மகாபாரதத்தில் எங்கெல்லாம் இக்கட்டான நிலை வருகிறதோ அங்கெல்லாம் வியாசர் வருவார். அதேபோல் காஞ்சி மடத்திற்கு இக்கட்டான நிலை வருகிறபோது "கமலாலயம்" வந்து குறுக்கே நின்று கொள்கிறது. மடத்தை கேள்வி கேட்டால் மடையர்கள் பதில் சொல்கிறார்கள். இந்துத்துவத்தை எதிர்ப்பதற்கு காரணம் இந்துத்துவமாக இருப்பதால் அல்ல; ஆதிக்கம் திணிக்கப்படுவதால்... என் மொழி "தமிழ்" என்ற உணர்ச்சியால் அல்ல, தமிழன் என்ற இனத்தின் மீது சமஸ்கிருத ஆதிக்கம் திணிக்கப்படுவதால். சாதியை எதிர்ப்பதற்கு காரணம், எனக்கு பிடிக்காத சாதி / நான் பிறக்காத சாதி என்பதால் அல்ல; ஆதிக்கம் திணிக்கப்படுவதால்.

vijayendran 247தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். ஆண்டாளைப் பற்றி ஆய்வு கட்டுரை எழுதக் கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்ன?

தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தபோது தியானத்தில் இருந்தார் என்றால், ஒரு வாதத்திற்க்காக சொல்கிறேன், வைரமுத்து ஆண்டாளை பற்றி எழுதும்போது போதையில் இருந்தார் என்று சொன்னால் ஒப்புக்கொள்வார்களா?

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை இயற்றிய திரு.மனோன்மணியம் சுந்தரம், "ஆரியம் போல் தமிழ் உலக வழக்கழிந்து சிதையவில்லை" என்று கூறும் வரிகள் மட்டும் "நீராரும் கடலுடுத்த" பாடலில் வெட்டப்பட்டது. ஒரு மொழியின் பெருமையைப் பேசும் பொழுது மற்றுமொரு மொழியை சிறுமைபடுத்த கூடாது என்று கருதிய அன்றைய முதல்வர் கருணாநிதி அதை நீக்கினார். ஐந்தாயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் பேசிய மொழி "தமிழ்" என்று விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் இந்து-இந்தியா-இந்துஸ்தான் என்று முழங்குகிறார்கள். இந்தியர்கள் என்ற தனி அடையாளம் இல்லை. பல்வேறு தேசிய இனங்களின் ஒன்றியம்தான் இந்தியா. இரு நூறு வருடங்களுக்கு முன்பு "இந்து" என்ற சொல்லே கிடையாது. அது விக்டோரியா உருவாக்கிய சொல். சிந்து என்பதைத்தான் இந்து என்று ஆங்கிலேயர்கள் அழைத்தார்கள் என்கிறார்கள் அறிஞர்கள். பாகிஸ்தானில் "சிந்து நதி" இருக்கிறது என்ற காரணத்தால், தேசிய கீதத்தில் இருக்கும் "சிந்து" என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் வரை சென்று தோற்றவர்கள் மத வெறியர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

'வரலாற்றில் இந்தியா என்ற நாடு இருந்ததில்லை. எதிர்காலத்தில் இந்தியா என்ற நாடு இருக்கப்போவதுமில்லை' என்றார் பெரியார். அதற்கான எல்லா வழிகளையும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவர் குறள் எழுதிய காலத்தில் இந்தியாவும் கிடையாது, இந்து மதமும் கிடையாது. தமிழ் இனத்திற்க்கான அரசியல் நூல் திருக்குறள். தமிழ் இனத்தின் தலைமைப் புலவர் திருவள்ளுவர். இவரிடத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்பார்களா?

விருந்துக்கு அழைத்து மூக்கறுக்கும் வேலையை நன்றாக கற்று வைத்து இருக்கிறார்கள். பசுவைக் காப்பதற்கு தனிச் சட்டம் இருக்கும் இந்த நாட்டில், தமிழையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதித்தவர்களை தண்டிப்பதற்கு தனிச் சட்டம் இல்லை.

சைபர் கணவாய் வழியாக வந்த இவர்கள்தான் தமிழ்-சமஸ்கிருதம்-அகராதி புத்தகம் எழுதுகிறார்கள். தமிழை எப்படியும் திரித்து எழுதி அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். நெருப்பை கரையான் அழிக்க முடியுமா என்ன?

எவருடைய மொழியில் உன்னால் ஆள முடியவில்லையோ, அவர்களை ஆள உனக்கு உரிமையில்லை என்கிறார் லெனின். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைக் கூட எதிர்க்கிறார்கள். காரணம் கேட்டால் புனிதம் கெட்டுப் போகும் என்கிறார்கள். அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பதை மாற்றி அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் "மடம்" என்று சொன்னால் மிகையாகாது.

'இந்தியாவில் என்றுமே அரசியல் போராட்டங்கள் நடைபெற்றதே இல்லை. நடப்பவை யாவும் ஆரிய-திராவிட இனப்போராட்டம்' என்றார் பெரியார். அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது.

- தங்க.சத்தியமூர்த்தி

Pin It