ramki and sindhuஎப்போது இந்த பாடலைக் கேட்டாலும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். படமே உற்சாக பான போத்தல் தான். ஆனாலும்... இந்த பாடலில் இருக்கும் வசீகரம்.. வனப்பு... இசை... வரி.... சூழல் என்று மனதுக்குள் பெண் வேஷமிட்டு லாரி ஓடும். நாயகன் ராம்கி... நாயகி சிந்து. நாயகியை கடத்திய நாயகன்... தான்செல்லும் வேலைக்கான பயணத்தில்... தற்சமயமாய் அமைந்த இளைப்பாறல் தான் தண்ணி லாரிக்குள் நிகழும் இந்த பாடல்.

"டான் டாட்டான் டான் டான் டாட்டான் டான்" என்று இசை ஆரம்பிக்கும் போதே "மனோஜ் கியான்" எனும் இரட்டை சிறகுகள் காதுக்குள் பூத்து விடும்.

தலைமறைவாக பயணம் செய்ய வேண்டிய சூழல். உள்ளே அவளும் அவனும். லாரியில் இருக்கும் ரேடியோவில் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது. அதற்கு தகுந்தாற் போல எதிரும் புதிருமாக இருந்தாலும்... நேரம் காலம் கூடி வருகையில்.. பஞ்சும் நெருப்பும் பற்றும் தோரணை உள்ளே இசையோடு இசையாக வரியோடு வரியாக. நிறை நேர் காணும் சித்திர அசைவு நமக்கு.

ஒரு பாதை... ஒரு பக்கத்தில் லாரிக்குள் இவர்கள். அதே திசையில் சென்று கொண்டிருக்கும் ரயிலில் அதே வேலைக்காக சென்று கொண்டிருக்கும் அருண் பாண்டியன். பாட்டினூடாகவே கதையும் நகர்ந்து கொண்டிருக்கும் கனக்கச்சிதம் பாராட்டப்பட வேண்டியது. சிறு பாலங்களில் ரயில் போகிறது என்றால்.. அதன் அடியே இருக்கும் சாலையில் லாரி வந்து கொண்டிருக்கும். கதையின் போக்கும் உள்ளே நிகழ்ந்து கொண்டிருக்கும் காதலின் தாக்கமும்... ரசிகனுக்கு ராட்சஷ கோப்பையில் திராட்சையை திரட்டி தந்தது போல.

"மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன்
மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன்"

அமர்ந்தபடியே அவன் அவளருகே நெருங்க.... நகர... அவளோ ம்ஹும் என்பது போல தள்ளி தள்ளி நகர... ஒரு தகர இதயத்தில்.... நடக்கும் காதல் இயக்கம்.. சுகர் போட்டு கரும்பு ஜூஸ் கொடுக்கும்.

"பூங்குயில் தினம் பாடுது
புது துணையினை தேடுது
பூங்குயில் தினம் பாடுது
புது துணையினை தேடுது
பதில் குரல் தரும் குயில் வரும் வரை

மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன்
மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயில் பாடும் குரல் வருமா பார்த்தேன்"

ராம்கியும் சிந்துவும் பேச்சற்று மௌன கீதம் வாசிக்கும் சூழல். அதில் அவர்கள் கண்கள் பேசி பாடி ஆடி விளையாடும். அவளுள் இருக்கும் இறுக்கம் தளர்ந்து மெல்ல தன்னை சம்மதிக்கும் காதல் விளையாட்டு அந்த லாரி வயிற்றுக்குள் நிகழ்வது... காதல் கரு கொள்ளும் புணர்ச்சி என்றே தோன்றும். மலையோர வளைவுகளில் நகர்ந்து கொண்டே இருக்கும் லாரி பெட்டிக்குள் காதலும் மெல்ல மெல்ல ஒருவர் மீது ஒருவருக்கு நகர்ந்து கொண்டிருக்கும். நகரும் நந்தவனம் போல... ஒருவர் பார்வையில் ஒருவர் மிதக்க... ஒருவர் மிதப்பில் ஒருவர் தவிக்க...

"கூடு விட்டு கூடு பாயும் ஆட்டம்
காதல் கூடி பேசி சேர்ந்து போடும் தோட்டம்
கூடு விட்டு கூடு பாயும் ஆட்டம்
காதல் கூடி பேசி சேர்ந்து போடும் தோட்டம்"

ஒரு கட்டத்தில் லாரி வயிற்றில் ஒரு மூலையில் நிர்கதியாக..." போச்சு என்னமோ பண்ண போறான்" என்பதாக நடுக்கத்தோடு நிற்க... அவளை நேர்கொண்ட குறுக்கு நெடுக்கு பார்வையோடு நெருங்கும் நாயகன்.... அவள் காலில் ஊர்ந்து கொண்டிருக்கும் கரப்பானை படக்கென பிடித்து மேலே திறந்திருக்கும் வட்ட வழியில் வீசி எரிந்து விட்டு... "நான் ஹீரோமா" என்பதாக ஒரு பார்வை பார்ப்பான். சிறு புன்னகை கன்னத்தில் படரும் அவளுக்கு பாதி இதய திறந்த குளிர்ச்சி... இன்னொரு இதய சூட்டுக்கு காத்திருக்க துவங்கும்.

"கூட்டுக்குள்ளே தவிக்குது
கூடி வாழ துடிக்குது
கூட்டுக்குள்ளே தவிக்குது
கூடி வாழ துடிக்குது
பதில் குரல் தரும் குயில் வரும் வரை"

"கூட்டுக்குள்ளே தவிக்குது கூடி வாழ துடிக்குது..." காதலும் அதன் வழியே காமம்... காமமும் அதன் மொழியில் காதலும்.. என்று அவர்களின் உடல் கூட்டில் உள்ள சூட்டை அருகாமையில்.. நெருங்கி விலகி... நெகிழ்ந்து நிகழ்ந்து... பிறழ்ந்து பிரிந்து... அறிந்து கரைந்து... என்று கண்ணுக்குள் கண்கள் ஊடுருவி முகத்தில் முகம் பேரருவி....

இடையே போடும் ஒரு பிரேக்கில் எதிர் எதிரே தள்ளி தள்ளி சரிந்து படுத்து ஒருவரை ஒருவர் தகிக்க பார்த்துக் கொண்டிருக்கும் இடைவெளியை அடித்து நொறுக்கி புரண்டு இணைக்க செய்து விடும்... விசையின் திக்கை நிறுத்தி மாற்றிய இசையின் சித்து. லாரியின் கெத்து.

திக்கென வண்டி எங்கோ நிற்கும். என்ன ஏதென்று அதிர்ந்த முகத்தில்... மேலிருந்து கொட்டும் பேரரருவி என தண்ணி லாரி தண்ணீர் பிடிக்கிறது. அது பம்ப் ஸ்டேஷன்.

"மாட்னயா ஹீரோ" என்பது போல ஒரு பார்வை அவளிடம். "அய்யயோ.." என்பது போல நெற்றி சுருக்கிய தவிப்பு அவனிடம். நமக்கும் கூட அய்யயோ என்னாகும்... லாரி நிறைஞ்சிட்டா காரியம் கெட்ருமே... பதைபதைப்பு.

ஆனால் திரைக்கதை செய்தவன்... தண்ணீரை பாதியிலேயே நிறுத்துகிறான். அப்பாடா என்று நமக்கு பெருமூச்சு. ராம்கி முகத்தில்.. "இன்னும் பாட்டு இருக்குடி.. பேரழகி" என்பது போல நீர் துளி தெளித்த திவாலை.

"மறுபடியும் இவன் காதலோடு நெருங்குவானே... நிதானம் இழக்காமல் இருக்க என்ன செய்ய..?" என்பதாக அவள் விழி சிணுங்க...

"பூட்டி வைத்த பூவும் வாசம் வீசும்
நெஞ்சை பூட்டி வைத்த போதும் கண்கள் பேசும்
பூட்டி வைத்த பூவும் வாசம் வீசும்
நெஞ்சை பூட்டி வைத்த போதும் கண்கள் பேசும்"

கழுத்து வரை நிரம்பி விட்ட நீருக்குள் நிற்க முடியாமல் அவள் தவிக்க.. கரம் பற்றி ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக நின்று கால்கள் சுழலும் காட்சியில்... காதல் சுழற்சி அங்கே அவர்களை கொப்பளிக்க ஆரம்பிக்கிறது. செல்ல கோபங்களோடு கள்ளூரும் பார்வையில் அவள் நகர...ஒற்றைப் பனைமர தவிப்போடு அவன் உருக.. துருவங்கள் அங்கே எங்கு திரும்பினும் அவர்களின் உருவங்களாகவே. நீரும் நெருப்புமாக நீருக்குள் யாகம் செய்யும் இருவருமே அந்த படத்தின் அத்தனை நேர இறுக்கத்தை நொடியில் போக்கி நொறுங்க தின்ன... காதலை சமைக்கிறார்கள்.

இடையே வளைவுகள் கொண்ட மலை சாலையில் பயணிக்கும் ஷாட்டுகளில்... இசைக்கு தகுந்த மாதிரி உடலை குலுக்கிக் கொண்டே வந்து கொண்டிருக்கும் லாரி நம்மையும் தாலாட்ட ஆரம்பித்து விடுகிறது. நாமும் அந்த லாரியில் தொற்றிக் கொண்டால் என்ன என்று தோன்ற வைத்து விடுகிறது. வளைவுகளில் நெளியாமல் நகரும் லாரியின் வனப்பு உள்ளே ஒரு காதல் ஜோடியின் இணைப்பு என்று சொக்க வைக்கும் காட்சி அமைப்பு. இடையே லாரிக்கு சமமாக பக்கவாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் ரயில் என்று ஒரே ஷாட்டில் நமக்கு கதையையும் சொல்லிக் கொண்டே செல்லும் படத்தின் டீம்.. பக்காவான பலே டீம்.

"கண்கள் தந்த சீதனம்
காதல் என்னும் மோகனம்
கண்கள் தந்த சீதனம்
காதல் என்னும் மோகனம்
பதில் குரல் தரும் குயில் இவள் என"

அவளுக்கு நீர் பட்டு அவன் நிழல் பட்டு குளிர் கூடி விட்டது. அவள் கைகளை எடுத்து கன்னத்தோடு வைத்து காரியமாய் நாயகன் காய் நகர்த்துகிறான். ஒப்புக் கொண்ட பின்னும் உள்ளே உதறும் ஒன்றை அடக்குவது எப்படி. அவன் தன் கோட்டை கழற்றுகிறான். அவள் பரிதவிக்கிறாள். அல்லது அது போல பதில் நடிப்பது. நாயகன் நெருங்கி அந்த கோட்டை அவள் தோளில் சாற்றுகிறான். சாந்தம் அங்கே அவளிடம் தந்தம் முளைக்க செய்யும் கண்களை கொள்கிறது. ஒரு வித சம்மத நிலை அது. இனி மன்மத கலையும் அது. அவளும் அவன் கைகளை வாங்கி கன்னத்தில் வைத்துக் கொள்ள... ஒரு பாடலில்... ஒரு நாடகம் அரங்கேறி காதலால் ஆன நீராக மிதக்க ஆரம்பிக்கிறது.

வண்டியை விட்டு இறங்கும் நேரம் வந்து விட்டது. பாடலும் முடிகின்ற தருணம்.. அவன் பாதையில் அவள் கால்கள் பயணிக்க துவங்க... கதைக்கு தேவையான ஒரு காதல் அத்தியாயம் ஒரு பாடலில் சுருங்க நெருங்க சொன்ன விதத்தில்... இணைத்த கைகள் படத்தின் வெற்றி அங்கு இன்னொரு முறை உறுதி செய்யப்படுகிறது. இதழ்கள் முணுமுணுக்காமலே மனதுக்குள் லாரி அசையும் சத்தத்தில்... பாடல் வரிகள் மீண்டும்.... இதோ...

"மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயிலோடு உறவாடி பார்த்தேன்
மலையோரம் குயில் கூவ கேட்டேன்
துணை குயிலோடு உறவாடி பார்த்தேன்"

- கவிஜி

Pin It