சுயராஜ்யமென்னும் பதம் நமது நாட்டில் பெரும்பான்மையாய் ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் சுயநலத்துக்கே பயன்படுத்தப்பட்டு வருவதோடு, பாமரஜனங்கள் அதை அறியாதபடி சுயகாரியப் புலிகளால் சூழ்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. சுயராஜ்யமென்பதைப் பலர் பலவாறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திருடர்கள் தாங்கள் திருடுவதைப் பிறர் கவனியாமல் விட்டுவிடுவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். சிறையிலிருக்கும் கைதிகள் தங்களை வெளியில் விட்டு விடுவது தான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். குடிகாரர்கள் தாங்கள் தாராளமாகவும், விலை நயமாகவும் வேண்டிய அளவு குடிக்க வசமுள்ளதாய் கலால் வரி எடுபட்டுப்போவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். பாமர ஜனங்கள் பலர் இந்தியாவை விட்டு வெள்ளைக்காரரை விரட்டி விடுவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். ஏழைகள் ரூபாய் 1-க்கு 8 படி அரிசி விற்பதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். தரித்திரர்கள் பணக்காரர் சொத்துக்களையெல்லாம் பிடுங்கித் தங்களுக்குச் சரி சமானமாய்ப் பங்கிட்டுக் கொடுப்பதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள்.

இவையெல்லாம் அறியாமையால் நினைப்பதாக வைத்துக் கொண்டா லும் அறிந்தவர்கள், படித்தவர்களென்போரோ வெள்ளைக்காரர் உத்தியோகங்களையெல்லாம் தாங்களே அனுபவித்துக்கொண்டு 500, 1000, 5000, 10000 ரூபாய் சம்பளம் பெறுவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள்.

உயர்ந்தோர்களென்கிற பிராமணர்களோ பாமர ஜனங்களைக் கொண்டு கிளர்ச்சி செய்வித்து  சம்பளமுள்ள சர்க்கார் உத்தியோகங்களையும், பதவிகளையும் தாங்களே பெறுவதும், தாங்கள் பிறவியில் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்களென்பதை நிலைநிறுத்தி, ஆதிக்கம் பெறுவதுதான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள்.

ராஜதந்திரிகளென்போரும், ராஜீயவாதிகளென்போரும், சீமையிலிருந்து பார்லிமெண்டார் மூலம் நமக்கு வழங்கப்படும் சில அதிகாரங்களையும், பதவிகளையும்தான் சுயராஜ்யமென்று நினைக்கிறார்கள். காங்கிரஸில் தற்காலம் பிரதான ஸ்தானம் வகிப்பதாய்ச் சொல்லப்படும் சுயராஜ்யக்கக்ஷியா ரென்போரும், அரசாங்கத்தாரிடமிருந்து எதையாவது பெறுவதைத் தான் சுயராஜ்யமென்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ( இவற்றையெல்லாமறிந்துதான் இங்கிலாந்தில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் பிரசங்கம் கேட்ட கர்னல் வெட்ஜ் வுட் துரை இந்தியர்கள் இன்னமும் தங்களுக்கு வேண்டியது என்ன ( சுயராஜ்யம் ) வென்பதையே தெரிந்து கொள்ளவில்லையென்று சொன்னார் போலும்! )

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தியடிகள் இவற்றையொன்றையுமே சுயராஜ்யமென்று கருதவேயில்லை. இவ்வித சுயராஜ்யங்களில் எது வரினும், நமது நாட்டில் இப்போதுள்ள கஷ்டங்கள் எதுவும் மாறவே மாறாதென்பது அவருடைய அபிப்பிராயம். இப்போது சுயராஜ்யமில்லையென்று சொல்லுவதற்கறிகுறியாக இருப்பது :-

1. மக்கள் சுயமரியாதையில்லாமலும், சமத்துவமில்லாமலும் ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவனெனச் சொல்லிக்கொண்டு, பெரும்பான்மையான மனிதர்களை தீண்டாதார்களென்று ஒதுக்கி, இழிவான மிருகங்களிலும் கேடாய் மதித்து, மனித சுதந்திர மில்லாமல் கொடுமைப்படுத்தி வைத்திருப்பது.

2. தினம் ஒருவேளைக் கஞ்சிக்கும் வழியில்லாமலும், தங்கள் மானத்தைக் காக்க ஆடையில்லாமலும் கோடிக்கணக்கான ஜனங்கள் பட்டினியாலும், மானாபிமானத்தாலும் சாவது.

3. தேசத்தில் பெரும்பான்மையோரான தொழிலாளிகள் தங்களுக்குத் தொழிலில்லாமல், தங்கள் ஜீவனத்திற்காக எதுவும் செய்ய ஒருப்பட்டு ஜீவனத்திற்காக அந்நிய நாட்டுக்குச் சென்று இழிவாய் வாழ்ந்து மாய்வது.

4. நமது தேவைக்கு வேண்டிய சகலவஸ்துக்களும் அந்நிய நாட்டிலிருந்து வருவதாய் ஏற்பட்டு அதன் பொருட்டு நமது செல்வங்கள் வெளிநாடுகளுக்குப் போய் நமது நாடு தரித்திரத்தில் மூழ்கிக் கொண்டு போவது.

இத்யாதி கெடுதிகள் நம் நாட்டை விட்டு என்று அகலுமோ அன்று தான் நமது நாடு சுயராஜ்யம் பெற்ற நாடு ஆகுமேயல்லாமல் அந்நியர்கள் அரசாக்ஷி செய்யுங் காரணத்தினாலேயே சுயராஜ்யமில்லையென்று சொல்லி விடமுடியாதென்றும், மகாத்மா காந்தி அடிக்கடி கதறி வருவதோடு, இவ்வித சுயராஜ்யத்தை அடையவே ஒத்துழையாமையையும், கதர், தீண்டாமை, மதுவிலக்கு முதலிய நிர்மாணத் திட்டத்தையும் உபதேசித்தார்.

படித்தவர்கள்

இதனை மேல் ஜாதியாரென்போரும் படித்தவர்களென்போரும் இவ்விரண்டும் சேர்ந்த சுயராஜ்யக் கட்சியாரென்போரும் ஆதியிலிருந்தே ஒப்புக்கொள்ளவில்லை. இவை ஒப்புக்கொள்ளப்பட்டு அமுலுக்கு வந்து பலன் தருவதானால் மேல் ஜாதியாரென்போருக்கும் படித்தவர்களென்போருக்கும் பெரிய ஆபத்தாய்த்தான் முடியும். ஏனெனில், தீண்டாமையொழிந்தால் மேல் ஜாதியென்பது போய்விடும். கதர், மதுவிலக்கு வெற்றி பெற்றால் ஏழ்மை நிலையும், தரித்திரமும் மறைந்துவிடும். இவ்விரண்டும் மறைந்தால் படித்தவர்களுக்குப் பிழைப்பிருக்காது.

கூட இருந்தே குடியைக் கெடுத்தது
இந்த இரகசியத்தை அறிந்தேதான், உயர்ந்த ஜாதியார்களென்போரும், படித்தவர்களென்போரும் கூட இருந்தே குடியைக் கெடுத்தது போல் மகாத்மாவின் திட்டத்தை, அவருடன் இருந்தே ஒழித்து விட்டார்கள். அது மாத்திரமில்லாமல், ராஜீய சுதந்திரமென்ற பொய்ப்பெயர் வைத்து, உத்தியோகம் சம்பாதிப்பதையே பிரதானத் தத்துவமாய்க் கொண்ட சுயராஜ்யக்கக்ஷியென்று ஒரு கட்சியையும் சிருஷ்டித்துக் கொண்டு, காங்கிரஸிலிருந்து மகாத்மாவையும் விரட்டி விட்டு, உத்தியோக வேட்டையாட காங்கிரஸை ஓர் ஆயுதமாயும் ஏற்படுத்திக் கொண்டார்கள்.
சுயராஜ்யக் கட்சியாரின் கொள்கையான ராஜீய சுதந்திரமென்னும் பொய் அதிகாரமும், பதவியும் நமக்குக் கிடைக்க கிடைக்க நாடு இன்னும் சீர்கேடடையவும், ஒற்றுமை குலையவும், தரித்திரம் பெருகவும், அடிமைத் தன்மை பலப்படவும்தான் ஆகுமேயல்லாமல் தேசம் ஒருக்காலும் முன்னுக்கு வர முடியவே முடியாது.

சீர்திருத்தம்

உதாரணமாக, ஒத்துழையாமைக்கு முன்னிட்ட காங்கிரஸ்களின் முயற்சியால், நமது அரசாங்கத்தார் இதுவரை இரண்டு தடவைகளில் ராஜீய சுதந்திரமென்னும் இரண்டு சீர்திருத்தங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

அதாவது, ஒன்று மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மற்றொன்று மாண்டேகு - செம்ஸ்போர்ட் சீர்திருத்தம். இவைகளின் பலனாய் தேசம் என்னவாயிற்று ? இவற்றால் ஏற்பட்ட பதவியையும், உத்தியோகத்தையும் ஆயிரம் பதினாயிரக்கணக்கான சம்பளங்களையும் நம்மில் யார் அடைவது என்கிற சண்டைகளும், பொறாமைகளும் வலுத்து வந்ததும், ஒருவரை ஏமாற்றி ஒருவர் அடைய பொது ஜனங்களை உபயோகித்துக் கொண்டதுமல்லாமல் வேறென்னகண்டோம்?

5,500 ரூபாய் சம்பளமுள்ள நிர்வாக சபை மெம்பர் பதவிகளும், மந்திரி பதவிகளும் இந்தியருக்குக் கொடுப்பதென்கிற சீர்திருத்தம் பெறாமலிருந்திருப்போமேயானால், இந்து - முஸ்ஸீம் சண்டைகளும் பிராமணர் - பிராமணரல்லாதார் கக்ஷிகளும் உட்பிரிவு துவேஷங்களும், ஏற்பட்டிருக்குமா ?

சுயராச்யக்கக்ஷியென்று ஓர் கக்ஷி ஏற்பட்டு தெய்வீக இயக்கமாகிய மகாத்மாவின் இயக்கத்தைக் குலைத்து, உத்தியோக வேட்டையாட முன் வந்திருக்குமா? ³ சீர்திருத்தங்களென்னும் ராஜீய சுதந்திரங்கள் கொடுக்கு முன் 70 கோடி ரூபாயாக இருந்த வரி, இப்போது 150 கோடி ரூபாயாக மாறி யிருக்குமா? 24 கோடியாகவிருந்த இராணுவச்செலவு இன்று 60, 70 கோடியாக மாறியிருக்குமா?

அரசாங்கத்தாரிடமிருந்து பெற்ற சீர்திருத்தம் என்னும் சுயராஜ்யத்தாலல்லவா இவ்வித கஷ்டங்கள் விளைந்தன. மகாத்மாவின் சீர்திருத்தமாகிய நிர்மாணத் திட்டமென்னும் சுயராஜ்யத்தைப் பெற்றிருப்போமேயானால், இக்கெடுதிகள் நமக்கு வந்திருக்குமா ? சுயராஜ்யக் கட்சியார் கோருகிறபடி இன்னுமொரு சீர்திருத்தமென்னும் சுயராஜ்யம் சர்க்காரால் கொடுக்கப் பட்டால், நமது கதி என்னவாகும்? இன்னும் எவ்வளவு கோடி ரூபாய் வரி அதிகமாகும்? எவ்வளவு ஜாதிச் சண்டைகளும், வகுப்புத் துவேஷங்களும் வளரும்.

நாக்கில் ஊறும் தண்ணீர்

இந்த சீர்திருத்தங்களின் பலனால் ஏற்பட்ட உத்தியோகங்கள் தானே, இன்றையதினம் ஸ்ரீமான்களான சி.பி. இராமசாமி ஐயரும், மகமது ஊஸ்மானும், ராமராய நிங்கரும், பாத்ரோவும், சிவஞானம் பிள்ளையும் ஆளொன்றுக்கு மாதம் 5,500 ரூபாய் வீதம் சம்பளம் என்னும் பெயரால் கொள்ளையடிப்பதும், தனி வண்டியில் பிரயாணம் செய்வதுமாயிருக்கிறது.

இதைப் பார்த்துப் பொறுக்காமல், ஸ்ரீமான்கள் ஸ்ரீனிவாசய்யங்கார் நாக்கிலும், ஏ. ரெங்கசாமி ஐயங்கார் நாக்கிலும், சத்தியமூர்த்தி நாக்கிலும் ஊறின தண்ணீர் தானே - நமது நாட்டில் சுயராஜ்யக் கட்சியாய்க் கிளம்பி, தேசத்தையும் சமூகத்தையும் பாழாக்கிக் கொண்டு வருகிறது.

இந்த உத்தியோகங்கள் இந்திய மக்களுக்கு வீண் தெண்டத்துக்காகத்தானே! “குலைக்கும் நாய்க்கு எலும்பு போடுவதுபோல்” அரசாங்கத்தாரால் வீசி எறியப்பட்டிருக்கிறது! இந்த உத்தியோகங்களால், ஏழைகள் தலையில் கை வைத்து வரியை உயர்த்தி, வசூல்செய்து ஆயிரக்கணக்கான ரூபாய்களை ஒருசிலர் அனுபவிப்பதல்லாமல் வேறென்ன பிரயோஜனம்? இவ்வுத்தியோகங்களில்லாத காலத்தில் ராஜாங்கம் நடக்கவில்லையா?

அந்த ராஜாங்கத்திற்கும், இந்த ராஜாங்கத்திற்கும் வித்தியாசம்தானென்ன? இந்த உத்தியோகங்கள் ஏற்பட்டதின் பலனாய் ஒரு வெள்ளைக்கார உத்தியோகமாவது, அதிகாரமாவது குறைந்ததா?

இந்த உத்தியோகத்தின் பலனாய் தேசத்தில் செல்வநிலை பெருகிற்றா? வரி குறைந்ததா? தீண்டாத மக்கள் தங்கள் தெய்வங்களைக் காணவாவது, தெருவில் நடக்கவாவது உரிமை பெற்றார்களா? கோடிக் கணக்காய் அந்நிய நாட்டாரால் வியாபாரத்தின் மூலமாய் சுரண்டப்படும் பணத்தில் முக்கால் துட்டாவது நமது நாட்டில் தங்க வழியேற்பட்டதா? கோடிக்கணக்கான மக்கள் மதுபானத்தினால் பாழாவதையாவது நிறுத்த முடிந்ததா? தேசத்துக்கு என்ன பலனைக் கொடுத்தது?

சுயராஜ்யக்கக்ஷியாரென்போர், பாமர ஜனங்கள் இந்த இரகசியத்தை அறியாதபடி பத்திரிக்கைகளில் சதா காலமும் பொய்யும் புளுகும் எழுதியும், மனதறிந்த பொய்ப்பிரசாரங்கள் செய்தும், பொது ஜனங்களை ஏமாற்றி எல்லா உத்தியோகங்களையும் தாங்களே அடைய வேண்டுமென்னும் ஆசைப்பட்டுக்கொண்டும் கூடிக்கூடி எப்படி இந்த உத்தியோகத்தை அடைவது என்று சதியாலோசனை செய்து கொண்டுமிருக்கிறார்களேயல்லாமல், இவ்வித உத்தியோகங்கள் நமக்கு அவசியமா, அவசியமில்லையாவென்பதைப் பற்றி ஒரு நாளாவது பேசியதே கிடையாது.

வேண்டாத சுயராஜ்யம்

சுயராஜ்யக் கட்சியாரின் சுயராஜ்யம் தேசத்திற்கு உண்மையான சுயராஜ்யம் ஆகாது. இவ்வித சுயராஜ்யம் நமது நாட்டிற்கு வேண்டவே வேண்டாம். சுயராஜ்யக் கட்சியார் கேட்கிறபடி சர்க்காரால் கொடுக்கப்படும் சுயராஜ்யமென்னும் சீர்திருத்தம் மறுபடியும் வருமானால் படித்தவர்களுக்கும், உயர்ந்த ஜாதியாரென்று சொல்லுபவர்களுக்கும் ஆயிரக்கணக்கான சம்பளமும் உத்தியோகமும் கிடைக்கும்.

இதற்காக மறுபடியும் வரியை அதிகப்படுத்த வேண்டும். மக்களுக்குள் உயர்வு, தாழ்வு நிலைத்திருக்கும். குடியை ஒழித்தால் சர்க்கார் வரும்படி குறைவதன் மூலம் தங்களுடைய சம்பளம் குறைந்து போகுமானதால், குடியை நிறுத்த முடியாது. வியாபாரத்தின் மூலமாக அந்நிய நாட்டுக்குப் போகும் செல்வத்தை நிறுத்த இவர்கள் கையில் திட்டமொன்றுமில்லாததால் அதுவும் சாத்தியப்படாது. உத்தியோகத்தைக் குறைப்பதால், படித்தவர்களுக்கு ஜீவனோபாயத்திற்கு மார்க்கமில்லாமல் போய்விடும். ஆகையால், அதையும் இவர்கள் செய்ய முடியாது.

வேண்டிய சுயராஜ்யம்

உண்மையான சுயராஜ்யமே நமக்கு வேண்டும். அது மகாத்மாவின் சுயராஜ்யமான கதர் உற்பத்தி செய்வதிலும், அதை உடுத்துவதிலும், தீண்டாமையை ஒழித்து மக்கள் சமமாய் வாழ்வதிலும், மதுபானம் ஒழிந்து மக்கள் ஒழுக்கமடைவதிலுமேதானிருக்கிறது.

மகாத்மா சொல்லும் சுயராஜ்யமாகிய கதர் உற்பத்தி செய்து உடுத்தினால், அந்நிய நாட்டுக்குப் போகும் 70 கோடி ரூபாயும், மில் இயந்திரக்காரர் அநுபவிக்கும் 70 கோடி ரூபாயும், ஆக 140 கோடி ரூபாயில், குறைந்தது வருடம் 1- க்கு 100 கோடி ரூபாயாவது ஏழைகளுக்குப் பங்கு வீதம் கிடைக்கும். மகாத்மா சொல்லும் தீண்டாமை என்னும் சுயராஜ்யத்துக்குப் பாடுபட்டு வெற்றி பெற்றால், மிருகங்களுக்கும், புழுக்களுக்கும் கேவல மாயிருக்கும் தீண்டாதாரென்று சொல்லப்படும் 7 கோடிப் பேர்கள் மனிதர்களாவார்கள். இந்திய மனித சமூகத்துக்கு 7 கோடி மனிதர் லாபமாகும். பிராமணரல்லாதாருக்கும் இழிவான தாசிமக்கள், சூத்திரர் என்கிற பெயரும் நீங்கும்.

மகாத்மாவின் சுயராஜ்யமாகிய மதுவிலக்குக்கு வேலை செய்து வெற்றி பெற்றால் தேசத்தில் மதுபானம் ஒழியும். ஏழைகள் சுகமாய் வாழ்வார்கள். வருடத்தில் 20 கோடி ரூபாய் ஏழைகளுடைய பணம் மதுபான வகையில் சர்க்காருக்குப் போய் உத்தியோகஸ்தர்கள் பங்கிட்டுக் கொள்வதை நிறுத்தும். ஆதலால் சுயராஜ்யக் கட்சியின் சுயராஜ்யம் வேண்டுமா? மகாத்மாவின் சுயராச்சியம் வேண்டுமா?

(குடி அரசு - தலையங்கம் - 15.11.1925)