இந்து மதச் சாத்திரங்கள் மக்களை வருண / சாதி ரீதியாகப் பிரித்து வைத்து உள்ளன என்பதும், அந்த வருண / சாதி ஏற்றத் தாழ்வுகள் பிறவி அடிப்படையிலேயே விதிக்கப்பட்டு உள்ளன என்பதும் மறுக்கவே மறைக்கவே முடியாத உண்மைகள். ஆனால் பார்ப்பனர்கள் "இல்லையே! வருண / சாதிப் பிரிவுகள் பிறவி அடிப்படையில் இல்லையே! அவை குணத்தின் செய்கையின் அடிப்படையில் தானே நிர்ணயிக்கப்பட்டு உள்ளன?" என்று கொஞ்சமும் கூசாமல் வாதம் செய்கின்றனர்.
"குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங் களைச் சமைத்தேன். செய்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தேன் என்றுணர்" என்ற பகவத் கீதையின் 4வது அத்தியாயத்தின் 13வது செய்யுளை மேற்கோள் காட்டி உரக்கக் கூவுகின்றனர். பார்ப்பனர்களின் இந்த இரைச் சலுக்கு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் பலர் மயங்கி / குழம்பி விடுகின்றனர். இந்த மயக்கம் குழப்பம் இருக்கும் நிலையிலேயே "வருணம் / சாதி பிறவி அடிப்படையில் இல்லாமல் குணத்தின், செய்கையின் அடிப்படையில் இருக்கும் போது இட ஒதுக்கீடு சாதி அடிப்படையில் இருப்பது தவறு" என்ற நச்சுக் கருத்தை / நச்சுச் சிந்தனையை மக்கள் மனதில் விதைக்க முற்படுகின்றனர்.
ஆனால் இந்து மதச் சாத்திரங்கள் உண்மையில் வருணத்தை / சாதியைப் பிறவி அடிப்படையில் பிரித்து வைக்காமல் குணத் தின், செய்கையின் அடிப்படையிலா பிரித்து வைத்து உள்ளன? இந்து மதச் சாத்திரங்களில் கூறப்பட்டு உள்ள சில செய்திகளைப் பார்ப்போம். மனு ஸ்மிருதியின் 2ஆம் அத்தியாயத்தின் 31வது செய்யுள் "பிராமணனுக்கு மங்களத்தையும், க்ஷத்திரியனுக்கு பலத்தையும், வைசியனுக்கு பொருளையும், சூத்திரனுக்கு தாழ்மையயையும் காட்டுகிறதான பெயரை இட வேண்டியது" என்று கூறுகிறது.
நன்கு கவனித்துப் பாருங்கள். வருணம் தீர்மானிக்கப்பட்ட பின்புதான் ஒரு குழந்தைக்குப் பெயரிடும் சடங்கே நிகழ முடிகிறது. வருணம் / சாதி பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் குணத்தின் செய்கையின் அடிப்படையில் அமைவதாய் இருந்தால், அக்குழந்தை வளர்ந்து பெரியவனாகி, அவனுடைய குணத்தையும் செய்கையையும் கண்ட பிறகு தான் அவன் எந்த வருணத்தை / சாதியைச் சேர்ந்தவன் என்று தெரிந்து கொள்ள முடியும். ஆனால் பிறந்த உடனேயே செய்யும் பெயரிடும் சடங்கின் போதே வருணத்தை அடிப்படையாகக் கொண்டு தான் செய்ய வேண்டும் என்றால், வருணம் பிறவி அடிப்படையில் தான் அமைகிறது என்று புரிந்து கொள்ள அடிமட்ட அறிவிலியாலும் முடியுமே?
மேலும் மனு ஸ்மிருதியின் 2ஆம் அத்தியாயம் 238வது செய்யுள் "அன்புள்ளவன் மேலான வித்தையை சூத்திரனிடத்தில் இருந்தாலும், மேக்ஷ தருமத்தை சண்டாளனிடத்தில் இருந் தாலும், ஸ்த்திர ரத்தினத்தை (அதாவது அழகான, பண்புள்ள பெண்ணை) தனக்குத் தாழ்ந்த குலத்தில் இருந்தாலும் கிரகித்துக் கொள்ளலாம்" என்று கூறுகிறது. குணத்தின், செய்கையின் அடிப் படையில் தான் வருணம் அமைகிறது என்றால், மேலான வித்தையை அறிந்தவன் எப்படி சூத்திரனாக இருக்க முடியும்? மோக்ஷ தருமத்தை அறிந்தவன் எப்படி சண்டாளனாக இருக்க முடியும்? அவ்வித்தையை, அந்த அறத்தை உணர்ந்த நிலையில் அவர்களைப் பிராமணர்களாகத்தானே வகைப்படுத்த வேண்டும்? அவ்வாறு வகைப்படுத்தாமல், சூத்திரனிடத்தில் இருந்தும், சண்டாளனிடத்தில் இருந்தும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி இருப்பதானது வருணம் என்பது குணத்தின், செய்கையின் அடிப்படையில் அல்ல; பிறவியின் அடிப்படையில் தான் என்பதற் கான உறுதியான சான்று அல்லவா?
இந்து மதச் சட்டங்களைச் சொல்லும் இன்னொரு சாத்திரமான பராசர ஸ்மிருதியின் 8வது அத்தியாயம் 25வது செய்யுள் "பிராமணன் இழிதொழிலினனாகவே இருக்கட்டும்; அப்போதும் அவன் வழிபடத்தக்கவன். சூத்திரன் உயரிய நற்குணங்களே உருவானவனாயினும் சரி; அவனை வழிபடலாகாது. கன்று போட்ட பசுவென்று துஷ்டத்தனம் பண்ணுகிறது; குட்டி போட்ட கழுதையொன்று சாதுவாக வீட்டில் இருக்கிறது. இவ்விரண்டில் அறிஞர் பசுவை விட்டுவிட்டுக் கழுதையைக் கறந்து பாலைக் கிரஹிப்பார்களா?" என்று கூறுகிறது.
வருணம் பிறவி அடிப்படையில் அமையாமல் குணத்தின் அடிப்படையில் அமைகிறது என்றால் இழிதெழிலினன் எப்படி பிராமணனாக இருக்க முடியும்? உயரிய நற்குணங்களே உருவானவன் எப்படி சூத்திரனாக இருக்க முடியும்?
மனு ஸ்மிருதியும், பராசர ஸ்மிருதியும் சாதாரண மக்களி டையே வெகுவாகப் புழங்காத நூல்கள். ஆனால் பகவத் கீதை மக்களிடையே வெகுவாகப் பரப்பப்பட்டு உள்ளது. கிருத்தவர் களுக்கு விவிலியம் (பைபிள்) போலவும், இஸ்லாமியர்களுக்குக் குரான் போலவும், இந்துக்களுக்கு ரிக், யஜூர், சாம, அதர்வ வேதங்களைத் தான் சொல்ல வேண்டும். ஆனால் அவற்றை இந்து மதத்தின் ஆதார நூல்களாகக் கொடுக்காமல் பார்ப்பனர்கள் பகவத் கீதையையே முன் நிறுத்திக் காட்டுகின்றனர். அத்தகைய பகவத் கீதையின் முதல் அத்தியாயம் 41வது செய்யுள் "கண்ணா! அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தேன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது" என்று கண்ணனைப் பார்த்து அருச்சுனன் கேட்பதாக உள்ளது. மாதர் கெடுவதற்கும் வர்ணக் குழப்பம் உண்டாவதற்கும் என்ன தொடர்பு? வர்ணம் குணத்தின், செய் கையின் அடிப்படையில் அமைகிறது என்றால், அருச்சுனனின் கருத்துப்படி "கெட்டுப் போன" பெண்களுக்குப் பிறந்தவர்களின் குணத்தின், செய்கையின் அடிப்படையில் வருணத்தை முடிவு செய்ய முடியுமே? இதில் குழப்பம் ஏன் வருகிறது? ஏனென்றால் வருணம் பிறவியில் அமைவதால் தான் அருச்சுனனுக்குக் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் பகவத் கீதையின் 18வது அத்தியாம், 47வது செய்யுள் "பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று. இயற்கையிலேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடையமாட்டான்" என்று கூறுகிறது.
வருணம் பிறவி அடிப்படையில் அமையாமல் குணத்தின், செய்கையின் அடிப்படையில் அமைகிறது என்றால், ஒருவனால் எந்தத் தெழிலைத் திறம்படச் செய்ய முடிகிறதோ அந்தத் தொழிலுக்கு உரிய வருணத்தில் அவனை வகைப்படுத்திவிட வேண்டியது தானே? அதை விட்டு விட்டு "உன்னால் திறம்படச் செய்ய முடிந்தாலும் உனக்கு விதிக்கப்படாத அந்தத் தொழிலைச் செய்யாதே. அரைகுறையாகவே செய்ய முடிந்தாலும் உனக்கு விதிக்கப்பட்ட தொழிலையே செய்" என்று கூறினால், அவனுக்கு அந்தத் தொழில் பிறவி அடிப்படையில் தானே விதிக்கப்படுகிறது? அதாவது வருணம் / சாதி பிறவி அடிப்படையில் தானே நிர்ணயம் ஆகிறது?
வருணம் / சாதி என்பது பிறவி அடிப்படையில்தான் நிர்ணயிக் கப்படுகிறது என்பதற்கு இவ்வளவு வலுவான சான்றுகள் இந்து மத நூல்களிலும், நடைமுறையிலும் இருக்கும் போது பார்ப் பனர்கள் ஏன் மாற்றிக் கூறுகின்றனர்?
மகாத்மா புலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் போராட்டங்களுக்குப் பின், பார்ப்பனர்கள் மட்டுமே உயர் நிலை வேலைகளில் இருக்க முடியும் என்ற நிலை மாறி ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் சிலருக்கும் அந்த வாய்ப்புக் கிடைத்தது. இவ்வாறு வாய்ப்புப் பெற்றவர்கள் பல இடங்களில் பார்ப்னர்களைவிடத் திறமைசாலிகள் என்று மெய்ப்பித்தனர். இதனால் கிலி அடைந்து போன பார்ப்பனர்கள் சாதி எனும் கருத்தியலில் குழப்பம் விளைவிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தைத் தளர விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், பல வழிகளில் சிந்தித்தனர் / சிந்திக் கின்றனர். அதில் ஒன்று தான் சாதி என்பது பிறப்பின் அடிப்படை யில் அல்ல; குணத்தின், செய்கையின் அடிப்படையில் என்ற கருத்தியலைப் பரப்புவது. இக்கருத்திற்கு வலுவூட்டி, அதன் பின் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு முறையை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதும், அதன் பின் வழக்கம் போல் திறமைக் குறைவான பார்ப்பனர்களையும் "திறமைசாலிகள்" என்று கூறி உயர் நிலை வேலைகளில் அமர்த்துவது, ஒடுக்கப்பட்ட வகுப்பில் உள்ள திறமைசாலிகளைத் "திறமைக் குறைவானவர்கள்" என்று கூறி அவர்களுக்கு உயர் நிலை வேலைகளை மறுப்பது போன்ற உத்திகளுக்கு உராய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் தான் அவாளின் திட்டம்.
வருணம் / சாதி பிறவி அடிப்படையில் இல்லை என்று வெளி யில் கூறினாலும், இந்து மத நூல்களும் நடைமுறையும் அதைப் பிறவி அடிப்படையில் தான் வகைப்படுத்தி உள்ளன என்பதைப் பார்ப்பனர்கள் நன்கு அறிவார்கள். இந்தப் பிறவி எனும் பெருங்கடலைக் கடப்பதற்காக நாம் நீந்தும் முயற்சியில் ஈடுபட்டு விடக் கூடாது என்பதற்காகவே அவாள் அவ்வாறு கூறுகின்றனர். ஆனால் நாம் பிறவி அடிப்படையிலான இந்த ஒடுக்கு முறையை எதிர்த்து நீந்திக் கரை சேர்ந்தே ஆக வேண்டும்.
அதற்கு ஒரே வழி அனைத்துத் துறைகளிலும், அனைத்துத் தெழில்களிலும், அனைத்துப் பொருளாதார, சமூக நடவடிக்கைகளிலும், அனைத்து நிலைகளில் முற்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டடேர், பழங்குடியினர், மத சிறுபான்மையினர் ஆகியேருக்கு அவரவர் மக்கள் தொகை விகிதத்தில் பங்கு அளிப்பதே. கயமை நிறைந்த பொதுப் பேட்டி முறையை முற்றிலும் ஒழித்து விட்டு விகிதரச்சாரப் பங்கீடு முறையைச் செயல்படுத்தினால் அந்தந்த வகுப்பில் உள்ள திறமைசாலிகள் உயர் நிலைகளிலும், அந்தந்த வகுப்பில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அடுத்த நிலைகளிலும் வேலை செய்யும் வாய்ப்புகளைப் பெறுவார்கள். அந்நிலையில் இப்போது உள்ள சாதி / பிறவி அடிப்படையிலான ஒடுக்குமுறை மறைந்து நாம் பிறவி எனும் பெருங்கடலை நீந்திக் கரை சேர்ந்து இருப்போம். அவ்வாறு இன்றி விகிதாச்சாரப் பங்கீடு கேட்கவில்லை என்றால் பிறவி அடிப்படையிலான சாதிய ஒடுக்கலில் அழுந்தியே இருக்க நேரிடும். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் வகுப்புரிமை கேளாதவர்.