(வாபர் பள்ளிவாசல் முன்பு ஆடிச் செல்லும் அய்யப்ப பக்தர்கள்)
அய்யப்பனுக்கு ஐந்து சரவீடுகள் (கோயில்கள்) என்று சொன்னேன் அல்லவா? உண்மையில் அவை ஆறு என்று அய்யப்ப பக்தர் ஒருவர் தனிச் செய்தியில் சொல்லியிருக்கிறார். பந்தளம் என்பது விடுபட்ட அந்த இடத்தின் பெயர். நாங்கள் சென்ற குழு பந்தளம் செல்லவில்லை என்பதாலும், சரவீடுகள் ஐந்து என்று குரு சாமி சொன்னதாலும் நானும் அவ்வாறே பதிவிட்டிருந்தேன். இணையத்தில் தேடியபோது, பந்தளத்தில்தான் அய்யப்பன் வளர்ந்ததாகவும், அங்கு இருக்கும் வழியக்கோவில் அய்யப்பனை பக்தர்கள் தரிசிப்பதாகவும் செய்திகள் கிடைத்தன.
முந்தைய பகுதிகள்:
ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1
ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 2
ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3
ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 4
எங்கள் குழு சென்ற ஐந்து சரவீடுகளை நானும் பார்த்தேன். தமிழகத்தில் பார்த்த எந்தவொரு கோயிலின் கட்டுமான சிறப்பிற்கும், பிரம்மாண்டத்திற்கும் பக்கத்தில் கூட வரமுடியாத அளவிற்கு அளவில் சிறியனவாகவும், எளிமையான கட்டுமானத்துடனும் காட்சி அளித்தன. நமது ஊர்களில் கோயிலுக்கும், வீட்டிற்கும் இடையே கட்டுமானத்தில் பெரிய வித்தியாசம் இருக்கும் அல்லவா? பார்த்தவுடன் இது கோயில், இது வீடு என்று சொல்ல முடியும் அல்லவா? கேரளத்தில் அப்படி இல்லை. அய்யப்பன் கோயிலைக் காட்டி, ‘அந்த ஊர் பெரும்புள்ளியின் வீடுதான் இது’ என்று சொன்னால், அப்படியே நம்பிவிடலாம். அந்த அளவிற்கு வித்தியாசம் ஏதுமின்றிக் காணப்படுகின்றன.
ஒரு வகையில் அப்படி இருப்பது சரிதானே.. தமிழகத்தில் குடியிருக்க மக்களுக்கு வீடு இல்லை. ஆனால், கடவுளர்களுக்கு ஊரளவுக்கு வீடு இருக்கிறது. மன்னர்களின் அதிகாரத் திமிரையும், ஊதாரித்தனமான செலவையும் பறைசாற்றிக் கொண்டுதானே தமிழகத்தின் பிரம்மாண்ட கோயில்கள் வானளாவ நிற்கின்றன.
***
அச்சன்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால், இங்கிருக்கும் அய்யப்பன் ‘நாகதோஷ ஸ்பெஷலிஸ்ட்’டாக இருக்கிறார். கோயிலினுள்ளே நாகதோஷத்திற்கு என சிறப்புப் பிரிவு இருக்கிறது. அங்கு மஞ்சள், தேன் ஆகியவற்றைப் படைத்து, நாகதோஷப் பரிகாரம் செய்கிறார்கள்.
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோயிலைச் சுற்றிப் பார்க்க இரண்டு மணிநேரம் ஆனது. ஆனால் அச்சன்கோவிவில் அரைமணி நேரம்தான் ஆனது. அந்த அரைமணி நேரமும் குரு சாமி, கோயிலின் தல புராணத்தை விளக்கிச் சொன்னதால் ஆன நேரமே. வெறுமனே உள்ளே போய், வணங்கி வருவதாக இருந்தால், 5 நிமிடங்கள் கூட ஆகி இருக்காது.
காலை ஏழு மணிக்கு எல்லாம், அச்சன்கோவில் அய்யப்ப தரிசனம் முடிந்தது. அதே நேரத்தில் சமையல்காரர்கள் காலைச் சாப்பாடைத் தயாரித்து முடித்துவிட்டார்கள். சமைத்த உணவு மற்றும் பாத்திரங்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு, கிளம்பினோம்.
ஆரியங்காவு கோயில் அருகே வண்டியை நிறுத்தி, சாப்பிட்டோம். காலை 4 மணிக்கே எழுந்துவிட்டால், எனக்குப் பசி அதிகமாக இருந்தது. பிளாஸ்டிக் தட்டை வாங்கிக் கொண்டு, நானும் இரவி மாமாவும் வரிசையில் நின்றோம். சரவணனும், இன்னும் சிலரும் பரிமாறினார்கள். பொங்கல், வடை, சட்னி, சாம்பார், கேசரி என்று சுவையான உணவு. வண்டிகளை சாலையோரமாக நிறுத்திவிட்டு, மூடப்பட்டிருந்த கடைகளின் முன்பாக சிலர் உட்கார்ந்து கொண்டும், சிலர் நின்று கொண்டும் காலை உணவை முடித்தோம்.
அந்த இடத்திற்குப் பின்புறம்தான் ஆரியங்காவு கோயில் இருந்தது. சபரிமலையிலிருந்து திரும்பும்போதுதான் அக்கோயிலைப் பார்க்கப் போகிறோம் என்று குரு சாமி சொன்னார்.
முதல் நாள் இரவு சரிவரத் தூங்காதது, காலையிலேயே பொங்கல் சாப்பிட்டது எல்லாம் சேர்ந்து, வண்டியில் ஏறியதும் தூக்கம் கண்களைச் சுழட்டியது. வண்டியில் ஒலித்த அய்யப்பன் பாடல்கள், சுற்றிலுமிருந்த சாமிகளின் பேச்சு சத்தம் – எதற்கும் அசராமல் அப்படி ஒரு தூக்கம்.
எருமேலி வந்துவிட்டதாக சரவணன் எழுப்பியபோதுதான், கண்களைத் திறந்தேன்.
***
அய்யப்பனின் கதையைக் கொஞ்சம் தெரிந்து கொண்டீர்கள் என்றால், இந்த எருமேலி, அடுத்துவரும் சபரிமலை குறித்து நீங்கள் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
பக்தர்களுக்கு ஏடாகூடமாக ஏதாவது ஒரு வரம் கொடுத்துவிட்டு, மும்மூர்த்திகளும் திண்டாடுவதுதான் எல்லா இந்து மதக் கதைகளிலும் முக்கிய அம்சமாக இருக்கும். அய்யப்பன் கதையும் அதற்கு விதிவிலக்கல்ல.
கரம்பன் என்ற அசுரனுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள். மகிஷன், மகிஷி என்பது அவர்களது பெயர். இந்த மகிஷி பிறக்கும்போதே எருமைத் தலையுடன் பிறந்தவள். அது எப்படி சாத்தியம் என்று கேட்காதீர்கள்... யானைத் தலையுடன் கடவுளே இருக்கும்போது, எருமைத் தலையுடன் அரக்கி இருக்கலாம். இந்து மதத்தில் எல்லாம் சாத்தியமே...
மகிஷியின் அண்ணன் மகிஷாசுரனை சண்டிகாதேவி கொன்று விடுகிறாள். தேவர்கள்தான் தனது அண்ணனின் மரணத்திற்குக் காரணம் என அறிந்த மகிஷி, அதற்குப் பழிவாங்க விந்தியமலைக்குச் சென்று தவமிருக்கிறாள். தவத்தை மெச்சி, வரம் கொடுக்க பிரம்மன் வருகிறார். தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தை, மகிஷி கேட்க, பிரம்மன் அப்படி எல்லாம் கொடுக்க முடியாது என்று மறுத்துவிடுகிறார். உடனே, மகிஷி கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்து, ஒரு ஆணுக்கும், இன்னொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால்தான் தன்னைக் கொல்ல முடிய வேண்டும் என்று ஒரு வரத்தைக் கேட்கிறாள். அப்படி ஒரு குழந்தை எப்படி பிறக்கும் என்று யோசிக்காமல் பிரம்மனும் வரத்தைக் கொடுத்து விடுகிறார். பூமியில் மகிஷியின் அட்டூழியம் அதிகரிக்கிறது. எல்லோரும் சிவனிடம் முறையிடுகிறார்கள். சிவனும் அவளை அழிப்பதாக உறுதியளிக்கிறார். அழிப்பதற்கு முன்னால், மகிஷி கொஞ்சம் நாள் குஷாலாக இருக்கும் வண்ணம், சுந்தரன் என்ற ஆண் மகிஷத்தை உருவாக்கி அனுப்பி வைக்கிறார். சுந்தரனும், மகிஷியும் காதல் கொண்டு, இணைந்து வாழ்கின்றனர்.
திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்த கதை உங்களுக்குத் தெரியுமல்லவா? அந்தக் கதையில் அசுரர்களை மயக்குவதற்காக விஷ்ணு, மோகினி வடிவம் எடுத்து ஏமாற்றுவார் அல்லவா? உண்மையில் மோசம் போனது அதில் விஷ்ணுதான். மோகினியின் அழகைக் கண்டு மயங்கிய சிவன், பார்வதியை மறந்துவிட்டு, விஷ்ணுவைத் துரத்துகிறார். விஷ்ணுவாவது கொஞ்சம் சுதாரித்து, ‘அடேய்.. நான் மோகினியல்ல; திருமால்’ என்று சொல்லி இருக்க வேண்டும். சொன்னாரோ அல்லது தன்னிடம் இல்லாத எதைக் கண்டு மயங்கினாரோ தெரியவில்லை.. மேட்டர் நடந்து விடுகிறது.
உலகின் முதல் ஹோமோசெக்ஸ் இதுதான். ஆனால் மரை கழண்ட இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டம் ஹோமோசெக்ஸ்க்குத் தடை விதிக்கக் கோருகிறது. அப்படி தடை விதிப்பதற்கு முன்னால், இந்த சிவனையும், விஷ்ணுவையும் நாடு கடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைப்பதுதான் நியாயமாக இருக்கும்.
சரி, மேட்டர் நடந்து விடுகிறது. அதோடு, முடிந்ததா என்றால் இல்லை. விஷ்ணுவுக்கு குழந்தையும் பிறக்கிறது. அந்தக் குழந்தைதான் அய்யப்பன். அப்பா சிவன், அம்மா விஷ்ணு. அய்யப்பனின் அண்ணன்கள் பிள்ளையார், முருகன். இன்னொரு முறையில் பார்த்தால், சிவனின் மைத்துனர்தான் விஷ்ணு. அதாவது பார்வதியின் அண்ணன். ஆதலால் பிள்ளையாரும், முருகனும் விஷ்ணுவை ‘மாமா’ என்றுதான் அழைக்க வேண்டும். ஆனால் அவர்களது தம்பி அய்யப்பன் ‘அம்மா’ என்று அழைக்க வேண்டும். கே.பாலச்சந்தர் கதைகளை விட கேவலமாக இருக்கிறது இல்லையா?
அய்யப்பன் 12 ஆண்டுகள் சிவனுடன் கைலாயத்தில் இருக்கிறார். அதன்பிறகு மகிஷியை அழிப்பதற்காக பூமிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். காட்டில் விழுந்து கிடந்த அய்யப்பனை பந்தள மன்னர் இராஜசேகரன் பார்க்கிறார். அவருக்கு குழந்தை இல்லை. தனக்கு கடவுள் கொடுத்த குழந்தை என்று நினைத்து அரண்மனைக்கு எடுத்துச் செல்கிறார். கழுத்தில் மணியுடன் இருந்ததால் மணிகண்டன் என்று பெயர் சூட்டுகிறார். மணிகண்டன் சென்ற வேளை, இராணி கருவுறுகிறார். அந்தக் குழந்தைக்கு இராஜராஜன் என்று பெயர் சூட்டுகிறார்கள். இருப்பினும், மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று மன்னர் விரும்புகிறார். இது இராணிக்குப் பிடிக்கவில்லை. தன் வயிற்றில் பிறந்த மகனே அரசாள வேண்டும் என்று நினைக்கிறார்.
அய்யப்பன் இருந்தால் இது நடக்காது; அவரைக் கொல்ல வேண்டும் என்று திட்டமிட்ட இராணி தலைவலி வந்ததுபோல் நடிக்கிறார். புலிப்பால் கொண்டு வந்தால்தான் தலைவலி குணமாகும் என்று மருத்துவர்கள் மூலம் சொல்ல வைக்கிறார். புலிப்பாலைக் கொண்டுவர மணிகண்டனை காட்டுக்கு அனுப்புமாறு மன்னரிடம் வற்புறுத்துகிறார்.
வேறுவழியின்றி சம்மதித்த மன்னர், அய்யப்பனை காட்டிற்கு அனுப்புகிறார். காட்டில் சிவனை வழிபடுவதற்கு ஒரு துணியின் ஒரு பக்கத்தில் தேங்காய், பூஜைப் பொருட்களையும், மறுபக்கத்தில் வழியில் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களையும் ‘இருமுடி’யாகக் கட்டி அனுப்பி வைக்கிறார்.
காட்டுக்குப் போன மணிகண்டனை பொன்னம்பல மேட்டில் தேவர்கள் வரவேற்று, அவர் பூமிக்கு வந்த நோக்கத்தைக் கூறுகின்றனர். உடனே அவர் மகிஷியுடன் போருக்குப் போகிறார். மகிஷியை வதைத்து, அவளது உடலைத் தூக்கி எறிகிறார். அது அழுதா நதிக்கரையில் விழுகிறது. மகிஷி உயிர் பிரியும் நேரத்தில், மணிகண்டனை வணங்குகிறார். அவரும் அவளைத் தடவிக் கொடுக்க, அவள் அழகிய உருப் பெறுகிறாள். தன்னை மணக்குமாறு அய்யப்பனைக் கேட்கிறார். அவர் மறுத்து, தனக்கு இடப்பாகத்தில் கொஞ்ச தூரம் தள்ளி நிற்கும்படி பணிக்கிறார். அவள்தான் மஞ்சமாதா என்று தற்போது அழைக்கப்படுகிறாள்.
மகிஷியை வதைத்த சந்தோஷத்தில் அய்யப்பன் ஆனந்த நடனம் ஆடுகிறார். மகிஷி என்ற எருமைத்தலை அரக்கியைக் கொன்ற இடம் ‘எருமலைக் கொல்லி’ என்ற பெயரில் அழைக்கப் பெற்று, நாளடைவில் எருமேலி ஆனது என்கிறார்கள்.
(சரக்கோலுடன் வாபர் பள்ளிவாசலைச் சுற்றிவரும் பக்தர்கள்)
மகிஷி வதத்திற்குப் பின்பு, புலிப்பாலுக்குப் பதிலாக, காட்டிலிருந்த புலிகளையே அழைத்து, அதன்மீது அமர்ந்து நாட்டிற்குள் பவனி வருகிறார் அய்யப்பன். புலிமீது வந்த அய்யப்பனைக் கண்ட அரசி பயந்து போகிறாள். தான் செய்த தவறுக்கு அரசியும், மருத்துவர்களும் மன்னிப்பு கேட்டு, புலிகளைத் திருப்பி அனுப்புமாறு வேண்டினர். அய்யப்பனும் அவ்வாறே செய்தார். அதோடு, ‘நான் பூமிக்கு வந்த வேலை முடிந்துவிட்டது, இனி மேலோகம் செல்கிறேன்’ என்று சொல்கிறார். தங்கள் நினைவாக ஒரு கோயில் கட்ட விரும்புகிறோம் என்று மன்னர் கேட்கிறார். அய்யப்பன் ஒரு அம்பை எடுத்து எய்து, ‘இது எங்கே விழுகிறதோ அங்கே கோயில் கட்டுங்கள்’ என்று கூறுகிறார். அந்த அம்பு சபரிமலையில் போய் விழுகிறது. அங்கு மன்னர் கோயில் கட்டுகிறார். அய்யப்பன் மேலுலகம் செல்கிறார். அப்பாவிடம் போனாரா, அம்மாவிடம் போனாரா என்பது குறித்து தகவல் இல்லை.
கதை அதோடு முடியவில்லை. சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்களிடம் வாபர் என்ற முஸ்லிம் கொள்ளையடித்து, தன்னை நம்பியிருக்கும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கிறார். எந்த அரசர்களாலும் வாபரைப் பிடிக்க முடியவில்லை. அரசர்கள் அய்யப்பனிடம் முறையிடுகின்றனர். வாபரை அடக்க அய்யப்பனே செல்கிறார். சிறுவனாக இருந்த அய்யப்பனிடம் சண்டைக்குப் போக வாபர் மறுக்கிறார். விடாப்பிடியாக அய்யப்பன் சண்டை பிடித்து, வாபரை வெல்கிறார். அவரைக் கொல்லப் போகும்போது, ‘என்னைக் கொன்றுவிட்டால், என்னை நம்பியிருக்கும் மக்களை யார் காப்பாற்றுவார்கள்?’ என்று வாபர் கேட்கிறார். நான் காப்பாற்றுகிறேன் என்று அய்யப்பன் சொன்னதோடு, வாபரையும் நண்பராக சேர்த்துக் கொள்கிறார். அவருக்கு ஒரு பள்ளிவாசலும் கட்டித் தருகிறார். அதோடு வாபரிடம், ‘எனது கோயிலுக்கு வரும் பக்தர்கள் உனது பள்ளிவாசலுக்கும் வருவார்கள். அப்படி வரும் பக்தர்களில் சரியாக விரதம் இருக்காதவர்கள், பிரம்மச்சரியம் பேணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று கூறி இருக்கிறார். வாபரும் எருமேலியில் இருந்துகொண்டு, பக்தர்களை சோதித்து அனுப்புகிறாராம்.
***
அந்த எருமேலியில் தான் எங்களது பயணத்தின் இரண்டாம் நாள் இருந்தோம். பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் அங்கு உள்ளது. மகிஷியைக் கொல்ல அம்பும், வில்லும் ஏந்தியிருக்கின்ற உருவில் அய்யப்பன் காட்சி அளிக்கிறார். அச்சன்கோவிலில் இருக்கும் அய்யப்பனை கல்யாண சாஸ்தா என்று அழைப்பதுபோல், எருமேலியில் இருப்பவரை தர்மசாஸ்தா என்று அழைக்கிறார்கள்.
(எருமேலி தர்ம சாஸ்தா கோயிலில் குளியலுக்குப் பின் எங்கள் குழு)
மகிஷியை வதம் செய்து அவள் பூதவுடல் மீது அய்யப்பன் நர்த்தனம் ஆடியதன் நினைவாக பக்தர்களால் நடத்தப்படும் ஒரு சடங்குதான் பேட்டை துள்ளல் என்று அழைக்கப்படுகிறது. பேட்டை சாஸ்தா கோயிலில் உடல் மீது வண்ணப்பொடிகளை பூசிக் கொண்டு, இலை, தழைகளை கட்டிக் கொண்டு மரத்தினாலான சரக்கோலை வைத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். மேளதாளத்துடன் ஆடிக்கொண்டு, வாபர் பள்ளிவாசலை வலம்வந்து பின் தர்மசாஸ்தா கோயிலுக்குப் போகிறார்கள். அங்கு சன்னிதியை வலம் வந்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு, சபரிமலைக்குக் கிளம்புகிறார்கள்.
அவ்வாறு பேட்டைத் துள்ளலை நடத்தத்தான் அங்கு காத்திருந்தோம். மதியம் நேரம் என்பதால், சாப்பிட்டுவிட்டு, வெயில் குறைந்தபின்பு துள்ளலாம் என்று குரு சாமி சொல்லிவிட்டார். அதேபோல் மூன்று மணிக்கு பேட்டை சாஸ்தா கோயிலுக்குச் சென்றோம்.
என்னுடன் வந்த பக்தர்கள் யாரும் அருப்புக்கோட்டையில் இருந்து வரும்போதே செருப்பு அணிந்து வரவில்லை. நான் மட்டும் ஒரு ரப்பர் செருப்பு போட்டுக் கொண்டு வந்திருந்தேன். அச்சன்கோவிலில் கல்யாண சாஸ்தாவைப் பார்க்க கோயிலினுள்ளே போகும்போது மட்டும், செருப்பு போடவில்லை. மற்ற இடங்களில் செருப்பு போட்டுதான் சுற்றிக் கொண்டிருந்தேன். அதிகாலை இருட்டில் நான் செருப்பு போட்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை.
எருமேலியில் பிற்பகல் மூன்று மணிக்கு செருப்பு போட்டிருந்தது சரவணன் கண்ணில் பட்டுவிட்டது. அவன் இரவி மாமாவிடம் போட்டுக் கொடுத்துவிட, அவர் செருப்பைக் கழட்டச் சொன்னார். வண்டியிலேயே போட்டுவிட்டு இறங்கினேன். வெயிலில் தார்ச்சாலை, தோசைச் சட்டி போல் சுட்டது.
பேட்டை சாஸ்தா கோயிலுக்கு செல்லும் வழியில், வண்ணப்பொடிகள் பூசிக் கொண்டு அய்யப்ப பக்தர்கள் ஆடிக் கொண்டு வந்தனர். எங்களது குழுவிற்கு மேளக்காரர்களைப் பிடித்தார்கள். பேட்டை சாஸ்தாவில் வண்ணப் பொடிகளை உடல் முழுவதும் பூசிக் கொண்டார்கள். ஒருவர் மீது ஒருவர் அப்பினார்கள். ஹோலிப் பண்டிகையில் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகள் பூசி விளையாடுவார்கள் அல்லவா, அதுபோல் விளையாண்டார்கள். ஒரு சில பக்தர்களின் முகம்கூட தெரியாத அளவிற்கு, மற்றவர்கள் பூசிவிட்டார்கள். வண்ணப் பொடி பூசுவதற்கு வசதியாக வேட்டி மட்டும் கட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். நான் அரை ட்ரவுசர் போட்டிருந்தேன்.
வண்ணப் பொடிகளில் இருந்து தப்பிக்க ஓரமாக நின்றிருந்தேன். ஒரு பக்தர் எனக்குத் தெரியாமல் பின்பக்கமாக வந்து பிடித்துக் கொண்டார். காத்திருந்த மற்ற பக்தர்கள் வேகமாக வண்ணப் பொடிகளுடன் என்னை சுற்றி வளைத்தனர். என்னையும் வண்ணப் பொடிகளில் முக்கி எடுத்தனர். பின்பு வண்ணப் பொடிகளுடன் பக்தர்கள் விதவிதமாக போட்டோ எடுத்துக் கொண்டனர். தற்காலிக போட்டோகிராபராக நான் இருந்தேன்.
அதன்பின்பு ஆட்டம் போட்டபடி பக்தர்கள் வாபர் பள்ளிவாசலுக்கு சென்றனர். அங்கு பக்தர்களுக்கு விபூதி தரப்பட்டது. அதைப் பூசிக்கொண்டு, தர்மசாஸ்தா கோயில் நோக்கி ஆடியபடி பக்தர் கூட்டம் சென்றது. சரியாக விரதம் இருக்காதவர்களை, பிரம்மச்சர்யம் பேணாதவர்களை வாபர் தடுத்து நிறுத்த வேண்டும் அல்லவா? ஆனால் என்னை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. சிகரெட் பிடித்த பக்தர்களையும் அவர் தடுத்த நிறுத்தவில்லை.
சரவணன் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிக் கொண்டு வந்தான். தர்மசாஸ்தா கோயிலை எல்லோரும் சுற்றி வந்தபோது, சரவணனும், இன்னும் சில பக்தர்களும் அங்கப்பிரதட்சணம் செய்தார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புழங்கும் இடம் என்பதால், அது சுத்தமான தரையாக இல்லை. அதோடு பகல் முழுக்க சுட்டெரித்த வெயில் காரணமாக தரை சூடாகவும் இருந்தது. நடந்து செல்வதற்கே முடியவில்லை. ஆனாலும் பக்தி மிகுந்த பக்தர்கள் உருண்டார்கள்.
சரவணன் இந்த மாதிரி வழிபடுபவன் அல்ல. எங்களது ஊர்த் திருவிழாவில்கூட, கற்பூரத் தீபத்தை கண்களில் ஒற்றிக் கொள்வது, விபூதி பூசிக் கொள்வது தாண்டி அவனது பக்தி இருந்ததில்லை. இவ்வளவு தீவிரமாக அங்கப்பிரதட்சணம் செய்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே சிவப்பான அவனது உடல், சூடான தரையில் உருண்டதில் மேலும் சிவந்து காணப்பட்டது.
(சாமிகளுடன் டிரவுசர் அணிந்த ஆசாமி நான்...)
வண்ணப் பொடிகளை போக்கி, குளிப்பதற்கு அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார்கள். வழக்கப்படி அங்கே இருக்கும் குளத்தில்தான் குளிக்க வேண்டும். ஆயிரக்கணக்கானோர் குளித்து அந்தக் குளம் சாக்கடை போல் இருந்தது. அதில் குளிக்க முடியாதவர்களுக்காக நீளமான குழாய்களை அமைத்து, அதில் ஆங்காங்கே தண்ணீர் விழும்படி செய்திருக்கிறார்கள். அதில்தான் நாங்கள் குளித்தோம். அந்த இடமும் அவ்வளவு சுத்தமான ஒன்றாக இல்லை. பக்தர்கள் போட்டுவிட்டுப் போன சோப்புக் கட்டிகள், துண்டுகள், ஷாம்பு பாக்கெட்கள் சிதறி கிடந்தன. வண்ணப் பொடிகள் கலந்து தரை சேறும், சகதியுமாக இருந்தது. அந்த இடத்தின் அசுத்தத்தை நினைத்தால் இப்போது உடல் சிலிர்க்கிறது.
வேறுவழியின்றி அங்குதான் குளிக்க வேண்டியிருந்தது. பலமுறை அழுத்தித் தேய்த்தும், பக்தர்கள் நிறைய பேரின் உடலிலிருந்து வண்ணப் பொடிகளின் சாயம் போகவில்லை. என்மீது கொஞ்சமாகப் பூசியிருந்ததால், எளிதில் பழைய நிலைக்குத் திரும்பி விட்டேன்.
***
முற்காலத்தில் சபரிமலைக்கு எருமேலியிலிருந்து செல்லும் காட்டுப் பாதையில்தான் சென்றிருக்கின்றனர். எருமேலியில் இருந்து சபரிமலை வரையில் 56 கி.மீ., தூரம் உள்ள இந்தப் பாதையைத்தான் பெருவழிப்பாதை என்று அழைக்கிறார்கள். பந்தளராஜா, அய்யப்பனைக் காண இந்த வழியில்தான் சென்றார் என்றும், இந்தப் பாதையில் நடந்து சென்று அய்யப்பனைத் தரிசிப்பதே முழுபலனைக் கொடுக்கும் என்றும் கூறுகின்றனர். ஆனால், அரைப்பலன் கிடைத்தால்கூட போதும் என்று முக்கால்வாசிப் பேர் இந்த வழியைத் தவிர்த்து விடுகின்றனர். யார் 56 கி.மீ. நடப்பது? வண்டியிலேயே சபரிமலை அடிவாரம் வரை சென்று, அங்கிருந்து மட்டும் நடந்து செல்கின்றனர். எங்களது குழுவும் அவ்வாறுதான் சென்றது.
அய்யப்பனுக்கு இதில் என்ன கோபம் ஏற்பட்டதோ தெரியவில்லை, எங்களை கேரள காவல் துறையினரிடம் மாட்ட வைத்து விட்டார்.
(தொடரும்)
- கீற்று நந்தன்