சார்லி சாப்ளின் நடித்து வெளிவந்த முதல் சினிமா மேக்கிங் ய லிவிங் (Making a Living) என்பதாகும். வாழ்க்கைக்கான வழி என்ற தலைப்பு கூட அவரைப் பொறுத்தமட்டில் சரியானதாகவே அமைந்ததது. படம் 1914 பிப்ரவரி மாதம் 2ஆம் தேதியன்று வெளிவந்தது. பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் ஒப்பந்த நடிகரான அவருக்கு வராச் சம்பளம் தந்தாக வேண்டுமே! படத் தயாரிப்பாளர் படம் எடுக்கத் தொடங்கினார். வெறுமனே உட்கார வைத்துச் சம்பளம் தர முடியாதல்லா? படப்பிடிப்புக் குழுவினருடன் நடிகரை அனுப்பிவிட்டார். தயாரிப்பாளர் உடன் செல்லவில்லை.
லாஸ் ஏஞ்சல்சுக்குப் பக்கத்தில் வெனிஸ் என்ற ஊரில் பிரபலமான மோட்டார் பந்தயம் இப்பந்தயத்தில் சில குழந்தைகளும் பங்கெடுத்துக் கொள்வதுபோல அய்ந்தே நிமிடங்கள் மட்டுமே ஓடும் படத்தை எடுக்க முடிவு. சாப்ளினுக்கு என்ன வேடம், என்ன உடை என்பது எதையுமே தெரிவிக்காமல் அனுப்பி வைத்துவிட்டார். நடிகரும் அவர் மனதுக்குத் தோன்றிய உடையை அணிந்து கொண்டு படப்பிடிப்புக்கு போனார்.
மோட்டார் பந்தயம் தொடங்கியது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் மக்கள் கூட்டம், வேடிக்கை பார்க்க! ஒரு பக்கத்தில் படத்தின் இயக்குநர் நிற்கிறார். அவரது பக்கத்தில் காமரா மேனும் காமராவும்! கார் போட்டி தொடங்கியதும் காமரா லென்சுக்கு நேரே படத்தில் தெரிகிறார் போல சாப்ளின் வந்து நிற்கிறார். அவரைத் தள்ளி விடுகிறார் இயக்குநர். அடுத்த கார் வரும் போதும் நடிகர் வந்து நிற்கிறார். இயக்குநர் அவரை எட்டி உதைக்கிறார். நடிகர் சாப்ளின் கீழே விழுந்து விட்டார். அடுத்த நொடியில் அடுத்த கார் வந்தது; ஸ்பிரிங் போல எழுந்து சாப்ளின் காமராவின் முன் மறுபடியும் வந்து நிற்கிறார். காரை மறைத்துக் கொண்டு! இப்படியாகப் பல கார்கள் ஒவ்வொன்றையும் மறைத்துக் கொண்டு சார்லி சாப்ளின் நின்றார். கடைசிக் காரும் போய்விட்டது.
கார் பந்தயத்தை படம் பிடிக்க முடியவில்லை என்று தலையைப் பிய்த்துக்கொண்டு இயக்குநர் தாம் தூம் என்று குதிக்கிறார். ஆனால் அந்த நேரத்திலும் சாப்ளின் காமரா முன் தன் முகத்தைக் கொண்டு போய் (குளோஸ் அப்) அஷ்ட கோணலாக்கிக் காட்டுகிறார். இதுதான் சினிமா என்றாகிவிட்டது. தயாரிப்பாளர் போட்டுப் பார்த்தார். வயிற்றெரிச்சல் தாங்கவில்லை. இது படமா? எனக் கோபப்பட்டார். இருந்தாலும் படத்தை வெளியிட்டார். நியூயார்க் நகரத் திரையரங்குகளில் கூட்டம் சமாளிக்க முடியவில்லை. படத்தைப் பார்த்தவர்கள் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி மீண்டும் மீண்டும் பார்த்தனர். படம் அபார வெற்றி.
இந்தப் படம் தான் சாப்ளினை வெற்றிப் படிக்கட்டுகளில் வேகமாக ஏற்றியது. வினியோகஸ்தர்களும் திரைப்படக் கொட்டகைக்காரர்களும் சாப்ளினின் அடுத்த படம் எது, எப்போது வரும் என்று கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டனர். அப்படி என்ன அந்தப் படத்தில்? சார்லி சாப்ளின் அணிந்த உடையும், அவரின் தோற்றமும் பிரமாதமான வெற்றிக்குக் காரணம்! இவராகவே உடைகள் வைத்து இருக்கும் பெட்டியைக் குடைந்து தொளதொள பான்ட், குறுகிய சிறிய கோட் என எடுத்து அணிந்துகொண்டார். தலையில் ஒரு குல்லாய் அணிந்து கொண்டார். கழுத்தில் மிக நீளமான டை! ஃபோர்டு ஸ்டெர்லிங் எனும் (உருவத்தில் பெரிய) சிரிப்பு நடிகரின் பெரிய பூட்சுகளைப் போட்டுக் கொண்டார். இவருடைய சிறிய காலிலிருந்து பூட்ஸ் கழன்று விடாமல் இருக்க, கால் மாற்றி அணிந்து கொண்டார். வலதுகாலில் இடது கால் பூட்சையும், இடது காலில் வலது கால் பூட்சையும் அணிந்து கொண்டார்.
மீசை பெரியதாகத் தெரிந்தது, அவரின் உதடுகளை மறைத்தது. கத்தரிக் கோலால் வெட்டினார். வெட்டினார். மிகவும் சிறியதாக ஆகிவிட்டது. என்ன செய்வது? அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார். கையில் ஒரு தடியைப் பிடித்துக் கொண்டார். இந்தக் கோமாளி உடைதான் அவரைப் புகழின் உச்சிக்கு கொண்டுபோய் குபேரனாக்கியது.
சார்லி சாப்ளினின் தனித்துவம், சிறந்த கற்பனை போன்றவற்றைப் புரிந்துகொண்ட தயாரிப்பாளர் அவருக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார். சார்லி சாப்ளினே கதை, திரைக்கதை, நடிப்பு இயக்கம் என எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார். தயாரிப்பாளர் அவரிடமே விட்டுவிட்டார். காட் இன் எ காபேரே (Caught in a Cabare) என்ற படம் 1914 ஏப்ரலில் வந்தது. சாப்ளின் இயக்கிய முதல் படம்! பெரும் வெற்றி. அடுத்தது பத்து நிமிடம் மட்டுமே ஓடிய காட் இன் த ரெயின் (Caught in the Rain) இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் படத்தை நினைத்து நாள் முழுவதும் சிரித்துக் கொண்டேயிருந்தார்கள்.
25 வயதில் இப்படியொரு புகழ்! ஆனால் அவருடைய தலை இதனால் கனக்கவில்லை. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத அவர், தந்தை பெரியாரைப் போலச் சிக்கனமானவர். அவருடைய சேமிப்பு வளர்ந்தது. அவர் சிறந்த மானுடப் பற்றாளர். லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஏழைகள் வாழும் பகுதிகளில் தனியாக நடந்து போவார். அப்படி ஒரு நாள் தம் நண்பரான புகழ்பெற்ற எழுத்தாளர் சமர்சொட்டாம் என்பாருடன் நடந்து போனபோது சொன்னார், ‘சமர்சொட், நாம் பார்க்கும் இதுதான் உண்மையான வாழ்க்கை, மற்றதெல்லாம் போலி’. சமர்சொட்மாம் அதிர்ந்து போனார். ஏன்? சார்லி சாப்ளின் படிப்பறிவு அற்றவர். அவரிடம் அப்படிப்பட்ட ஆற்றலா என் வியந்து போனார் சமர்சொட்மாம்!
ஏன் ஏழைகள் வாழும் பகுதிக்கு ஒரு சினிமா நடிகர் போனார்? அவரே ஒர்க் அவுசில் (Work House) வளர்ந்தவர். அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் ஏழைச் சிறார்களைப் பாதுகாக்க அரசு ஒவ்வொரு ஊரிலும் இப்படிப்பட்ட வீடுகளை வைத்திருந்தது. தெருவில் திரியும், ஆதரவற்ற சிறார்களைக் கட்டாயமாக இதில் சேர்த்து உணவு, உடை, கல்வி எல்லாமே அரசு தந்தது! இதில் சேர்க்கப்பட்ட சாப்ளின் தப்பி வெளியே ஓடிப்போய்விட்டார். எனவே, ஏழைகளின் வாழ்வு எப்படிப் போகிறது என்பதை அறிந்தவர் ஆவார்.
தன் தொடக்க கால வாழ்வை மய்யக்கருவாக வைத்து அவர் 1924இல் தயாரித்த முழுநீளப் படம் தி கிட் (The Kid). அய்ந்து வயதுப் பையனை வைத்து எடுத்த படம். ஓராண்டுக் காலமாகத் தயாரித்த படம். திருமணம் ஆகாமல் குழந்தை பெறும் தாய் அந்தக் குழந்தையை தெருவில் நின்று கொண்டிருந்த காரில் வைத்துவிட்டுப் போய்விடுகிறாள். காரைத் திருடிய திருடர்கள் குழந்தையைக் குப்பைத் தொட்டிக்கருகில் வைத்துட்டுப் போய்விடுகிறார்கள். குழந்தை சாப்ளின் கண்களில் பட்டு விடுகிறது. துண்டு சிகரெட் பொறுக்கும்போது குழந்தை இருப்பதைப் பார்த்து எடுத்துச் செல்கிறார். தானே முழுப்பட்டினி, குழந்தையை என்ன செய்வது என்று திரும்பவும் குப்பைத் தொட்டியில் விட்டுவிடலாம் என்று வருகிறார். போலிஸ்காரர் எதிரில் தென்படவே, பயந்து போய்த் தானே வளர்க்கிறார். அய்ந்து ஆண்டுகள் ஓடிவிட்டன.
சாப்பாட்டுக்கு வழி வேண்டுமே என்று தன் வளர்ப்புக்கு ஒரு தொழில் கற்றுத் தருகிறார். கல்லால் அடித்து வீட்டு ஜன்னல் கண்ணாடியை உடைப்பான் சிறுவன். சற்று நேரம் கழித்து சாப்ளின் வருவார். அவர் உடைந்த கண்ணாடியை சரி செய்யும் பணியாளர் வேடம்! நல்ல வேளை என நினைத்து வீட்டுக்காரர் பணியை ஒப்படைப்பார். வருமானம் வரும். சாப்பாட்டுக் கவலை தீரும்.
இந்தக் காட்சியைக் காப்பி அடிக்காத ஆளே உலகத்தில் கிடையாது. 1943இல் மங்கம்மா சபதம் என்ற படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இந்தக் காட்சியை வைத்தார். சாப்ளின் குரு, கலைவாணர் சீடர். இந்தக் கற்பனைக் காட்சி கூட வாழ்க்கையில் நிஜத்தில் நடந்தது தான். கார்னோ என்ற சாப்ளினின் நண்பர் ஜன்னல்களைப் பழுது பார்ப்பவர். தன் தொழில் ரகசியத்தை சாப்ளினுடன் பகிர்ந்து கொண்டார். சாப்ளின் படமாக்கி பகிர்ந்து கொண்டார். இந்தக் காட்சியின் பின் கதை இது தான். இப்படி சாப்ளினின் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.
நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
சாப்ளின் நடித்த முதல் சினிமா
- விவரங்கள்
- நள ன்
- பிரிவு: உலகம்