அனுபவக் கட்டுரை
“தம்பி சிக்கன், மட்டன், மீன்ன்னு டெய்லி ஏதாவது வேணும். செவ்வாய், வெள்ளி மட்டும் சாம்பார் ரசம் ரெண்டு கூட்டு பொரியல்ன்னு சைவம் வைக்க சொல்லுங்க”
முழுக்க முழுக்க 5D கேமராவில் எடுக்கப்பட்ட 'வழக்கு எண்: 18/9' திரைப்படம் குறைந்த செலவில் ஒரு நல்ல திரைப்படத்தை எடுக்கலாம் என்ற நம்பிக்கையை விட, நாமும் ஒரு படம் எடுத்து பார்க்கலாம் போலேயே என்கிற நம்பிக்கையை ஊருக்கு ஒரு நாற்பது, ஐம்பது இயக்குனர்களை உருவாக்கி வைத்தது. அதில் நாங்களும் சிலர்.
மோகனகுமார். என் மாமாவின் நண்பர். என்னைவிட ஆறேழு வயது மூத்தவர். தீவிர சினிமா ரசிகர். நிஜமாகவே மாற்று சிந்தனையில் சினிமாவை அணுகுபவர். நான் அதிகம் சினிமா பார்த்தது இவருடன் தான். ஏதோ ஒரு மாலையில் எதோ ஒரு தியேட்டரில் சந்தித்தோம். சிந்தனை ஒத்துப்போக மாமாவை விட நான் அவருக்கு நண்பராகிப் போனேன்.
ஒன்றாகப் படம் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு சில ஷார்ட்ப்லிம் எடுக்கப் போகிறேன் என்று சொன்னபோது தான் இவரின் சினிமா ஆர்வம் புரிந்தது. அதன்பின்பு மோகனகுமார் தலைமையில் (?) குறும்படம் எடுத்திருக்கிறோம்.
அனைத்தும் சுமார் ரகம் என்றாலும் ஓரளவு சினிமா பற்றிய புரிதலைக் கொடுத்தது. அந்தப் புரிதலை வைத்து உலகமே வியக்கும் வண்ணம் ஒரு சினிமாவை எடுக்க தைரியம் கொடுத்தது. தயாரிப்பாளர் இல்லாமலே மோகனகுமார் ஸார் இயக்குனராக உருவெடுத்தார்.
சென்னையைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் மூலமாக எனக்கு அறிமுகமாகியிருந்தார் நண்பர் சரத். தனது சொந்த ஊரான தேனியில் சுற்றிக் கொண்டிருக்கும் போது இவர் ஊருக்கு ஷூட்டிங் வந்த ஒரு உப்புமா கம்பெனி இவரின் வாட்ட சாட்டமான லட்சணமான முகத்தை ஸ்பாட்டிலேயே ஒரு கதாபாத்திரம் கொடுத்து அழகு பார்த்திருக்கிறது. அந்த படம் என்னானது என்பது இங்கே குறிப்பிட வேண்டியதில்லை.
ஆனால் சும்மா இருந்தவனை சொறிந்துவிட்ட கதையாக சரத்திற்கு சினிமா ஆசையை வளர்த்திருக்கிறது. விளைவு, சினிமாவில் ஹீரோ ஆசையில் தேனியிலிருந்து சென்னைக்கு வந்த இலட்ச ஹீரோக்களில் இலட்சத்தி ஒன்றாகிப் போனார். மருமகனுக்காக இவரின் மாமா சினிமா தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார். இன்னும் சினிமாவே எடுக்கப்படாத கோடானுகோடி சினிமா தயாரிப்பு அலுவலகங்களில் இதுவும் ஒன்று.
காலம் கண்ட கருமாந்திரங்களை ஒன்று சேர்த்து வைக்கும். அதே போல காரைக்குடியில் இருக்கும் மோகனகுமார் இயக்கத்தில் நடிகர் சரத் நடிக்க சரத் மாமா தயாரிப்பாளராக சிரித்துக் கொண்டிருந்தார். இந்த தயாரிப்பாளர் பணம் போடுவதற்கு ஒரே ஒரு நிபந்தனை மட்டும் வைத்திருந்தார். அதை பிறகு சொல்கிறேன்.
டிஸ்கஷன் என்கிற பெயரில் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு திரைக்கதையை உருவாக்கி வைத்திருந்தோம். அது அப்போதைக்கு திருப்தியைத் தந்தது. மோகனகுமார் ஸார் ஒரு இயக்குனருக்கு உண்டான தகுதியை ஓரளவு வைத்திருந்தார் என்று சொல்வேன்.
நாம் அனைவரும் சினிமாவுக்குப் புதிதானவர்கள். ஆகவே ஏற்கனவே சினிமாவில் பணிபுரிந்த இரண்டு உதவி இயக்குனர்களை வைத்துக் கொள்வோம் என்கிற உருப்படியான யோசனையையும் மோகனகுமார் முன்வைத்தார். மேலும் ஒரு பெரிய நட்சத்திர தம்பதிகளின் மகளுக்கு இந்த கதையைச் சொல்லி ஓகே வாங்கியிருந்தார். இது இன்னும் இவர் மீதுள்ள நம்பிக்கையை அதிகப்படுத்தியது.
இப்போது அந்த தயாரிப்பாளர் வைத்த நிபந்தனை பின்வருமாறு:
அவுட்டோர் யூனிட், ஆர்டிஸ்ட், டெக்னிசியன், ப்ரொடக்ஷன் யூனிட், எக்யூப்மென்ட் மற்றும் இன்னும் பிற தயாரிப்பு செலவுக்கான பணத்தை ஷூட்டிங் ஆரம்பித்த மூன்றாவது நாளில்தான் கொடுப்பேன். அதை படத்தின் கதாநாயகன் மற்றும் எனது மருமகன் வங்கிக் கணக்கில் ஒரே தவணையாக செலுத்தப்படும். அதற்கு முன் நடிகர், நடிகை மற்றும் சில தயாரிப்பு செலவுக்கான அட்வான்ஸ் தொகையை இயக்குனர் தனது சொந்தப் பணத்தில் இருந்து கொடுக்க வேண்டும் (அந்த தொகை சுமார் பத்து லட்சம் இருக்கும்). பிற்பாடு அது திருப்பி அளிக்கப்படும்.
மேற்கண்ட நிபந்தனை சினிமா கனவு கொண்டிருந்த மோகனகுமார் ஸாருக்கு மட்டுமல்ல, எங்களுக்கும் விசித்திரமாக இருந்ததே தவிர பெரிதாகத் தெரியவில்லை. எங்கள் இயக்குனர் தனது மனைவியின் நகை, நடத்தி வந்த நிறுவனத்தின் நிதி ஆதாரங்கள் அனைத்தையும் தான் எடுக்கப் போகும் சினிமாவில் போட்டார்.
அக்கிரிமென்ட் போன்ற சட்ட ரீதியிலான சமாச்சாரங்கள் அப்போது தேவைப்படவில்லை. படப்பிடிப்பு தொடங்கும் நாட்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்தோம். ஊரே பொங்கலுக்கு தயாராகிக் கொண்டிருக்க நாங்கள் மட்டும் ஒரு காவியம் படைக்க தயாராகிக் கொண்டிருந்தோம்.
முதல் படமே வெற்றியாகி விட்டால் ஊரைக் காலி செய்துவிட்டு வளசரவாக்கத்தில் ஒரு அப்பார்ட்மென்ட் வாங்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதை கர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தோம். வெயில் வாட்டி எடுத்த காலத்தில் செமி நகரத்தில் காலில் ஷூ மாட்டிக்கொண்டு ஒரு மார்க்கமாக இருந்ததால் ஊர் உறவுகள் பேசிக் கொண்டதை கண்டுகொள்ள நேரமில்லை.
வாயைத் திறந்தாலே, அந்த ஸீன் நம்பர் 35-Bக்கு இந்தக் கடையை யூஸ் பண்ணிக்கலாம். இந்த ஆங்கிளில் பாத்தா விஷ்வல் ட்ரீட்டா இருக்கும். மிட், வைடு, லோ அங்கிள், ஜிம்மி ஜிப், ட்ரோன், கோபுரோ என்று வாயைத் திறந்தாலே டெக்னிக்கல் வார்த்தைகள் நர்த்தனமாடின. பிற நண்பர்கள் நாங்கள் பேசுவதை வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டு இருந்ததால் எங்களுக்கும் அப்படி பேசுவது ஒரு புல்லரிப்பு சம்பவமாக இருந்தது.
நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகளுக்கு போனிலும், நேரிலும் கதை சொல்லி சொல்லி கதையை தூங்கும்போது விழித்தால் கூட ஆர்டராக சொல்லுமளவிற்கு இயக்குனர் எல்லோரையும் தயார்படுத்தி வைத்திருந்தார்.
ஒவ்வொரு ஆர்டிஸ்ட்களுக்கும் அட்வான்ஸ் போடும்போது இயக்குனர் ஒவ்வொரு அடகுக் கடையிலும் நின்றார். சில நேரங்களில் உதவி இயக்குனர்கள் நாங்கள் கூட பேங்கில் இயக்குனர் மனைவியின் நகையை அடகு வைக்க நின்றோம். இது சற்றே வருத்தத்தைத் தந்தாலும் இதெல்லாம் வரலாறு பேசும் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டோம்.
தங்களது சம்பளத்தையும் அட்வான்ஸ் தொகையையும் பெற சில நடிகர்கள் காட்டிய முனைப்பு ஆச்சர்யமாக இருந்தது. கிராமப் படங்களில் அப்பாவாக வரும் அந்த முன்னாள் இயக்குனர் கம் நடிகர் தன் வீட்டிற்கு சோபா வாங்க வேண்டும், சீக்கிரம் பணத்தைப் போட்டுவிட்டால் நன்றாக இருக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்திய போது இயக்குனர் வீட்டில் ஐந்து சவரன் நகை குறைந்தது.
தேனிலவுக் காலம் எனும் ப்ரி புரடக்சன் முடிந்து நல்லதொரு மங்களகரமான நாளில் சென்னையில் இருந்து அவுட்டோர் யூனிட் ஆட்கள் வந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக காணப்பட்டனர். கிட்டத்தட்ட அனைவரும் ஏதோ ஒரு படத்தில் முகம் காட்டியவர்களாக இருப்பார்கள் என்றே தோன்றியது.
அதில் ஒருவர்தான் கட்டுரையின் முதல் பாராவை மிக அதிகாரமாகச் சொன்னவர். பார்ப்பதற்கு சென்னையின் இரண்டாம் கட்ட அடியாள் போல் இருந்த இவர்தான் புரடக்சன் எக்சிகியூட்டிவ். சினிமா என்கிற ஜிகினா லேசாக விலகிய உணர்வு. “எல்லாம் பல்கா இருக்கானுங்க. பட்ஜெட்ல இன்னொரு கோடி கூடுனாலும் கூடும். சோறு போட்டு மாளாது போலேயே” என்றான் எங்களில் ஒருவன்.
மறுநாள் நல்லதொரு நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கப் போகும் கொஞ்ச நேரத்திற்கு முன்பாக யூனிட் ஆட்களுக்கு சிற்றுண்டி பரிமாறப்பட்டது. "என்னடா கேசரி குலைஞ்சு போய் இருக்கு எவன்டா மெஸ் இன்சார்ஜ்?" முதல் கலகக்குரல் ஒலித்தது. உதவி இயக்குனர் பணியோடு மெஸ் இன்சார்ஜ் நான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வழியாக சமாளித்து படப்பிடிப்பு தொடங்கியது.
இலகுவான வசனமில்லா காட்சிகள், மற்றும் நடப்பது செல்வது என்று காட்சிகள் படமாகியது. ஒரு பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் உடன் இருந்தது, சற்று வசதியாகவே இருந்தது. கடைசி நேரத்தில் உதவி இயக்குனர்களாக வந்த உள்ளூர்வாசிகள் அட்மாஸ்பியர் மற்றும் பொதுமக்களை விரட்டப் பயன்பட்டனர். காட்சிகள் எங்கள் ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் எடுக்கப்பட்டது. ஒரு வழியாக முதல்நாள் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
படப்பிடிப்பில் என்னோடு எட்டு பேர் உதவி இயக்குனரோடு இருந்தோம். மிகவும் சோர்வாக இருந்தது. அடுத்த நாள் காட்சி பற்றிய விவாதத்திற்கு இயக்குனர் அவரது அறைக்கு அழைக்கும் போதே, ஒரு உதவி இயக்குனர் தம்பி அப்பாவுக்கு முடியவில்லை என்று விடுமுறை கேட்டார்.
இந்த தம்பியின் அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆனதை இயக்குனரிடம் சொல்லவில்லை. அடுத்த நாள் காட்சிக்கு டாஸ்மாக் செட்டு போட பணம் வேண்டுமென்று ஒரு உதவி கலை இயக்குனர் வந்து சொல்லி விட்டுப் போனார்.
இருந்த களைப்பில் அவன் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் போல இருந்தது. வேறுவழியில்லாமல் பழைய அட்டைப் பெட்டியை தேடி ஒரு பழைய இரும்புக் கடையில் தஞ்சம் புகுந்து மது பாட்டில் அடைக்கும் பெட்டியாக பார்த்து தேடினோம்.
இரவு பத்து மணிக்கு ரூமிற்கு செல்லும்போது புரடக்சன் எக்சிகியூட்டிவ் நைட்டு சிக்கன் கிரேவி பண்ணச் சொல்லுங்க என்று போனில் சொன்னார்.
தயாரிப்பு தரப்பில் இருந்து வந்த புரடக்சன் மேனஜர் யூனிட் ஆட்களுக்கு பேட்டா பணம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தார். இயக்குனருக்கு போன் அடித்து விஷயத்தை சொன்னோம். சோர்வாக இருந்தவர், நைட்டு ஏதாவது அடகுக்கடை இருக்குமா என்று விசாரித்தார். சினிமாவில் இயக்குனரே தயாரிப்பாளராக இருந்தால் என்னாகும் என்பது லேசாகப் புரிந்தது.
நான்காவது நாளில் தயாரிப்பாளர் பணம் கொடுத்தும் இயக்குனர் வேலையை மட்டும் நிம்மதியாகப் பார்க்கலாம் என்பது மோகனகுமார் ஸாரின் நம்பிக்கை.
அப்படி இப்படியுமாக மூன்றாவது நாள் ஷூட்டிங் இறுதிப் பகுதியில் இருந்தோம். இயக்குனர் தனது ஒட்டுமொத்த சேமிப்பையும் கரைத்திருந்தார். யூனிட் ஆட்களுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் வாங்கப் பணம் கேட்டு நின்றிருந்தார் புரடக்சன் எக்சிகியூட்டிவ்.
மூன்றம் ஷூட்டிங் ஷூட்டிங் முடிந்து இயக்குனர் பேக்அப் சொல்லவில்லை. எல்லோரும் கலைந்திருந்தார்கள். யூனிட்டில் வேலை பார்த்த ஆட்களுக்கு அன்று பேட்டா கொடுக்க வேண்டும். இயக்குனர் தான் உருவாக்கிய கதையை மறந்து இவர்களை சமாளிக்க ஒரு கதையை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். மெஸ்ஸில் இருந்து மளிகைப் பொருட்கள் வாங்க வேண்டும் என்று கோரிக்கையை இயக்குனரிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
எதுவாக இருந்தாலும் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று எல்லோரும் தூங்கச் சென்றோம். இப்போது அதுமட்டும் தான் இலவசமாகக் கிடைத்தது.
சரியாக காலை ஆறு மணிக்கு தயாரிப்பாளருக்கு இயக்குனர் அழைத்தார். அவரிடம் இருந்து பதிலில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டோம். சரியாக ஐந்தாவது நிமிடம் அவருக்கு அழைப்பு வந்தது. தயாரிப்பாளரிடம் இருந்து அல்ல, யூனிட் ஆட்கள் தங்கியிருக்கும் லாட்ஜ் நிர்வாகத்திடம் இருந்து...
மீண்டும் தயாரிப்பாளருக்கு போன் அடித்தால் ஸ்விட்ச் ஆப். யூனிட் வண்டிகளுக்கு டீசல் போட வேண்டும், பணம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஹீரோ கதவைத் தட்டினார்.
'ஸார் எங்க மாமா, இந்த படத்தை ட்ராப் பண்ணச் சொல்லிட்டார்.'
இயக்குனர் முகத்தைப் பார்க்க எங்கள் யாருக்கும் தெம்பில்லை.
'என்னப்பா, இன்னும் ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணலையா?' – இது உள்ளூர் லொக்கேஷன் மேனேஜர்.
மளிகைப் பொருட்கள் வராததால் மெஸ் சாப்பாடு வரவில்லை.
படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தால் இன்னும் சிக்கலில் மாட்டுவோம் என்பது உரைத்தது.
இயக்குனர் குரலுக்குக் காத்திருந்தோம்
'என்ன ஸார் பண்ணலாம்?'
அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மறுபடியும் ஒரு மொபைல் அழைப்பு.
“ஸார், பெட்ரோல் பங்க்ல இருந்து பேசுறோம். யூனிட் வண்டிக்கு டீசல் அடிச்சதுக்கு இருபதாயிரம் பாக்கி இருக்கு. ஓனர் அமௌன்ட் கேக்குறார்!”
மோகனக்குமார் ஸார் முகத்தை தெம்பில்லாமல் பார்த்தோம்.
“கடைசியா என் டூவீலரைக் கூட காப்பாதிக்க முடியலேயேடா!” என்று விரக்தியாக அவர் சொன்னபோது ரிசப்ஷனில் இருந்து போன், “ரூமை செக் அவுட் பண்ணுறீங்களா? இல்ல எக்ஸ்டன் பண்ணுறீங்களா?"
- கா.ரபீக் ராஜா