன் விளைவான தீண்டாமை இவைகுறித்து அம்பேத் கருக்கும் காந்திக்கும் இருந்த கருத்து முரணுக்குச் சான்றாக ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டலாம் :

இழிதொழில் புனிதமா?

காந்தியார் துப்புரவுத் தொழிலாளர்களை இந்தச் சமூகத் தின் தாய் என்று வர்ணித்தார். குழந்தைக்கு அன்னை செய்யும் கடமைகளை அவர்கள் செய்வதாகச் சிறப்பித்துச் சொன்னார். காந்தியார் நிறுவி நடத்திய ஆசிரமங்களில் அனைவரும் தமது கழிப்பறைகளைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும். காந்தியார் தன்னை ஒரு பங்கி என்று சொல்லிக் கொண்டார். பங்கிதான் தோட்டி என்பதுபோல் மலம் அள்ளும் தொழிலாளி. ஒருமுறை அம்பேத்கருடன் உரையாடும்போது காந்தி சொன்னார்: அடுத்த பிறவியில் மலம் அள்ளும் தொழிலாளியாகப் பிறக்க விரும்புகிறேன்.

அம்பேத்கர் சொன்னார்: இந்த இழிவான தொழிலை இந்தப் பிறவியிலேயே ஒழித்துவிட வேண்டும் என விரும்பு கிறேன். நீங்கள் அடுத்த பிறவி வரை நீடிக்க விரும்புகிறீர்கள்.

மனித மலத்தை மனிதர் கையால் அள்ளும் இழிதொழி லைப் புனிதப்படுத்துவதைத்தான் இன்றளவும் நரேந்திர மோதி செய்துவருகிறார். இன்றளவும் மலக்குழியில் மூச்சுத் திணறிச்சாகும் மனிதனுக்கு இந்தியக் குடியரசில் விடிவுகாலம் பிறக்கவில்லையே! மலக்குழியில் சாவதுதான் இந்தப் புண்ணிய பூமியில் புனிதச்சாவோ?

மகத் போராட்டம்

சாதி ஒடுக்குமுறையாளர் திருந்த விண்ணப்பம் செய்வதல்ல, ஒடுக்குண்ட மனிதர்களை அணி திரட்டிப் போராடுவதே விடிவுக்கு வழிகாட்டும் என அம்பேத்கர் நம்பினார். தாழ்த்தப் பட்ட வகுப்பு மக்களை அணிதிரட்டி அவர்வழி நடத்திய முதல் போராட்டம்தான் 1927ஆம் ஆண்டு நடைபெற்ற மகத் சத்தியாகிரகம். இதற்காக முதலில் ஒரு மாநாடுதான் நடை பெற்றது. மகத் மாநாட்டைத் திட்டமிட்டு ஒழுங்கு செய்த இளைஞர் பிற்காலத்தில் தோழர் மோரே என்று புகழ்பெற்ற இராமச்சந்திர பாபாஜி மோரே. மகத் மாநாட்டில் சற்றொப்ப மூவாயிரம் தலித்து மக்கள் கலந்து கொண்டார்கள். அவர்களில் பலர் 1914-18 முதல் உலகப் போர்க் காலத்தில் பிரித்தானியப் படையாட்களாக இருந்தவர்கள்.

1927 மார்ச்சு 20ஆம் நாள் மகத் மாநாட்டுப் பேராளர்களிடம் அம்பேத்கர் சொன்னார்: நாம் சௌதார் குளத்துக்குச் செல்வது தண்ணீர் அள்ளிக் குடிப்பதற்காக மட்டுமன்று. மற்றவர்களைப் போல் நாமும் மனிதப் பிறவிகளே என்று சாற்றப் போகிறோம். நிகர்மை நெறியை நிலைநாட்டப் போகிறோம். மகத் குளத்திலிருந்து திரும்பிவந்த பேராளர்கள் மீது இந்து மதவெறிக்கும்பல் ஒன்று தாக்குதல் தொடுத்தது. பெண்கள் உட்பட அறுபது எழுபது பேர் காயமுற்றனர். இதுபோதாதென்று பார்ப்பனர்கள் மகத் குளத்துக்குத் தீட்டுக் கழிக்கவும் செய்தனர். எப்படித் தெரியுமா? 108 சட்டிகளில் பசுஞ்சாணம், பசுமூத்திரம், பால், நெய், தயிர் கலந்து குளத்தில் கொட்டி வேதமந்திரங்கள் முழங்கத் தீட்டுக்கழித்து முடித்தனர். இது அம்பேத்கரை சீற்றங் கொள்ளச் செய்தது. அவர் ஒரு போராட்டத்துக்குத் திட்டமிடலானார். தாழ்த்தப் பட்ட மக்களின் சத்தியாகிரகத்துக்காகப் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தொண்டர்களைத் திரட்டினார். சௌதார்குளம் தனியாருக்குச் சொந்தமென்று பொய் சொல்லி சாதி இந்துக்கள் சிலர் நீதி மன்றத்தில் தடையாணை பெற்றனர்.

மனுஸ்மிருதி எரிப்பு

அம்பேத்கர் கூட்டிய இரண்டாம் மகத் மாநாடு 1927 திசம்பர் 25ஆம் நாள் கூடியது. இந்த மாநாட்டில் பார்ப்பனியக் கொள்கைக் கையேடாகிய மனுஸ்மிருதி கொளுத்தப்பட்டது. கொளுத்தியவர் முற்போக்குப் பார்ப்பனர் பாபுசாகப் சகஸ்ரபுத்தே. முதல் உலகப் போரின் முடிவுக்குப்பின் அரசியல் களத்தில் எழுந்த புதிய வாய்ப்புகளின் பக்கம் அம்பேத்கரின் கவனம் திரும்பியது. அரசியல் அதிகாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் அவை. பிரித்தானிய அரசின் நோக்கங்கள் குறித்து அம்பேத் கருக்கு எவ்வித மயக்கமும் இல்லை. 1930 ஆகஸ்டில் நடைபெற்ற அனைத்திந்திய தாழ்த்தப்பட்ட வகுப்புகள் மாநாட்டுத் தலைமையுரையில் அம்பேத்கர் இதனைத் தெளிவாக்கினார் :

வருந்தத்தக்க நிலைமைகள் நிலவுவதை பிரித்தானியர் விளம்பரப்படுத்த முடிவெடுத்தது அவற்றை அகற்றும் நோக்கத்துடன் அல்ல. இதனைச் சாக்கிட்டு இந்தியாவின் அரசியல் முன்னேற்றத்தை மந்தப்படுத்த வேண்டும் என்பதற்காகவே.

அரசியல் அதிகாரம்

தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரம் பெறாமல் அவர்களுக்கு விடியலில்லை என்ற முடிவுக்கு அம்பேத்கர் வந்திருந்தார். அவர் சொன்னார் :

“உங்கள் குறைகளைப் போக்க உங்களால் மட்டுமே முடியும், உங்கள் கையில் அரசியல் அதிகாரம் இல்லாமல் உங்களால் இதைச் செய்யமுடியாது. பிரித்தானிய அரசு இப்படியே இருக்கும்வரை இந்த அரசியல் அதிகாரத்தில் எவ்விதப் பங்கும் உங்களைச் சேராது. சுயராஜ்ய அரசமைப் பில்தான் நீங்கள் அரசியல் அதிகாரம் பெறச் சிறிதாவது வாய்ப்புள்ளது. இஃதல்லாமல் உங்கள் மக்கள் விடியல் பெற முடியாது.” 1909 மின்டோ-மார்லி சீர்திருத்தம், 1919 மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தம் ஆகியவற்றுக்குப் பின் ஒரு புதிய அரசமைப்பு பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. புதிய அரசமைப்பில் தலித் மக்களின் குரல் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் அம்பேத்கர் முனைப்புடன் ஈடுபட்டார்.

1909 சீர்திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு தனிக் குழுவாக ஏற்கப்பட்டு அவர்களுக்குச் சட்டமன்றத்தில் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. தீண்டப்படாத மக்களும் பழங்குடிகளும் இந்துக்கள் அல்ல என்ற கருத்தை அப்போதே முஸ்லிம் லீக் முன்வைத்தது.

தனி ஒதுக்கீட்டுக் கோரிக்கை

முஸ்லிம்கள் இந்துச் சமூகத்துக்கு வெளியே இருப்பது போலவே தாழ்த்தப்பட்ட மக்களும் இந்துச் சமூகத்துக்கு வெளியேதான் உள்ளனர். அவர்களுக்கும் தனிஒதுக்கீடு தேவை என்று இப்போது அம்பேத்கர் கேட்டார். காந்தி இதை வன்மையாக மறுத்தார். அவர்களும் இந்துச் சமூகத்தின் அங்கமே என்று வாதிட்டார். தீண்டாமை ஒழிப்பு என்பது இந்துச் சமூகத்துக்குட்பட்ட சீர்திருத்தமே, அரசியலில் அவர் களைத் தனிக்குழுவாக கருதுவது இந்து தர்மத்தை அழித்து விடும் என்று அச்சப்பட்டார்.

சைமன் ஆணையம்

பிரித்தானிய அரசு 1927ஆம் ஆண்டு சைமன் ஆணை யத்தை அமைத்தபோது காங்கிரஸ் அதனைப் புறக்கணிப்ப தாக அறிவித்தது. அம்பேத்கர் சைமன் ஆணையத்துக்கு ஒத்து ழைப்பு வழங்கி தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை வலுவாக முன்வைத்தார். 1930 மே மாதம் சைமன் ஆணையம் அறிக்கை அளித்தது. அதன் பரிந்துரைப்படி இலண்டனில் வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில் அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் கலந்து கொண்டனர். மாகாண சட்டமன்றங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானிய அரசு ஒப்புக்கொள்ளுமாறு செய்வதில் அம்பேத்கர் வெற்றி கண்டார்.

வகுப்புவாரித் தீர்வு

1932 ஆகஸ்டு 16ஆம் நாள் பிரித்தானியத் தலைமை யமைச்சர் இராம்சே. மக்டொனால்டு அறிவித்த வகுப்புவாரித் தீர்வு (ஊடிஅஅரயேட ஹறயசன):

முற்பட்ட சாதிகள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், ஐரோப்பியர்கள், இந்தியக் கிறித்தவர்கள், ஆங்கிலோஇந்தியர்கள், தீண்டப் படாதார் என்று ஒவ்வொரு குழுவுக்கும் தனிவாக்காளர் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கொதித்தெழுந்தார் மகாத்மா! மற்ற எந்தக் குழுவுக்கும் ஒதுக்கீடு வழங்குவது பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்குவதை மட்டும் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று உறுதியாக அறிவித்தார். வெறும் அறிவிப்போடு நிற்கவில்லை. சாகும்வரை பட்டினிப் போராட்டம் தொடங்கி விட்டார்.

காந்தியின் வன்முறை

அம்பேத்கருக்கு மிகப்பெரும் நெருக்கடி! காந்தி உயிரிழந்தால் பழி அம்பேத்கரைச் சாரும். அதைவிடவும் மோசம், இந்துக்களின் சினம் தாழ்த்தப்பட்ட மக்கள்மீது திரும்பும். பெரும் படுகொலைகள் நிகழலாம். நெருக்கடி அம்பேத்கருக்குத்தானே தவிர, பிரித்தானிய அரசுக்கல்ல, விட்டுக்கொடுங்கள் என்று தேசியத் தலைவர்களும் தலித் தலைவர்களும் கூட அம்பேத்கரை வலியுறுத்தலானார்கள். என்ன நடந்தாலும் விட்டுக்கொடுக்காதீர்கள் என்று அம்பேத் கருக்கு அறிவுரை சொன்ன ஒரே ஒருவர் பெரியார் மட்டுமே. கடைசியாக அம்பேத்கர் விட்டுக்கொடுக்க வேண்டிய தாயிற்று. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனி வாக்காளர் தொகுதி என்ற அம்பேத்கர் கனவைப் பலியிட்டு காந்தி பிழைத்துக் கொண்டார்.

காந்தியின் அகிம்சைக் கொள்கை பொய்மையானது என்பதற்குச் சான்றாகச் சில நிகழ்வுகளை அவரின் குற்றாய் வர்கள் எடுத்துக்காட்டு வதுண்டு. ஆனால் என் பார்வையில் அவரது பூனா உண்ணாநோன்புதான் மிகப்பெரும் சான்று. அது ஒரு வன்முறை அச்சுறுத்தல், அம்பேத்கரை வீழ்த்து வதற்காக பாமர தலித்துகளுக்கு காந்தி விடுத்த வன்முறை மிரட்டல். உளத்தியல் வன்முறை.

பூனா ஒப்பந்தம்

1932 செப்டம்பர் 24ஆம் நாள் ஒப்பமிடப்பட்ட பூனா ஒப்பந்தப்படி, தனிவாக்காளர் தொகுதி இல்லாமல் தலித்து களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 70இலிருந்து 148 ஆக உயர்த்தப்பட்டது. தேர்தலுக்குமுன் நான்கு வேட்பாளர்களடங்கிய பட்டியலை முன்வைக்க தலித்துகளுக்கு உரிமை உண்டு. இவர்களில் ஒருவர் பொதுத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சமரசம் செய்யப்பட்டது.

பூனா ஒப்பந்தம் என்பது தலித்துகளுக்கு காந்தி செய்த இரண்டகமே! அம்பேத்கர் ஆழ்ந்த ஏமாற்றமடைந்தார். 1933ஆம் ஆண்டு காந்தி அரிஜன் இதழைத் தொடங்கினார். அம்பேத்கரிடம் வாழ்த்துச் செய்தி கேட்ட போது, தீண்டத் தகாதவனின் செய்தியை இந்துக்கள் மதிக்கமாட்டார்கள் என்று விடையளித்தார். வாழ்த்துச் செய்திக்கு மாற்றாக வேறொரு செய்தியை அனுப்பி அதனை வெளியிடுமாறு கேட்டார் :

சாதியமைப்பின் துணை விளைபொருளே புறச்சாதி! சாதிகள் உள்ளவரை புறச்சாதிகளும் இருக்கும். சாதியமைப்பை அழிக்காமல் புறச் சாதியை எதனாலும் விடுதலை செய்யமுடி யாது. இந்துச் சமயத்தின் இந்த நச்சுக்கொள்கையைக் களை யெடுக்காமல் வரவிருக்கும் போராட்டத்தில் இந்துக்களைக் காப்பாற்றவும் அவர்களைத் தப்பிப்பிழைக்கச் செய்யவும் எதனாலும் முடியாது.

சாதியொழிப்பு

காந்தியார் தீண்டாமையைக் களைய வேண்டும் என்று பேசிக்கொண்டே தீண்டாமையையும் அதற்கடிப்படையான வர்ண சாதியமைப்பையும் புனிதக் கட்டளைகளாகக் கொண்ட வேதங்கள், ஸ்மிருதிகள், உபநிடதங்கள், புராணங்கள், கதைகள் உள்ளிட்ட இந்து சாத்திரங்கள் எதையும் கண்டிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவற்றைப் புனிதம் என்றும் போற்றிக் கொண்டிருந்தார். மாறாக, அம்பேத்கர் இந்து சாத்திரங் களைக் கூர்மையாகச் சாடினார் என்பதை சாதியொழிப்பு என்ற அவரது உரையிலிருந்து அறியலாம். இந்து மதத்தை சீர்திருத்தம் செய்யும் நோக்கம் கொண்ட ஆரியசமாஜிலிருந்து கிளைவிட்ட ஜத்பத்தொடக் மண்டல் அம்பேத்கரைப் பேச அழைத்தனர். அவர் எழுதியனுப்பிய உரையின் வெப்பம் அவர்களை மிரளச்செய்துவிட்டது. அவர்கள் அதைத் திருத்தக் கேட்டபோது அம்பேத்கர் உறுதியாக மறுத்துவிட்டு அதே உரையை நூலாக வெளியிட்டார். அதுதான் 1936 மே மாதம் வெளிவந்த சாதியொழிப்பு!

தற்சார்புத் தொழிலாளர் கட்சி

1935ஆம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டத்தின்படி 1937இல் மாகாணச் சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடக்க விருந்தது. 1936 ஆகஸ்டு மாதம் அம்பேத்கர் ஒரு தொழிலாளர் கட்சியை நிறுவினார். அது தற்சார்புத் தொழிலாளர் கட்சி எனப்பட்டது. இதற்கிடையில் தாழ்த்தப்பட்ட மக்களை இந்து மதப் பிடியிலிருந்து விடுவிக்க அம்பேத்கர் விரும்பினார். நான் தீண்டத்தகாதவன் என்ற இழிவோடு பிறந்துவிட்டேன். அது என் குற்றமன்று. ஆனால் இந்துவாகச் சாகமாட்டேன். இது என் சக்திக்கு உட்பட்டதே. 1937 பொதுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் பரவலாக வெற்றி பெற்றது. தற்சார்புத் தொழிலாளர் கட்சி பெரிதாக வெற்றி பெறவில்லை.

1939இல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. நாட்டின் அரசியல் சூழல் அடியோடு மாறிவிட்டது. காங்கிரஸ் மாகாண அரசுகள் பதவி விலகின. போர் நெருக்கடியைப் பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற காங்கிரஸ் செய்த பேரம் பலிக்கவில்லை.

1942 ஏப்ரல் மாதம் அம்பேத்கர் தற்சார்புத் தொழிலாளர் கட்சியைக் கலைத்துவிட்டு அனைத்திந்திய அட்டவணைச் சாதிகள் கூட்டமைப்பை நிறுவினார். அதே ஆண்டு சூலை மாதம் வைசிராய் மன்றத்தில் சேர்ந்துகொள்ள அம்பேத்கர் அழைக்கப்பட்டார். அவர் தொழிலாளர் நலனுக்குப் பொறுப் பேற்றார்.

அமைச்சரவைத் தூதுக்குழு

இரண்டாம் உலகப்போர் முடிந்தபின் அதிகாரக் கை மாற்றம் பற்றிப் பேச பிரித்தானிய அரசு அமைச்சரவைத் தூதுக்குழுவை அனுப்பி வைத்தது. அதிகாரக் கை மாற்றப் பேச்சுக்களில் அம்பேத்கரும் தாழ்த்தப்பட்ட மக்களும் அடி யோடு புறக்கணிக்கப்பட்டார்கள். அமைச்சரவைத் தூதுக் குழுத் திட்டம் ஆறு கோடி தீண்டப்படாத மக்களுக்கு இரண்டகம் என்று அம்பேத்கர் சாடினார். விடுமைபெற்ற இந்தியா வுக்கான அரசமைப்புப் பேரவை கூட்டப்பட்ட விதத்ததையும் அவர் கண்டித்தார்.

1946 மார்ச் மாதத்தில் வயது வந்தோரில் 20 முதல் 24 விழுக்காட்டினருக்கு மட்டுமே வாக்குரிமை அளித்து நடத்தப் பட்ட தேர்தலில் தெரிவு பெற்ற மாகாணச் சட்டமன்றங்களி லிருந்து அரசமைப்புப் பேரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் 82 விழுக்காடு காங்கிரஸ் உறுப்பினர்கள். மத அடிப்படையில் 83 விழுக்காடு இந்துக்கள். அவர்களில் 45 விழுக்காடு பார்ப்பனர்கள்.

வரைவுக்குழுத் தலைவர்

அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் கருதி, அரசமைப்புப் பேரவையில் இடம் பெறவே விரும்பினார். மறுபுறம் காந்திக்கும் காங்கிரசுக்கும் அம்பேத்கர் தேவைப் பட்டார். இதனால் விளைந்த ஏற்பாடுதான் அம்பேத்கர் அரசமைப்பின் வரைவுக்குழுவுக்குத் தலைவரான நிகழ்வு. அவர் நேரு அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சரும் ஆக்கபட்டார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு இந்தியா குடியரசாக மலர்வதற்கு முன்பே 1948 சனவரி 30ஆம் நாள் காந்தியார் பார்ப்பன-இந்துத்துவ-ஆர்எஸ்எஸ் வெறியர் களால் சுட்டு வீழ்த்தப்பட்டார். முசுலிம்களோடு இணக்கத்தை வலியுறுத்தினார்; இந்தியாவை இந்துநாடாக்கத் தடையாக இருந்தார் என்பதுதான் கொலைகாரர்களின் குற்றச்சாட்டு.

காந்தி கொலையின் உட்பொருள்

காந்தியைக் கொன்றவர்கள் மதவெறியர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்துமத வெறிக்குள் மறைந்திருப்பது சாதிவெறியே என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும். இந்து மதவாதிகள் இசுலாத்தையும் கிறித்துவத்தையும் வெறுப்பது ஏன்? அவர்கள் வெறுப்பது அல்லாவையோ இயேசுவையோ அல்ல. அந்த மதங்களில் சேர்ந்த கீழ்சாதியினர், இழிகுலத் தவர் மீதான வெறுப்புதான் அந்த மதங்களின் மீதான வெறுப்பாக வெளிப்படுகிறது. இப்படிப் பார்க்கும்போது காந்தி மீதான வன்மத்தின் வேர் மூலம் சிறுபான்மை, மதங்களில் சேர்ந்த மக்கள் மீதான வெறுப்பின் வெளிப்பாடுதான். முசுலிம்களிடம் காந்தியாரின் பரிவு என்பதும் முசுலிமாக மாறிய எளிய ஒடுக்குண்ட மக்கள் மீதான பரிவாகவே புரிந்து கொள்ளப்படும். இது காந்திக்குப் புரிந்ததோ இல்லையோ சவர்க்கருக்கும் கோட்சேக்கும் புரிந்திருந்தது. தெளிந்த சாதியொழிப்புப் பார்வையே இல்லா விட்டாலும் காந்தியாரின் உயிரீகம் இந்துமத வெறிக்கு எதிரானது மட்டுமல்ல; பார்ப்பன வர்ண-சாதிவெறிக்கும் எதிரான ஒன்று.

அரசமைப்பின் அடிப்படைக் குறை

அரசமைப்புச் சட்டவரைவில் அம்பேத்கரின் உழைப்பும் பங்களிப்பும், அடிப்படை உரிமைகள், சமூகநீதி தொடர்பான சில முகன்மைக் கூறுகளைச் சேர்ப்பதில் அவரது பங்கு, பேரவையில் ஒவ்வொரு விதியையும் முன்மொழிந்து விவாதங் களுக்கு விடைசொல்லி நிறைவேற்றிக் கொடுத்த பாங்கு எல்லாம் தெரிந்த செய்திகளே. ஆனால், இத்தனையும் இருப்பினும், அரசமைப்பின் அடிப்படைக் குறைபாட்டை அவர் நன்கு உணர்ந்திருந்தார் என்பதற்குப் பேரவையில் 1946 நவம்பர் 25ஆம் நாள் அவர் ஆற்றிய உரையே சான்று. சமூகப் பொருளியல் ஏற்றத்தாழ்வின் அடித்தளம் மீதுதான் அரசியல் குடியாட்சியம் கட்டப்பட்டுள்ளது என்றார். அரசியல் குடியாட்சியம் போதாது, சமூகக் குடியாட்சியம் தேவை என்றார். இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது இறுதிநோக்கில் வல்லரசிய அரசமைப்புகளின் தொடர்ச்சியே. 1935 இந்திய அரசாங்கச் சட்டத்தின் 321 உறுப்புகளில் 250 உறுப்புகள் புதிய (1950) அரசமைப்புச் சட்டத்திலும் பெரும்பாலும் அப்படியே பார்த் தெழுதப்பட்டன. புதிய சட்டத்தின் மொத்த உறுப்புகள் 395.

புதிய அரசமைப்புச் சட்டத்தின்மீது அம்பேத்கர் கொண்ட சார்பியல் நம்பிக்கையும் முழுதாக மூன்றாண்டு கூட நீடிக்கவில்லை. பிற்பட்டோர் நலன், பெண்ணுரிமை உள்ளிட்ட கோரிக்கைகள் மதிக்கப்படாததால் 1951 செப் டம்பரில் அவர் நேரு அமைச்சரவையிலிருந்து விலகினார். இந்திய அரசு யாருடைய பிடியில் இருக்கிறது என்ற தெளிவு அவருக்கிருந்தது. அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை யிலேயே சொன்ன செய்திகளைப் பாருங்கள் :

பேய் புகுந்த கோயில்

இந்த அரசமைப்பின் சிற்பி என்று என்னைச் சொல்லாதீர்! காங்கிரசார் இதனை எழுத என்னைக் கூலிக்காரனாக அமர்த்தியிருந்தனர்! இந்த அரசமைப்பினால் யாருக்கும் எவ்வித நன்மையும் இல்லை! இதைக் கொளுத்துவதானால் முதல் ஆளாக நானே கொளுத்துவேன். கடவுளைக் குடிவைக்கக் கோயில் கட்டினோம். பேய் குடிபுகுந்து விட்டது என்னும் போது கொளுத்தாமல் என்ன செய்ய? இவை எல்லாம் அம்பேத்கர் சொன்னவை!

இந்திய அரசமைப்பின் 17ஆம் உறுப்பு தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்று அறிவித்தது. ஆனால் தீண்டா மைக்கு அடிப்படையான சாதி ஒழிக்கப்படவில்லை. சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பது அம்பேத்கர் அறியாததன்று. இந்திய அரசமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் பெயரால் புனிதப்படுத்துவதும் நியாயப்படுத்து வதும் அபத்தம்.

இந்திய அரசமைப்புச் சட்டம் சாதி யொழிப்புச் சட்டமல்ல என்பதற்குப் பெரிய விளக்கம் தேவை இல்லை. இந்தச் சட்டம் நிறுவிய இந்தியக் குடியரசை சாதிக் குடியரசு என்றே குறிப்பார் ஆனந்த் தெல்க்தும்ப்தே.

பௌத்தம்

அம்பேத்கர் இறப்பதற்கு 53 நாள் முன்னதாக 1956 அக்டோபரில் 4 இலட்சம் பேருடன் பௌத்தத்தில் இணைந்தார். அது இந்துவியத்துக்கு எதிரான அவரது இறுதிக் கலகம் என்றுதான் சொல்ல வேண்டும். இது தான் சாதி ஒழிய வழி என்று அவர் வரையறுக்கவில்லை.

இந்துச் சமூகம் பற்றிய அவரது பகுத்தாய்வு, இந்திய அரமைப்பின் மீதான நம்பிக்கை இழப்பு, குமுகக் குடியாட் சியம் பற்றிய அவரது பார்வை அனைத்துக்கும் மேலாக கல்வி, கிளர்ச்சி, அமைப்பாக்கம் (அறிவூட்டி உணர்வூட்டி அணி திரட்டல்) ஆகியவற்றின் அடிப்படையில் சாதியொழிப்புக்கு வழிகாணும் பொறுப்பு நமக்குள்ளது.

(சிந்தனையாளன் பொங்கல் மலர்-2023 இடம் பெற்றக் கட்டுரை)

- தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Pin It