உணர்ச்சியும் புணர்ச்சியும் பொதுவானது....காம சாஸ்திரம் சொல்வது போல.... அகமும் புறமும் காமத்தினால் கட்டமைக்கப்பட்டது தான்.
காதல் என்பது திரை. காமமே காட்சி.
"லில்லி" இயக்குனருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். படைப்புத் திமிர் இல்லாமல் இந்த படம் சாத்தியமில்லை. தைரியத்தால் மட்டுமே இதை இயக்கியிருக்க முடியும். பொத்தாம் பொதுவாக பொதுப் புத்தி ஒன்று கல்லெறிய எப்போதும் காத்திருக்கும். எல்லாவற்றுக்கும் தயாரான மனநிலையில் தான் "லில்லி" சாத்தியமாகி இருக்கிறது. படத்தில் வரும் முக்கிய நான்கு கதாபாத்திரங்களுமே கதையை...... கதை கொண்ட பிரச்சனையை சரியாக உள் வாங்கி தைரியமாக நடித்திருக்கிறார்கள். அதுவும்... இரண்டு பெண்களுமே கை தட்டல் பெற வேண்டியவர்கள். நாணத்தையும் அச்சத்தையும் தூக்கி வீசி விட்டு இந்த வாய்ப்பின் மூலம் தங்களால் இயன்ற விழிப்புணர்வை இச்சமூகத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்.
கதாபாத்திரங்களின் போக்குக்கு நியாயம் செய்து வெட்டி சுமையென துருத்திக் கொண்டிருக்கும் சமூக குளறுபடிகளில் அவர்கள் தனித்து தெரிகிறார்கள். கொஞ்சம் பிசகினாலும்... தவறாகி விடும் குறுக்கு சந்துகளில்... சரியாக வெளிச்சம் பாய்ச்சி இருப்பது படைப்பின் மேம்பட்ட ஆக்கம் புரிபட செய்கிறது. இன்னமும் கற்புக்கரசி என்றால் கண்ணகி தான் என்று நம்பிக் கொண்டிருக்கும் பொது புத்தியிலிருந்து எதிர் வினைகள் வரும் என்பதை உணர்ந்து தான் இயக்கி இருக்கிறார்கள். இந்த படக்குழுவுக்கும் படத்தை தயாரித்த தமிழ்ப் பேராசிரியர் ஈஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒளித்து வைக்க ஒன்றுமில்லை உலகில். புரிந்து கொள்ள உலகமே இருக்கிறது.
மெருகேறிக் கொண்டே இருக்கும் அடைப்படைவாதம்.......ஒவ்வொரு முறையும் உடைக்கப்படும். அது தான் மானுட விதி. தவறெல்லாம் உயர சரியெல்லாம் சரியும். பிறகு சரியெல்லாம் உயர தவறெல்லாம் சரியும். சுழற்சியின் போக்கில் தான் நல்லதும் கெட்டதும்.
படத்தின் முதல் காட்சியே நம்மை கிடுகிடுக்க செய்து விடுகிறது. லிப் லாக்.... காட்டப்படுகையிலேயே இது வேறு படம் என்று யூகிக்க முடிகிறது. நம்மூரில் தான் முப்பதைத் தாண்டியும் ஜாதகம்... காதல்... பணம்....சாதி.......நட்சத்திரம்..... செவ்வாய்.....சனி......கருப்பு........ சிவப்பு...என்று ஏதேதோ மானங்கெட்ட காரணங்களால் திருமணம் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. இந்த வாழ்வின் அடித்தளமே காமத்தின் மேல் தான் கட்டமைக்கப்படுகிறது என்பதை பெரும்பாலும் யாரும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதில்லை. மூடி மூடி மறைத்தாலும் காமமே நிஜம். அதன் நீட்சிக்கு தான் திருமணம். கசந்தாலும் நிஜம் நிஜமே. உண்பதை போல கழிப்பதை போல இயல்பாக.. இருக்க வேண்டிய காமத்தை ஊதி ஊதி பெரிதாக்கி ஒளித்து வைத்த சமூகத்தில் எல்லாப் பிரச்னைகளும் அதன் நீட்சியாகவே வெளி வருவதை நாம் எப்போது உணர்வோம்.
வெளுத்ததெல்லாம் கள் என்றும் நம்பும் இந்த சமூகத்தில், சொல்ல இயலாத பிரச்சனைகளோடு.... நம்மோடே இருக்கும் உடல் ஊனமுற்றோரின் தேவைகள் குறித்து சிந்திக்க........யோசிக்க நமக்கு ஏது நேரம்...?
ஆம்.... உடல் ஊனமுற்றோரின் உடல் தேவை குறித்து விவாதிக்கப்படும் இடத்தில் தான் இருக்கிறோம். அதைப்பற்றி தான் இந்த "லில்லி" பேசுகிறது. உடல் தேவை பூர்த்தியடையாத போது.. அதன் நீட்சி வேறு வேறு வேர் கொண்டு வேறு வேறு காரியங்களுடையே வெளிப்படும். அது கோபமாகவோ... அமைதியாகவோ.. தனிமையாகவோ தாபமாகவோ.... குற்ற உணர்ச்சியாகவோ.. தாழ்வு மனப்பான்மையாகவோ... குற்றவாளியாகவோ கூட தன்னை உருவாக்கிக் கொள்ளும். இந்தக் கதையில்... அந்த பெண் சுய இன்பம் செய்வது போல காட்சி வருகிறது. வேறு வழி இல்லை. அதே நேரத்தில் சுய இன்பம் ஒன்றும் பாவமில்லை. புணர்ச்சியை புனிதமாக்கி வைத்திருக்கும் இந்த சமூகத்துக்கு 30 வயது தாண்டியும்.. இணை இல்லாமல் தவிக்கும் தனியன் / தனியள் பற்றி ஒரு போதும் கவலை இல்லை. அதன் கவலை எல்லாம்...பணமும் அதன் பொருட்டாக பகட்டும் தான். ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இயங்கும் உடல் என்னும் இயந்திரத்தின் கோளாறுகள் பெரும்பாலும் பொதுவானவை. அது உண்பது கழிப்பது.. உணர்வது புணர்வது. இதில் ஒன்று சரியாக இல்லையென்றாலும் கெட்டது கதை. அதுவும் உடல் ஊனமுற்றோருக்கு திருமணமே கம்ப சூத்திரம். இதில் கலவி எல்லாம்.. கானா காணும் காலம் மட்டும் தான். ஆனால் உடல் ஒரு வயதுக்கு பின் தன் இயல்பான வேலையை காட்டும். அதை வேறு வழியின்றி பொருளாதார ரீதிக்கு தகுந்தாற் போல.. அடக்க பழகி வைத்திருக்கிறோம்.
அப்படி அடக்க முடியாத.. அல்லது ஏன் அடக்க வேண்டும் என்று குமுறலோடு... அல்லது... அடக்கத் தெரியாத வலியோடு... அல்லது... ஆசைக்கு தகுந்தாற் போல... அல்லது அது தான் தேவை என்ற உண்மை புரிந்து....அவள் சுயஇன்பம் செய்கிறாள்.
அதனால் தான் ஒரு வயதுக்கு மேல் இணையான ஒரு ஜோடியை சேர்த்து விடுதல் கடமையாக இருக்கிறது. இணை அற்ற தனிமை தன்னை ஏதேதோ செய்யத்தான் பார்க்கும். அது தான் இயற்கையின் விதி. உலகின் நியதி புணர்தலின் வழியே தன்னை காத்துக் கொள்கிறது. வழி இல்லாத போது தான் தன் கிளைகளில் தவறுகளும்... தப்புகளும்.......கொலைகளும்....... குற்றங்களும் அரங்கேறுகின்றன. குற்ற உணர்ச்சியின் பின்னால் தன் நிழலை மறைத்துக் கொண்டு தன் ஒற்றை குடிசையில்.... மெய்ம்மறந்து அந்தப்பெண் சுய இன்பம் செய்கிறாள். உண்மையில் கலவியில் அதுவும் ஒரு செயல் அவ்வளவே. அதை குற்ற உணர்ச்சியாக்கி வைத்திருக்கும் சாபமும் இந்த சமூகத்தையே சாரும். அவளின் தேவையை உணராது போன அவளின் தகப்பனின் இயலாமையும் அழுகையும்... நிஜத்தில் இருந்து சொட்டுவதை நாம் பெருத்த பாரத்தோடு காண்கிறோம்.
முன்பொரு காலத்தில் இது தாய் வழி சமூகமாகத்தான் இருந்தது.
தாய் இன்று யாருடன் தன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவள் தான் முடிவு செய்வாள். அது மகனாகவோ.... மருமகனாகாவோ...பக்கத்துக்கு வீட்டுக்காரனாகவோ.... யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி ஒரு காலகட்டம் இருந்தது. "வோல்காவிலிருந்து கங்கை வரை" புத்தகம் அப்படித்தான் சொல்கிறது. அதன் பின்.... வேறு வேறு ரூபத்தில் காமம் தன்னை கட்டமைத்துக் கொண்டு காதல்....சேர்ந்து வாழ்தல்.....கல்யாணம் என்று ஒரு கட்டுக்குள் வந்தது. கல்யாணம் என்பதே உறவு வைத்து அதன் மூலம் தன் வாரிசை தன் உடமைகளுக்கு சொந்தமாக்குவதற்கு தான். பல உறவுகளின் மூலம் உடல் சார்ந்த பிரச்சனைகள் வந்து விட கூடாது என்பதற்காகவும் தான் இந்த கல்யாண ஏற்பாடு. அதன் பிறகு அது குடும்பமாகி குழந்தைகளாகி ஒரு எமோஷனல் வளையத்துக்குள் மாட்டிக் கொண்டது மானுட பரிணாமத்தின் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப் படுகிறது.
காட்சிப்படுத்தலின் போக்கில்...சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. அந்த அப்பா தன் மகளின் அந்த செயலை பார்த்து விட்டார்.... சரி. ஆனால் அதன் பின்பும் அதிர்ச்சியில் பார்த்துக் கொண்டே நின்றிருக்க வேண்டாம். பையை கீழே போட்டு தான் பார்த்து விட்டதை அந்த பெண்ணுக்கு தெரிய வைத்திருக்க வேண்டாம். அந்த காட்சிக்கு பின் அந்த பெரியவர் செய்வதறியாது நடந்து கொண்டே இருப்பதை தவிர்த்திருக்கலாம். எடிட்டர் அங்கே இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக வெட்டியிருக்க வேண்டும். பிறகு கண் தெரியாதவரை வீட்டுக்கு அழைத்து வருவதை விட....அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து சேர்த்திருக்கலாம். இந்த இடத்தில் திருமணம் போன்ற அடிப்படை வாதத்துக்கும் முற்போக்கு சிந்தனைக்கும் இடையே உள்ள இடைவெளியை பற்றிய தத்துவார்த்த தடுமாற்றங்கள் வழக்கம் போல அரங்கேறுகின்றன.
புது மேனஜர் லிங்க் நன்றாக கதையை இணைக்கிறது. ஆரம்பக் கட்ட காட்சிகள்..... அதிர்ந்தாலும்.... நடைமுறை சிக்கல் தான். மனைவியிடம் நெருங்காமல் இருக்கும் புது மேனஜர். அவளோ காமத்தீயில் தவிக்கிறாள். அது இயல்பு தான். உடனே... வேறு வேறு பாடங்கள் சொல்ல இந்த சமூகம் காத்துக் கொண்டிருக்கும். ஆனால் காமம் இல்லாமல் இருப்பது தான் இயல்புக்கு எதிரான ஒன்று. அதில் தான் குறை இருக்கிறது. காமத்தோடு இருப்பதில் குறை இல்லை. இந்த சிருஷ்டி காமத்தினாலே விழைந்தது.
"சரியான வயசுல... நடக்க வேண்டியதெல்லாம் நடந்த உனக்கே இவ்ளோ தேவை இருக்கும் போது....வயசு தாண்டியும் எதுவுமே நடக்காம இருக்கற ஊனமுற்றோரின் தேவைகள் குறித்து நாம எப்பவாது யோசிச்சிருக்கமா..?" என்பது தான் கதையின் மையம். அதை ராவாக சொல்லிவிதம்.....ஒரு பக்கம்... தேவை தான். அந்த பெண் சுய இன்பம் செய்யும் காட்சி ஆணி அடித்தாற் போல இறங்கினாலும்... படத்தின் முழுமை, அடையாமல் எங்கோ துருத்திக் கொண்டு நிற்பதை உணர முடிகிறது. 'கரணம் தப்பினால் மரணம்' கதையை கையாண்ட நேர்த்தியில்... கொஞ்சம் சினிமாத்தனம் இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
ஒரு வேளை முதல் காட்சி மற்றும் சுய இன்ப காட்சியைக் காட்டாமல் இதே அழுத்தத்தை பதிவு செய்ய இந்த இயக்குனரால் முடிந்திருக்கும் என்றால்......அது எழுந்து நின்று பாராட்டப்பட வேண்டியதாக இருந்திருக்கும். மறைத்தாலும் புரிந்து விடும் லாஜிக் இருக்கும் காட்சியை மறைத்து புரிய வைப்பதில் தான் ஒரு படைப்பாளியின் ஆக்கம் இருக்கிறது....என்பது என் தாழ்மையான கருத்து. மற்றபடி.. லில்லி... கில்லி..!
- கவிஜி