நனவிலி மனத்தில் சிதைவுகளைக் கொண்டிருக்கும் ஒருவன் செய்யும் பெண் கொலைகள்தான் 'சைக்கோ' படத்தின் கதை. தனக்கு உண்டான பாதிப்புகளுக்கான பதிலிச் செயல்களாக அவன் மற்றவர்களின் மரணத்தில் இன்பம் காண்கிறான். அதற்கான காரணங்களாக அவனுடைய குழந்தைப் பருவம் தொடங்கி அடுத்தடுத்த பருவங்களில் அவனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் சுட்டப்படுகின்றன. உலகின் எல்லா வக்கிரங்களும் குழந்தைகளின் கோபத்தில் விளைபவையே. குழந்தைகளின் விருப்பங்களை, உணர்வுகளைப் புரிந்து கொள்ள எத்தனிக்காத சமூகம், அதனால் உண்டாகும் அழுத்தங்கள் பிந்தைய காலத்தில் பேருரு கொள்ளும்போது ஓலமிடுகிறது. குழந்தைப் பருவத்தில் அடக்கப்பட்ட பாலுணர்ச்சிகளே ஒவ்வொருவரின் ஆளுமையைத் தீர்மானம் செய்கிறது என்கிற ஃப்ராய்டியக் கருத்தியலை காட்சி வரிசைகளாக்குகிறது இந்தப் படம்.

Psycho 620பெண்களைக் கொல்லும் தொடர் கொலைகாரர்களின் கதை தமிழ் சினிமா உலகில் புதிதல்ல. சிகப்பு ரோஜாக்கள் தொடங்கி மன்மதன், ராட்சசன் என்று பல படங்களில் பெண் கொலைகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. ஆண்களால் உருவாக்கப்பட்டு பெருமளவு ஆண்களால் வெற்றி நிர்ணயம் செய்து ரசிக்கப்படும் வணிக சினிமாக்களில் பெண்கள் கொல்லப்படுவதை ரசிக்கும் மனநிலை இயல்பானதாகி இருக்கிறது. சில படங்களில் அப்பெண்கள் கொல்லப்படுவதற்கான நியாயங்கள் திரைக்கதையில் உருவாக்கப்பட்டிருக்கும். சைக்கோ படத்தில் அத்தகைய எந்த நியாயங்களையும் மிஷ்கின் உருவாக்கிக் கொள்ளவில்லை. அதாவது இந்தப் படத்தில் பெண்கள் கொல்லப்படுவது, அப்பெண்களின் தவறுகளுக்கான தண்டனைகளாக இல்லை.

அங்குலிமாலா, தான் கொல்வதற்காகப் பெண்களைத் தேர்வு செய்வதில் பெரிதான காரணங்களை வைத்துக் கொள்ளாமல் தொடர்ச்சியாகக் கொன்று குவிக்கிறான். உயிர்க் கொலை அவனுக்கு இன்பத்தைத் தருகிறது. ருசி கண்டவனாய் கொலையின்பத்துக்காக (Pleasure of killing) மட்டுமே அவன் அவற்றைச் செய்கிறான். தான் அனுபவித்த கொலையின்பத்தின் அடையாளமாக, கொல்லப்பட்ட பெண்களின் தலைகளைச் சேகரித்து வைத்திருக்கிறான். வேட்டையாடிய விலங்குகளின் தலைகளைப் பாடம் செய்து சுவற்றில் மாட்டி, பெருமையுடன் பார்த்து ரசிப்பதைப் போல அவற்றை மாட்டி வைத்திருக்கிறான். தலையில்லா உடல்களைப் பொது வெளிகளில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வைத்துச் செல்கிறான்.

படம் முழுக்க அவனால் வெட்டுண்ட பெண் உடல்களை வெறும் உள்ளாடைகளுடன் தலையில்லாமல் காட்டுகிறார்கள். உயிர்களை உற்பத்தி செய்யும் பெண்ணுடலைக் கண்டுதான் தொல் சமூகத்தில் ஆண் அச்சம் கொண்டான். தனக்கு எதிராகப் பல உடல்களை உருவாக்கித் தன்னை அவளால் ஆள முடியும் என்று அவன் நம்பினான். இன்றளவும் ஆணால் வெல்ல முடியாததாகப் பெண்ணுடல் இருக்கிறது. ஆணை அல்லது ஆண்மையைப் பெரிதும் அச்சுறுத்துவது பெண்ணுடல்தான். அதை வெல்ல முடியாத ஆண் அதை அழிப்பதில் நிறைவு காண்கிறான். இதைச் சொல்ல முனையும் திரைக்கதையில் கொலைகாரனின் தனிப்பட்ட பாதிப்புகளை விரிவாகக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அவற்றுக்குப் பெரிய இடம் தராமல் குறைத்திருக்கிறார் மிஷ்கின்.

என்றாலும் ஓர் அரங்க நிகழ்வின் (Stage show) வடிவில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சி அற்புதமானது. அதில் உயரமான அதிகார பீடத்தில் (நாற்காலியில்) கொலைகாரனின் ஆசிரியர் (பெண்) உட்கார்ந்திருக்கிறார். நம்மிடம் இருக்கும் குழந்தைமையை அதிகம் திருடுபவர்கள் ஆசிரியர்கள்தான். பள்ளிக்குப் போகாதவர்கள் பெரும்பாலும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். வளரிளம் பருவத்தில் அங்குலி மாலாவுக்கு உண்டாகும் இயல்பான எதிர்பாலின ஈர்ப்பின் தேவையை நிறைவேற்றம் செய்ய சமுகம் தடைகளை உண்டாக்குகிறது. அவன் அடைய முடியாத தொலைவில் பெண்ணுடலை வைத்து அவனுடைய இயல்பான தேவைகளைக் கேலி செய்கிறது. ஃப்ராய்ட் சொல்வது போல், அடக்க முடியாத பாலுணர்வுகள் நிறைவேற்றம் கொள்ள வழியின்றி ஆழ்மனத்தில் சேமிக்கப்படுகின்றன. சுய இன்பம் அதற்குரிய ஓரளவுக்கான பதிலியாக (alternative) அமையும்போது ஒருவனுடைய ஆளுமை சிதைவிலிருந்து தப்பிக்கிறது.

சுய இன்பம் ஒரு பெரும்பாவம் என்று சமயத்தின் துணையுடன் ‘சூப்பர் ஈகோ’ தடை செய்கிறது. தடை மட்டுமின்றி ஆசிரியையைக் கொண்டு பெரும் தண்டனை தந்து அங்குலி மாலாவை மிரட்டுகிறது. அந்த ஆசிரியைதான் அவனுடைய ‘சூப்பர் ஈகோ’. அதனுடைய கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட முடியாமல்தான் ‘இட்’ (ID – Instinctual Drive) துடிக்கிறது. ஆனால் அது பேராற்றல் கொண்டது. வளரிளம் பருவத்தைக் கடந்த பிறகு அங்குலி மாலா ஆசிரியையை சிறையில் அடைத்து வைக்கிறான். ஆனால் அப்போது இட்டின் தேவை பெண்ணுடலை அடைவது என்பதிலிருந்து பெண்ணுடலை அழிப்பது என்கிற பரிணாமத்தை அடைகிறது. அதில்தான் அவனுடைய ‘இட்’ இன்ப நிறைவேற்றம் கொள்கிறது. அந்த ஆசிரியை அதிகம் பேசுபவராக இருக்கிறார். வார்த்தைகளின் துணையுடனே அங்குலி மாலாவை அதிகம் கட்டுப்படுத்துகிறார். இறுதிக் காட்சியில் தன்னைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளிலிருந்து விடுபட, அந்த ஆசிரியையின் வாய் வழியாகத் தொண்டையினுள் கையைத் திணித்து சாவியை எடுத்துத் தன்னை விடுவிக்கிறான். ஆசிரியையின் மரணத்தில்தான் அவனுக்கான விடுதலை இருப்பதான காட்சி நகர்வு மிகு நுட்பமானது.

ஆண்களைக் கொல்வதில் அவனுக்கு ஆர்வமில்லை. அது அவனைக் கிளர்ச்சிப்படுத்தவில்லை. இக்கட்டான தருணங்களில் தன்னைத் தப்பிக்கச் செய்வதற்காக மட்டுமே அவன் ஆண்களைக் கொல்ல நேர்கிறது. அவனுடைய பிரத்தியேகக் கொலைக்களத்தில் வைத்து இரண்டு ஆண்களைக் கொல்கிறான். அந்த இருவருமே போலீஸ்காரர்கள். அதில் ஒருவர் சிறுவயதில் அவனை ஓரினப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியவர். தன்னுடைய பாலுணர்வு வரம்புக்குள் வராத கட்டாய பாலுறவுக்கு உள்ளாகும் மனம், அதற்குக் காரண கர்த்தாவைப் பழி தீர்க்கிறது. அந்தப் போலீஸ்காரரைக் கொன்று (கொலைக்காட்சி காட்டப்படவில்லை) அவருடைய உடலைச் சீருடையுடன் நாற்காலியில் உட்காரச் செய்து தினமும் கண்டு ரசிக்கிறான். இந்தக் காட்சியிலும் நாற்காலி மற்றும் போலீஸ் சீருடை அதிகாரத்தின் குறியீடுகளாக ஆக்கம் பெறுகின்றன.

இன்னொரு போலீஸ்காரர் (ராம்) சைக்கோவால் வெட்டுண்டு சாகும் காட்சி படத்தில் காட்டப்படுகிறது. தனக்குப் பிடித்த பழைய பாடலைப் பாடியபடி இறந்து போகும் அவருடைய தலையை ஒரு பெட்டியில் வைத்து மற்றவர்கள் (குறிப்பாக, காவல் துறை) பார்க்கும்படியாக ஒரு மரத்தில் கட்டித் தொங்க விடுகிறான். பெண்களைக் கொல்லும்போது அவர்களின் தலையில்லாத உடலைக் காட்சிப் பொருளாக வைக்கும் அவன், ஆணைக் கொல்லும்போது உடலில்லாத தலையைக் காட்சிப் பொருளாக வைக்கிறான். பெண்ணுடலைப் போல ஆணுடல் அவனுக்கு அச்சத்தையோ தன்மான இழப்புணர்வையோ தரவில்லை என்பதாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆணின் தலை அவனை வெறுப்படையச் செய்கிறது. பெண்ணின் உடலைப் போல ஆணின் தலையை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற வேட்கையை அவனுடைய நனவிலி மனம் வைத்திருக்கிறது.

கொல்லப்படும் பெண்களின் உடல்களை வீசியெறிந்துவிட்டுத் தலைகளைச் சேகரித்து வைக்கும் அங்குலி மாலாவைப் பிடிக்க, பார்வையில்லாத நாயகனுக்குத் துணையாக இருக்கும் முன்னாள் பெண் காவல் அதிகாரி (நித்யா மேனன்) செயல்படாத உடலுடன் வீல் சேரில் வலம் வருபவள். அவளுக்குத் தலை மட்டுமே செயல்படுகிறது. அந்தத் தலைதான் அவனைக் கண்டுபிடிக்கிறது. ஏதோ ஒரு வகையில் குறைபாடு உள்ளவர்களையே மிஷ்கின் தன் படங்களில் பாத்திரங்களாக்குகிறார். பார்வையற்றவர், உடலுறுப்புகள் செயல்படாத பெண், வக்கிர மனப் பிறழ்வு கொண்ட கொலைகாரன் என குறைபாடுகளைக் கொண்டவர்களின் ஆளுமைகளை மோதவிட்டு திரைக்கதையைச் சுவாரஸ்யப்படுத்தும் உத்தியைக் கலையாக மாற்றுகிறார்.

வெகுசனப் பார்வையாள மனத்தைச் சற்று விலக்கிவிட்டுப் பார்த்தால் குறைபாடு இல்லாதவர்கள் என்று யாருமே கிடையாது. உலகில் எல்லாருமே சைக்கோதான். உளப்பாதிப்பின் விகிதாச்சார வேறுபாடுகளைக் கொண்டு உளவியல் மனிதர்களை வகைப்படுத்துகிறது. அவ்வளவுதான். அங்குலி மாலாவுக்கு இரண்டு விதமான உலகங்கள் இருக்கின்றன. ஒரு உலகில் உற்றுப் பார்த்தாலும் குறை கண்டுபிடிக்க முடியாத சாமானியனாக நடமாடுகிறான். இன்னொரு உலகம் பார்ப்பவர்களைக் குலை நடுங்கச் செய்யும் வகையில் சிதறும் குருதி, துண்டாகி விழும் தலை, துவண்டு அடங்கும் உடல் என்று அதிபயங்கரமானது. பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் இவ்வாறான இரண்டு உலகங்கள் இருப்பதை உளவியல் உணர்த்துகிறது. அவற்றின் பெரும்பாலான உணர்வுகளும் எண்ணங்களும் செயல்வடிவம் பெறாமல் மனத்தளவில் படிந்து கிடக்கலாம்; நனவு மனத்தின் கவனத்துக்கு வராமல் நனவிலி மனத்திலேயே புதைந்து கிடக்கலாம்.

படத்தில் வரும் உளவியல் மருத்துவர், ‘சைக்கோ’ எனும் சொல்லுக்கான மாதிரிகளாகச் சிலரைப் பட்டியலிடுகிறார். அவர்களைத் தாண்டி அந்தப் பட்டியல் நீளமானது. இன்னும் சொல்லப் போனால் அது எல்லாரையும் அடக்கியதுதான். ‘உளக்குறை இல்லாதவர்கள் (normal) என்று யாரும் கிடையாது. அப்படி யாராவது இருந்தால் என்னிடம் அழைத்து வாருங்கள்; அவர்களை நான் குணப்படுத்துகிறேன்’ என்றார் கார்ல் யுங். உளக்குறைபாடு என்பதே இயல்பானது. மரணம் சில நேரங்களில் உளக்குறைகளை வெளிக்காட்டும் தருணங்கள் ரசனைக்குரியவை. சில நொடிகளில் நெருங்கப் போகும் மரணத்தை ஏ.எம்.ராஜா பாடலுடன் எதிர்கொள்ளும் காவல் அதிகாரி, மடோனா படத்துக்கு முத்தமிட்டுவிட்டுச் செத்துப் போகும் கணினி நிபுணன் போன்றவர்களால்தான் வரலாறு அதிசுவாரஸ்யமானதாய் இருக்கிறது.

ஓவியம், நாடகம் போன்ற துறைகளில் நவீன எனும் அடைமொழி வெறுமனே தொழில்நுட்பம் நவீனப்பட்டதைக் குறிப்பதல்ல. அக்கலைகளின் உள்ளடக்கம், வெளிப்பாட்டு வடிவம் போன்றவற்றைக் கொண்டு குறிக்கப்படுவது. சினிமாவைப் பொறுத்தவரை நவீன சினிமா என்று தமிழில் ஒரு வகைப்பாட்டைச் சொல்ல இன்னமும் தயங்க வேண்டியிருக்கிறது. சினிமா என்பது கோடிகள் புரளும் பெரும் வர்த்தகம் என்பதும் அதற்கு ஒரு காரணமாகிறது. சினிமாவில் படைப்பாளிகளுக்கான சுதந்திரம் என்பது நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இதையும் தாண்டி நவீன தன்மைகளுடனான படங்கள் அவ்வப்போது சாத்தியப்படுகின்றன. சைக்கோவும் அப்படியானதுதான். மரபு சினிமாக்களில் எதிர்பார்க்கப்படும் ‘லாஜிக்’ என்பதெல்லாம் சைக்கோ போன்ற படங்களுக்குத் தேவையில்லை. ஆளில்லாத ரயில்வே ஸ்டேஷன், கண்காணிப்பு கேமிரா இல்லாத பொது இடங்கள், கார் ஓட்டும் பார்வையில்லாத நாயகன். இதெல்லாம் இப்படியான படத்துக்கு உறுத்தல்கள் இல்லை.

இசையும் ஒளியும் இந்தப் படத்தின் இருபெரும் அற்புதங்கள். படத்திற்கென தனித்ததொரு தன்மையை (flavor) அளிப்பதில் இவையிரண்டும் போட்டி போடுகின்றன. குறிப்பாக, ‘நீங்க முடியுமா’ பாடலில் ஆளரவமற்ற நீண்ட சாலையில் பார்வையாளர்களும் கொலைகாரனைத் தேடி காரில் மிதந்து செல்வது போன்ற உணர்வுப் படிமங்களை உருவாக்கி இருப்பதெல்லாம் திரை அழகியலின் உச்சம். இளையராஜாவின் இசையும், தன்வீர் மீரின் ஒளிப்பதிவும் உலகத் தரமானவை. படம் முழுக்க வக்கிரமும் உக்கிரமும் கொண்டு பெண்களைக் கொன்றழிக்கும் சைக்கோ, படம் முடியும் காட்சியில் மலை உச்சியிலிருந்து தாயின் மடியைத் தேடிக் கீழே பாயும்போது ஒலிக்கும் பாடல் எதிர்பாராமல் சிலிர்க்க வைக்கும் pleasure.

அடர்த்தியான நிறமும், சரியான அளவு வெளிச்சமும், பெரிய சத்தத்துடன் திறந்து மூடும் கதவுகளுமாக அந்தக் கொலைக்கள வடிவமைப்பை சிற்பம் போல செதுக்கியிருக்கிறார்கள். இரவுக் காட்சிகள், ஆள் நடமாட்டமில்லாத நகரப் பகுதிகள், கார் பார்க்கிங் காட்சி போன்ற வழக்கமான மிஷ்கின் பட ‘கிளிஷேக்கள்’ இதிலும் உண்டு. (மஞ்சள் சேலை கட்டிய பெண்ணின் நடனம் இல்லை).

பாலு மகேந்திராவுக்குப் பின்னர், கண்களைப் பதம் பார்க்காத காட்சியமைப்பை மிஷ்கின் படங்களில் மட்டுமே காண முடிகிறது. வேகமாய் நகரும் கேமிரா, யோசிப்பதற்கும் உணர்வதற்கும் நொடிப் பொழுதையும் பார்வையாளனுக்கு வழங்காமல் அடுத்தடுத்து ஓடிச் செல்லும் ஷாட்கள் இப்படியெல்லாம் எதுவும் இல்லாமல், நிதானமாய் நகரும் காட்சிகள் நன்றாயிருக்கின்றன. படமெங்கும் விரவியிருக்கும் இருளையும் மவுனத்தையும் அவைதான் அழகுபடுத்துகின்றன. பிகாஸோ சொல்வார்: ‘என்னுடைய ஓவியங்கள் கண்களால் பார்க்கப்பட வேண்டியவை அல்ல; தலையால் பார்க்கப்பட வேண்டியவை’. மிஷ்கினும் தன் படங்களில் அதைத்தான் முயன்று பார்க்கிறார்.

- கணேஷ் சுப்ரமணி

Pin It