"கிம் கி டுக்"ன் படங்களைக் காண்பது என்பது தனித்து மலையேறுவது...... அல்லது தனித்து மலை இறங்குவது...... அல்லது தனித்த மலையாவது.
"3 அயர்ன்" இந்த முறை பார்க்கையில்... அடுத்த முறையும் பார்க்க வேண்டும் என்றே தோன்றியது.
ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் பகலில் ஒவ்வொரு வீட்டுக் கதவிலும் விளம்பரத் துண்டுப் பிரசுரங்களை மாட்டி வைத்துப் போகும் கதை நாயகன்.. அன்று இரவு எந்தக் கதவில் அந்த விளம்பரத் துண்டு பிரசுரம் அப்படியே இருக்கிறதோ, அந்த வீட்டுக்குள் கள்ள சாவி போட்டுத் திறந்து நுழைந்து விடுவான். அன்று இரவு அது அவன் வீடு. குளிப்பான். குளிசாதனப் பெட்டியில் இருந்து காய்கறிகள் எடுத்துக் கொண்டே சமைத்து உண்பான். அந்த வீட்டிலிருக்கும் அழுக்குத் துணிகளை துவைத்து காயப் போடுவான். வீடு துடைப்பான். ஏதாவது பொருள்கள் பழுதடைந்து இருக்கிறது என்றால் அதை சரி செய்வான். அந்த வீட்டு சொந்தக்காரர்களின் புகைப்படங்களோடு நின்று செல்பி எடுத்துக் கொள்வான். அடுத்த நாள் அடுத்த வீடு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாழ்வு அவனுக்கு.
அப்படி ஒரு வீட்டுக்குள் செல்கையில் அந்த வீட்டில், கணவனால் கொடுமைக்கு உள்ளான ஒரு பெண் இருக்கிறாள். ஆனால் அவள் இருப்பதை அறியாத கதை நாயகன் வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டிருப்பான். அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் அடுத்த அறையில் இருந்து... பின்னால் இருந்து... டேபிள் மறைவில் என்று தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பாள் அவள். ஒரு மனிதனை அவனுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருப்பது படம் பார்ப்பவரை பதற வைப்பது. சூட்சுமம் அற்ற அந்தக் காட்சி நொடிக்கு நொடி அதிகமாக்கும் இதய துடிப்பைக் கொண்டது.
ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் ஒருத்தி இருக்கிறாள்........தன்னை கவனிக்கிறாள் என்று தெரிய வரும் போது என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாக வெளியேறி விடுவான். அவர்கள் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். இன்னமும் சொல்லப் போனால் கடைசி வரை அவர்கள் பேசிக் கொள்ளவே மாட்டார்கள். பேச்சுக்கள் ஒரு பொருட்டே இல்லை.... உணர்வுகளில் வாழும் கலையை "கிம் கி டுக்" உணர்ந்திருக்கிறார். ஆனால் அவளின் அடி வாங்கி வீங்கி இருந்த முகம்..... சோகம் ததும்பிய கண்கள்......இயலாமையில் இருக்கும் அவளின் உடல்... நம்பிக்கையற்ற வாழ்வின் மீதான குரூரமான சிதைவின் தழுவல்....... எல்லாமும் அவனை மீண்டும் அந்த வீட்டுக்கு செல்ல முடிவெடுக்க வைக்கிறது.
நினைத்தது போலவே அவளை அவன் கணவன் அடித்து சித்திரவதை செய்து கொண்டிருப்பான். வேறு வழியின்றி அவனை அடித்துப் போட்டு விட்டு பைக்கை ஸ்டார்ட் செய்து உறுமுவான். அது, "வந்து உட்கார்" என்று பொருள். அவளும் பொருள் பட.. பொத்தினாற் போல வந்து அமர்ந்து கொள்வாள். எங்கோ விட்ட இடத்தில் இருந்து அவர்களின் காதல் பறக்கத் துவங்கும். அதன் பிறகு அவர்கள் இருவரும் முன்பு அவன் செய்தது போலவே ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாள் என அவர்கள் மெல்லிசைக்கும் வாழ்வு தொடரும்.
ஒரு கட்டத்தில் போலீசில் மாட்டிக் கொள்வார்கள். அவளைப் பிரித்து அவன் கணவன் அழைத்துச் சென்று விடுவான். கதை நாயகனோ சிறைச்சாலையில் அடை படுவான்.
அவளோ அவன் நினைப்பில் வீட்டில் இருந்தும் இல்லாமல் இருப்பாள். அவனோ சிறைச்சாலையில்... இந்த உலகில் இருந்து தன்னை மறைத்துக் கொள்ளும் கலையினைக் கற்றுக் கொண்டிருப்பான்.
இது தான் "கிம் கி டுக்"கின் இடம்.
"கிம் கி டுக்"கின் கதை மாந்தர்கள்......அதிகமாய் பேசுவதில்லை. அவர்கள் எப்போதும் தனித்தே இருக்கிறார்கள்...... அல்லது தவித்தே இருக்கிறார்கள். இந்த படத்திலும் கூட இரண்டு பக்கம் வசனம் பேச வேண்டிய காட்சியை ஒரே ஒரு பிரேமில் காட்டி விடுகிறார். காட்சி மொழியில் திரையும் கதை சொல்லி விடுகிறது. அந்தப் பெண்ணாகட்டும்,... அந்தப் பையனாகட்டும்.....காதலில் இணைந்த பிறகு அவர்கள் அவரவர் இடத்திலே தனித்து இருக்கிறார்கள். ஆனால் அவனை அவளும் அவளை அவனும் தூரத்திலிருந்தே தகித்து இருக்கிறார்கள். காதலின் செவ்விதழ் திறக்கும் போதெல்லாம் அவர்கள் கண்களில் அசைந்தாடும் பிரிவு சோகத்தின் நேர்த்தியோடு மிக மெல்லிய இசையாகி விடுகிறது.
அவன் தங்க வந்த அந்த முதல் நாளில் அவன் சரி செய்து விட்டுப் போன எடை பார்க்கும் இயந்தரத்தில் அவன் இல்லாத போது நின்று பார்ப்பாள். எடை கூடும் காட்சி அது.
அவன் தொடர் முயற்சியில் இந்த பூமியில் இருந்து மறைந்து விடுகிறான். தன்னை மறைத்துக் கொள்கிறான். அதன் நீட்சியில் அவன் சிறையில் இருந்து தப்பி விடுகிறான் என்றும் புரிந்து கொள்ளலாம். அவனுக்கு தூக்குத் தண்டனை என்றும் புரிந்து கொள்ளலாம். புரிந்து கொள்வது அவரவர் பாடு. புரிந்து கொண்டவனுக்கு சொல்லொணாத் துயரம். துயரங்கள் பகிர்ந்து கொள்வதற்கு அல்ல, பதிந்து கொள்வதற்கு.
இதற்கிடையில் அவர்கள் முன்பு இரவில் தங்கிய ஒரு வீட்டுக்கு அவள் ஏதோ தன் வீட்டுக்குள் செல்வது போல செல்கிறாள். அந்த வீட்டுக்காரன் என்ன வேண்டும் என்று கேட்கிறான். அவள் சிறு புன்னகையோடு அவனைத் தாண்டி உள்ளே சென்று முன்பு தன் காதலனோடு அமர்ந்திருந்த சோபாவில் சரிந்து தூங்கி விடுகிறாள். காதலின் நிம்மதி அங்கே துயில் கொள்கிறது. அவனோடு இருந்த இடத்தில் அவள் இருப்பது காதலின் உன்னதமாகிறது. அவனில்லாத போது அவன் கொண்ட ஒவ்வொரு பொருளும் அவனாகி விடுகிறது. ஆளுக்கொரு திசையில் அவனும் அவளும் அவர்களாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
அவன் இந்த பூமியின் கண்களில் இருந்து முழுவதுமாக மறைந்து விடுகிறான். அவள் கண்களுக்கு மட்டும் தெரிய ஆரம்பிக்கிறான். அவளோடு அவள் வீட்டிலேயே நிரந்தரமாக தங்க ஆரம்பிக்கிறான். அவளும் தன் கணவனோடு காதல் கொண்டவள் போல நடிக்கிறாள். கணவனுக்கு வித விதமாக சமைத்துத் தருவது போல அவள் கண்ணுக்கு மட்டும் தெரியும் தன் காதலனுக்கு விருந்து வைக்கிறாள். தன் வாழ்நாளுக்கான காதலோடு தன் காதலனோடு அந்த வீட்டில் வசிக்க ஆரம்பிக்கிறாள். அவள் மீதெல்லாம் இசை வாசித்துக் கிடக்கிறது.
சரி.... இந்தக் கதை எந்தப் புள்ளியில் இருந்து மாயத்துக்குள் செல்கிறது என்பது அவரவர்க்கு விட்டு விட்ட காட்சி அமைப்புகள். ஆரம்பம் இல்லாமல் முடிவும் இல்லாமல் ஒரு வாழ்வு இப்படத்தின் மத்தியில்......... மயக்கத்தில் சில காலம்........ முயக்கத்தில் சில காலம்........ நிஜத்தில் சில காலம்........ கற்பனையில் சில காலம் என்று அதுவாகவே தன்னை தகவமைத்துக் கொண்டது போலும். இங்கே அவர்கள்... அவர்களின் கற்பனையில் இணைந்திருக்கிறார்களா அல்லது நிஜத்தில் பிரிந்திருக்கிறார்களா அல்லது கற்பனையில் பிரிந்திருக்கிறார்களா அல்லது நிஜத்தில் இணைந்திருக்கிறார்களா என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
நமக்குத் தெரிய வேண்டும் என்றெல்லாம் இல்லை. ஆனால் உணர்கிறோம்....!
படம் முடிந்த பிறகு "கிம் கி டுக்" ஒரு வாசகம் எழுதுகிறார்.
"இந்த உலகத்தில் நாம் வாழ்வது என்பது நிஜமா கற்பனையா என்பதை அத்தனை எளிதில் சொல்லி விட முடியாது...."
- கவிஜி