இனப்படுகொலை, மதவெறி போன்றவை ஏற்படுத்தும் வலிகளையும் அவலங்களையும் மற்றவர்களிடம் வலுவாகக் கடத்த திரைமொழி சிறந்தது. அந்தப் பணியை சிறப்பாக செய்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர், பர்சானியா, தற்போது ஃபிராக் போன்ற திரைப்படங்கள் முன்வைக்கும் செய்தி என்ன?
நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும், மனித இனம் எவ்வளவு தூரம் முன்னேறி இருக்கிறது என்பதைப் பற்றிய வலுவான சந்தேகங்கள் எழுந்து கொண்டேதான் இருக்கின்றன. நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாக நாம் மிதப்பில் இருந்தாலும், நாம் வாழும் இந்தக் காலத்தில்தான் மிகப் பெரிய கொடூரங்கள் அரங்கேறுகின்றன. அந்த வகையில் நாம் கிஞ்சித்தும் ஆதிமனிதனைப் போல முன்தீர்மானங்கள் இல்லாமலும், விலங்குகளைப் போல இயற்கையாகவும் இல்லை என்பது நிரூபணமாகிறது. உலக வரலாற்றில் காலனி ஆதிக்க அடிமைத்தனம் ஒழிந்து 20ம் நூற்றாண்டில்தான் பல்வேறு நாடுகள் விடுதலை பெறுகின்றன. அநேகமாக அவை தங்கள் சொந்தக் கால்களில் நின்று 21ம் நூற்றாண்டில் தங்களை நிறுவிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், 21ம் நூற்றாண்டின் தொடக்கம் இயற்கைச் சீற்றங்களால் அன்றி, மனிதன் சக மனிதனை கொல்வதற்காக, அழிவு, வேதனை, துயரம் நிரம்பியதாகவே அடையாளம் பெற்றிருக்கிறது.
சகிப்புத்தன்மை அதிகம் கொண்ட மரபாக அறியப்பட்ட இந்தியாவின் முகம், பாபர் மசூதி இடிப்பின்போது கரி படிந்தது. ஒரு மதத்தை நம்பும், எந்த மதத்தையும் நம்பாமலிருக்கும் ஒரு மனிதனின் உரிமைகளை மதிப்பது என்பது நாகரிக சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மனித உரிமை. ஆனால் பணம், அதிகாரம், நாடு போன்றவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும், துய்க்க வேண்டும் என்று நினைக்கும் பாசிசக் கூட்டம் எல்லா மண்ணிலும் இருந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டம், 90கள் வரை இந்தியாவில் பரவலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியாமல் இருந்தது. 90களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாட்டின் நரம்புகளில் பரவ ஆரம்பித்த இந்த விஷம், முதல் முறையாக பாபர் மசூதியை தரைமட்டமாக்கியது. அதற்குப் பிறகு நிலைமை மாறியிருக்க வேண்டும். தொடர்ந்து நிலவிய அரசியல் நிலையற்றதன்மை, முதலாளிகளின் செல்வாக்கு காரணமாக இந்தச் சக்திகள் காலூன்றின. இன்று இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி காட்டுக்கூச்சல் போடப்படுகிறது. ஆனால், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதோ, அதற்குப் பின்னர் நீண்ட காலம் வரையோ "இந்து பயங்கரவாதம்" என்ற ஒரு முத்திரை பேருக்காககூட உச்சரிக்கப்படவில்லை. முளையிலேயே கிள்ளி எறியப்படாத இந்த நச்சுக்கொடி, 2002ம் ஆண்டு கழுத்தை இறுக்கியது.
இன்று இரண்டாவது முறை ஆட்சி்யை அனுபவித்துக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி, தன்னை ஒரு வளர்ச்சியின் காவலனாக, நாடு வளம் பெறுவதையே விரும்பும் அரசியல்வாதியாக, நல்லெண்ண முகமூடியுடன் பிரதமராகும் கனவுடன் திட்டங்களை கூர்தீட்டிக் கொண்டிருக்கிறார். ஐ.பி.எல். சூதாட்ட கிரிக்கெட் போட்டிகள் வேறு நாட்டுக்குச் செல்வதைக்கூட விரும்பாத தேசபக்தர் அவர். மற்றொரு பக்கம் ஆமதாபாத்தில் முஸ்லிம்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவித்த பெண் அமைச்சர் மாயாபென் கோத்னானியும், விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் பட்டேலும் ஏழு ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தபோதும் முஸ்லிம் என்பதற்காகவே காங்கிரஸ் எம்.பி எஹ்சான் ஜாப்ரியும் அவருடைய குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் எரித்து கொல்லப்பட்டனர். அதையே செய்து முடித்த இந்து பயங்கரவாதிகளுக்கு, பெஸ்ட் பேக்கரி வழக்கு போன்ற வலுவான வழக்குகள் மூலம் நியாயம் தேடித்தர முயன்ற மனிதஉரிமைப் போராளி தீஸ்தா செடல்வாட் போன்றோரை வீழ்த்துவதற்கு, வழக்கின் முக்கிய சாட்சியான ஜகீரா ஷேக்கை விலைக்கு வாங்குவது போன்ற எளிய தந்திரங்களை அரங்கேற்றுவது ஒன்றும் பெரிய வேலையில்லை.
இந்தப் பின்னணியில், குஜராத் இனப்படுகொலை நடந்தபோது ஊடகங்களும், அதற்குப் பிறகு இதழ்களும் பல்வேறு குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளன. ஆனால் மும்பை தாக்குதல் நிகழ்வை ஊடகங்கள் பயன்படுத்திக் கொண்டதை வைத்துப் பார்க்கும்போது, இனப்படுகொலை நடந்தபோது வெளியிடப்பட்ட செய்திகளைக்கூட சந்தேகத்துடனே நோக்க வேண்டியிருக்கிறது. அந்த நேரத்தில் வேறு மாதிரி செயல்பட்டிருந்தால் அவர்களது நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழலாம் என்பதையும் இத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அது தொடர்பான ஆதாரங்களை இனப்படுகொலை நடந்த பிறகும் தேடி வெளியிட்ட தெஹல்கா போன்ற மாற்று இதழ்களின் பணி, மலையாள மனோரமாவில் குஜராத் முன்னாள் டி.ஜி.பி. அளித்த பேட்டி போன்றவற்றை மறக்க இயலாது.
இனப்படுகொலைகள், மதவெறி, சகிப்புத்தன்மை இன்மை போன்றவற்றை மையப்படுத்தி சில முக்கிய திரைப்படங்கள் வந்துள்ளன. 90களுக்குப் பின்னர் உலக அளவிலும், குறிப்பாக இந்திய அளவிலும் அதிகரித்துவிட்ட இஸ்லாமிய வெறுப்புணர்வே இந்தப் படங்களின் மையப்புள்ளி. இப்படிப்பட்ட ஒரு திரைப்படமாக முதலில் வந்து கவனத்தைப் பெற்றது "மிஸ்டர் அண்ட் மிஸ்டர் அய்யர்". சத்யஜித்ரேயின் திரைப்பட நாயகிகளில் ஒருவரான அபர்ணா சென் நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பின் இயக்கிய படம் இது. மேற்கு வங்கத்தில் இருந்து சென்னைக்கு வரும் ஒரு பெண், அவளுடன் பயணிக்கும் ஒரு முஸ்லிம் போட்டோகிராபர் இளைஞன். அவர்களது பயணத்தை தடை செய்யும் மதவெறிச் சம்பவங்கள். அந்தப் பெண்ணின் மனமாற்றம். இதுதான் அதன் கதை. வெறுப்புணர்வு என்றைக்கும் எதற்கும் பதில் தரப் போவதில்லை. மாறாக அன்புதான் மனிதப் பண்பு என்பதை வன்முறையின் சாயல்களின்றி வலுவாகச் சொன்ன படம் அது. அதிலும்கூட அந்த திருமணமான பெண், போட்டோகிராபர் இளைஞன் இடையில் நிலவும் அன்பு, காதலுக்கும்-பாசத்துக்கும் இடைப்பட்ட ஓர் இழையைக் காட்டும். இந்தப் படத்தில் நடித்ததற்காக அபர்ணா சென்னின் மகள் கொங்கனா சென் சர்மாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது ஓர் அரிய நிகழ்வு. இந்தப் படம் முன்னரே தயாரிக்கப்பட்டிருந்தாலும், ஒத்திசைந்தது போல குஜராத் கலவரங்கள் நிகழ்ந்த காலத்திலேயே வெளியானது தற்செயல்தான்.
அடுத்ததாக குஜராத் இனப்படுகொலை நிகழ்த்திய பயங்கரத்தையும், மனஅவசங்களையும், வலியின் தீவிரத்தையும் ஆணி அறைந்தது போலச் சொன்ன படம் "பர்சானியா". பின்னாளில் மிகப் பெரிய கிரிக்கெட் வீரனாக வர நினைக்கும் பார்சி சிறுவனான பர்சானியாவின் குடும்பம், முஸ்லிம் என்று தவறாக இனங்காணப்பட்டதால் மதவெறியர்களால் துரத்தப்படுகிறது. தப்பித்துப் போகும் ஓட்டத்தில் பர்சானியா காணாமல் போகிறான். அவன் இருக்கிறானா, இறந்துவிட்டானா என்ற முடிவிலியை நோக்கி அவனது குடும்பம் தள்ளப்படுகிறது. ஒரு முஸ்லிமின் பார்வையில் இல்லாமல், ஓர் இனப்படுகொலையால் எத்தனை பேர், எத்தனை விதமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இப்படம் கூறுகிறது. ஜனநாயக நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் நம் நாட்டில் எப்படிப்பட்ட அவலங்கள் நிகழ்கின்றன. அவை நடந்து முடிந்த பின்னரும்கூட மக்கள் எப்படி அவமதிக்கப்படுகிறார்கள் என்பதை விவரித்த படம் அது. இந்தப் படத்தை குஜராத்தில் திரையிட விடாமல் இந்து பயங்கரவாதிகள் தடுத்தனர்.
உண்மைகளை பேசிய குற்றத்துக்காக இப்பொழுதும் அப்படி ஒரு படம் தடுக்கப்பட்டுள்ளது, அந்தப் படம் "ஃபிராக்". தேர்ந்த நடிகையாக அறியப்பட்ட நந்திதா தாஸ் இயக்கியுள்ள முதல் படம். குஜராத் கலவரம் நிகழ்ந்து 7 ஆண்டுகளுக்குப் பின் இப்படம் வெளியாகியுள்ளது. காலவரிசைப்படி பார்த்தாலே, முதலில் வெளியான "மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர்" மதவெறியின் கொடூரங்கள் பற்றியும், "பர்சானியா" இனப்படுகொலை நிகழ்த்திய பயங்கரங்கள் பற்றியும் பேசின. இப்படம் இனப்படுகொலைக்குப் பிந்தைய காலம் பற்றி பேசுகிறது. அதிலும் ஒரு பார்வையில் மட்டும் இருந்தல்லாமல், ஐந்து வெவ்வேறு மதம், வர்க்கம், வயது போன்ற அம்சங்கள் அடிப்படையில் இந்தப் படம் பிரச்சினையை அணுகியுள்ளது.
ஒரு குற்றத்தை தடுக்க முயலாமல், துணையாக இருப்பவனும் குற்றவாளிதான். ஆனால், ஒரு குற்றம் நடக்கும்போது வாயடைக்கப்பட்டவள், முடக்கப்பட்டவள் என்ன செய்ய முடியும்? ஒரு இந்துவாகப் பிறந்ததற்காக, ஒரு மதவெறியனின் மனைவியாக இருப்பதற்காக, வேலைக்காரச் சிறுவர்களின் பெயரை அறிந்து கொள்வதன் மூலமாக மதத்தை அறியத் துடிக்கும் மாமனாருக்கு மருமகளாக இருப்பதற்காக, கணவனின் நண்பன் கலவரத்தில் முஸ்லிம் பெண்களை "ஒரு பழத்தைச் சுவைப்பது" போல துய்த்ததை அறிந்ததற்காக ஒரு பெண் என்ன செய்துவிட முடியும்? ஒரு மேல் நடுத்தர வர்க்க இந்து குடும்ப இல்லத்தரசியாக இருப்பவள், கலவரத்தில் இருந்து தங்களை பாதுகாக்கச் சொல்லி கதவைத் தட்டும் சப்தம் தினம் தினம் மனதுகளில் எதிரொலிக்க, உயிருக்காக போராடும் முஸ்லிம் பெண் ஜன்னலில் நின்று மன்றாடும் சித்திரம் பயமுறுத்திக் கொண்டே இருக்க, அவள் என்னதான் செய்வாள்? ஷேக்ஸ்பியரின் "மேக்பெத்" நாடகத்தில் அரசனைக் கொல்லும் லேடி மேக்பெத்தின் கைகளில் இருந்து ரத்தக்கறை அகல்வதே இல்லை. அவள் மீண்டும் மீண்டும் கைகளை கழுவிக் கொண்டேயிருக்கும் பைத்தியக்கார நிலைக்குச் செல்கிறாள். அப்படிப்பட்ட ஒரு மனஅழுத்தம் இந்தப் பெண்ணுக்கும் ஏற்படுகிறது. அவள் எடுக்கும் இரு முடிவுகள் அவளது மனஅவசங்களை கூறுகின்றன. அதில் ஒன்று, ஒவ்வொரு முறை குற்றஉணர்வு அழுத்தும்போதும் கொதிக்கும் எண்ணெயால் சூடு போட்டுக் கொள்கிறாள். இந்த கதாபாத்திரத்தை சிறந்த நடிகையான தீப்தி நாவல் ஏற்றிருந்தார்.
அவளைப் போலவே குற்றஉணர்வை அனுபவிக்கும் மற்றொரு இந்து இளம்பெண், தன் கீழ்வீட்டு முஸ்லிம் தோழியின் பரிதாப நிலையைக் கண்டு அவள் சம்பாதிக்க உதவுகிறாள். கைக்குழந்தையோடு இருக்கும் அவளது முஸ்லிம் தோழி, இனப்படுகொலை நடந்த நேரத்தில் ஊரில் இல்லாததால் உயிர் பிழைத்தவள். அவளும் அவளது ஆட்டோ டிரைவர் கணவனும் நிலைகுலைந்து போகிறார்கள். இந்து தோழியின் உதவியோடு மருதாணி இட்டு சம்பாதிக்கப் போகிறாள் முஸ்லிம் பெண். இருந்தபோதும், தன் வீட்டை எரித்தவள் இந்து தோழி தானோ என்ற கேள்வி அவள் அடிமனதில் இருந்து கொண்டே இருக்கிறது.
ஒரு முஸ்லிம் மேல்தட்டு இளைஞனை காதலித்து திருமணம் செய்து கொண்ட படித்த மேல்தட்டு குஜராத்தி பெண், சக மனிதர்கள் கொன்று குவிக்கப்படுவது கண்டு பதறுகிறாள். கலவரத்தி்ல் அவர்களது கடை கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பான 5 நிமிட ரகசிய கேமரா பதிவுகளை காவல்துறையிடம் இருந்து பெறுவதற்காக நிறைய செலவிட வேண்டி இருக்கிறது. முஸ்லிம் இளைஞனான அவளது கணவனோ "மதில் மேல் பூனை" போல் இரட்டை நிலைப்பாட்டுடன் குழப்பத்தில் திணறுகிறான். அதுதான் அவனது சொந்த ஊர். ஆனால், இனப் படுகொலைக்குப் பின்னர் அங்கு தொடர்ந்து வாழ முடியாது என்று கருதும் அவன், தில்லிக்குச் செல்ல முடிவெடுக்கிறான். தான் ஒரு முஸ்லிம் என்பதை தைரியமாக வெளியே சொல்ல முடியுமா, தான் இங்கேயே வாழ முடியுமா என்று மனநெருக்கடியைச் சந்திக்கும் அவன், நான்கு சுவர்களுக்குள் இருந்து செத்துப் போவதைவிட, தில்லிக்கே சென்று தட்டுத் தடுமாறி வாழ்ந்துவிடலாம் என்று முடிவெடுக்கிறான்.
ஆனால் சிறுகச்சிறுக ஆட்டோ ஓட்டிச் சேர்ந்த காசு மூலம் தன் வீட்டில் சேகரித்த வசதிகள் அனைத்தும், எப்படி நேர்ந்தது என்று கூட அறிய முடியாத நிலையில் சாம்பலாக்கப்பட்டது கண்டு, இந்துக்களை கொல்லத் துடிக்கிறான் முஸ்லிமான ஆட்டோ டிரைவர். அவனுடைய பழிவாங்கல் உணர்வு விரட்டப்பட்டு, எப்படிப்பட்ட துர்அவலமான முடிவை அவன் அடைகிறான் என்பதை படம் முகத்தில் அறைந்து சொல்லியுள்ளது.
இப்படி முஸ்லிம் ஆண்கள் மனநெருக்கடியில் தள்ளப்பட்டவர்களாகவும், இந்துவென்றாலும், முஸ்லிம் என்றாலும் பெண்கள் தர்க்க ரீதியாகவும், அடிப்படை மனித அறம் சார்ந்தும் செயல்படுகிறார்கள் என்றும் இப்படம் கூறுகிறது. நந்திதா தாஸ் போன்ற ஒரு பெண் இயக்கியுள்ளதால்தான், இப்படிப்பட்ட வித்தியாசமான வலுவான பாத்திரச் சித்தரிப்பு நிகழ்ந்துள்ளது. குறிப்பாக சாதியும் மதமும் பெண்கள் வழியாகத்தான் செயல்படுகின்றன என்ற அடிப்படை நம்பிக்கையை இப்படம் கட்டுடைக்கிறது. குடும்ப நிறுவனம் மூலமாக தங்களை நிறுவிக்கொள்ளும் நிறுவனங்களான சாதியும் மதமும், பெண்களின் வழியாகத்தான் நடைமுறையில் செயல்பாடுகளாக உருவெடுக்கின்றன. அவர்கள் கடைப்பிடிக்கும் சடங்குகள், உந்துதல் வழியாகவே தங்களை நிகழ்த்திக் கொள்கின்றன என்ற நம்புதலை உடைத்து, பெண்களைப் பற்றிய காத்திரமான சித்தரிப்பை இப்படம் கொண்டுள்ளது.
இந்தக் கதாபாத்திரங்களைத் தாண்டி இரண்டு முற்றிலும் மாறுபட்ட காலத்தின் பிரதிநிதிகளாக முதிய முஸ்லிம் இசைக்கலைஞராக நஸீருத்தின் ஷாவும், கலவரத்தில் அனைவரையும் பறிகொடுத்து தன் அப்பாவைத் தேடிக் கொண்டிருக்கும் சிறுவனாக முகமது சமதும் வருகின்றனர். கலவரத்தில் தன் கண் முன்னாலேயே குடும்பத்தினர் ஒவ்வொருவரும் கொடூரமாகக் கொல்லப்படுவதை மறைந்திருந்து பார்க்கிறான் மோஷின் (முகமது சமத்). திறந்தவெளிச் சிறை போலிருக்கும் மறுவாழ்வு முகாமிலும் அவனுக்கு எந்தப் பற்றுதலும் இல்லாமல் வெளியேறுகிறான். ஆனால் மதவெறியோ பல்வேறு உருவங்கள் எடுத்து அவனைத் துரத்துகிறது. கடைசியில் எந்த பற்றுக்கோடும் கிடைக்காமல் புறப்பட்ட இடத்துக்கே அவன் வந்து சேருகிறான். வாழ்க்கையைப் பற்றியும், உலகின் எதிர்காலத்தைப் பற்றியதுமான மிகப் பெரிய கேள்விகள் அவனது கண்களில், சோகத்தில் உறைந்து கிடக்கின்றன.
மனித குலத்தின் அடிப்படை அறம் மீது தீவிர நம்பிக்கை கொண்டவரான நஸீருத்தின் ஷா, ஒரு சந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியில் உறைகிறார். அவர் சமூக மக்கள் கூட்டங்கூட்டமாக கொல்லப்பட்டது அவருக்குத் தெரியாது. ஒரு கட்டத்தில் டிவியில் இந்த பயங்கரத்தி்ன் சில துளிகளைக் காண நேரும் போது அவரது நம்பிக்கை சுக்குநூறாகிறது. "மனிதன் சக மனிதனை சாகடிப்பதுதான் மிகப் பெரிய கொடுமை" என்ற அவரது கூற்று எத்தனை தலைமுறைகள் தோன்றினாலும் மாறாதது.
இப்படி அவலமும், நம்பிக்கையும் சிதறிக் கிடக்கும் பாதையில் பயணிக்கும் "ஃபிராக்", எந்தப் பக்கமும் சாராமல் நடைபோடுகிறது. அவநம்பிக்கை பரவிக் கிடந்தாலும், இடையே தட்டுப்படும் நம்பிக்கைகளை காட்டவும் அது தவறவில்லை. முதல் காட்சியிலேயே பார்வையாளர்களை உறைய வைத்து, கட்டிப் போட்டுவிடுகிறது இந்தப் படம். சிறிய வேடம் என்றாலும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார் நாசர்.
ஆயிரம் உண்மைக் கதைகளில் இருந்து உத்வேகம் பெற்று எடுக்கப்பட்ட கற்பனைக் கதை என்ற அறிவிப்போடு துவங்கும் இந்த படம், அந்த ஆயிரமாயிரம் கதைகளுக்கு நியாயம் செய்துள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறுவன் மோஷினின் கண்களில் உறைந்து கிடக்கும் கேள்விகள், நம் காலத்தை பற்றிய மிகப் பெரிய சந்தேகத்தை எழுப்புகின்றன. அந்தக் கண்களின் கேள்விகள் நமக்கானவை. நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்.
- ஆதி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
ஓர் இனப்படுகொலையும் சில திரைச்சித்திரங்களும்
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: திரை விமர்சனம்