தமிழ் சினிமா தவற விட்ட சிறந்த நடிகன்.... அல்லது தமிழ் சினிமாவை தவற விட்ட ஒரு ஒரு சராசரி மனிதன் என்றும் கூறலாம் ஆனந்த் பாபு என்ற நடிகனை.

anand babu"நானொரு டிஸ்கொ டேன்சர்" என்று ஜிகுஜிகு உடையில் கண்கள் மினுங்க ஆடிய போது, கண்கள் விரிய திரை அருகே சென்று பார்த்ததெல்லாம் இன்னமும் மனதுக்குள் கால் பின்னும் நினைவுகள். மக்களைப் பார்த்து கையை நீட்டி உடலை சற்று சாய்த்து நெஞ்சை மட்டும் படபடவென அளவெடுத்த‌து போல ஆட்டி ஆடுவதெல்லாம்.... இங்கே ஆட்டங்களின் யுகம் ஆரம்பித்த காலம்.

ஆடுவதற்கு மேடை கிடைக்காமல் ஆடத் தெரிந்தவனுக்கு ரோடு கூட மேடை தான் சொல்லி, ஆடி முடிக்கையில்... மேடைக்கு முன்னிருந்த கூட்டமெலாம் ஆனந்த்பாபுவை சுற்றி நிற்கும் அதிரடி நிகழும், "நான் பேச நினைப்பதெல்லாம்" படப் பாடலை ஒரு போதும் மறந்து விட முடியாது...

"நாட்டுக்கு ராஜா ஆனவர் எல்லாம் போனது எங்கே தெரியவில்லை......
பாட்டுக்கு ராஜா ஆனவர் மட்டும் பூமியில் இன்றும் மறையவில்லை......
காலங்களால் நான் அழிவதில்லை....
நானும் வாழுவேன்.. நானும் பாடுவேன்.. இன்னும் கோடான கோடியுகம்....."

"சேரன் பாண்டிய"னில், "கா........தல் கடிதம்...... வரைந்தேன்...உனக்கு..... வந்ததா...... வந்ந்ந்ததா.......வசந்...தம் வந்ததா.... "

இன்னும் காதலிக்கும் எல்லாருக்கும் வசந்த காலமாகவே அந்தப் பாடல் இருக்கிறது. காதல் டூயட்களில் கூட இடுப்பை வளைத்து காலை மடக்கி ஒரு விதமாக நெளிந்து அவர் ஆடும் போது மனம் தானாக குதூகலிக்க ஆரம்பித்து விடும். 80களில் பிறந்தவர்களுக்கு பிரபு தேவா ஆனந்த்பாபு தான்.

"புத்தம் புது பயணம்", "புது வசந்தம்" என்று ஸ்க்ரீன் ஷேரிங் உள்ள படங்களில் ஆனந்த்பாபு என்ற கலைஞன் தன்னை நிரூபித்துக் கொண்டே தான் இருந்தார்.

ஆட்டத்தில் மட்டுமல்ல. தனக்குக் கொடுக்கப்பட்ட‌ கதாபாத்திரத்தின் நுட்பம் புரிந்து மீட்டர் மீறாமல் நடிப்பதிலும் வல்லவர்தான்.

"இந்த பொண்ணுங்களே இப்படித் தான்டா... வேணுங்கும் போது யூஸ் பண்ணிட்டு, வேண்டாத போது தூக்கிப் போட்டுட்டு போய்டுவாங்க..." என்று கண் கலங்கி சொல்லிக் கொண்டே சாலையில் ஓர் ஓரமாய் அழுக்கு உடையில் கலைந்த தலையோடு நடந்து வரும் "நான் பேச நினைப்பதெல்லாம்" படத்தில் ஒரு காட்சி.... "வானமே எல்லை"... படத்தில் நீதிபதியின் மகனாக விரக்தியின் உச்சியில் இருக்கும் ஒரு கோபம் நிறைந்த இளைஞனாக.....அநீதி கண்டு பொறுக்க முடியாத குடிமகனாக... இடையே மதுபாலா மீது கொண்ட சிறு காதலின் புன்னகையைக் கொண்ட கீற்றாக... இறுதிக்காட்சியில்... ராஜேஷிடம் பேசும் வசனங்களில்... தீ பறக்கும் ஆன்ம உறுதியின் தேடலாக தன்னை அந்ததந்த பாத்திரத்துக்கு வார்த்து விட்ட ஆனந்த் பாபுவை "புரியாத புதிர்" போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் கண்டதெல்லாம் தவிர்த்திருக்க வேண்டியவை.

"சிகரம்" படத்தில் காதலில் தோல்வியுற்றவனாக குடித்துக் கிடக்கும் பாத்திரத்தில் வழிய வழிய மதுவும் காதலும்... கண்கள் சிவந்து கிடந்ததை அச்சத்தோடு காணலாம். "சங்கீதமே நிம்மதி... சந்தோசம் சொல்லும் பைங்கிளி" என்று உச்சஸ்தாயில் பாடுகையில்.. ஷேக்ஸபோனோடு வளைந்து நெளியும் மனதுக்குள்... ஒரு மெல்லிய சிறகு இசையாகி அசைவதை உணர முடியும்.

அத்தனை நளினமான கடினமான ஸ்டெப்ஸ்களை அனாயசமாக செய்து விட்டுப் போகும் இந்த மனிதன் வாழ்வில் பெரும் சோகங்கள் எல்லாம் உண்டு. தீராத பிடியில் சிக்குண்ட காலங்களும் உண்டு. உருக்குலைந்த ஒரு நடனக்காரனின் மறுபக்கம் அதிர்ச்சி அளிக்கக் கூடியவை.

நினைவுச் சிறகில் கிடைத்த இவரின் சினிமாக்கள் பால்யத்தைப் பொழியும் வானவில்லை... வளைக்காமல் நீளச் செய்யும் கவிதையாகிறது. படித்தாலும் புரிந்தாலும்.. மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டும்... என் ஆழ் மனக் காகிதத்தில்... இன்னும் இன்னும் இவரின் "வாழும் வரை போராடு... வழியுண்டு என்றே நீ பாடு.... இன்று ரோட்டிலே... நாளை வீட்டிலே... இனி மழை எங்கும் நம் காட்டிலே...." எழுதிக் கொண்டே இருக்கிறது. வாழ்வைக் கொண்டாட்டமாய் கண்ட பால்யம்.............சுற்றிய தெருக்களில்..... ஊர்களில்.. காடுகளில்.... அணு அணுவாய்ப் பிரிந்து வெற்றிடமாய் கூடு கட்டியிருக்கிறது.....இவரின், "தினம் தினம் உன் முகம் மலரினில் மலருது...நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம். உன்னை நானும் அறிவேன்.. என்னை நீயும் அறிவாய்.. யாரென்று நாம் அறியும் முதல் கட்டம்...மலர் உன்னை நினைத்து... பபபாப...பா......"

சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும்... தன்னைத் தானே பார்த்து வியந்து, சிரித்து, அழுது... உணர்ந்து.... தன்னை வானமாக்கிக் கொள்ளவே மானுடமாகிறது. நினைவுகள் இல்லாத தேகத்தில் மரணம் கூட வாய்ப்பதில்லை....சிறு பாத்திரமே என்றாலும் பெருங்காற்று அது. "எதிர்காற்று"..... படத்தில் மட்டும் அல்ல.. இவரின் வாழ்விலும் தான்.

நடிகனாக இல்லாமல்.. ஒரு மனிதனாக மீண்டெழுந்து விட்டாலும்....இந்தக் கலைஞனுக்கு வயதாவதைத்தான் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை...!

- கவிஜி

Pin It