இது பகுத்தறிவு மாநாடு, இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும், புரிந்து கொள்ள வேண்டியதும் என்ன வென்றால், பகுத்தறிவிற்கு ஏற்ற கருத்துகளைப் பரப்ப வேண்டியதும் பகுத்தறி விற்கு மாறானதை ஒழிக்க வேண்டும் என்பதே ஆகும்.
பகுத்தறிவிற்கு விரோதமாக மனித சமுதாயத்திற்குக் கேடாக இருப்பவை நம் கடவுள், மதம், சாஸ்திர, புராண, இதிகாசங்கள் என்பவை ஆகும். அவை நம் இழிவை நிலை நிறுத்துவனவாக இருப்பதோடு, நம்மை அறிவு பெற முடியாமல் முட்டாள்தனம், மூடநம்பிக்கை ஆகிய வற்றை வளர்ப்பனவாகவும் இருப்பதோடு, இவை யாவற்றையும் ஒழித்து மக்கள் பகுத்தறிவு பெறவும், இழிவு நீங்கவுமான தொண்டினைச் செய்கின்றோம். நாம் அறிவு பூர்வமாக ஏற்பட்ட சாதனங்களை ஒழிக்க முற்பட்ட மக்கள் காட்டுமிராண்டிகளாக இருந்து தாய் - அக்காள் - தங்கையைப் புணர்ந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்க்கை என்பதே இன்னது என்று தெரியாமல் வாழ்ந்த காலத்தில், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கடவுள்களையும், மதங்களையும், புராணங்களையும் ஒழிக்க வேண்டும் என்று, செய்கிறோம். இதை நாம் எப்போதோ ஒழித்திருக்க வேண்டும். அறிவுக் காலத்தில் ஏற்பட்டவற்றை அழிக்க வேண்டுமென்று சொல்லவில்லை அதற்கு முன் காட்டுமிராண்டித் தன்மையுள்ள கடவுள்- மதம்-சாஸ்திரம் புராணம் போன்ற இவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்வதைக் கடுகு அளவு அறிவுள்ளவனும் எதிர்க்க மாட்டானே; இவற்றைத் தன் பகுத்தறிவற்ற மடமையால் தன் சுயநலத்திற்காக, அயோக்கியத்தனத்திற்காகப் பாதுகாக்கின்றான் என்பதைத் தவிர வேறு காரணம் அவசியம் எதுவும் கிடையாது. தாயோடு, அக்காள், தங்கையோடு, மிருகத்தோடு புணர்ந்தவன் எல்லாம் உயர்ந்த ஜாதி. ஒழுக்கத்தோடு வாழ்ந்தவன், கீழ்ஜாதி என்று எதற்காக இப்படி இருக்க வேண்டும்? நம் நாட்டில் தோன்றிய மகான், மகாத்மா, ரிஷி, எவனும் இதைப்பற்றிக் கவலைப்பட வில்லையே!
எதற்காக இந்த நாட்டில் கோயில்கள்? எந்தக் கடவுள் யோக்கியன்? எந்தக் கடவுளின் மனைவி யோக்கியமாக இருந் தாள்? கடவுளையும், மதத்தையும் எதற்காக ஒருவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்? இவற்றை ஏற்றுக் கொள்கிறேன் என்றால் கடவுளைப் போல உன் மனைவியையும் பிறனுக்கு விட்டுக் கொடுக்க சம்மதிக்க வேண்டும். கடவுளை- மதத்தை ஏற்றுக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்கிற எவன் இதற்குச் சம்மதிப்பான்? இதைக் காப்பாற்றிய சுத்தக் களிமண் மண்டைக் காரனெல்லாம் மகான், மகாத்மாவாகிவிட்டான். இவற்றை ஒழித்தாக வேண்டும். எந்தவித தாட்சண்யத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது. மடமையால் ஏற்படுத்தப்பட்டு மக்களிடையே புகுத்தப்பட்டவை தான் இவை ஆகும்.
மதங்கள் என்பவை- எந்த மதங்களாக இருந்தாலும், அவை அனைத்தும் மூட நம்பிக்கை நிரம்பியவையே ஆகும். மதத் தலைவர்கள் அத்தனை பேர்களும் அயோக்கியர்களே ஆவார்கள். மதத்திற்கு ஆதாரம் என்னவென்றால் வேதம் என்கின்றான், வேதம் எப்போது உண்டாகி யது? யாரால் உண்டாக்கப்பட்டது? என்பதற்கு ஆதாரமே இல்லை. முட்டாள்தனத்தையும், மூடநம்பிக்கை யையும் புகுத்தித் தான் மதத்தை உண்டாக்கி இருக்கின்றான். வேத- மதத்தை உண்டாக்கியவன் மனிதனுக்குப் பிறக்க வில்லை, மனிதத் தன்மையோடு இருக்கவில்லை. நாய்க்கும், மானுக்கும், மீனுக்கும் பிறந்ததாகத் தான் ஆதாரங்கள் இருக்கின்றன. இதை ஏற்றுக் கொள்பவன் சுத்த மடையனாக இருக்க வேண்டும். ஒத்துக் கொள்ள வேண்டும், நம்பவேண்டும். ஏன் என்று கேட்கக் கூடாது என்று சொல்லித் தான் ஒத்துக் கொள்ளச் செய்கிறான். கிறிஸ்தவ மதத்தை ஒத்துக் கொள்ள வேண்டும் என்றால், கிறிஸ்து, அப்பன் இல்லாமல் பிறந்தான் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்; இப்படி ஏதாவது முட்டாள்தனத்தை வைத் துத்தான் எந்த மதத்தையும் ஒத்துக் கொள்ள வேண்டும். அறிவிற்கு ஏற்ற மதம் எதுவும் கிடையாது.
மனிதன் பாரதத்தை, இராமாயணத்தை, ஒத்துக் கொள்ள வேண்டுமானால் அதிலுள்ள முட்டாள்தனங்களை, மூடநம்பிக்கைகளை ஒத்துக் கொண்டாக வேண்டும்; மனிதன் 60 ஆயிரம் வருஷங்களாக வாழ்ந்தான்; 60 ஆயிரம் பெண்டாட்டிகளைக் கட்டிக் கொண்டான் என்பதை நம்பியாக வேண்டும்; இவற்றை எல்லாம், அவன் ஒத்துக் கொண்டால் தான் இராமனைக் கடவுளாக ஒத்துக் கொள்ள முடியும். கடவுள் எதற்காகத் தம் மனைவியை இன்னொருத்தனுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்? நாம் இந்தக் காட்டுமிராண்டித் தன்மையை உடையவற்றைத் தான் ஒழிக்க வேண்டும் என்கின்றோம். மனிதனை மடையனாக்கும் முட்டாள்தன, மூடநம்பிக்கைகள் யாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.
நம்மை ஏய்ப்பதற்குக் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும், காட்டுகின் றானே ஒழிய, சொல்கின்றானே ஒழிய, அதன்படி அவன் நடப்பது கிடையாது. அதில் உள்ள எதையும் அவன் கடைப் பிடிப்பது கிடையாது, நம்புவதும் கிடையாது. அவன் (பார்ப்பான்) உழைக்காமல் உயர்ந்த சாதிக்காரனாக, உயர்வாழ்வு வாழ வேண் டும் என்பதற்காக நாம் இழிமக்களாக, மடையர்களாக வாழ வேண்டுமா? திருடர்கள் ஏமாந்து போய் விடுவார்களே என்று, நாம் கதவைத்திறந்து வைத்துக் கொண்டு படுத்துக்கொள்ள முடியுமா? இது அறிவு மடை மையாகுமா என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.
அயோக்கியத்தனங்களை, மடமைகளை, முட்டாள் தனங்களை ஒழிக்க வேண் டும் என்றால், துணிய வேண்டும். வயிற்றுப் பிழைப்பிற்காக, சுயநலத்திற்காக, ஒவ் வொருவன் துணிந்து காரியம் செய்யும் போது, நாம் நம் சமுதாய இழிவைப் போக்கிக் கொள்வதற்காகப் போராடுவது தவறில்லையே! பார்ப்பானை விட நாம் எதில் குறைந் தவர்கள். பார்ப்பான் நம்மை விட எதில் உயர்ந்தவன்? அவன் மட்டும் கோவில் சிலைக்கருகில் போகலாம் என்கிற போது நாம் மட்டும் போகக்கூடாது? போனால் என்ன கெட்டுவிடும்? உண்மை யான கடவுள் என்றால் அதற்கு எதற்காகப் பேதம்? எதற்காக சாமிக்குக் கதவு? அரச மரத்தடியில் இருக்கிற சிலையை நாய் நக்கி விட்டுச் செல்கிறது, கேட்க நாதியில்லை. அதே சிலையைக் கோவிலுக்குள் வைத்தால் மட்டும் தீட்டு- தொடக்கூடாது என்றால், என்ன அர்த்தம்? கோயிலிலிருக்கிற சிலைக்கு என்னென்ன சடங்கு நடக்கிறதோ, அத்தனையும் தான் மரத் தடியில் இருக்கிற சிலைக்கும் நடக்கிறது. மரத்தடியிலிருக்கிற, எந்த சாமிக்கும் மனிதன் தொட்டதால், நாய் நக்கியதால் சக்திபோய்விட்டதாக சொல்லப்படுவது இல்லையே! பார்ப்பான் தன் பிழைப்பிற்காக நாம் தொடக்கூடாது என்றாக்கி வைத்திருக்கின்றானே ஒழிய, மற்றப்படி அதில் ஒன்று மில்லையே. மனிதனுக்கு அறிவு வரும், அவனே உள்ளே செல்வான் - சிலையைத் தொடுவான் என்று எதிர்பார்த்தோம். இதுவரை வரவில்லை. எனவே நாம் தான் செய்யவேண்டும். சாமியைப் பற்றிச் சொன்ன எவனும் அதைத் தொட்டால் தீட்டு என்று சொல்லவில்லை. அதைக் கொண்டு பிழைக்கிறவன், அதனால் உயர் வாழ்வு வாழ்கின்றவன் தான் சொல் கின்றான், நாம் தொட்டால் சாமி தீட்டாகி விடும்- சூத்திரன் தொடக்கூடாது என்று. எது வரையில் இந்தக் கோயிலும், நாம் அங்குப் போனால் தீட்டு என்பதும் இருக்கின்றதோ அதுவரையில் நாம் சூத்திரர்கள் தானே! பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் தானே! நம்மில் சில மடையர்கள் இருக் கின்றார்கள். மானம் போனாலும் சரி யென்றும், வெளியில் நின்று கும்பிட்டு விட்டு வருகின்றார்கள். இவர்களைப் போன்ற மானமற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது. அவர்கள் வரு வார்கள் என்று நாம் எதிர்ப்பார்க்கக் கூடாது. அவன் முகத்தில் காரித்துப்பிவிட்டு நாம் காரியத்தில் இறங்கியாக வேண்டும்; அவனவன் தன் வயிற்றுப் பிழைப்பிற்காக, சொந்த சுயநலத்திற்காகப் போராடுகின் றான், கிளர்ச்சி செய்கின்றான். நாம் போராடப் போவது நாமக்காகவோ, நம் சொந்த சுயநலத்திற்காகவோ அல்லவே! இந்நாட்டிலிருக்கிற, நம் சமுதாய மக்கள் அனைவரின் இழிவு, சூத்திரத்தன்மை, மானமற்றத் தன்மை, அறிவற்ற, முட்டாள் தன, மூடநம்பிக்கைளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத் தானே போராடப் போகின் றோம். இதற்கு நாமெல்லாம் தயாராக இருந்தால் தானே முடியும்? விரைவில் இதற்கான போராட்டத்தைத் துவக்கலாம் என்றிருக்கின்றேன். அதற்கு நீங்களெல்லாம் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் வதற்காகவே, இது போன்ற மாநாடுகள் கூட்டி மக்களுக்கு விளக்கம் செய்கின்றோம்.
முன்னேற்றக் கழகத்தில் கலவரம் வரும் என்று கருதினேன். கட்சி ஒழிந்து போய் விடுமோ, என்று கூடப் பயந்தேன். ஆனால் நம் நல்வாய்ப்பாகத் தலைவர் தேர்தலில் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள். தலைமைப் பதவிக்குப் போட்டியிட்ட கருணாநிதி அவர்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டதோடு, நாவலர் அவர்களும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார். இப்போது கருணாநிதி கட்சிக்கு, ஆட்சிக்கு, இயக்கத்திற்குத் தலைவர்.
20 வருஷமாகத் தலைவர் இல்லாமலிருந்தது, அந்த கட்சி. ஏனில்லாமல் இருந்தது என்றால், அண்ணா அந்தக் கட்சியை ஆரம்பித்த போதே இந்தக் கட்சிக்குத் தலைவர் பெரியார் தான், அவர் வருகிற வரை இந்தத் தலைவர் பதவி யாருக்கும் கிடையாது. அவர் வந்து அமருகிறவரை தலைவர் நாற்காலி காலியாகவே இருக்கும், என்று சொல்லிப் பொதுச் செயலாளர் என்கின்ற பெயரில் கட்சியை நடத்திக் கொண்டு வந்தார். இன்றைக்குத் தான் இந்தத் தலைவர் நாற்காலி பூர்த்தி செய்யப்பட்டது. இந்நிலைக்குத் தேர்தல் நடத்த ஒப்புக் கொண்ட நாவலர் அவர்களையும், கலைஞர் அவர்களையும், பாராட்டு கின்றேன். கட்சி இனி எவ்விதக் கலகம் இல்லாமல் நடக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனக்கிருந்த பெரிய கவலை தீர்ந்தது. நம்முடைய வாழ்வும், நம் எதிர் காலமும் இந்த ஆட்சியிடமே இருக்கின்றது. இவர்களால் தான் தமிழர்களுக்கு நன்மை செய்ய முடியுமே தவிர மற்ற எவராலும் நம் மக்களுக்கு இவ்வளவு நன்மைகள் செய்ய முடியாது.
குணம் குடி கொண்டார் உயிருக்கு உயிர்தான், இல்லாவிட்டால் என்று சொல்லி, அதை ஒப்பிட்டுக்காட்ட மிக அசிங்கமானதைச் சொன்னான். அது போல் நம் கொள்கைக்கு ஆதரவு காட்டுகிற வரை நாம் உயிருக்கு உயிராக இருப்போம். நம் கொள்கைக்குக் கேடு விளையுமானால், நாம் அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். நம் சமுதா யத்திற்கு நன்மை செய்கின்ற இந்த ஆட் சிக்கு நம்மாலான ஆதரவைக் கொடுக்க வேண்டும். எதிரிகளால், அவர்களுக்குத் தொல்லை வராமல் பாதுகாக்க வேண்டும்.
கடவுள் என்பது மடையர்களால், முட்டாள் தனத்தால் உண்டாக்கப்பட்டதே ஆகும். மதம் என்பது சோதாப் பசங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக, உண்டாக்கப்பட் டதே அல்லாமல் அறிவுடைய மக்களுக்கு அல்ல என்பதை உணர வேண்டும். இனிமேல், எவனும் கோயிலுக்குப் போகக் கூடாது. சாம்பல், மண் பூசக்கூடாது. பெண் களைக் கோயில்களுக்கு அனுப்பக் கூடாது, மத விழாக்கள் கொண்டாடக் கூடாது.
இந்தக் கடவுள்-மதத்தால் தான் நம்நாடு இழிநிலைக்கு வந்தது. கிறிஸ்துவ நாடு கிறிஸ்துவ மதத்தால் முன்னுக்கு வரவில்லை. கிறிஸ்தவ மதத்தைத் தாக்கியதால் அதன் ஆபாசங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தியதால் தான் அறிவுபெற்று பல அதிசய, அற்புதங்களை அறிவின் பயனால் செய்கின்றனர். அதைப் போன்று நம்நாட்டு மக்களும் அறிவு பெற்று முன்னேற்றமடைய வேண்டும்.
27.7.1969 அன்று சிதம்பரத்தில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 4.8.1969.
அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா