தஞ்சைத் தரணி காவிரியின் கருணையால் நெற்களஞ்சியமாக மட்டுமல்ல, கலைகளின் தாய்பூமியாகவும் திகழ்ந்தது. செவ்விசையாம் கர்நாடக இசை, நாட்டியம், சிற்பம்-ஓவியம் என்றும், இன்னும் பல கலைகளுக்கும் சுரங்கமாக விளங்கியது தஞ்சை. அதனைச் சார்ந்த மயிலாடுதுறையில் 1910 ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி - மணியத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் தமிழகத்தின் முதல் 'சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்பட்ட எம்.கே.தியாகராஜ பாகவதர். சின்னஞ்சிறுவனாக இருந்தபோதே தியாகராஜனுக்குப் பாடுவதில் அத்தனை ஆசை. எப்போதும் பாடிக்கொண்டேயிருக்கும் தனது மகனை நினைத்து முதலில் கவலைப்பட்டார் தியாகராஜனின் தந்தை.

mkt_250வறுமையால் அவர்கள் குடும்பம் மயிலாடுதுறையிலிருந்து தஞ்சை நகருக்கும், பிறகு திருச்சிக்கும் குடி பெயர்ந்தது. படிப்பில் நட்டமின்றி சதா கலை ஆர்வத்துடனேயே காலம் கழித்தான் சிறுவன் தியாகராஜன். அன்று அவனது மனம் கவர்ந்த பாடகர் நாடக நடிகர் எஸ்.ஜி.கிட்டப்பா. அவரது பாடல்களை பிசகின்றிப் பாடுவதில் அப்போதே தியாகராஜனின் திறமை தெரிந்தது. தேவாரம், திருவாசகம் போன்றவைகளையும் ராகம்போட்டுப் பாடுவது தியாகராஜனின் வழக்கமாயிருந்தது. பள்ளிக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு  திருச்சி உய்யகொண்டான் ஆற்றுக்குப்போய் தண்ணீரில் நின்றுகொண்டு பாட ஆரம்பித்துவிடுவான். தந்தை மனம் கலங்கினார். கண்டிப்புகள் அரங்கேறின. கலைத் தாகம் மிகக்கொண்ட தியாகராஜன் ஒரு முடிவெடுத்தான். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறினான்.

திகைத்துப்போன பெற்றோர் ஊரெல்லாம் தேடினார்கள். கடைசியில் தியாகராஜன் ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருப்பதை அறிந்த தந்தைக்கு மகிழ்ச்சி. அங்கே ஓடினார்.கடப்பாவில் தியாகராஜனின் கணீர்க்குரலுக்கு மக்கள் மயங்கிப்போயிருந்ததைக் கண்டார் தந்தையார். அதன் பின்னர் தியாகராஜனின் பாடும் ஆசைக்குப் பச்சைக் கொடி அசைத்து ஆமோதித்தார். திருச்சியில் தியாகராஜன் பங்கேற்காத பஜனைக் கச்சேரிகளே இல்லை என்ற நிலை உருவானது. முறைப்படி இசைப் பயிற்சியும் தரப்பட்டது. ஒருநாள் தியாகராஜனின் கம்பீரக் குரலைக் கேட்க நேர்ந்தபோது நடேச அய்யர் தனது நாடகக் கம்பெனியில் தியாகராஜனைத் தந்தையார் அனுமதியோடு பால நடிகனாகச் சேர்த்துக்கொண்டார். அழகிலும், குரலினிமையிலும்,நடிப்பிலும் கொஞ்சகாலத்துக்கு மக்களைத் தன்பால் கட்டிப்போட்டுக் கிறங்கடித்த எம்.கே.தியாகராஜ பாகவதர் என்ற மக்கள் நாயகன் இப்படித்தான் உருவானார்.

பத்தே வயதில் நாடக மேடையில் சிறுதொண்டன் நாடகத்தில் சீறாளனாகவும், ஹரிச்சந்திராவில் லோகிதாசனாகவும் பாடியும் நடித்தும் மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டான் சிறுவன் தியாகராஜன். நாடக நுணுக்கங்களையும் இசையையும் கற்கத்தொடங்கிய தியாகராஜனுக்கு மதுரை பொன்னு ஐயங்கார் என்ற வயலின் வித்துவான் ஆறு ஆண்டுகள் இலவசமாகவே செவ்விசையைக் கற்றுத் தந்தார். திருச்சி கம்மாளத் தெருவில் பொன்னு ஐயங்கார் பிடில் வாசிக்க, அபிநவ நந்திகேஷ்வரர் தட்சிணாமூர்த்திப் பிள்ளை கஞ்சிரா இசைக்க தனது 16 ஆம் வயதில் அமுதினும் இனிய தனது இளம் குரலில் கர்நாடக இசைக்கச்சேரி அரங்கேற்றம் நடந்தது. இந்தக் கச்சேரி 3 மணி நேரம் நீடித்தபோதும் ரசிகர்கள் தியாகராஜனின் இசையில் மயங்கிக்கிடந்தனர் என்றால் மிகையல்ல.

செங்கோட்டையில் தியாகராஜனின் நாடகத்தைப் பார்த்தார் கிட்டப்பா. அவரது அற்புத இசையைக் கேட்டுவிட்டுச் சொன்னார், "உனக்கு பாகவதர் என்ற பட்டம் பொருத்தமானது!". நாடகம், கர்நாடக இசைக் கச்சேரி என்று பல்திறன் காட்டிவந்த தியாகராஜ பாகவதர் தனது நாடகங்களில் இடையிடையே ரசிகர்களை சினிமா பாடல்களைப் பாடிவிடுவார். இது கடும் விமரிசனத்துக்குள்ளானது அந்த நாளில். இத்தனைக்கும் அவர் சினிமாவுக்குள் காலடி வைக்காத 1920-34 காலகட்டத்தில் இப்படிச் செய்தார் பாகவதர். அந்த சினிமா பாடல்கள் அனைத்தும் சுத்தமான கர்நாடக இசையில் அமைந்தவை என்பதுதான் பாகவதருக்குப் பிரியம் ஏற்படக் காரணமாயிருந்தது. காரைக்குடியில் சுப்புலட்சுமியுடன் பாகவதர் நடத்திய பவளக்கொடி நாடகத்தைப் பார்த்த எல்.ஆர்.எம்.லட்சுமண செட்டியாரும், இயக்குநர் கே.சுப்பிரமணியமும் அவர்களின் அபார நடிப்பைக் கண்டு அதனை அப்படியே திரைப்படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டார்கள். 1934 பவளக்கொடி படம் வெளிவந்தது. நாடகத்தை ரசித்ததுபோலவே மக்கள் அலை கடலாகத் திரண்டுவந்து இந்தப் படத்தையும் பெருவெற்றிபெறச் செய்தார்கள். தியாகராஜ பாகவதரின் திரைப் பிரவேசம் இப்படித்தான் நடந்தது.

அன்று சினிமா உலகில் கிட்டப்பா - சுந்தராம்பாள் ஜோடி கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. கர்நாடக சங்கீத உலகிலும் ஒரு டஜன் வித்வான்களின் கொடிதான் உச்சத்திலிருந்தது. இந்த இரண்டையும் தனது சினிமா பிரவேசத்தாலேயே எதிர்கொண்டார் பாகவதர். அதற்கு அவரது தூய இசை ஞானமும், அதற்கும் மேலாக கர்நாடக இசையென்றபோதிலும் தெளிவான தமிழ் சாகித்தியங்களும் அவரது பக்க பலமாக நின்று அவரை ரசிகர்களின் நாயகனாக உயர்த்தியது. பெரும்பாலும் பக்திப் பாடல்கள்தான் அவர் பாடியவை. இருந்தபோதும் கர்நாடக இசையை சினிமாவின் வழியே மக்களின் அருகே கொண்டுசென்றதில் பாகவதர் பங்களிப்பு தனித்துவமானதென்றே சொல்ல வேண்டும். சினிமா சங்கீதத்தை இந்த வகையில் வெகுமக்களுடையதாக முதன்முதலில் மாற்றிய பெருமைக்குரியவர் எம்.கே.டி. பாகவதர்தான்.

கர்நாடக இசையில் மிகச் சிறந்த ஞானம் பெற்றிருந்த பாகவதரின் முதல் படமான பவளக்கொடியில் அவர் பாடிய 'சோம சேகரா' (கரகரப்ரியா ராகம்), கண்ணா கரிய முகில் வண்ணா (பைரவி) ஆகிய பாடல்கள் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. 1936 வெளிவந்த நவீன சாரங்கதாராவைத் தொடர்ந்து 1937 வெளிவந்த சிந்தாமணி படம் ஒரே தியேட்டரில் தொடர்ந்து ஒரு வருடத்துக்குமேல் ஓடிச் சாதனை படைத்தது. இந்தப் படம்தான் பாகவதருக்கு தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது. இந்தப் படத்தில் பாகவதர் பாடிய பாடல்களை மக்கள் சதா முணுமுணுத்தபடி இருந்தார்கள். அவரின் அம்பிகாபதி படம் வெளிவந்தபோது தமிழக சினிமா ரசிகர்களின் வீடுகளை பாகவதரின் புகைப்படங்கள் அலங்கரித்தன. அன்றைய நாளிலேயே நாயக வழிபாடு இப்படித்தான் தொடங்கியது. ரசிகர்களின் சிந்தையில் கடவுளின் மறு அவதாரமாகவே பாகவதர் தோன்றினார். சத்யசீலன் என்ற படத்தை பாகவதரே சொந்தமாகத் தயாரிக்குமளவு உயர்ந்தார். திருநீலகண்டன் படத்தில் அவரது பாடல்கள்நாடக பாணியிலிருந்து மாறி, சிறந்த இசையை வழங்கின.

இரண்டாம் உலகப் போரின்போது பாகவதர் கச்சேரிகள் பல நடத்தி, பெரும் நிதியைத் திரட்டித் தந்தார். பிரிட்டிஷ் அரசு அவரது சேவையைப் பாராட்டி ஒரு கிராமத்தையே அவரின் பெயரில் எழுதித்தர முன்வந்தது. அதனை ஏற்க பாகவதர் மறுத்துவிட்டார். அவர் நடித்த அசோக்குமாரில் இடம்பெற்ற உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ (பைரவி), பூமியில் மானிட ஜென்மம், மனமே நீ ஈசன் நாமத்தை போன்ற பாடல்களைக் கேட்டு தமிழுலகம் கிறங்கி மயங்கியது. சிவகவியில் வதனமே சந்த்ர பிம்பமோ (சிந்து பைரவி) பாடல் ரசிகர்களை போதையில் ஆழ்த்தியது, அம்பா மனம் கனிந்துனது கடைக் கண்பார் (பந்துவராளி) கல்மன ரசிகர்களையும் கனியச் செய்தது, கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே (நாட்டைக்குறிஞ்சி) மனக்கவலை போக்கியது, சொப்பன வாழ்வில் மகிழ்ந்து (விஜயநாகரிபுவன காந்தாரி) பாடல் பக்தியுள்ளங்களை மகிழ்வித்தது.

1944ல் வெளிவந்த அவரது ஹரிதாஸ் தொடர்ந்து மூன்று தீபாவளிகளைக் கண்ட மெகா வெற்றிப்படம். இதுவரையில் முறியடிக்கப்படாத சாதனை இது. அதுமட்டுமல்ல, முதன்முதலில் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு இந்தப்படத்தில் நடித்த பாகவதர் அப்படிப்பட்ட பெருமையையும் துவக்கி வைத்தார். பல இசை மேதைகளையே அசரவைத்தது இந்தப் படத்தில் பாகவதர் பாடிய மன்மதலீலையை வென்றார் உண்டோ (சாருகேசி) பாடல். ஹரிதாஸ் படம் பாகவதரை புகழின் உச்சிக்கே ஏற்றியது. அவருக்கு இணையான நட்சத்திரம் வேறொருவர் இல்லவேயில்லை என்ற நிலை ஏற்பட்டது. சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டன், சிவகவி ஆகிய படங்கள் 50 வாரங்களைக் கடந்து சாதனை படைத்தன. பவளக்கொடி, நவீன சாரங்கதாரா, சத்தியசீலன், அசோக்குமார் ஆகிய படங்கள் 25 வாரங்களைக் கடந்து ஓடின.

முன்னெப்போதுமில்லாத வழக்கமாக பல படங்களில் நடிக்க ஒரே சமயத்தில் அவருக்கு அழைப்புகள் வந்தன. அவற்றுக்கு முன்பணம் வாங்கிக்கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் பாகவதரின் இறங்குமுகம் துவங்கியது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் பாகவதரும் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் சிக்கி, 30 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டனர். பாகவதர் வாங்கிய முன்பணத்தையும் மீறி கைப்பணம் கரையத்தொடங்கியது. பணம் தந்த பட முதலாளிகள் பணத்தைத் திரும்பக் கேட்டனர். பாகவதருக்கு முதல்முறையாகத் திரையுலகம் கசந்தது. பாகவதர் வருகிறார் என்றால் ரயில் நிலையத்துக்கு ஊரே திரண்டுவரும், பிளாட்பார டிக்கட் எல்லாமே விற்றுத்தீர்ந்துவிடும், ரயில் ஒவ்வொரு ஸ்டேஷனாக நின்றுநின்று செல்லநேர்ந்ததால் 5மணி நேரம் தாமதாமாகத்தான் ரயில் போய்ச்சேரும் என்ற அதிசய நிலைமையெல்லாம் கடந்தகாலமாயின. சொந்தமாக ஒன்றிரண்டு படங்களை எடுத்துக் கையைக் கடித்துக்கொண்டதோடு பாகவதர் படஉலகத்தைவிட்டு விலகத் தொடங்கினார். இசையையே தனது மனவலிக்கான மருந்தாகப் பாவித்தார். பக்தி இசை அவரது அன்றைய ரணத்தைப்போக்கப் பயனானது. புகழின் இமாலய உயரத்துக்குப்போய், சற்றும் எதிர்பாராதபோது அங்கிருந்து தலைகீழாகத் திடீரென விழநேர்ந்த ஒரு வாழ்க்கையை ஒரு சராசரிக் கலைஞனால் வேறெப்படித்தான் எதிர்கொள்ள இயலும்?

பாகவதருக்கு கமலாம்பாள் என்ற மனைவியும், சுசீலா, சரோஜா ஆகிய இரு மகள்களும், ரவீந்திரன் என்ற மகனும் உண்டு. அவர் 1934ல் தனது கலைப்பயணத்தை பவளக்கொடி படத்தோடு துவங்கினார். சிவகாமி படத்துடன் அவரது திரைப்பங்களிப்பு முடிந்தது. மொத்தம் வெறும் 14 வருடங்கள்தான். ஆனால் இந்திய சினிமா உலகில் அவருக்குக் கிடைத்த சிம்மாசனம்போல வேறு எவருக்குமே கிடைக்கவில்லை. தங்கத்தட்டில் சாப்பிட்டவர் இறுதிநாட்களில் ஒரு பரதேசியைப்போல - வாழ்க்கையைக் கண்டுணர்ந்த ஞானி ஒருவரைப்போல இந்த உலகைவிட்டு மறைந்தார். அவரது நூற்றாண்டான இந்த நேரத்தில் தமிழ் சினிமாவின் அந்த முதல் மக்கள் நாயகனை மறுபடி நினைத்துப்பார்ப்பதும், அவரது அமுதக்குரலில் அமைந்த பாடல்களையெல்லாம் கேட்டு, அந்த நாள் ரசனை என்பது எவ்வளவு மாசுமறுவற்றுத் தூயதாய் இருந்ததென உணர்ந்துகொள்வதும் இன்றைய நமது கடனன்றோ?

- சோழ.நாகராஜன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It