வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி..என்ற வள்ளுவரின் வாக்கிற்கிண‌ங்க மக்களாட்சி தத்துவத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லும் இந்திய குடிமக்கள், உலகிலுள்ள ஒருசில ஜனநாயக நாடுகளுக்கு சிறந்த வழிகாட்டிகள். இப்படிப்பட்ட உன்னத மக்களாட்சித் தத்துவத்திற்கு தலைவண‌ங்கி வாழும் த‌ன் குடிமக்களுக்கு, இந்த தேச‌த்தின் அரசிய‌ல் மற்றும் நிர்வாக தலைவர்கள் கொடுக்கும் அன்புப் பரிசுதான் வறுமையும் வேலைவாய்ப்பின்மையும். உலகில் மிக‌ அதிக‌ ம‌க்க‌ள்தொகை கொண்ட சீனாவில் ம‌னித‌வ‌ள‌ம் முழுமையாக‌வும் திற‌ம்ப‌ட‌வும் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு சீனா இன்று உல‌கில் அசைக்க‌முடியாத‌ ச‌க்தியாக‌ மாறிவ‌ருகிறது. ஆனால் இந்தியாவில் நிலை‌மை த‌லைகீழ். இங்கு ம‌னித‌வ‌ளம் ம‌தத்தாலும், மொழியாலும், சாதியாலும் ந‌சுக்க‌ப்படுகிற‌து. ம‌க்க‌ளின் வ‌ரிப்பண‌த்தை அர‌சு மேல்த‌ட்டு ம‌ற்றும் ந‌டுத‌ட்டு ம‌க்க‌ளுக்கு ம‌ட்டுமே பகிர்ந்த‌ளிக்கும் ஓர் சடங்காகத்தான் 2010-11ஆம் ஆண்டு நிதியறிக்கையை த‌லித் ம‌க்க‌ள் காண்கிறார்கள்.

poor-people_420நாட்டின் வருமானத்தில் ஒவ்வொரு ருபாயிலும் 19 பைசா இந்த தேசம் தான் பெற்ற கடனுக்காக வட்டி செலுத்துகிறது என்கிறார் 1108749 கோடி ரூபாய்க்கு நிதியறிக்கை தாக்கல் செய்த ப்ரணாப் முகர்ஜி. மேலும் வரும் நிதியாண்டில் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையை பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை, 3G அலைக்கற்றை விற்பனைகளின் மூலம் சமாளிக்க முடியுமென நிதியமைச்சர் நம்புகிறார். நாட்டின் மொத்த வருவாயில் 35சதம் திட்ட பணிக்காகவும், 65 சதம் திட்டமில்லாத பணிக்காகவும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வரும் 2014-15ல் வறுமையை 50 சதவிகிதம் குறைத்துவிட முடியுமென நிதியறிக்கையில் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

நிலைமை இப்படியிருக்க மத்திய அரசு செயல்படுத்திவரும் சில வறுமை ஒழிப்பு திட்டங்களை சற்று கூர்ந்து கவனிப்பது நல்லது. இந்திராகாந்தி வீட்டுவசதித் திட்டத்தில் ஏழைகளுக்கு ஓர் வீடுகட்ட 45 ஆயிரம் ஒதுக்கும் மத்திய அரசு, நடுத்தர மற்றும் வசதிபடைத்தவர்கள் வீடுகட்ட 20 லட்சம் கடனும் அதில் ஒரு ச‌தவிகிதம் மானிய‌மாக‌வும் அதாவ‌து 20 ஆயிர‌ம் மானிய‌மும் அளிக்கிற‌து.

கடந்த தேர்தலில் "மக்கள் தொகையின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு சிறப்பு உட்கூறு திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய தேசிய காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கும்" என காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி பார்த்தால் வரும் நிதியாண்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கு 460540 கோடி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு ஒதுக்கியதோ 284284 கோடி ரூபாய் மட்டுமே. இதில் சுமார் 3200 கோடி மட்டுமே தலித் மக்களின் சமூக பாதுகாப்பிற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சரி சிறப்பு உட்கூறு திட்டத்திற்காக (SCP&TSP) 284284 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதே, இந்த நிதியை செலவு செய்ய குறிப்பிட்ட அமைச்சகம்/துறையிடம் ஏதாவது திட்டமுள்ளதா? என‌ கேள்விகள் எழலாம், ஆனால் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க ஆளும் கூட்டத்திற்கு நேரமேது!

மத்திய/மாநிலத்திலுள்ள ஒவ்வொரு துறையும் தங்களுடைய மொத்த திட்ட நிதியில் 20 சதவிகிதத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான சிறப்பு உட்கூறு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆனால் மத்தியில் மொத்தமுள்ள 83 துறை/அமைச்சகத்தில் 18 துறைகள் மட்டுமே சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளன. அதுவும் 20 சதவிகித நிதி ஒதுக்கமால் 3 முதல் 5 சதவிகித நிதி மட்டுமே மேற்கண்ட 18 துறைகளும் ஒதுக்கியுள்ளது வேதனைக்குரிய உண்மையாகும். இப்ப‌டி சிறப்பு உட்கூறு திட்டத்தை முறையாக‌ ந‌டைமுறைப்ப‌டுத்தாத‌ ம‌த்திய‌ அர‌சு, அனைத்து துறையின் திட்ட‌த்தில் 20 ச‌த‌விகித‌ம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி ம‌க்க‌ளுக்கு செல‌விட‌ப்ப‌டுவ‌தாக‌ கூறுவ‌து ந‌கைப்புக்குரியது.

உதார‌ண‌த்திற்கு தேசிய‌ ஊர‌க‌ வேலைவாய்ப்பு(NREGA) திட்ட‌த்திற்கான‌ நிதி 40100 கோடி ரூபாயில் 20 ச‌த‌விகித‌ம் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கு சென்ற‌டைய‌ வேண்டும் என்ற‌ க‌ட்டாய‌மோ இல‌க்கோ குறிப்பிட்ட‌ அமைச்ச‌க‌த்திட‌மில்லை. இதுபோல‌வே ம‌த்திய‌ ஊர‌க‌ வ‌ள‌ர்ச்சித் துறை சிறப்பு உட்கூறு திட்ட நிதியாக‌ 13220 கோடி ஒதுக்கியிருக்க‌ வேண்டும். ஆனால் வெறும் 4957 கோடி ரூபாய் ம‌ட்டுமே த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கு ஒதுக்கியுள்ள‌து.

நகர்ப்புற ஏழைகளை மையப்படுத்தி செயல்படும் ஸ்வர்ண‌ ஜெயிந்தி யோஜனாவிற்கு(SJSY) 5400 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கான 1080 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த திட்டத்தில் தலித் மக்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்ற அறிவிப்போடு முடித்துவிட்டார்கள். தேசிய கிராம வாழ்வாதர இயக்கம்(NRLM) என்ற புதிய திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் நபருக்கு தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்கப்பட இருப்பதாக நிதி அறிக்கை கூறுகிறது. ஆனால் இத்திட்டத்தில் 20 ஆயிரம் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கப்படுமா என்பது சந்தேகமே.

தற்போது உலகில் அதிகம் பேசப்படும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பினைக் குறைக்கும் வகையில் 1000 கோடிரூபாய் ஒதுக்கியுள்ள மத்திய அரசு, பருவநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படும் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி இன பெண்களுக்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கவில்லை.

இந்தியாவில் மெட்ரிக் கல்வி பெறுவதற்கு ஒரு மாணவன் மாதத்திற்கு 1550 ரூபாய் செலவுசெய்தாக வேண்டிய சூழலில், த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி மாணவர்களுக்கு அரசு 77 ரூபாய் மட்டுமே ஒரு மாதத்திற்கு செலவு செய்கிறது. மேலும் கடந்த ஆண்டு சிதம்பரம் அவர்கள் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் 20 மாவட்டங்களில் நவோதயா பள்ளி தொடங்கப்படும் என்றார். ஆனால் தற்போது இதுபோண்ற சிறப்பு திட்டங்களேதும் மத்திய அரசு வெளியிடாதது வருத்தத்திற்குரியதே.

இவ‌ற்றையெல்லாம் மிஞ்சும் வ‌கையில் உட்கட்ட‌மைப்பு நிதியான‌ 173552 கோடியில், அதாவ‌து மொத்த‌ திட்ட‌ செல‌வில் 47 ச‌த‌விகித‌ நிதியில் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கான‌ உட்க‌ட்ட‌மைப்பு நிதி என‌ 20 ச‌த‌விகித‌ம் ம‌த்திய‌ அர‌சு ஒதுக்க‌வில்லை. இதுபோலவே 94765 கோடி ரூபாய் இர‌யில்வே நிதியறிக்கையில் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளின் ப‌ங்கான‌ 15875 கோடிரூபாய் ஒதுக்க‌ப்ப‌ட்டிருந்தால் ப‌ல்லாயிர‌க்கண‌‌க்கான‌ த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கு நேர‌டி வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.

க‌ட‌ந்த‌ பிப்ர‌வ‌ரி 25ல் ம‌த்திய‌ நிதி அமைச்ச‌க‌ம் வெளியிட்ட‌ 2009-10ம் ஆண்டிற்கான‌ பொருளாதார‌ அறிக்கையில் த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ளுக்கான‌ திட்ட‌ங்க‌ள் திருப்தியளிக்கும் விதத்திலில்லை எனக் கூறியுள்ள‌போதும், 2010-11 நிதியறிக்கை தலித் மக்களுக்கான எந்தவித சிறப்புத் திட்டமுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு உட்கூறு திட்டத்தைப் ப‌ற்றிப் பேசும்போது, அந்தத் திட்டங்‌களை செய‌ல்ப‌டுத்தும் சில‌ துறைக‌ளை கூர்ந்து கவனித்தால் அதிர்ச்சிதான் மிஞ்சுகிறது. ம‌த்திய‌ உயிர் தொழில்நுட்பத் துறை 3 ச‌த‌விகித‌த்திற்கும் குறைவான‌ நிதியை சிறப்பு உட்கூறு திட்டத்திற்கு ஒதுக்கியுள்ளது. அவ‌ற்றில் 2008-09 ஆண்டிற்கான‌ ஒதுக்கீட்டில் ஓசூர் டி.வி.எஸ் அற‌க்க‌ட்ட‌ளை  12.5 ல‌ட்ச‌ம் ரூபாயை கால்ந‌டை குறித்த‌ விழிப்புண‌ர்வை விவ‌சாயிக‌ளிட‌ம் ஏற்ப‌டுத்த‌ பெற்றுள்ள‌தாகத் தெரிகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கால்நடைகளுக்காக கொடுப்பது முறையா?

இதுபோன்ற‌ ந‌டைமுறைச் சிக்க‌ல்க‌ள் ம‌ற்றும் குழ‌ப்ப‌ங்க‌ளை போக்க‌ த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி அமைப்புக‌ள் கீழ்க‌ண்ட‌ யோச‌னைக‌ளை ம‌த்திய‌ அர‌சுக்கு தெரிவித்துள்ளன‌.

1.திட்டக் க‌மிஷனின் பரிந்துரைப்ப‌டி அனைத்து துறைக‌ளும் சிறப்பு உட்கூறுத் திட்டத்தை செய‌ல்ப‌டுத்த‌ வேண்டும்.

2.நிதி அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு, தலித் மற்றும் பழங்குடி இனத் தலைவர்கள் மற்றும் அமைப்ப்புகளிடம் கருத்து கேட்க வேண்டும்.

3.சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் மலைவாழ் மக்கள் சிறப்பு திட்டங்களுக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் நிதி ஒதுக்குவது குறித்த சட்டம் இயற்றப்பட வேண்டும்.

4.SCP&TSP நிதியை மற்ற துறைகள் எவ்வாறு செலவிடுகிறது என்பதைக் கண்காணித்து மத்திய சமூக பாதுகாப்புத் துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறைகள் ஆண்டுதோறும் அறிக்கையளிக்க வேண்டும்.

5.மத்தியில் மற்றும் மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு அமைச்சகமும்/துறையும் SCP&TSP நிதியை செலவிட தனி குழுவை அமைக்க வேண்டும்.

6.மேலும் மாவட்ட, வட்ட மற்றும் கிராம அளவில் இந்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்கானிக்க தலித் இயக்கங்கள், மனித உரிமை ஆர்வல‌ர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை மாவட்ட‌ந்தோறும் அமைக்க வேண்டுமென பல்வேறு த‌லித் ம‌ற்றும் ப‌ழ‌ங்குடி அமைப்புக‌ள் ம‌த்திய அர‌சிற்கு வேண்டுகோள் விடுத்துள்ள‌ன‌.

இந் நிலையில் நிதியறிக்கைகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவ‌‌தால் இம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என உலகஅளவில் தொண்டாற்றிவரும் ஆக்ஸ்பார்ம்(OXFAM) நிறுவனம் மத்திய அரசிற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆனால் இவற்றைப்பற்றி பாராளுமன்றத்தில் குரலெழுப்ப எந்த தலித் கட்சிகளும் முன்வராதது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது.

தலித் மக்களின் வீட்டில் போய் உணவருந்தும் சில அரசியல்வாதிகள், இம் மக்களுக்கு எங்கள் ஆட்சியில் அதைச்செய்கிறோம், இதைச்செய்கிறோம் என ஓட்டுக்காக வாய் சவடால் விடுவதோடு சரி, தலித் பழங்குடி மக்களின் வாழ்வை உயர்த்த எந்த திட்டத்தையும் செய்யாமல் மழுப்பும் மத்திய மாநில அரசுகளை கண்டிக்க முன்வருவதில்லை. இது போன்ற சாதி இந்துக்களின் வாய்ஜாலத்தை உணர்ந்த பண்டிதர் அயோத்திதாசர் 97 ஆண்டுகளுக்கு முன்பே இப்படிச் சொன்னார் "கொல்லாமல் கொல்லப்பட்டு வரும் இத்தேசத்தின் பூர்வ இந்தியர்களாம் ஆறுகோடி தாழ்த்தப்பட்டோர்களில் முன்னேறியிருப்பது பிரிட்டிஷ் துரைமார்களின் கருணையிலும் மிஷனரி கிருஸ்த்துவ துரைமார்களின் அன்பினாலுமேயன்றி சாதி துவேஷ‌முள்ள சீர்திருத்தக்காரர்களால் அல்ல(தமிழன் 24.12.1913)". பண்டிதரின் இச்சிந்தனை 100 சதவிகிதம் இன்றும் பொருந்தும். சுதந்திர இந்தியாவில் தலித் மக்கள் சுதந்திரமின்றி வாழ்வதற்கு சுதந்திர இந்தியாவை அதிக காலம்  ஆண்ட காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. ஒடுக்கப்பட்ட மக்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் தேச வளத்தையும், பணத்தையும் எல்லா மக்களுக்கும் பங்கிடாத எந்த நிதி அமைச்சரும் முதலாளிகளின் கைக்கூலிகள் என்பதில் சந்தேகமில்லை. சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சர் செட்டியார் முதல் பிரணாப் முகர்ஜிவரை எல்லோரும் நிதியறிக்கை என்ற பெயரில் முதலாளிகளுக்கு முழுசாப்பாடும் ஏழைகளுக்கு எச்சிலையுமே போட்டிருக்கிறார்கள் என்பதே யதார்த்த உண்மை.

- ‍ப.அப்ரகாம் லிங்கன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)m

Reference:

1.Speech of Pranab Mukherjee, Minister of Finance, 26, Feb, 2010.

2.Schemes for the development of scheduled castes and scheduled tribes, Expenditure Budget Vol. I, 2009-2010.

3.Economic Survey of India 2009-10, Ministry of Finance, Dept. of Economic Affairs, Feb 2010.

4.Expenditure Budget 2010-2011 Vol1 and Vol 2.

Pin It