(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, எண். 12, 1946, பிப்ரவரி 8, பக். 714)

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்):

            தலைவர் அவர்களே,

            “1923 ஆம் ஆண்டின் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தை மேலும் திருத்துவதான மசோதா அவையின் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம்” எனும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

            இஃது ஓர் எளிய மசோதாவே; இதன் நோக்கம், இப்போதைய சட்டத்தால், இன்றைய சூழ்நிலையில் ரூ.300க்கு மேல் மாத வருவாய் பெறும் தொழிலாளர்களுக்கு நேரிடும் அநீதியொன்றுக்கு மாற்றுத் தீர்வு காண்பதேயாகும். இப்போதைய தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தில் ‘தொழிலாளர்’ என்பதன் வரையரைப்படி, மாதம் 300 ரூபாய்க்குக் குறைவாக வருவாய் பெறுபவர்களே, இழப்பீடு பெறத் தகுதியுடையோராவர் என்பதை அவையுறுப்பினர்கள் அறிவர். போருக்கு முந்தைய காலத்தில் ரூ.300க்குக் கீழ் மாத ஊதியம் பெற்றுவந்த பெரும்பாலான தொழிலாளர்கள், இழப்பீட்டுக்குத் தகுதி பெற்றிருந்தார்கள். ஆனால், போர்க்காலப்படி, பஞ்சப்படி, வீட்டு வசதி, நன்னடத்தைப் படி முதலான பல வகையான வருவாய்ப் பெருக்கத்திற்கு போர்க்காலத்தையடுத்து வாய்ப்பு பெற்றிருப்பதன் விளைவாய், மாத மொத்த வருவாய் பலருக்கு ரூ.300ஐத் தாண்டி விடுவதால், பல தொழிலாளர்கள், தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தின் பலனைப் பெறும் தகுதியை இழந்துவிடுகின்றனர். இதற்குக் காரணம், இப்போதைய, தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தில் ‘ஊதியம்’ என்பதன் வரையறையில் இழப்பீட்டின் மதிப்பைக் கணக்கிடும் நோக்கில் கூடுதல் வருவாய் அனைத்தும் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. இதன் விளைவாக, முன்னர் இழப்பீட்டுக்குத் தகுதிபெற்றிருந்த தொழிலாளர்களில் பலர், தற்போது அத்தகுதியை இழந்துவிட்டனர். இந்த இழப்பிலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, இழப்பீட்டுத் தகுதி பெறுதற்கான மாத ஊதிய வரம்பு ரூ.300இல் இருந்து ரூ.400 ஆகத் திருத்தியமைக்கச் சட்டத்திருத்தம் முன்மொழிகிறது. இம்மாசோதா இரண்டு திருத்தங்களை முன்மொழிகிறது. முதலாவதாகத் தகுதி ஊதிய வரம்பு ரூ.300இலிருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படுதல், இரண்டாவதாகத் தொழிலாளர்கள் இறப்பு, தற்காலிக ஊனம், வாழ்நாள் ஊனம் ஆகியவற்றுக்காகப் பெறும் இழப்பீட்டின் மதிப்பை வரையறுக்கும் பட்டியல் IV இல் திருத்தம் செய்யவும் மசோதா முன்மொழிகிறது.           

ambedkar 452நான் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு, இம்மசோதா ஒர் எளிய நடவடிக்கையே; இது பிரிட்டனில் மேற்கொண்ட நடவடிக்கையை அப்படியே பின்பற்றுகிறது. அங்கும் இழப்பீடு பெறத் தகுதி பெற்ற தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் தகுதி ஊதிய வரம்பு 350 பவுண்டில் இருந்து 425 பவுண்டாக உயர்த்தப்பட்டது. இது எளிய நடவடிக்கை மட்டுமன்று; எவரும் பிழை சுட்டவியலாத நடவடிக்கையும் ஆகும். இம்மசோதாவின் கூறுகள் குறித்து மாநிலங்களின் கருத்தையும் அறிய முற்பட்டதில், மசோதா முன்மொழியும் திருத்தங்களுக்கு குழு உறுப்பினர் அனைவரின் ஒருமித்த ஆதரவு கிடைத்துள்ளதென அறியலாம். இதற்கு மேலும் மசோதா குறித்து விரிவாகப் பேச வேண்டிய தேவையிராது என்பதால், மசோதாவை நான் அவையில் தாக்கல் செய்கிறேன்.

***

            அவைத்தலைவர்: (மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, எண்.12, 1946, பிப்ரவரி 8, பக்.715)

                   “1923 ஆம் ஆண்டின் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவுக்கு அவையின் ஒப்புதல் வேண்டப்படுகிறது.”

            அவை தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்தது.

            மசோதாவில் பிரிவுகள் 2, 3 சேர்க்கப்படுகின்றன.

            மசோதாவில் பிரிவு I சேர்க்கப்படுகிறது.

            மசோதாவுக்கு தலைப்பும் முன்னுரையும் சேர்க்கப்படுகின்றன.

            டாக்டர் அம்பேத்கர்: “மசோதாவை அவை ஏற்கலாம்”

எனும் தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

            அவைத் தலைவர்: தீர்மானம் தாக்கலாகிறது.

            “தீர்மானத்திற்கு அவை ஒப்புதல் அளிக்கிறது.”

***

            அவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் மேலும் ஏதாவது கூற விரும்புகிறாரா?

(மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, எண். 12, 1946, பிப்ரவரி 8, பக்.715.)

            டாக்டர் அம்பேத்கர்: நான் முன்னரே குறிப்பிட்டவாறு தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினருக்கு நேர்ந்த அநீதியை நீக்கும் நோக்கத்துடனேயே இத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு மேல் மசோதாவுக்கு நோக்கம் வேறில்லை. இந்தக் கட்டத்தில் என்னால் கூற முடிவதெல்லாம், தீர்மானத்தின் மீது பேசிய மதிப்பிற்குரிய நண்பர்கள் பலரது ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு அவற்றுக்குச் செயல்வடிவம் தருவது பற்றிக் கருதப்படும் என்பதே. தொழிலாளர் இழப்பீட்டுடன், நோய்க் காப்பீடு, மகப்பேறுகாலச் சலுகைகள் முதலான பல்வேறு ஆலோசனைகளையும் உள்ளடக்கிய, அரசுக் காப்பீட்டுத் திட்டம் ஒன்று (இங்கிலாந்து நாட்டில் செயல்படுத்தப்பட்டதைப் போன்றது) அரசின் கூர்ந்த கவனத்தில் உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தத் திட்டத்தில் நண்பர் ஆலோசனை கூறியது போன்று ஒட்டுமொத்தத் தொகைக்கு மாற்றாக, தொடர்ந்து தொகை வழங்கவும் அத்திட்டத்தில் வகை செய்யப்படும்.

            அவைத்தலைவர்: “மசோதாவுக்கு அவையின் ஒப்புதல் கோரப்படுகிறது.”

            அவை ஒப்புதல் தீர்மானத்தை நிறைவேற்றியது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It