இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஓ.டி.டி. தளங்களில் தங்கள் பொழுதுபோக்கை தேர்ந்தெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவது நடைமுறையாகி இருக்கிறது. குறிப்பாக கொரோனா பொதுமுடக்கத்தில் அதிகரித்த இப்போக்கானது, தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவேதான் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியிடப்பட்டாலும், ஓ.டி.டி. தளத்தில் இன்னும் அதிக விலைக்கு திரைப்படங்கள் விற்கப்படுகின்றன.
இவ்வாறு ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் படங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்படுவதில்லை. இதனால், அதிக வன்முறைக் காட்சிகளும், பெரியவர்கள் மட்டுமே பார்க்கக் கூடிய காட்சிகளும் சாதாரணமாக வீட்டு அறையில் குழந்தைகளும் பார்க்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கிக் விடுகின்றனர். இதனை கணக்கில் கொண்டு படத்தை தயாரிப்பதுமில்லை, ஓ.டி.டி. தளத்தில் வெளியிடும் போது தணிக்கை செய்தும் வெளியிடுவதில்லை. இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எவரும் கவலைப்படுவதில்லை. அவ்வாறு அண்மையில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்ட ஜெயிலர் திரைப்படத்தில் உள்ள சில காட்சிகள் அதிரச்சியூட்டும் வகையில் உள்ளன.இந்தத் திரைப்படத்தில் மூத்த நடிகர் ரஜினியின் ‘flashback’ காட்சி ஒன்று வருகிறது. இளமையான தோற்றத்தில் திஹார் சிறையின் ஜெயிலராக (படத்தில் ஒரு 15 நிமிடத்திற்கும் குறைவாக) வரும் காட்சிதான் அது. படம் முழுவதும் அளவு கடந்த வன்முறைக் காட்சிகள் இருப்பினும், இந்தக் காட்சி வன்முறையின் உச்சமாக, மனித உரிமை மீறல்களை ‘ஹீரோயிச’மாக சித்தரிக்கும் போக்கில் எடுக்கப்பட்டிருக்கிறது.
அந்தக்காட்சியில் சிறைச்சாலையின் கைதிகளுக்குள் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது, சைரன் ஒலிக்கிறது. ஜெயிலராக நடிகர் ரஜினி நுழைகிறார். கைதிகள் உடனே வரிசையில் நிற்கின்றனர். ரஜினி நுழைந்ததும் கைதிகளுக்குள் என்ன நேர்ந்தது, ஏன் சண்டை வந்தது என எதனையும் விசாரிக்காமல் தொடர்ச்சியாக தண்டனை வழங்கத் தொடங்குகிறார்.
தன் கையில் உள்ள ஆயுதத்தால் ஒரு கைதியின் காதை அறுப்பதில் தொடங்கி நூற்றுக்கணக்கான கைதிகளுக்கு ஒரே கழிவறை என்பது வரை பல்வேறு மனித உரிமை மீறல்களைக் கட்டவிழ்த்து விடுகிறார். இதன்பின் தொடர்ச்சியாக கதாநாயகனின் பிம்பத்தைக் கட்டமைக்கும் காட்சிகள் வருகின்றன.
பொதுவாக கதாநாயகனின் பிம்பத்தைக் கூட்ட, வன்முறை மற்றும் அடிதடி காட்சிகளை சேர்ப்பது என்ற நிலை மாறி, மனித உரிமை மீறல்கள் செய்வதையே ‘ஹீரோயிசம்’ என்று நிறுவப் பார்க்கிறது ஜெயிலர்.
தமிழ்த்திரையுலகில், பொதுவாக சிறைக்கொடுமைகளைக் காட்சிப்படுத்தும்போது அதிகாரவர்க்கத்தின் மீதான வெறுப்பையே பார்வையாளர்கள் இதுவரை உணர்ந்திருக்கின்றனர். இதற்கு சான்றாக ‘ஜெய்பீம்’ திரைப்படத்தைக் கூறலாம். இதில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களை மிகக் கொடூரமாக அடித்து துன்புறுத்திய காட்சிகள், காண்போரைக் கண்கலங்க வைத்தன. இறுதியாக காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி நபர் இறந்துவிட்டாரா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அவரது கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவும் காட்சி வரும். இந்தக் காட்சியைப் பார்த்துக் கண் கலங்காதவர்கள் மிகக் குறைவு.
இதைப்போன்றே இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் இயக்கத்தில் விசாரணை, விடுதலை போன்ற திரைப்படங்களில் சிறைக்கொடுமைகள் விழிப்புணர்வு ரீதியாகவே வந்திருக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இழைக்கப்பட்ட சிறைக்கொடுமைகள், மக்களிடையே வாச்சாத்தி வன்கொடுமை போன்ற நிகழ்வுகளை உணர்வு ரீதியாகக் கடத்தியிருக்கின்றன. இத்தகைய திரைப்படங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் உளவியல் ரீதியான சூழலை முற்றிலும் உருக்குலைக்க வந்திருக்கும் படம்தான் ஜெயிலர்.
நடிகர் ரஜினியின் கதாபாத்திரம் அவ்வாறு வடிவமைக்கப்பட்டது தீயவர்களைத் தண்டிக்கத்தானே என சில ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பலாம். ஆனால் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகள், பெரும்பாலும் சிறுபான்மை இஸ்லாமியர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது தற்செயலானதல்ல. ஐம்பது ரூபாய் திருடியவருக்குக் கிடைக்கும் தண்டனை பல்லாயிரம் கோடி ஊழல் செய்த அதானிக்கும் மெஹுல் சோக்சிக்கும் கிடைக்கவில்லை. அவர்கள் இன்றும் சுதந்திரப் பறவைகளாகவே சுற்றிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் நடக்கும் ‘சிறைக்கொடுமைகள்’ குறித்து ஐ.நா.வில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது சிலருக்கு நினைவிருக்கலாம். ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய கால ஆய்வு (Universal Periodic Review – UPR) என்ற ஆய்வை நடத்துகின்றது. இந்த ஆய்வில் 193 உறுப்பு நாடுகளும் சக நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்யும். இந்த UPR ஆய்வு முறை, கடந்த நவம்பர் 10, 2022 அன்று இந்தியா மீது நடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் நடைபெறும் வெறுப்புப் பேச்சு, இணைய முடக்கம், UAPA, AFSPA போன்ற சட்டங்கள் குறித்து பல்வேறு உலக நாடுகள் கேள்வி எழுப்பின. அப்போது இந்தியாவில் நடக்கும் சிறைக் கொடுமைகள் மற்றும் லாக்-அப் மரணங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்குத் தீர்வாக UNCAT (UN Convention Against Torture) எனப்படும் ஐ.நா. உடன்படிக்கையை அங்கீகரிக்குமாறு 29 நாடுகள் இந்தியாவைக் கேட்டுக் கொண்டன. ஏனெனில் இதுவரை மனித உரிமை மீறல்களுக்கு சரியான தீர்வை நோக்கி இந்தியா இன்னும் பயணிக்கவில்லை என்பதே உண்மை.
தமிழ்நாட்டின் ஜெயராஜ் பென்னிக்ஸ் முதல் பெயரறியா, ஊரறியா எத்தனையோ மனிதர்கள் சிறைக்கொடுமைகளுக்கு ஆளாகி பலியாகி இருக்கின்றனர். இத்தகைய கொடுமைகளை மக்களுக்கு அம்பலப்படுத்துவதே சமூக பொறுப்புள்ள இயக்குநருக்கும் நடிகருக்கும் தலையாயப் பணியாக இருக்க வேண்டும். ஆனால், இந்துத்துவ பயங்கரவாதத்தை வளர்த்தெடுக்கும் மனிதத்தன்மையற்ற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த நடிகர் ரஜினியிடம் இத்தகைய சமூக பொறுப்பை நாம் எதிர்பார்க்கக் கூடாது.
எனவே தற்போது நம் வீட்டின் வரவேற்பறையிலேயே இத்தகைய மனித உரிமை மீறல்கள் காட்சிகளாக ஒளிபரப்பப்படும்போது பெற்றோராக நம் கடமை அதிகரித்துள்ளது. குழந்தைகளிடம் எது ஹீரோயிசம், எது மனித உரிமை மீறல் என்பதை சுட்டிக்காட்டும் பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
- மே பதினேழு இயக்கம்