23 ஆண்டுகள் சித்ரவதை
"மனித சமூகத்திற்காக என்று சில ஒழுக்கங்களையும், சில நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி அவை கிரமமாய் நடந்தேறுவதற்காக பயத்தை உண்டு பண்ணும் படியான நிபந்தனைகளைக் கற்பித்து, அக்கற்பனைகளுக்கு மதக் கொள்கை என்று பெயரிட்டு, அம் மதக் கொள்கைக்கு காப்பளிப்பதற்காக கடவுளை உண்டாக்கி வைக்கப்பட்டிருக்கிறது" என்பதும் மதத்திலும் கடவுளிலும் நம்பிக்கையுள்ள அறிவாளிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் கடவுள் மதக்காப்பாளர்களின் வாதமாகும்.
மேல் குறிப்பிட்ட ஒழுக்கமும் நடவடிக்கைகளும் நியாயமானதா, பொதுவானதா, அவசியமானதா என்பதைப் பற்றிய விவகாரத்தில் இப்போது நாம் தலையிடவில்லை என்றாலும், கடவுளுக்கும், மதத்துக்கும் காப்பளிப்பதற்காக இந்த அறிவாளிகள் சொல்லும் சமாதானம் சரியானதா? விவகாரத்துக்கு நிற்கக் கூடியதா? என்பதைப் பற்றி நாம் இந்த வியாசத்தில் விவரிக்கிறோம்.
மனிதனுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் மதப்பித்தானது மதுவை உட்கொண்டவனுக்கு எப்படி அவன் சொந்த புத்தி மறைந்து அவசியமற்றதும், ஒழுங்கும் அறிவும் அற்றதுமான காரியங்களையே நினைக்கவும், பேசவும், செய்யவும் ஆளாகிறானோ அதே போல் மத வெறியானது குறிப்பிட்ட அதாவது மனிதனுக்கு இருக்க வேண்டிய "ஒழுக்கம் நடவடிக்கை" என்பவைகள் லக்ஷியமற்றதாகி வெறும் மத பக்தியே லட்சியமுடையதாகி அதற்காக வாழ வேண்டியதையும், அதற்காக உயிர்விட வேண்டியதையும் மனிதனின் முக்கிய கடமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. இதை மதவாதிகள் உணர வேண்டுமானால் ஒவ்வொரு மதவாதியும் தன் தன் மதத்தைப் பற்றி நினைக்காமல் தனக்குத் தெரிந்த வரையில் பிற மதக் கொள்கைப்படி உள்ள ஒழுக்கங்களையும் நடவடிக்கைகளையும் பிற மதக்காரன் பின்பற்றி நடக்கின்றானா என்பதையும் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு மதக்காரர்களின் யோக்கியதையும், மற்ற மதக்காரர்களுக்குத் தெரியும். மற்றபடி அவரவர் மதக் குற்றம் அவரவர்களுக்குப் புலப்படாது.ஒழுக்கம் நடவடிக்கைகள் என்பவை ஒரு மனிதன் உலக வாழ்க்கையில் ஜன சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மற்ற மனிதனிடத்தில் தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? மற்ற மனிதன் தன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? என்று எதிர்பார்க்கிறான் என்பவைகளைப் பொருத்ததே ஒழிய வெறும் வேஷம் சடங்கு ஆகியவைகளைப் பொறுத்ததல்ல என்பதாக முடிவு செய்து கொண்டு, பிறகு மேற்சொன்னபடி கவனித்துப் பார்க்க விரும்புகிறோம்.
இந்தப்படி பார்த்தால் எந்த மூடனுக்கும் மதம் பயனற்றது என்பதும், கடவுளை உண்டாக்கினது வெரும் பைத்தியக்காரத்தன மென்பதும் மிக சுலபத்தில் வெட்ட வெளிச்சம் போல் விளங்கி விடும்.
உதாரணமாக, திருடுவதிலும் பொய் பேசுவதிலும், அன்னியனை வஞ்சிப்பதிலும், ஒரு பெண்ணை பலாத்காரமாய்த் தூக்கிச் சென்று துராக்கிருதப் புணர்ச்சி செய்வதிலும் தாராள நோக்கமுடைய ஒரு முஸ்லீம் என்பவன் ஒரு வேளை தொழுகை தவறிவிடுவதையும், மந்திரம் சொல்லி அறுக்காத (ஜீவ வதை செய்யாத) ஜெந்துவின் மாம்சத்தை சாப்பிடுவதையும் பெரிய பாவமாகவும் மத விருத்த (விரோத)மாகவும் கருதுகிறான். சமூகமும் அப்படிப்பட்டவனை முன்னையதைவிட பின்னையதற்கே அதிகமாக வெறுக்கின்றது.
அதுபோலவே பொய்யிக்கும் அக்கிரமங்களுக்கும் அனுகூலித்து வாதாடி வயிறு வளர்க்கும் வக்கீல் தொழில் செய்வதையும், லஞ்சம் வாங்கி அநீதி செய்து பொருள் சேர்த்து ஜீவிப்பதையும், பொய், புரட்டு, போர்ஜரி, திருட்டு முதலிய காரியங்கள் செய்வதையும், மது மாம்சம் அருந்தல் முதலிய "இழிவான" காரியங்களைச் செய்வதையும் பற்றி வெட்கப்படாமல் இவற்றில் தீரனென்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு பிராமணன் என்பவன் தான் சிறிது நேரம் பூணூல் இல்லாமல் இருப்பதையும், நெற்றியில் சாம்பலோ மண்ணோ பூசிக் கொள்ளாமல் இருப்பதையும் இறந்து போய் மோட்சலோகத்தில் இருப்பதாய் கருதிக் கொண்டு இருக்கும் தன் தாய் தகப்பன் என்பவர்களுக்கு திதி கொடுக்காததையும் பெரியதொரு பாதகமாகவும் மத விருத்தமாகவும் கருதுகிறான். சமூகமும் அவனை முன்னைய "இழி" தொழிலை விட பின்னைய "தவறு"தல்களுக்கே அதிகமாக வெறுக்கவும் பகிஷ்கரிக்கவும் செய்கின்றது.
அதுபோலவே லஞ்சம் வாங்குவதையும், மக்களை வேட்டையாடு வதையும், நிரபராதியான மக்களை ஆயிரக்கணக்காய் எறும்புகளையும், ஈசல்களையும் விடக் கேவலமாய் மதித்து ஒரு வெடியில் 1000, 2000 பேர்களை கொல்வதையும் தன் மதத்திலேயே மனிதனுக்கு மனிதன் கீழானவன், தீண்டத்தகாதவன் என்று எண்ணுவதையும் நடத்துவதைப் பற்றி வெட்கப்படாமல் இருக்கும் ஒரு கிறிஸ்தவன், ஒரு குறிப்பிட்ட வேளை கோவிலுக்குப் போகாததையும், இரண்டு பெண்டாட்டியை கல்யாணம் செய்து கொள்வதையும், கோவிலுக்கு போய் குருக்கள் முன்னிலையில் கல்யாணம் செய்து கொள்ளாததையும் பெரிய மதக் குற்றமாகவும், கடவுள் விரோதமாகவும் கருதுகிறான். சமூகமும் இப்படிப் பட்டவனை வெறுப்பதில்லை என்பதோடு, சில சமயங்களில் மதிக்கவும் செய்கின்றது. ஆகவே மதங்களின் மூலம் சடங்குகள் மதிக்கப்படுகின்றனவா? ஒழுக்கங்கள் மதிக்கப்படுகின்றனவா? என்பதை உணரலாம்.
ஆரிய மதமானது ஜீவகாருண்யத்தையும் அஹிம்சையையும் சர்வம் பிரமமயம் என்னும் தத்துவத்தையும் உண்மை அருத்தத்தில் அஸ்திவாரமாகக் கொண்டது என்று ஆரியர்களும் அவர்களது அடிமைகளும் சொல்லுகிறார்கள். ஆனால் அனுபவத்தில் வார்த்தை அளவில்கூட ஜீவகாருண்யமோ, அஹிம்சையோ காண்பது கஷ்டமாய் இருக்கிறது. மனிதர்களை மனிதர்கள் மதிக்கும் தன்மையிலும் நடக்கும் இக்குணங்கள் காணப்படுகின்றனவா என்பதை கவனித்தால், ஆரிய மதத்தின் யோக்கியதை யெவருக்கும் விளங்காமல் போகாது. இவ்வாரியர்களின் மற்ற காரியங்கள் எப்படி இருந்தாலும், மதத்திற்காக மதக் கொள்கைப்படி செய்வதாய் சொல்லப்படும் சில காரியங்களில் எவ்வளவு கொடுமையும் வன்னெஞ்சமும் இருக்கிறது என்பதைக் காட்ட சமீபத்தில் கும்பகோணத்தில் நடந்த யாகம் என்று சொல்லப்படும் காரியத்தை பற்றி பொதுஜனங்களுக்கு அறிவிக்கவே இதை எழுதுகிறோம்.
இம்மாதம் 22ந் தேதி கும்பகோணத்தில் ஆரியர்கள் ஒரு யாகம் செய்தார்களாம். அந்த யாகத்தில் 23 ஆடுகள் "மோட்ச" லோகத்திற்கு அனுப்பப்பட்டனவாம். எப்படி அனுப்பப்பட்டன என்றால், உயிருடன் அவ்வாடுகளின் வெதர்களைப் பிடித்து நசுக்கி அவற்றைக் கொன்று அனுப்பப்பட்டனவாம். என்ன அக்கிரமமான காரியம் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றோம். ஜந்துக்களுக்கு பீஜம் அல்லது வெதர் என்பது மிகவும் மெல்லியதும் சிறிது அடிபட்டாலும் அதிக நோயை உண்டாக்குவதென்பதும், ஆரியர்கள் உள்பட யாவரும் உணர்ந்த காரியம். அப்படி இருக்க 23 ஆடுகளை பீஜத்தைப் பிடித்து நசுக்கி அவைகளை சாகடிப்பதென்றால் அந்த 23 ஆடுகளும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டுமா?
இப்படி சித்திரவதை செய்து கொன்ற இக் கொலை பாதகத்துக்கு மதம் ஆதாரம் என்றால், மதங்களின் கொடுமைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டியிருக்கிறது என்று கேட்கின்றோம்.
ஜீவன்களை வதைக்கும் விஷயத்திலும் கொல்லும் விஷயத்திலும் எல்லா மதங்களும் ஒரே தன்மையை உடையதாகக் காணப்படுகின்றனவே ஒழிய, ஒன்றுக்கொன்று வித்தியாசம் கண்டுபிடிப்பது என்பது கஷ்டமான காரியமாகவே தோன்றுகிறது.
இந்த விஷயங்களில் அரசியல் ஆட்சி நிர்வாகமாவது சரியாய் நடந்து கொள்ளுகின்றது என்றுகூட நம்மால் சொல்ல முடியவில்லை. இப்படிச் சொல்வதால் அரசாங்கத்திற்குக் கோபம் வந்தாலும் வரலாம். ஆனால் அப்படிப்பட்ட கோபத்தை, நாம் பொருட்படுத்த வேண்டுமானால் இப்படிப்பட்ட கொலை பாதகங்களை சகித்தாக வேண்டியதாய் இருப்பதால், சர்க்காரின் நிர்வாகத்தை எடுத்துக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
சாதாரணமாக அரசாங்கம் ஜீவகாருண்ய தத்துவத்தை ஒப்புக் கொள்ளுகின்றது என்றுதான் நாம் கருதி இருக்கிறோம். உதாரணமாக ஒரு கோழியை தலைகீழாக காலைப் பிடித்து தூக்கிக் கொண்டு போவதும், ஒரு பன்றியைத் தலைகீழாக கால்களை கட்டித் தூக்கிச் செல்வதும், ஒரு ஆட்டை கழுத்தில் கயிரு கட்டி தரத்தரவென்று இழுத்துச் செல்வதும், கழுத்துப் புண்ணுடன் ஒரு மாட்டை வண்டியில் கட்டுவதும், வண்டி ஓட்டும் சாட்டைக் குச்சியில் முள்ளைக் குத்தி வைப்பதும், குறிப்பிட்ட பாரத்துக்கு மேல் ஒரு மணுவு இடை அதிகமிருப்பதும் ஆகிய காரியங்கள் எல்லாம் குற்றமாகப் பாவிக்கப்பட்டு அவற்றிற்கு சட்டங்கள் மூலம் தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இவை மாத்திரமல்லாமல் ஒரு மனிதன் தன்னைத் தானே வதை செய்து கொள்வதான, செடில் குத்திக்கொள்வது முதலியவைகளையும் குற்றமெனக் கருதி 144 மூலம் தடை செய்யப்பட்டும் வந்திருக்கின்றன. இப்படி எல்லாம் இருக்க, மேல் கண்டபடி யாகத்தின் பேரால் 23 ஆடுகளை வெதரைப் பிடித்து நசுக்கிக் கொன்று இருப்பது இந்த சட்டத்தின் கீழ் வராது என்று ஒரு சர்க்கார் நினைத்திருக்குமானால் தங்களை ஜீவகாருண்ய சர்க்கார் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு பூரண உரிமை உண்டா என்று கேழ்க்கின்றோம்.
இதை மத உரிமை என்று சொல்லப்படுமானால், நரபலியும் நரமேத யாகமும் அதாவது மனிதர்களின் விதரைப் பிடித்து நசுக்கிக் கொன்று சுட்டுச் சாப்பிடுவதும் குற்றமில்லை என்றுதானே கொள்ள வேண்டும்.
இம்மாதிரி கொலைபாதகங்களைப் பற்றி 1926 முதல் நாம் கூப்பாடு போட்டு வந்தும், அதை அரசாங்கம் சிறிதும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்து வருவதானது அரசாங்கத்தில் உள்ள பார்ப்பன ஆதிக்கத்துக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டாகும்.
இந்தப்படியான கொலை பாதகங்களை லக்ஷியம் செய்யாத ஆரியர்கள், மற்றவர்கள் மாம்சம் சாப்பிடுவதாலும், கொலை செய்வதாலும் அவர்களை தாழ்ந்த ஜாதியார் என்று சொல்ல வேண்டி இருக்கின்றது என்று சொல்லுகிறார்கள். ஜீவன்களுக்கு, சித்திரவதை இல்லாமல் ஒரே வெட்டில் க்ஷண நேரத்தில் அந்த ஜீவனுக்குக் கூட தெரிவதற்கில்லாமல் கொன்று சாப்பிடுகின்றவர்கள் தாழ்ந்த ஜாதியார்களானால், ஜீவன்களைப் பிடித்து அதன் விதரை (பீஜத்தை) பதரப் பதர துடிக்கத் துடிக்க மணிக்கணக்காய் நசுக்கிச் சித்திரவதை செய்து கொண்டு சாப்பிடுகின்றவர்களை எவ்வளவு கீழ் ஜாதி எவ்வளவு வன்னெஞ்ச ஜாதி என்று சொல்லுவது என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து கொண்டு ஊராரும் உலகத்தாரும் சிறிக்கவும், இகழவும் நடந்து கொண்டு தாங்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் இவனைத் தொடக்கூடாது, அவனைக் கிட்ட அணுகவிடக் கூடாது, மற்றவனை கோவிலுக்குள், சத்திரத்திற்குள் நிழலுக்கு ஒண்டக்கூட விடக் கூடாது என்பன போன்ற ஆணவமான கொடுமையான வார்த்தைகளால் இழிவுபடுத்தினால் எப்படி சகிக்க முடியும் என்றும் இப்படிப்பட்டவர்களை எப்படி சராசரி மனித சமூகத்திலாவது சேர்க்க முடியும் என்றும் கேட்கின்றோம்.
இந்த அக்கிரமங்களும் அநியாயங்களும் எப்படியோ போய்த் தொலையட்டும் என்று விட்டு விடலாம் என்றாலும், நாட்டு மக்கள் எல்லோருமே தங்களை இந்தப்படியான ஆரிய மதத்தைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்ளும் அறியாமையையும் அநியாயத்தையும் எடுத்துக் காட்டுவதற்காக இவற்றைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
"ஜீவகாருண்யச்" சைவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?
(புரட்சி தலையங்கம் 27.05.1934)