'ஓ காதல் கண்மணி' படத்துக்கப்புறம் இயக்குனர் மணிரத்னம் இயக்கி, கார்த்தி நடிச்சிருக்குற படம். ஸ்டெரெயிட் டூ த பாயின்ட்... படம் பார்க்குற மாதிரிதான் இருந்தது. தலையில தூக்கி வைச்சி கொண்டாடுறதுக்கும் ஒன்னுமில்ல. கால்ல போட்டு மிதிக்கிறதுக்கும் ஒன்னும் இல்ல.
கார்கில் போர் சமயத்தில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி சிறையில் போர்க்கைதியாக மாட்டிக்கொண்ட ராணுவ பைலட் வருண் தன்னுடைய கடந்த கால நினைவுகளால் உந்தப்பட்டு அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்கிறார் என்பதைச் சுற்றியதுதான் திரைக்கதை. அதை மிக மிகக் கவித்துவமாக சொல்றதுக்கு முயற்சி பண்ணி, சில இடங்கள்ல வெற்றியும், சில இடங்கள்ல தோல்வியும் அடைஞ்சிருக்காரு இயக்குனர்.
இந்தக் கதாபாத்திரத்துல கார்த்தியேதான் நடிக்கனும்னு அவசியமில்ல. கார்த்தியோட தனித்துவமான நடிப்புக்கெல்லாம் இங்க வேலை இல்ல. மணிரத்னம் ஆசைப்பட்ட மாதிரி கொஞ்ச நேரம் கார்த்தி இருந்துருக்காருன்னு சொல்லலாம். மற்றபடி மீசையில்லாமல், கன்னங்கள் ஒட்டிப் போயிருந்தாலும் அதில் குறையைத் தேட வேண்டிய அவசியமில்லை. அதிதி, நல்ல கண்டுபிடிப்பு. நடிக்கத் தெரிந்த நடிகை. ஆர்.ஜே.பாலாஜியை சூட்டிங் ஸ்பாட்டை கலகலப்பாக வச்சிக்குறதுக்காக மட்டும் பயன்படுத்திக்கிட்டாங்க போல. இன்னும் சில கதாபாத்திரங்கள் 'ஓகே கண்மணி' படத்தின் எக்ஸ்டன்சனாகவேத் தெரிந்தார்கள். அங்க பிரகாஷ்ராஜ். இங்க டெல்லி கணேஷ்.
தமிழ் சினிமாவில் முப்பது வருடங்களுக்கு மேலாக இருக்கும் இயக்குனர் மணிரத்னம். பாலசந்தர், பாரதிராஜா போன்ற லெஜன்டரி டைரக்டர்கள் கூட நாளடைவுல தங்களோட டச்சை இழந்து தோல்விப் படங்களா கொடுத்தாங்க. ஆனா மணிரத்னம் தன்னை அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்குற இயக்குனர். கடல் படுதோல்வி அடைஞ்சாலும் அதுக்கப்புறம் இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிஞ்சி செம துள்ளலான ஓகே கண்மணியை எடுத்தாரு. ஆனா அவருடைய கடந்த நான்கைந்து படங்கள்ல ஒருவித ஃபேன்டசித் தன்மை அதிகமாகிட்டே போனதும் தெரிஞ்சது. ராவணண் க்ளைமாக்ஸ்ல தொங்கும் பாலத்துல நடக்குற சண்டைக்காட்சி, கடல் படத்தோட க்ளைமாக்ஸ்ல புயலில் மாட்டிக்கொண்ட கப்பலில் நடக்குற சண்டைக்காட்சிகள். அப்புறம் ஓகே கண்மணியில ஹூரோ ஒரு கேம் டிசைனர். அதுலயும் ஒரு அனிமேட்டட் சண்டைக்காட்சி இருக்கு. இப்போ காற்று வெளியிடை முழுக்க முழுக்க காதல் படமா எடுக்க முயற்சி பண்ணிருந்தாலும் இதுலயும் இறுதிக்காட்சிகள்ல சில சாகசங்களை ஹூரோ பண்ணுறாரு. ஒருவேளை இந்த ஃபேன்டசி அம்சங்கள் இளைஞர்களைக் கவர்றதுக்காகவான்னு தெரியல.
படத்தோட முதல்பாதி நல்லாவே இருந்தாலும் இரண்டாம் பாதியினுடைய பல காதல் காட்சிகள் ஏற்கனவே பல மணிரத்னம் படங்கள்லயே பாத்தாச்சு. (உ.ம்: காதலி/காதலன் வேலை விசயமா எங்கயாவது போய்டுவாங்க. அவங்களைத் தேடி காதலி/காதலன் அந்த இடத்துக்குப் போய் அதிர்ச்சி குடுக்குறது). கார்த்தியும் அதிதியும் காதலோடு எமோசனாக பேசிக் கொண்டிருக்கும் போது அந்த எமோசன் நம்மை ஒன்றுமே செய்யவில்லை. இந்த பூச்சாண்டி வேலையை இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பார்க்க முடியும். சிறையிலிருந்து கதாநாயகன் தப்பிக்கும் காட்சிகளுக்காக கொஞ்சமும் திரைக்கதையில் மெனக்கெடவில்லை. "தப்பிக்கப் போறேன்"னு சொல்லி முடிக்கறதுக்குள்ள தப்பிச்சிடுறாரு. மேலும் ஒரு சில காட்சிகள்ல கதாபாத்திரங்கள் எந்தவித இலக்கும் இல்லாம பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதாவது அந்த கதாபாத்திரங்கள் புத்திசாலித்தனமானவர்கள். எல்லோருக்கும் பாரதியார் கவிதைகள் தெரியும். அவர்கள் ஒரு கேள்வி கேட்டால் அதற்குப் பதிலாக இன்னொரு கேள்வியையே முன்வைப்பார்கள். துக்கவீட்டிலும் அழாமல் உம்மென்றே இருப்பார்கள். எல்லோருக்கும் பரதநாட்டியம் தெரியும். ஆடியே சாகடிப்பார்கள். எல்லோருக்கும் கர்நாடக சங்கீதம் தெரியும். பாடியே சாகடிப்பார்கள்.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் முதல்பாதியும் இரண்டாம்பாதியின் கடைசி முப்பது நிமிடங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த இறுதி சண்டைக்காட்சி நன்றாகக் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது. மணிரத்னம் இந்த காதல் கத்திரிக்காய்களை ஓரமாக வைத்துவிட்டு முழுநீள ஆக்சன் படத்தை எடுத்தே ஆகவேண்டும் எனத் தோன்றியது. படம் முழுக்க ஆங்காங்கே இதுபோன்ற சில ஆக்சன் காட்சிகளை இணைத்து, காதல் காட்சிகளை இன்னும் குறைத்திருந்தால் "காற்று வெளியிடை" நல்ல ஒரு அனுபவமாக இருந்திருக்கும். படம் முடிவடையும் காட்சிகள் கவிதை என்றால் அது மிகையல்ல.
காற்று வெளியிடை நன்றாக ஆரம்பித்து நடுவில் தடுமாறி நன்றாகவே முடியும், டெக்னாலஜி மற்றும் இசையில் மிரட்டும் அக்மார்க் மணிரத்னம் படம்.
பி.கு : ஃபேஸ்புக்குல மணி சாருக்கே இந்த அடின்னா இந்த கௌதம் வாசுதேவ் மேனனோட நிலமைய நினைச்சிப் பாத்தேன் சிப்பு வந்துருச்சி சிப்பு..
- சாண்டில்யன் ராஜூ