(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, எண்.13, 1946, பிப்ரவரி 8, பக். 716.)

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்):

            தலைவர் அவர்களே,

            “1923 ஆம் ஆண்டின் இந்தியச் சுரங்கங்கள் சட்டத்தை மேலும் திருத்துவதற்கான மசோதாவை” முன்மொழிகிறேன்.

            இம்மசோதா ஓர் எளிய நடவடிக்கையே.

            (இக்கட்டத்தில் அவைத் தலைவர், தலைமைப் பொறுப்பைத் துணைத் தலைவர் (சர் முகமது யாமின் கான்) பால் விடுத்து, நீங்குகிறார்.)

            ambedkar 292சுரங்க முகப்புகளில், சுரங்க உரிமையாளர்கள், பூட்டக்கூடிய நிலையடுக்குகளுடனும், தாரைக் குழாய்களுடனும் குளியலறைகள் அமைத்துத் தருவதைக் கட்டாயக் கடமையாக்குவதே இம்மசோதாவின் நோக்கம். குளியல் அறைகளின் எண்ணிக்கை வரையறுப்பு பொதுப்படையாகவோ, அல்லது சுரங்கத்தில் அன்றாடம் பணியாற்றும் ஆண், பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலோ செய்யப்படலாம். குறியலறையின் அளவு, இருக்க வேண்டிய வசதிகள் ஆகியவையும் அவ்வாறே வரையறுக்கப்படலாம். சுரங்க முகப்புகளில் குளியல் அறைகள் அமைப்பதன் அவசியத்தை யாரும் மறுக்க மாட்டார்கள்; இதனால் சுரங்கத் தொழிலாளர்களின் தன்மதிப்பு வெகுவாக உயரும். அவர்கள் தூய உடலுடனும் உடைகளுடனும் இல்லம் திரும்புதல் மிகவும் விரும்பத்தக்கதல்லவா? நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் நலநிதியை நிருவகிப்பதற்காக, இந்திய அரசு நியமித்த, ‘நிலக்கரிச் சுரங்க ஆலோசனைக் குழு’வின் பரிந்துரையின்பேரில் இந்நடவடிக்கை உருவாகியுள்ளது. நிலக்கரிச் சுரங்க முகப்புகளில் குளியலறைகள் கட்டுதல் சுரங்க உரிமையாளர்களின் கடமையென்பதே குழுவின் ஒருமித்த கருத்தாகும். இக்கருத்துக்குச் செயல்வடிவம் கொடுக்கும் பொருட்டாக, சுரங்கச் சட்டத்தின் 30வது பிரிவின் கீழ் இந்திய அரசுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறை வகுக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி, சுரங்க முகப்புக் குளியலறைகளைக் கட்டாயமாக்கும் அதிகாரம் இந்திய அரசுக்குக் கிடைக்க இம்மசோதா முற்படுகிறது. இதுவே மசோதாவின் நோக்கமாகும்.

            இந்தியச் சுரங்கச் சட்டத்தின் 31ஆவது பிரிவில் வரையறுக்கப்பட்டிருக்கும் விதிமுறை உருவாக்க நடைமுறையிலிருந்து இந்திய அரசுக்கு விலக்கு அளிப்பதே, மசோதாவின் இரண்டாம் பகுதியின் நோக்கம், சட்டத்தின் 31ஆம் பிரிவின்படி, விதிமுறைகள் வெளியிடப்பட்ட பின்னரே நிறைவேற்றப்படலாம். நாம் இப்போது உருவாக்கவிருக்கும் விதிமுறைகளுக்குச் சட்டத்தின் 31ஆம் பிரிவிலிருந்து விதிவிலக்கு பெற முனைகிறோம். கடமை விதிக்கப்படுவது மட்டுமன்றித் தாமதமின்றி நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுமே விதிவிலக்கு கோருவதற்குக் காரணங்களாகும்; நாம் தாமதத்தைத் தவிர்க்கவே விரும்புகிறோம். சுரங்க முகப்புக் குளியலறைகள் எல்லாச் சுரங்கங்களிலும் உடனடியாகக் கட்டப்பட வேண்டும் என்பதில் இந்திய அரசு கொண்டிருக்கும் அக்கறைக்கு அடையாளமாக, குளியலறைகளை ஓராண்டு காலத்திற்குள் கட்டி முடிக்கும் சுரங்க உரிமையாளர்களுக்குச் செலவுத் தொகையில் 10% மானியமாக இந்திய அரசு வழங்கும் எனவும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்றுதல் பொருட்டாகவும், இந்த விதிமுறைகளுக்குச் சட்டப்பிரிவு 31இல் இருந்து விதிவிலக்கு கோரப்படுகிறது. இந்த மசோதா மிக எளியது; மிக முக்கியமானது; மாறுபட்ட கருத்துக்கிடமில்லாதது; ஆதலின் அதிகத் தடைகளின்றி அவை இதனை ஏற்கும் என்ற கருத்தில் மசோதாவை அவை முன் வைக்கிறேன்.

            துணைத் தலைவர்: 1923 ஆம் ஆண்டின் இந்தியச் சுரங்கச் சட்டத்தில் திருத்தங்கள் கோரும் இம்மசோதா அவைமுன் வைக்கப்படுகிறது.

*           *           *

            டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: இந்த நடவடிக்கை விரைந்து செயல்படுத்தப்பட வேண்டுமென்று இந்திய அரசு விரும்புவதாலேயே, குறிப்பிட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் குளியலறைகள் கட்டும் சுரங்க உரிமையாளர்களுக்கு இச்சலுகையை (10% மானியம்) அரசு வழங்குகிறது. இல்லையேல், முழுக் கட்டுமானச் செலவையும் சுரங்க உரிமையாளரே ஏற்க வேண்டும்.

            பண்டித கோவிந்த மாளவியா: சுரங்க உரிமையாளர்கள் 12 மாதங்களுக்குள் குளியலறைகள் கட்டியாக வேண்டும் என விதிமுறை இயற்றினால் அந்நோக்கம் நிறைவேறாதா?

            டாக்டர் அம்பேத்கர்: சிறிது அவகாசம் கொடுத்தல் அவசியம்.

*           *           *

            1டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்:(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, எண்.13, 1946, பிப்ரவரி 8, பக்கங்கள் 719-20.)எனது மதிப்பிற்குரிய நண்பர் திரு.சித்திக் (தற்சமயம் அவர் அவையில் இல்லை) தாரைக் குளியல் குழாய்கள் குறித்து இவ்வளவு ஆவேசமடைவார் என நான் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. குளியலறையில் தூவல் குழாய்கள் இருக்க வேண்டுமென்பது, இந்திய அரசு ஏதோ தன்னிச்சையாக எடுத்த முடிவல்ல என்பதை அவைக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். ஏற்கெனவே நான் அவையில் அறிவித்துள்ளவாறு, இத்திட்டத்திற்காக, பீகார் மாகாண அரசுகள் ஆகிய அமைப்புகளின் சார்பாளர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று இயங்கி வருகிறது. இக்குழுவே, சுரங்கத் தொழிலாளர் நலநிதியை நிருவகிக்கும் பொறுப்பில் இந்திய அரசுக்கு ஆலோசனை வழங்கிவருகிறது. இக்குழுவில் தொழிற்சங்கச் சார்ப்பாளர்ள் மட்டுமன்றி ஆண் தொழிலாளர்கள் பெண் தொழிலாளர்களுக்கெனத் தனித்தனிச் சார்பாளர்களும் இடம் பெற்றுள்ளனர். எந்தவகையான குளியலறை அமைக்கப்பட வேண்டுமென்ற வினா குழுவின் ஆலோசனைக்கு விடப்பட்டு, குழுவின் ஒருமனதாக ஒப்புதலுடனேதான், தாரைக் குழாய்க் குளியலறைகள் அமைக்கப்படலாமென முடிவு செய்யப்பட்டது.

            எனது தனிப்பட்ட கருத்தின்படியும் கூட, ஒருவரது உடலை மிகத் தூய்மையாய் ஆக்குவதற்கு, குளியல் தொட்டிகளையோ, கொட்டு குழாய்களையோ விடத் தாரைக் குழாய்களே மிகத் திறம்படத் துணைபுரியும். டாடா இரும்பு எஃகு நிறுவனத்தினர் திக்பாயில் அமைந்துள்ள சுரங்கங்களில் கட்டியுள்ள தாரைக்குழாய்க் குளியலறைகளின் உதாரணம் எனும் கருத்துக்கு வலிமை கூட்டுவதாக அமைவதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இங்கு நீண்ட காலமாக நிலவிவரும் தாரைக் குழாய்க் குளியலறைகளைத் தொழிலாளர்கள் மிக நன்றாகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும், இத்தகைய குளியலறைகளுக்குத் தொழிலாளர் எவரும் மறுப்பு தெரிவித்ததில்லை என்பதும் நமக்கு மனநிறைவு அளிக்கும் செய்திகள். சோப்பு பற்றியும் வினா எழுப்பப்பட்டது; ஒவ்வொரு சுரங்கத் தொழிலாளிக்கும் (விதிமுறை வகுத்து) விதிமுறைகளுக்கேற்ப சோப்பு வழங்கவே உத்தேசித்துள்ளோம் என்றும் அவைக்கு உறுதியளிக்கிறேன்; இதைப் பற்றி அவை உறுப்பினர்கள் ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை.

            எனது விளக்கம் மதிப்பிற்குரிய உறுப்பினர்களுக்கு மனநிறைவு தருமென்று நம்புகிறேன். மதிப்பிற்குரிய உறுப்பினர்களில் ஒருவர், உத்தேச மசோதா ஒரு அறிவிப்பாக அமையுமேயன்றித் (தாரைக்குழாய்களைக் கட்டாதவர்களுக்கு) தண்டனை ஏதும் விதிக்க வழிசெய்யவில்லையே எனக்கூறினார். அந்த உறுப்பினர் மசோதாவின் 39ஆம் பிரிவை நோக்கினால், அப்பிரிவு முழுதுமே, தண்டம் விதிப்பு வழிமுறைகளைப் பற்றியதென்று உணருவார்.

            பேராசிரியர் என்.ஜி.ரங்கா: பெண் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் ஒரேயொரு சிக்கல் உண்டு. அவர்களது தலைக்குளிப்புக்கு வெறும் நீர் மட்டும் போதாது. எண்ணெய் அல்லது அது போன்ற பொருள் தேவைப்படலாம்.

            டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அவர்களுக்குத் தொப்பிகள் வழங்கப்படலாம்.

            துணைத் தலைவர்:

                   “1923 ஆம் ஆண்டின் இந்தியச் சுரங்கங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான மசோதா அவையின் ஒப்புதலுக்காக முன் வைக்கப்படுகிறது.”

            தீர்மானத்துக்கு அவை ஒப்புதல் அளித்தது.

            மசோதாவில் பிரிவுகள் 2, 3 சேர்க்கப்பட்டன.

            மசோதாவில் பிரிவு 1 சேர்க்கப்பட்டது.

            மசோதாவுக்குத் தலைப்பும், முகப்புரையும் சேர்க்கப்பட்டன.

            டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்:

                        “மசோதாவுக்கு அவை ஒப்புதல் அளிக்கலாம்” என முன்மொழிகிறேன்.

            மசோதா அவையில் நிறைவேற்றப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It