இயக்குனர் காந்திகிருஷ்ணாவுக்கு சுஜாதா மீது ஏன் இத்தனை ஆத்திரம் என்று தெரியவில்லை, இறந்தபிறகும் அவரை விடாமல் பழி தீர்த்திருக்கிறார்.

Tamanna and sidharth சிலருக்கு கருமம் காசிக்குப் போனாலும் விடாது. எனக்கு அப்படிப்பட்ட ராசி. அலுவலக வேலை காரணமாக ஒரு மாதம் ஐதராபாத்தில் தங்கல். நம்ம ஊர் ஐநாக்ஸ் தியேட்டர் மாதிரி, ஐதராபாத்தில் ஐமாக்ஸ் தியேட்டர் பிரபலம். கட்டாயம் அங்கு போய் வரவும் என சென்னையில் இருந்து நான் கிளம்புவதற்கு முன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஆந்திரா நண்பன் சொல்லி அனுப்பினான். எனக்கு சனி அன்று பிடித்தது என நினைக்கிறேன்.

தெலுங்குப் படம் பார்க்க முடியாது, இந்திப் படம் பார்ப்பதற்கு மொழி தெரியாது என்பதால், ஆனந்த தாண்டவம் பார்க்கக் கிளம்பினேன். தியேட்டரில் மொத்தம் ஐந்து வரிசைகளில் மட்டுமே ஆட்கள் இருந்தார்கள். அதைப் பார்த்தாவது உஷாராகி இருக்கலாம். படம் ஆரம்பித்த 15வது நிமிடத்தில், பக்கத்தில் உட்கார்ந்திருந்த 3 பேர் எழுந்து போய்விட்டார்கள். சுஜாதா கதை என்பதால் நிச்சயம் ஏதாவது ஒரு இடத்தில் சுவாரஸ்யம் பிடிக்கும் என்று எதிர்பார்த்தேன்; கடைசி வரை அவர் என்னைக் காப்பாற்றவே இல்லை.

இளிச்சவாய கதாநாயகன், லூசு கதாநாயகி, சொதப்பலான கதை, தத்துபித்து வசனங்கள், நாடகத்தனமான காட்சியமைப்புகள் என படத்தின் குறைகளை சொல்லிக் கொண்டே போகலாம். கதாநாயகன் புதுமுகம். ஏதாவது ஒரு காட்சியிலாவது இயக்குனர் அவரை நடிக்க வைத்திருக்கலாம் அல்லது அவராவது முயற்சித்து இருக்கலாம்.

உணர்வோட்டமே இல்லாத கதை. எல்லாக் காட்சிகளிலும் தியேட்டரிலிருந்து எதிர்மறையான கமெண்ட்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. மண்ணிலிருந்து வரும் கதைகளுக்கும் (பூ, வெண்ணிலா கபடிக் குழு), மேஜை நாற்காலியை விட்டு எழுந்திரிக்காத சுஜாதா போன்றவர்களின் கற்பனைக் கதைகளுக்குமான வித்தியாசம் எப்போதும் பெரியதாகத்தான் இருக்கிறது. முந்தையவர்களின் கதைகள் உயிரோட்டம் உள்ளனவாக, பார்ப்பவர்களின் மனதுக்கு நெருக்கமாக இருக்கின்றன. சுஜாதா போன்றவர்களின் கதைகளோ காட்சியமைப்புகளோ வாழ்க்கையின் பக்கத்திலேகூட வராமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தில் தொடங்கி ஆனந்த தாண்டவம் வரை, சுஜாதாவின் கதைகளைத் தழுவி எடுக்கப்பட்ட படங்கள் எல்லாம் வெற்றியைத் தழுவாவமலே இருக்கின்றன.

பாராட்டும்படி படத்தில் எதுவும் இல்லையா? ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் படமாக்கப்பட்ட விதம் (ஷங்கர் பாணியில் படமாக்கப்பட்ட கடைசிப்பாடல் தவிர) எல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமாரின் இனிய பாடல்களைப் படமாக்குவதற்கு கேமராமேனும், கலை இயக்குனரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். வீட்டில் ஹோம் தியேட்டர் வைத்திருப்பவர்கள் பாடல்கள் அடங்கிய டிவிடியை மட்டும் வாங்கி பார்த்துக் கொள்ளலாம்; தியேட்டர் பக்கம் போய்விடாதீர்கள்.

கதை - வசனம் சுஜாதா என்பதாலும், இயக்குனர் காந்திகிருஷ்ணா படத்தினை சுஜாதாவுக்கு சமர்ப்பித்திருப்பதாலும் அவர்மீதான கோபம் அதிகரிக்கிறது. அடுத்தடுத்து இத்தகைய கதைகளைத் தருவதற்கு சுஜாதா உயிரோடு இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலளிக்கிறது.

- சங்கராச்சாரி

Pin It