தீண்டாமை : கிரிக்கெட் வடிவத்தில்!

கோவை மாவட்டத்தில் உள்ள கருத்தம்பட்டி ஊருக்கு அருகில் ஒரு சிற்×ர். அச்சிற்×ரில் ஒரு கிரிக்கெட் அணிக்கு ரவி (24) என்ற தலித் இளைஞர் தலைவர்; மற்றொரு அணிக்கு ரமேஷ் (24) என்ற சாதி இந்து இளைஞர் தலைவர். மே 4, 2007 அன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தலித் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. பரிசுத் தொகை ரூ. 150/ தலித் அணியிடம் தோற்றுப்போன ரமேஷ், ரவியிடம் பரிசுத் தொகையை வீசியெறிந்துள்ளார். போட்டி முடிந்த பிறகு ரவியும் அவரது அணியினரும், அக்கிராமத்தில் சொக்கலிங்கம் என்ற சாதி இந்து நடத்தும் தேநீர்க்கடை அருகில் வழிமறித்து, அவர் பந்தயத் தொகையை வீசியெறிந்ததற்கான காரணத்தைக் கேட்டிருக்கிறார். அதற்குப் பிறகு எழுந்த வாக்குவாதத்தில், ரமேஷ், சொக்கலிங்கம் மற்றும் அவரது மனைவி ருக்மணி ஆகியோர் சேர்ந்து கொண்டு, ரவியையும் உடன் வந்த அனைவரையும் அவர்களின் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளனர்.

இரு தரப்பினரும் உள்ளூர் பஞ்சாயத்து தலைவரிடம் நியாயம் கேட்டுள்ளனர். ஆனால், அங்கும் தீர்வு கிட்டவில்லை. அந்த வாரம் முழுவதும் இப்பிரச்சினை நீடித்ததால், வேறு வழியின்றி இரு தரப்பினரும் 7.5.07 அன்று கருத்தம்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். தன்னை சாதிப் பெயரைச் சொல்லி அவமானப்படுத்திய மூவர் மீதும் ரவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல் துறை, சாதி இந்துக்கள் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தது. ரமேஷ் தரப்பினரும் ருக்மணியை அவதூறாகப் பேசியதாகப் புகார் கொடுக்க, காவல் துறை ரவி மீதும் வழக்கு தொடுத்துள்ளது. விசாரணை தொடர்வதாக ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்' (9.5.2007) செய்தி வெளியிட்டுள்ளது. தீண்டாமை, இம்முறை கிரிக்கெட் வடிவத்தில் வெளிப்பட்டுள்ளது. இரு தரப்பின் மீதும் வழக்கு என்றான பிறகு முதலில் பேச்சுவார்த்தை நடக்கும். பிறகு தீர்ப்பு வரும். ‘இந்து சமூக நீதி' மட்டும், தீண்டாமைக்கு எதிராகவா இருந்துவிடப் போகிறது?

கோயில் நுழைவு : ஜாதிக்கு சேதாரமில்லை

உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது ச. வல்லகுண்டபுரம். இங்குள்ள மாகாளியம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்ற தலித்துகள் சாதி இந்துக்களால் அவமானப்படுத்தப்பட்டு, கோயிலுக்குள் நுழையவும் தடுக்கப்பட்டனர். 9.5.2007 அன்று இக்கொடுமை நடந்தேறியது. கார்த்திகேயன் என்ற சாதி இந்து, தலித்துகளின் சாதிப்பெயரைச் சொல்லி அவமானப்படுத்தி யுள்ளார். அவர்களை ஒட்டுமொத்தமாக எரித்து விடுவதாகவும் மிரட்டியுள்ளõர்.

இந்து மக்கள் கட்சி பொறுப்பாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட 11 பேர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஆதித்தமிழர் பேரவை தலையிட்டு, அன்று மாலை 5 மணியளவில் மக்களைத் திரட்டி, கோயில் பூட்டை உடைத்து கருவறைக்குள் நுழைந்து, இந்து மதம் விதித்துள்ள சாதி எல்லைகளைத் தகர்த்தெறிந்தனர். துணிச்சலான இந்த உரிமைப் போருக்கு, மக்களை தயார் செய்த ஆதித்தமிழர் பேரவைக்கு நம் வாழ்த்துகள்!

தலித் மக்கள் இந்துக்கள் அல்லர். இருப்பினும், புலே காலம் முதல், தீண்டத்தகாத மக்கள் கோயிலில் நுழையப் போராடி வருகின்றனர். ஆனால், ‘தலித்துகள் எங்கள் ஜாதி சாமியை தீண்டி விடக் கூடாது' என்று இந்துக்கள் இன்றுவரையிலும் ‘போராடுகின்றனர்'. ஒரு சில பகுதிகளில் தனித்த வெற்றிகள் கிட்டினாலும், இனிவரும் காலங்களிலும் ‘தலித்துகள் கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது' என்ற செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கும்.

அதுமட்டுமல்ல, அத்து மீறி கோயிலுக்குள் நுழைந்தாலும், இந்து மதத்தில் தலித்துகளின் நிலை என்ன? கீழ் ஜாதி தானே! இதன் மூலம் ஜாதிக்கு எந்த சேதாரமும் ஏற்படுவதில்லை. பக்தியும் வேண்டும்; ஜாதியையும் சேதப்படுத்த வேண்டும் எனில், தலித் பக்தகோடிகளே! மசூதிகளும், தேவாலயங்களும், குருத்துவாராக்களும் தயாராக இருக்கின்றன. கடவுளை மறக்கத் தயார் எனில், இருக்கவே இருக்கிறது அம்பேத்கர் காட்டிய பவுத்த மார்க்கம்!

ஏழை ஏகாதிபத்தியம்!

‘பார்ப்பனர்கள் எல்லாம் தலித்துகளைப் போல நடத்தப்படுகிறார்கள்’ என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பாரி வைத்த ‘அவுட்லுக்' ஏடு, தற்பொழுது ‘மீண்டும் பார்ப்பனர் ஆதிக்கம்’ என்று ஆணவத்துடன் கட்டுரை (4.6.2007) வெளியிட்டுள்ளது. அவர்களுடைய சாதித் திமிரும், ஆதிக்கமும் எப்போது குறைந்தது, இப்போது மீண்டும் வருவதற்கு? ஜாதி அமைப்பு நீடித்திருக்கும் வரை, பார்ப்பனர்களின் ஆதிக்கமும் நிலைத்திருக்கும் என்பதுதான் உண்மை.

பார்ப்பனர்கள் பற்றிய சில புள்ளிவிவரங்களையும் ‘அவுட்லுக்' ஏடு அளித்துள்ளது. டெல்லியில் உள்ள Centre for the Study of Developing Societies என்ற ஆய்வு மய்யம், கடந்த மூன்றாண்டுகளில் எடுத்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகம் ஆந்திரம் மற்றும் கேரளத்தில் ஒரு சதவிகித பார்ப்பனர்களே உள்ளனர். உத்ரகாண்ட் மாநிலத்தில்தான் அவர்கள் அதிகபட்சமாக இருபது சதவிகிதம் உள்ளனர். அவர்களுடைய மொத்த எண்ணிக்கை 5.6 கோடி என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் மிக உயர்ந்த பணியாகக் கருதப்படும் இந்திய ஆட்சிப் பணியில் (அய்.ஏ.எஸ்.) பார்ப்பனர்களே அதிக அளவில் உள்ளனர். பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் மிக மூத்த அதிகாரிகள் அனைவரும் பார்ப்பனர்களே. தற்பொழுது உள்ள அமைச்சகத்தின் கேபினட் செயலாளர், முக்கிய செயலாளர் பதவி முதல் மிக முக்கியப் பதவிகளையும், ‘ரா' போன்ற உளவுத் துறை, ராணுவம், வளர்ச்சி, விவசாயம், கூட்டுறவு, பொருளாதாரத் துறை, வருவாய்த் துறை, சட்டத் துறை ஆகியவற்றிலும் பார்ப்பனர்களே கோலோச்சுகின்றனர். மத்திய அரசின் 37 முக்கியத் துறைகளின் செயலாளர் பதவிகளைப் பார்ப்பனர்களே ஆக்கிரமித்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புள்ளிவிவரங்களின்படி, நிர்வாகத் துறையில் 37.17 சதவிகித பார்ப்பனர்கள் உள்ளனர். அறிவியல், தொழில்நுட்பத் துறை மற்றும் ஆய்வுத் துறைகளின் உயர் பணிகளில் பார்ப்பனர்களே அங்கம் வகிப்பது, வெளிப்படையாகத் தெரிகிறது என்று ‘அவுட்லுக்' கூறுகிறது.

அதே கட்டுரையில், ‘ஏழை' பார்ப்பனர்களைப் பற்றி புகைப்படங்களுடன் விரிவான கட்டுக் கதைகளும் வெளியிடப்பட்டுள்ளன. ஏழைப் பார்ப்பனர்கள் ரிக்ஷா ஓட்டுகிறார்களாம்; தெருவில் பொருட்களை விற்கிறார்களாம்; நவீன கழிப்பறைகளில் துப்புரவுப் பணி செய்கிறார்களாம்! இவ்வாறான கதைகளை தேடிக் கண்டுபிடித்து - ‘வறுமைக்கு ஜாதியில்லை' என்ற முடிவுக்கு அது வந்திருக்கிறது. வறுமைக்கு ஜாதியில்லை என்று அது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், துப்புரவுப் பணி செய்யும் (கையால் மலம் அள்ளுவது அல்ல) ஒரு பார்ப்பனர் பூணூலுடன் ‘போஸ்' கொடுக்கிறார். அப்புறம் என்ன? வறுமைக்கும் (பூணூல்) ஜாதி இருக்கிறதே!

பார்ப்பனர்கள் எவ்வளவுதான் வறுமையில் வாடினாலும், அவர்கள் இந்த சமூகத்தில் ‘பிராமணர்'கள்தானே. உச்சபட்ச வறுமைகூட அவர்களைப் பறையர்களாக்கவில்லையே! ஒரு பறையன் எவ்வளவுதான் பணக்காரனாக மாறினாலும், அவன் ஒருபோதும் ‘பிராமணனாக' முடியாது. அதுதானே மநுதர்மம் இந்து மதம் வெங்காயம். இத்தகைய பிறப்பால் உயர்ந்தவர்/தாழ்ந்தவர் என்ற கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான், உண்மையான விடுதலையாக இருக்க முடியும். பார்ப்பனர்களும் வறுமையில் வாழ்கின்றார்கள்; எனவே, அவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது, பார்ப்பனரல்லாதவர்களை மீண்டும் புதைகுழிக்குள் தள்ளும் செயல். ஏழை ஏகாதிபத்தியத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா?

கருத்துரிமைக்கு எதிரான ‘கருத்து'

கருத்துரிமையை நிலைநாட்ட ‘கருத்து' என்ற அமைப்பை கனிமொழியும், கார்த்திக் சிதம்பரமும் உருவாக்கி, சில நாடகார்த்தமான கூட்டங்களையும் நடத்தினர். தன் கருத்தைக் கூறிய ‘தினகரன்' நாளேட்டின் மீது தொடுக்கப்பட்ட வன்முறைக்கு எதிராக ஒரு சிறு அறிக்கையைக்கூட ‘கருத்து' வெளியிடவில்லை. ஆனால், ‘அழகிரிக்கும் இதற்கும் தொடர்பில்லை' என்று சி.பி.அய். விசாரணையை முந்திக் கொண்டு, கனிமொழி பேட்டி அளிக்கிறார். சரி, தொடர்பில்லை எனில், ‘கருத்து' அமைதி காப்பது ஏன்?
Pin It