நாளது தை µ 11, 12 (1926 ஜனவரி 24,25) தேதி ஞாயிறு திங்கள்கிழமைகளில் கொடுமுடி மகுடேஸ்வர சுவாமி கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள சத்திரத்தில் காரமடை ஸ்ரீமான் சூ.கருப்பண்ண பண்டாரம் அவர்கள் தலைமையின் கீழ் தமிழ் மாகாண கோ - வம்சத்தினரின் 2-வது மகாநாடு நடைபெறும்:- அதே சந்தர்ப்பங்களில் ஸ்ரீமதி லக்ஷிமி அம்மாள் அக்ராசனத்தின் கீழ் ஸ்ரீகள் மகாநாடும், ஸ்ரீ கணபதி அக்ராசனத்தின் கீழ் மாணவர்கள் மகாநாடும் நடைபெறும். பலவிடங்களிலிருந்தும் அநேக பிரபலஸ்தர்கள் விஜயம் செய்வதாய் வாக்களித்திருக்கிறார்கள். ஆதலால் எல்லா குலாபிமானிகளும் இதர சமூக கனவான்களும் அவசியம் விஜயம் செய்ய வேண்டுமாய் வேண்டப்படுகிறார்கள்:-

- கொடுமுடி வரவேற்புக் கமிட்டியார்.

நமது குறிப்பு: -

நமது தாலூக்காவில் உள்ள சைவப் பண்டாரங்களின் முக்கிய கூட்ட மிதுவாகையால், இத்தாலூக்கா வேளாள சமூகத்தார் அனைவரும் விஜயம் செய்து அவர்கள் முன்னேற்றத்துக்கான காரியங்களை அறிவுறுத்தி அச்சமூகம் முன்னேற்றமடைய உதவி செய்ய வேண்டியது முக்கியமான கடமை. ஏனெனில், அவர்கள்தான் பெரும்பாலும் நமது கிராம தேவதைகள் முதலிய கோவில்களில் பூஜை செய்பவர்களாகவும் தவசிப்பிள்ளைகளாகவும் புஷ்பம் தொடுப்பவர்களாகவுமிருப்பதால் அவசியம் அவர்கள் முன்னேற்றத்தையும் ஒழுக்க வழக்கங்களையும் சீர்திருத்தம் செய்ய வேண்டியது குடிமக்கள் கடமையாகும்.

(( பத்திராதிபர் ) குடி அரசு - பத்திராதிபர் குறிப்பு - 10.01.1926)

Pin It