பரியேறும் பெருமாள் வெளியாகியிருந்த சமயம். 'மாரி சாதிய ஒடுக்குமுறையை பா.இரஞ்சித் போல 'அத்துமீறு, திருப்பியடி' பாணியில் அல்லாமல் நிதானமாக அணுகுவதாகவும் அதுவே தேவை எனவும் ஒரு கருத்து வைக்கப்பட்டது.

உட்புகுந்து பார்த்தால் அந்தக் கருத்தானது, 'ஒடுக்கப்பட்டவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை விட, அதை எப்படி சொல்கிறான்?' என்கிற ஆண்டை புத்தித் தனமான கருத்தாகவே இருந்தது.

dhanush karnanஅப்படி கருத்திட்ட அத்தனை பேரின் மூக்கையும் உடைக்கும் விதமாக "பா. இரஞ்சித்தின் காத்திரம் தன்னிடமும் பல மடங்கு இருக்கும் என மாரி காட்டிய படமே "கர்ணன்" உண்மையில், தலித்தாகப்பட்ட எல்லா மக்களிடமும் இப்படியாகப்பட்ட காத்திரமான கேள்விகள் இருக்கும். மாரிக்கும் பலமடங்கு இருக்கிறது.

வீழ்த்தப்படுகிற அப்பாவிகளின் 'முன் கதை'யுடன் தான் சொல்ல வருகிற கதையாடலைத் துவக்கும் மாரியின் படைப்பாளுமை கர்ணனிலும் தொடர்கிறது. பரியேறும் பெருமாளில் தண்டவாளத்தில் வீழ்த்தப்பட்ட கருப்பி, கர்ணனில் நடு சாலையில் காட்டுப் பேச்சியாக வீழ்த்தப்படுகிறாள். ஏன் வீழ்ந்து கிடக்கிறாள்? கேட்பார் யாரும் ஏன் இல்லை? கருப்பிக்கு எழுந்த அதே பதட்டம், தப்பாமல் இங்கேயும் எழுகிறது.

கதை நேரிடையாக 80-90களில் கிராமங்களின் அத்தியாவசியத் தேவையாக இருந்த மினி பேருந்துகளின் தேவை எப்படிப்பட்டது என்கிற வரலாற்றை அழுத்தமாக பதிவு செய்கிறது. அதன் ஊடே, மறுக்கப்பட்ட உரிமைகளுக்கு எதிராக ஒவ்வொரு தலித் குழுக்களிடமிருந்தும் துவங்கும் எழுச்சியாளர்களின் வரலாற்றையும் பதிவு செய்கிறது.

சூத்திரன் படித்தால் கண்ணில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் எனச்சொன்ன மனுசாஸ்த்திரம் முதல் நிற்க மறுக்கும் பேருந்துகள் வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சிக்கலாய் இருக்கின்ற இந்தக் காரணிகளின் கதைகள் பதிவு செய்வது முக்கியமானது.

சினிமாவின் பூச்சுத்தனங்கள் அத்தனையும் அடித்து நொறுக்கி, மாரி திரைகளில் பதிய வைக்கும் மண்வாசனை அசலானது. ஒரு சாலை, சின்ன கிராமம், அந்த மண்ணின் அடையாளங்கள், மனிதர்கள் என மாரி நிறுத்தும் கதாபாத்திரங்கள் தமிழ் திரையில் பொக்கிஷங்கள். போலவே, கதைக்குள் மாரி நிகழ்த்தும் காவியத்தனமான காட்சிகளும் பெரும் உவகையை அளிப்பதாக இருக்கின்றது.

முக்கியமாக கர்ணனில் "நடுநிசியில் சாமியாடுகிற காட்சி. புதையல் இருப்பதாக சொல்லி தூக்கிப்போடும் உண்டியலில் சின்னஞ்சிறுமி சேர்த்து வைத்த நாணயங்கள் சிதறுவதும், அதைத்தொடர்ந்து எழும் கர்ணன் குடும்பத்தாரின் ஓலமும் நூறு உலக சினிமாக்களில் கண்ட மனிதக் கதையாடல்களின் தரம். போலவே, சுண்டி விளையாடலால் தன் அண்ணியின் சேலைச் சுருக்கங்களில் களவாடி முடித்த பத்து ரூபாய் குட்டு தெரிந்ததும் " பத்து ரூபாய்க்கு முத்தம் கொடுத்து போ எனப் பாட்டி சொல்ல, அவள் தலையில் ஏமன் முத்தமிடும் காட்சி பேரற்புதமானது.

'எல்லா உயிரும் சமம்' எனும் கருத்தை பார்வையாளர்கள் மனங்களில் அழுத்தமாக பதியவைக்கும் மாரியின் கலையாளுமை உன்னதமானது. நாய், பூனை, பன்றி, பருந்து, கோழிக்குஞ்சு, தட்டான்கள், மண்புழுக்கள் என எல்லாவற்றுக்கும் ஸ்கீரின் ஸ்பேஸ் அளிக்கும் அந்த அற்புதம் மாரியின் மேலுமொரு தனித்துவம்.

இப்படியாக திரையில் மிளிரும் சின்னச்சின்ன நெல்லை மண்ணின் இலக்கிய நயம், இடைவேளை சமயம் பெரும் சாமியாட்டமாக உயிர்க்கிறது. குட்டக் குட்டக் குனிந்து கொண்டே இருக்கும் தலைமுறைகளின் சுயமரியாதைகள் விழித்தெழுந்து நீளும் "ஏன்?" எனும் வெறுப்பின் கேள்வி எதிர் வன்முறையாக நீளும் அந்தக்காட்சி, கலையின் மகா உன்னதமான வடிவம்.

கழுதையின் கால்களில் கட்டப்பட்ட கயிறுகள் நொறுக்கப்படுகிற அதேசமயம், காட்டுப்பேச்சிகளின் உயிர்களை, கல்வியை, உடமைகளை காப்பாற்ற நின்றிராத ஆயிரம் பேருந்துகளின் அடையாளமாக ஒரு பேருந்து நொறுக்கப்படும் அக்காட்சி உக்கிரமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

'ஒடுக்குகிறவர்களை ஒடுக்கப்படுகிறவர்களாகவும், ஒடுக்கப்படுகிறவர்களை ஒடுக்குகிறவர்களாகவும்' பொது சமூகத்திடம் காட்ட நினைத்தால் அதிகாரம் அதை சுலபமாகச் செய்யும் என்பார் கருப்பினத் தலைவர் மால்கம் எக்ஸ். அப்படி திருநெல்வேலியில் நிகழ்ந்த கலவரக் கதையின் உண்மை பின்னணியை கர்ணன் வழியாக உலகிற்கு முன் சமர்பித்திருக்கிறார் மாரி.

ஒவ்வொரு ஒடுக்குமுறைக்கும் எதிராக எழும்பும் முதல் குரல்கள் முக்கியமானது.

'தேங்காய் சிரட்டையில்தான் தண்ணீர் கொடுக்கிறானா? சிரட்டையைத் தூக்கி எறி! அதில்தான் ஊற்றுவேன் எனும் பார்ப்பனரின், நாயரின் கையை முறி!' என ஓங்கி முதல் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், முதல் அடியாக தன்னுடைய அடியை இடியென ஆதிக்க ஜாதிக்காரர்களின் மேல் இறக்கிய அய்யா 'அய்யன் காளி' முதல் பொது பேருந்தில் தனக்கு நிகராக உட்காரக்கூடாது எனச்சொன்ன பண்ணையாரை எதிர்த்து ''அப்படித்தான் உட்காருவேன்" எனச்சொல்லி அமர்ந்த "செகுடந்தாளி முருகேசன்" வரை எழுந்த ஓராயிரம் கர்ணன்கள் எழுப்பும் முதல் எதிர்க்குரலும், போராட்டங்களும் அடுத்தடுத்த தலைமுறைகளின் விடுதலைக்கானவை. இந்த விடுதலைக்கான குரல்கள் இன்றும் பல இடங்களில் தேவையாய் இருப்பதும், கலைவழியாக அந்தக் குரல் எழும்ப வேண்டிய அவசியத்தை கடத்துவதிலும் கர்ணன் சாதித்திருக்கிறது.

அரசதிகாரம், ஆதிக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் ஒன்று கூடி எதிர்சண்டை செய்யும் கதையாடலைக் கொண்ட பிரேசிலிய திரைப்படமான Bacurau (2019) விற்கும், கர்ணனிற்கும் சில ஒற்றுமைகள் ஒத்துப்போகின்றன. உலகமெங்கும் ஒடுக்கப்படுகின்ற மக்களின் எதிர் எழுச்சி போராட்டங்கள் ஒரே வகைமைதான். மண் சார்ந்து கதையாடல்களை நிகழ்த்தும் வெற்றி,மாரி மாதிரியான இயக்குனர்களால் உலகத்தரத்திற்கு நிகராக தமிழ்சினிமாவும் நெருங்கிக்கொண்டே இருப்பது மகிழ்வானது.

சாதிப்பெயர் அடையாளங்களில் இருந்து தப்பிக்க, தலித்துகள் மேற்கொண்ட நவீன பெயர்கள் மாற்றங்கள் மீது ஆதிக்கத்தரப்பு கொண்டிருக்கும் காழ்ப்பரசியலை கையாள்கிற அதே வேளையில், அயோக்கிர்களை நல்லவர்களாகவும், நல்லவர்களை அயோக்கியர்களாகவும் கட்டமைத்த அதே மகாபாரத இதிகாச பெயர்களைக் கொண்டே தன் எதிர் அரசியலை பதிவு செய்ததுடன் எனக்கு என்ன பிரச்சினைங்கிறது உனக்கு முக்கியமில்ல? என் பிரச்சினைய நான் கையைக்கட்டி, கக்கத்துல துண்ட வச்சு, உன் கால்ல விழுந்துதான் சொல்லனும்"னு நினைக்கிறயே ஒரு நினைப்பு, அந்த நினைப்பு மேலத்தான் என் முதல் எதிர்க்குரல் நிற்கும். அந்த நினைப்பை உடைக்கிறதுதான் என் அரசியல் என இந்திய சினிமாவில் மாரி, இறங்கிச் செய்திருக்கும் கலகம் கர்ணன்.

2010 வாக்கில் மாரி தன் முகப் புத்தகத்தில் "எங்கள் தீப்பங்கள் வன்முறைகள் என்றால், உங்கள் மெழுகுவர்த்திகள் கோழைத்தனம்" என எழுதியிருந்தார்.

கர்ணன் அவர் ஏந்திய இரண்டாவது தீப்பந்தம்.!

- கர்ணாசக்தி

Pin It