சாதிகளாலான இந்து மதத்தை அழித்தொழிக்க வேண்டும்

"மதம் ஒழிக்கப்பட வேண்டும்'' என்று நான் கூறினேன். நான் இப்படிக் கூறுவதன் öபாருள் சிலருக்குப் புரியாமல் இருக்கலாம். சிலருக்கு கலகம் விளைப்பதாகத் தோன்றலாம். சிலருக்குப் புரட்சிகரமாகத் தோன்றலாம். ஆகவே, என் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கி விடுகிறேன். கொள்கைகளுக்கும் விதிகளுக்கும் இடையே வேற்றுமை உண்டென்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்பதை நான் அறியேன். வேற்றுமை உண்டென்றே நான் எண்ணுகிறேன். அது மட்டுமல்ல; இந்த வேற்றுமை உண்மையானது, முக்கியமானதென்றும் நான் கூறுகிறேன். விதிகள் நடைமுறையை ஒட்டியவை. ஏற்கனவே நிர்ணயித்தபடி நம் வேலைகளைச் செய்து முடிப்பதற்கான பழகிப்போன வழிமுறைகளே அவை. கொள்கைகளோ அறிவு ரீதியானவை. ஒரு விசயத்தைப் பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கும் சரியான முறைகள்; ஒருவன் ஒரு வேலையைச் செய்து முடிப்பதற்கான வழிமுறை என்ன என்பதை விதிகள் விளக்கிக் கூறுகின்றன. கொள்கைகள் அப்படி எந்த ஒரு குறிப்பிட்ட வழிமுறையையும் விளக்கிக் கூறுவதில்லை.

இந்து மதமா, சட்ட விதியா?

விதிகள் சமையல் குறிப்புகளைப் போல. என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறுகின்றன. கொள்கைகள் (எடுத்துக்காட்டாக ‘நீதி') ஒருவர் தன் விருப்பங் களையும் நோக்கங்களையும் எதை ஒட்டி அமைத்துக் கொள்வது என்ற பார்வைக் குறிப்பைத் தருகின்றன. ஒருவர் தன் பணியைச் செய்து முடிக்க முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியவை எவை? மனதிலே ஆழமாகப் பதியவைத்துக் கொள்ள வேண்டியவை எவை? என்பதில் ஒருவருடைய சிந்தனைக்கு வழிகாட்டுவது கொள்கை.

ஆக, விதிகளுக்கும் கொள்கைகளுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. அதாவது விதிப்படி செய்யும் செயலுக்கும் கொள்கைப்படி செய்யும் செயலுக்கும் இடையில் - அளவிலும் பண்பிலும் வேறுபாடுள்ளது என்பதே உண்மை. ஒரு கொள்கை தவறானதாக இருப்பினும் அந்தக் கொள்கை வழிநின்று செய்யும் செயல் மனமறிந்து செய்யப்படுவதும் பொறுப்புணர்ச்சியோடு கூடியதும் ஆகும். விதி என்பது சரியான தாக இருக்கலாம். ஆனால், விதிப்படியான செயல் எந்திரகதியில் ஆனது.

மதச் செயல்பாடு சரியான செயல்பாடாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், குறைந்த பட்சம் பொறுப்புணர்ச்சி உள்ள செயல்பாடாக அது இருந்தாக வேண்டும். இந்தப் பொறுப்புணர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால், மதம் கொள்கைகளால் மட்டுமே ஆனதாக இருந்தாக வேண்டும். விதிகளால் ஆனதாக இருக்க முடியாது. மதம் வெறும் விதிகளாகச் சீரழிந்து போகிற அந்தக் கணமே - அது மதம் என்று அழைக்கப்படுவதற்கான அருகதையை இழந்து விடுகிறது. ஏனென்றால், உண்மையான மதச் செயல்பாட்டின் சாரம்சமாகிய பொறுப்புணர்ச்சியையே அது அழித்து விடுகிறது. இந்த இந்து மதம் என்பதுதான் என்ன? கொள்கைகளின் தொகுப்பா அல்லது விதிமுறைகளா?

வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் சொல்லியிருக்கிறபடி பார்த்தால் இந்து மதம் என்பது சடங்கு, சமூகம், அரசியல், சுகாதாரம் பற்றிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கலவையாகவே இருக்கிறது. இந்துக்களால் மதம் என்று சொல்லப்படுவது, எண்ணிலடங்காத கடமைகளும் கட்டுப்பாடுகளுமே தவிர வேறில்லை. எல்லா காலங்களுக்கும் எல்லா நாடுகளுக்கும் எல்லா மனித இனங்களுக்கும் ஏற்ற, உலக மக்கள் அனைவருக்கும் ஒத்துவரக்கூடிய ஆன்மீகக் கொள்கைகளாக இந்து மதம் இல்லை. ஒருவேளை அப்படியிருந்தாலும் கூட, அதுபோன்ற ஒரு கொள்கை இந்து மதத்தவன் ஒருவனின் வாழ்க்கையை வழிநடத்தக் கூடியதாக இல்லை. இந்து மதத்தவன் ஒருவனுக்கு ‘தர்மம்' என்பது கடமைகளும் கட்டுப்பாடுகளும்தான். தர்மத்தைப் பற்றி வேதங்களிலும் ஸ்மிருதிகளிலும் கூறி இருப்பதையும் அவற்றிற்கு விளக்க உரைகள் எழுதியிருப்பவர்கள் அதைப் புரிந்து கொண்டிருக்கும் விதத்தையும் பார்த்தால் இது தெளிவாகும்.

வேதங்களிலும் பெரும்பாலும் தர்மம் என்னும் சொல், மதச் சட்டங்கள் - மதச் சடங்குகள் என்னும் பொருளிலேயே கையாளப்படுகின்றன. ஜெய்மினியும் கூட தன் ‘பூர்வ மீமாம்சை' யில், "வேத விதிகளின் மூலமாக வரை யறுக்கப்பட்டுள்ள விரும்பத்தக்க லட்சியம் அல்லது பலனே தர்மமாகும்'' என்று கூறுகிறார். அப்பட்டமாகச் சொன்னால், இந்துக்கள் ‘மதம்' என்று அழைப்பது உண்øமயில் சட்டங்களைத்தான் அல்லது சட்டமாக ஆக்கப்பட்டுள்ள வகுப்புவாரி நீதிநெறிகளைத்தான். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், இந்தச் சட்டங்களின் தொகுப்பை மதமென்று சொல்ல நான் மறுக்கிறேன். மதம் என்று தவறான பெயரிட்டு மக்களின் முன்னே நிறுத்தப்படுகிற இதுபோன்ற சட்டத்தொகுப்பால் விளைகிற கேடுகள் பல.

இந்து சட்டங்களால் ஏற்படும் கேடுகள்

முதல் கேடு: ஒழுக்கத்தோடு கூடிய, சுதந்திரமான, தன்னிச்சையான வாழ்க்கையை இது மறுக்கிறது. மாறாக, அது (வெளியில் இருந்து திணிக்கப்படும் விதிகளை) அடிமைத்தனமாக ஏற்றுக் கொண்டு நடக்கிற இழிநிலைக்கு வாழ்க்கையைத் தள்ளி விடுகிறது. கொள்கை விசுவாசத்துக்கு இந்து மதத்தில் இடமில்லை. கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் நிலைதான் இருக்கிறது. ஆனால், இந்த சட்டத் தொகுப்பால் விளைகிற பெருங்கேடு என்னவென்றால், இந்தச் சட்டங்களே முக்காலத்துக்கும் பொருந்துபவை என்று இருப்பதுதான். எல்லா வகுப்புக்கும் பொதுவான ஒரே சட்டம் இல்லை என்ற வகையில் அது மோசமானது.

ஆனால், எத்தனை தலைமுறையானாலும் சரி இந்த அநியாயம், அநீதி என்பது நிரந்தரமாக நீட்டிக்கப்பட வேண்டிய ஒன்று என்று ஆக்கி வைக்கப்பட்டுள்ளதே! சட்டத்தை உருவாக்குபவர்கள் அல்லது தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்படுகிற ஒரு சில நபர்களால் இவை உருவாக்கப்பட்டது என்பதற்காக அல்ல – நான் இவற்றை மறுப்பது. இறுக்கமும் மாறாத் தன்மையும் அதன் தன்மைகளாக இருப்பதாலேயே நான் அதை மறுக்கிறேன்.

மகிழ்ச்சி என்பது ஒரு மனிதனின் வாழ்நிலை மற்றும் சூழ்நிலை இவற்றோடு பல்வேறு மக்கள் மற்றும் குழுக் களின் நிலைமையையும் பொறுத்து மாறக் கூடியது. அப்படி இருக்கையில் நிரந்தரமான இந்தச் சட்டத் தொகுப்பை எந்தவித மாற்றமும் இல்லாமல், மனித இனம் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? எனவே, அதுபோன்ற ஒரு மதத்தை அழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணிகள், மதத்துக்கு எதிரானவை அல்ல என்று நான் கூறுகிறேன். சட்டத்துக்கு மதமென்று தவறான பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த முகத்திரையைக் கிழித்தெறியுங்கள். இதுவே உங்கள் தலையாயக் கடமை.

மக்களின் மனதிலே பதிந்திருக்கும் ‘மதம்' என்கிற தவறான கருத்தை நீக்குங்கள். மதம் என்று தங்களுக்குச் சொல்லப்பட்டது மதமே அல்ல, சட்ட விதிகளே என்கிற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்ளச் செய்யுங்கள். இதைச் செய்து முடித்ததுமே மதம் என்று சொல்லப்படுகிற இந்த சட்டவிதிகளைச் சீர்திருத்தியாக வேண்டும் அல்லது அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான தார்மீக பலம் உங்களுக்குத் தானாகவே வாய்க்கும்.

இந்து மதத்தை அதாவது ஒரு சட்டத் தொகுப்பை மதமாக மதிக்கிற வரையில், மக்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முன்வர மாட்டார்கள். ஏனெனில், பொதுவாகவே மதம் என்பது மாற்றம் என்ற கருத்துக்குப் புறம்பானது. ஆனால், சட்டம் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய இயல்புடையது. எனவே, இந்து மதம் என்று சொல்லப்படுவது உண்மையில் பழமையான, வழக்கொழிந்த சட்டம்தான் என்பதை மக்கள் தெரிந்து கொள்ளும்போது, மக்கள் மாற்றத்துக்கு தயாராக இருப்பார்கள். ஏனெனில், சட்டத்தை மாற்ற முடியும் என்பது மக்களுக்குத் தெரியும். சட்டத்தை மாற்ற முடியும் என்பதை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

24

இந்து மதக் கருத்துகள் குற்றமாக்கப்பட வேண்டும்

விதிகளால் ஆன ஒரு மதத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதால், மதமே தேவை இல்லை என்று நான் கருதுவதாக யாரும் எண்ணி விட வேண்டாம். மாறாக, திரு. பர்க் கூறுவதையே நானும் கூறுகிறேன். "உண்மையான மதம், சமூகத்தின் அஸ்திவாரமாக இருக்கிறது. எல்லா உண்மையான சிவில் அரசாங்கங்களும் அதை அடிப்படையாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுள்ளன. சமூகம், உண்மையான சிவில் அரசாங்கம் ஆகிய இரண்டினதும் உத்திரவாதமாகவும் அது இருக்கிறது.''

எனவேதான், இந்தப் பழமையான விதிகளால் ஆன மதம் அழிக்கப்பட வேண்டும் என்று கூறும் அதே வேளையில், அதன் இடத்தைக் கொள்கைகளால் ஆன மதம் ஒன்று இட்டு நிரப்ப வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். கொள்கைகளால் ஆன மதத்தையே உண்மையான மதம் என்று கூற முடியும். மனித வாழ்க்கைக்கு மதம் இன்றியமையாதது என்பதை நான் முழுமையாக நம்புவதால், மதச் சீர்திருத்தத்துக்குத் தேவையானவை என்று நான் எண்ணுகிற ஒரு சில கருத்துகளைக் கூறுவது என் கடமை என்று நான் உணர்கிறேன்.

சீர்திருத்தத்தில் அடிப்படையான அம்சங்களாகக் கொள்ளப்பட வேண்டியவை :

1. அனைத்து இந்துக்களும் ஏற்று அங்கீகரிக்கக்கூடிய ஒரே இந்து புனித நூலே இருக்க வேண்டும். அதாவது, இப்போது புனிதமானவையாகவும் அதிகாரம் உள்ளதாகவும் கொள்ளப்படுகிற வேத, சாஸ்திர, புராணங்கள் - புனிதமானவையோ, அதிகாரப்பூர்வமானவையோ அல்ல என்று சட்டப்பூர்வமாக செய்துவிட வேண்டும். இந்நூல்களில் உள்ள மத, சமுதாயக் கருத்துகளைப் பரப்புவது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாக்கப்பட வேண்டும்.

2. இந்துக்களிடையே அர்ச்சகர்கள் ஒழிக்கப்படுவது நலம். ஆனால், அது சாத்தியமில்லை என்றே தோன்று கிறது. எனவே, அர்ச்சகத் தொழில் பரம்பரைத் தொழிலாக இருப்பதையாவது ஒழிக்க வேண்டும். இந்து மதத்தவன் என்று தன்னைச் சொல்கிற எந்த சாதியைச் சேர்ந்தவராயினும் - அவருக்கு அர்ச்சகர் ஆகும் உரிமை இருக்க வேண்டும். அர்ச்சகர் தொழிலுக்கான அரசுத் தேர்வு எழுதி சான்றிதழ் பெறாத எவரும் அர்ச்சகர் தொழில் செய்யக் கூடாது என்று சட்டமியற்ற வேண்டும்.

3. சான்றிதழ் பெறாத அர்ச்சகர் நடத்தும் சடங்குகள் செல்லாது என்று அறிவித்துவிட வேண்டும். மீறி நடத்துவது, தண்டனைக்குரிய குற்றம் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

4. அர்ச்சகன் அரசு ஊழியராக ஆக்கப்பட வேண்டும். மற்ற மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களுக்கு உட்படுவதோடுகூட - அர்ச்சகன் கூடுதலாக ஒழுக்கம், நம்பிக்கை, கடவுள் வழிபாடு போன்றவற்றிலும் அரசுவிதிகளுக்குக் கட்டுப்பட்டவராக ஆக்கப்பட வேண்டும்.

5. அய்.சி.எஸ். ஊழியர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு இருப்பது போலவே, அரசின் தேவைகளுக்கு ஏற்றபடி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்.

அர்ச்சகன் - கடவுளால் கட்டவிழ்த்து விடப்பட்ட நச்சுக் கிருமியே!

சிலருக்கு இது தீவிரமானது என்று தோன்றலாம். ஆனால், இதில் புரட்சிகரமான எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இந்தியாவில் எல்லா தொழில்களுமே ஒழுங்குமுறை களுக்கு உட்பட்டவையாகத்தான் உள்ளன. பொறியாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஆகிய எல்லாருமே தத்தம் தொழிலில் திறமை உடையவர்கள் என்று நிரூபித்துக் காட்டிய பிறகே - தங்களுடைய தொழிலைச் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். தங்கள் தொழிலை நடத்தி வருகிற காலம் முழுவதும் இந்த நாட்டின் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களுக்கு மட்டுமல்லாமல், தத்தம் தொழிலில் அமைந்துள்ள சிறப்புச் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்.

திறமை எள்ளளவும் தேவை இல்லாத ஒரே தொழில் அர்ச்சகர் தொழில் ஒன்றுதான். இந்து அர்ச்சகனின் தொழிலே சட்டத்துக்கு உட்படாத ஒரே தொழிலாக இருந்து வருகிறது. அறிவு நிலையில் அர்ச்சகர் மூடனாக இருக்கலாம். உடல் நிலையில் பால்வினை நோய்களாகிய மேக நோய், வெட்டைநேõய் உடையவனாக இருக்கலாம். ஒழுக்கத்தில் சீரழிந்தவனாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் அந்த அர்ச்சகன், தூய்மையான சடங்குகளை நடத்தும் இந்துக் கோயிலில் உள்ள மிகப் புனிதமான ­மூலஸ்தானங்களில் நுழையவும், இந்துக் கடவுளை வணங்கவும் தகுதிபடைத்தவனாக இருக்கிறான். இந்துக்களுக்கு இடையே இது சாத்தியமாக இருப்பது எப்படி?

இந்துக்களில் அர்ச்சகராக இருக்க, அர்ச்சகர் சாதியில் பிறந்திருப்பதே போதுமானது என்ற நிலை இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது. இவை எல்லாமே கேவலமாக இருக்கின்றன. இந்துக்களில் உள்ள அர்ச்சகர் வகுப்பு சட்டத்துக்கோ, ஒழுக்கத்துக்கோ கட்டுப் படாத காரணத்தால்தானே இந்த நிலை? அர்ச்சகர் வகுப்பு தன்னுடைய கடமைகள் என்று எதையுமே ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்கென்று உரிமைகளும் தனிச்சலுகைகளும் இருப்பது மட்டுமே அர்ச்சகர் வகுப்புக்குத் தெரியும்.

மக்களின் அறிவையும், ஒழுக்கத்தையும் சீரழிக்க வேண்டி கடவுள் கட்டவிழ்த்து விட்டிருக்கிற பெரும் நச்சுக் கிருமியே அர்ச்சகர் வர்க்கம். நான் மேலே சுருக்கமாகக் கூறியது போன்ற சில சட்ட திட்டங்களால் அர்ச்சக வகுப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அது போன்ற ஒரு நடவடிக்கை, அர்ச்சகர் வர்க்கத்தினர் தீங்கு செய்ய முடியாமலும், மக்களை தவறாக வழி நடத்த முடியாமலும் தடுத்து நிறுத்தும். அனைவருக்கும் பொதுவான ஒரு தொழிலாக அர்ச்சகர் தொழிலை அது ஆக்கும். இந்த நடவடிக்கை, பார்ப்பனியத்தை ஒழிக்கவும், பார்ப்பனியத்தின் மறுவடிவமான சாதியை ஒழிக்கவும் துணைபுரியும். இந்து மதத்தை நாசப்படுத்திய கொடிய நஞ்சு பார்ப்பனியமே.

நீங்கள் பார்ப்பனியத்தை ஒழித்து விட்டால், இந்து மதத்தைக் காப்பாற்றுகிற முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். இந்தச் சீர்திருத்தத்துக்கு எதிர்ப்பே இருக்கக் கூடாது. ஆரிய சமாஜத்தாருங் கூட இதை வரவேற்க வேண்டியதே. ஏனெனில், இந்தச் சீர்திருத்தம் அவர்கள் கூறும் ‘குணகர்ம' கோட்பாட்டை செயல்படுத்துவதே ஆகும்.

மதமாற்றம் என்றால் ‘புத்துயிர்' என்று பொருள்

நீங்கள் இதைச் செய்தாலும் சரி, செய்யாமல் போனாலும் சரி. உங்களுடைய மதத்துக்கு ஒரு புதிய கொள்கையை அடிப்படையாக அமைக்க வேண்டும். சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் - சுருங்கச் சொன்னால் ஜனநாயகம் ஆகியவற்றோடு பொருந்தி வருவதாக அக்கொள்கை இருக்க வேண்டும். இதைப்பற்றி எனக்கு அதிகமாகத் தெரியாது. ஆனால், அது போன்ற மதக் கொள்கைகளை அந்நிய மதங்களில் இருந்து அடைய வேண்டியது இல்லை என்றும், உபநிடதங்களில் உங்களுக்குத் தேவையான கொள்கைகள் இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.

ஆனால், உபநிடதங்களை முழுவதுமாகப் புதிதாக வார்த்து எடுக்காமலும், உபநிடதங்களில் கணிசமான ஒரு பகுதியை நீக்காமலும், கணிசமான ஒரு பகுதியை செதுக்காமலும், உபநிடதங்களில் இருந்து புதிய ஒரு மதக் கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ள உங்களால் முடியுமா என்பது சந்தேகமே. வாழ்க்கையின் அடிப்படையான கருத்தோட்டங்களில் முழுமையான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியாக வேண்டும். வாழ்க்கையின் மதிப்பீடுகளில் முழுமையான மாற்றம் வேண்டும்; மக்களையும் பொருள்களையும் பற்றிய மனநிலையில் முழுமையான மாற்றம் என்பதே - புதிய மதக் கோட்பாட்டை உருவாக்குவது ஆகும். மதமாற்றம் வேண்டும் என்பதுதான் அதன் பொருள்.

‘மதமாற்றம்' என்ற சொல் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ‘புத்துயிர்' என்பதே அதன் பொருள் என்றும் கூறுவேன். ஆனால், சவத்துக்குள் ‘புத்துயிர்' நுழைய முடியாது. புதிய உடல் ஒன்று தோன்றுவதற்கு பழைய உடல் அழிய வேண்டும். அந்தப் புதிய உடலில்தான் புது உயிர் ஒன்று நுழைய முடியும். சுருங்கச் சொன்னால், புதுமை உயிர்பெற்றுப் பரிணமிக்க முதலில் பழமை செத்து மடிய வேண்டும். சாஸ்திரங்களின் அதிகாரத்தை ஒதுக்கித் தள்ளுங்கள், சாஸ்திரங்களின் மதத்தை அழித்துவிடுங்கள் என்ற நான் கூறியதன் பொருள் இதுதான்.
Pin It