செக்காவ் எழுதிய 'வான்கா' சிறுகதையை அறியாத இலக்கிய வாசகர் யார் இருப்பார்? அச்சிறுகதை என்னுள் விதைத்த சோகத்தின் முள்ளை இதுவரை என்னால் பிடுங்கி எறிய முடியவில்லை. அந்த முள்ளின் மீது சம்மட்டியால் ஓர் அடி அடித்து, அதை இன்னும் ஆழமாக மனதிற்குள் பாய்ச்சிவிட்டுச் சென்றுள்ளது, ஜெயராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள மலையாளப் படம் 'Ottaal'.
எழுத்து ஊடகத்தை விட, காட்சி ஊடகத்திற்கு இருக்கும் கூடுதல் வாய்ப்புகளை மிக அழகாகக் கையாண்டுள்ளார், இயக்குநர் ஜெயராஜ். செக்காவின் சிறுகதையினை கேரளத் தன்மையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றுள்ளார்.
சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது, சிறந்த சுற்றுச்சூழல் படத்திற்கான தேசிய விருது, சிறந்த படத்திற்கான கேரள மாநில விருது ஆகியவற்றை இப்படம் கையகப்படுத்தியதில் யாதொரு ஆச்சரியமும் இல்லை.
அன்றாட வாழ்க்கையில் கெட்டி தட்டுப்போன நம் மனதை அசைக்கும், நம் மனதோடு உறவாடும் ஒரு காட்சி இருந்தாலே போதும், அந்த இலக்கியத்தையோ, அந்தத் திரைப்படத்தையோ நாம் கொண்டாடுவதற்கு. அத்தகைய காட்சிகளை படம் முழுவதும் விரவித் தந்துள்ளார் இயக்குநர் ஜெயராஜ்.
படத்தின் கதை என்ன என்பதை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்ததுதான். அதை எப்படி காட்சிப்படுத்தி இருக்கிறார் என்பதுதான் இங்கே மிக முக்கியம். உலகப் புகழ் பெற்ற ஒரு சிறுகதை எனும்போது, அதை திரைக்கதையாக்குவதில் உள்ள முதல் சிக்கலே, அச்சிறுகதையின் வாசகர்களைத் திருப்திபடுத்துவதுதான். அதில் வெற்றி பெற்றிருக்கிறார் ஜெயராஜ்.
அடுத்த சிக்கல், அச்சிறுகதையின் கதைக்களம் நிகழ்வது அய்ரோப்பிய சூழலில். அதை அப்படியே எடுத்தால், இங்கிருக்கும் ரசிகர்களுக்கு நெருக்கமாக இராது. கதையின் மையச் சரடை மட்டும் எடுத்துக் கொண்டு, இந்திய கதாபாத்திரங்கள், இந்திய வாழ்க்கைச் சூழல், இந்தியத் தன்மையிலான காட்சிகள் அமைக்க வேண்டும். அப்படி முயற்சிக்கும்போது, கதையின் ஜீவன் கொஞ்சமும் கெட்டுவிடக் கூடாது. அதற்காக ஜெயராஜ் மெனக்கெட்டு இருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.
வெள்ளை வெளேர் என்று இருக்கும் வடக்கத்தி நடிகைகளை அழைத்துவந்து, கருப்பு மை பூசி, தலித் என்று காட்டும் பம்மாத்துத்தனம் எதையும் ஜெயராஜ் செய்யவில்லை. நிஜத்தில் வாத்து மேய்க்கும் ஒரு தாத்தாவையும், பேரனையும்தான் இப்படத்தில் நடிக்க வைத்தேன் என்று ஜெயராஜ் சொன்னால், நாம் அப்படியே நம்பி விடுவோம். அவர் செய்ததும் ஏறக்குறைய அதைத்தான். திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான, படகில் வாத்து மேய்க்கும் தாத்தா வேடத்திற்கு வயதான நிஜ மீனவர் ஒருவரையே நடிக்க வைத்திருக்கிறார். அவரது பேரனாக நடித்திருக்கும் சிறுவனும், சிவந்த தோலோடு, திருத்தமான முகத்தோடு விளம்பரப் படங்களில் நடிக்கும் சிறுவர்கள் போலானவன் அல்ல; வாடி வதங்கிய, எலும்பு தட்டிய உடலுள்ள ஒரு சராசரி இந்தியச் சிறுவனின் பிரதிபலிப்புதான் அவன்.
அந்த தாத்தாவோடும், பேரனோடும், அவர்கள் வாழும் உப்பங்கழியிலேயே நம்மையும் ஒரு 80 நிமிடங்கள் வாழ வைக்கிறார்கள் இயக்குநர் ஜெயராஜும், ஒளிப்பதிவாளர் ராதாகிருஷ்ணனும், இசையமைப்பாளர் நாராயண பணிக்கரும். படம் முழுவதும் இழையோடிக் கொண்டிக்கும் புல்லாங்குழல் இசை, படம் முடிந்த பின்னும் நம் மனதில் சோக அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கிறது.
சிறுகதையில் இருக்கும் ஒரு கவித்துவ முடிவு இப்படத்தில் இல்லை என்றாலும், சிறுகதை படித்து அறியாத சினிமா ரசிகர்களுக்கு அது ஒன்றும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்றே தோன்றுகிறது.
நல்லதொரு இலக்கியத்தைப் படிக்கும்போது எல்லாம், நாம் விரும்புவது, அதைத் திரைப்படமாக எடுக்க மகேந்திரன், ஜெயராஜ் போன்ற இயக்குநர்கள் இருந்து, அந்த இலக்கியம் ஒரு திரைப்படமாக வெகுமக்கள் மத்தியில் சென்று சேர வேண்டும் என்பதும்தான். ஆனால், நமக்கு வாய்ப்பது என்னவோ, 'பரதேசி' பாலாக்கள்தான்.
- கீற்று நந்தன்