ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் "கடவுளுக்கு நிகராக அதிகாரம் படைத்தவர்களிடம் நீங்கள் மாட்டிக்கொண்டால் என்ன ஆவீர்கள்?" அதுதான் கதை. ஆந்தராவில் வேலை பார்க்கும் தமிழக இளைஞர்கள் நான்கு பேர். விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு அவர்கள் மேல் பொய் வழக்கு போட முயற்சி செய்கிறார்கள். போலீஸ்காரர்களின் முயற்சி தோல்வியில் முடிகிறது. கோர்ட்டில் சரணடைய வரும் ஒருவரை இவர்களின் மூலம் சென்னைக்கு அழைத்து வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி.
அழைத்து வந்தவரை விசாரணை என்ற பெயரில் கொலை செய்துவிட்டு தற்கொலையாக மாற்றுகிறார்கள். தங்களுடைய பிளான் இவர்களுக்கு தெரிந்து விட்டது என்று இவர்களையும் என்கவுண்டர் என்ற பெயரில் கொலை செய்து, பிடிபடாமல் இருக்கும் வங்கி கொள்ளையர்கள் சுட்டுக்கொலை என்று வழக்கை முடித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். என்கவுண்டர் நடக்கிறதா இல்லையா என்பதுதான் கிளைமாக்ஸ்.
2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணித்து வந்த சமயத்தில் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்சா திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். டெல்லி செல்வதற்காக சாதிக் பாட்ஷா டிக்கெட் வாங்கி வைத்திருந்ததாகவும், மேலும் அவர் அப்ரூவராக திட்டமிட்டிருந்தார் என்றும் தகவல் பரவியது. வங்கிகளில் கொள்ளையடித்தாக சந்தேகப்பட்டு வட மாநிலங்களைச் சேர்ந்த 5 பேரை வேளச்சேரியில் ஒரு வீட்டில் போலீஸார் மிகவும் திட்டமிட்டு என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்படுபவர்களின் மீது பொய் வழக்கு போட்டு துன்புறுத்துகிறது காவல் துறை. இதற்கு உதரணமாக ராஜீவ்காந்தி கொலை வழக்கை சொல்லலாம்.
கொள்ளை அடிப்பதே தியாகம்; நீதிமன்றங்கள் அரச மரத்தடி சொம்புகள்; ஊடகங்களோ மாமாக்கள்; அதிகார வர்க்கம்தான் கமிஷன் ஏஜெண்டு; போலீசு துறை ஏவல் நாய்; சர்வாதிகாரமே நிர்வாகத் திறன்; சதிச்செயலே சாணக்கியம் என்பதுதான் இன்றைய அரசியல். போர் என்பது ரத்தம் சிந்தும் அரசியல். அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர் என்பார்கள். இந்தப் படம் சமகால அரசியலைப் பேசுகிறது. இப்படி ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
வாழ்த்துக்கள் வெற்றிமாறன்.
- தங்க.சத்தியமூர்த்தி