நான் தேசத் துரோக சட்டப்பிரிவான 124 (அ) இ.பி.கோ. பிரிவில் கடந்த 2009 ஜனவரி 24 ஆம் தேதி ராய்ப்பூர் மாவட்ட நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டேன். ஏற்கனவே நான் இரண்டு ஆண்டுகள் விசாரணைக் கைதியாக சிறையிலிருந்திருந்தேன். இந்த தண்டனைக்குப் பின் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டேன். உச்ச நீதிமன்றம் எனது வழக்கை எடுத்து, சாட்சியங்கள் போதுமானதாகக்கூட இல்லை எனக்கூறி என்னை பிணையில் விடுவிப்பதற்கு முன்னர், மேலும் நான்கு மாதங்கள் தனிமையான சிறையில் இருந்திருந்தேன். தற்போது என் வழக்கு சத்தீஸ்கர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

binayak_sen_400சில தினங்களுக்கு முன் டெல்லியில் மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்த, தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட உ.பி. பியுசிஎல் அமைப்பின் செயலர் சீமா ஆசாத் தொடர்பான நிகழ்ச்சியில் பங்குகொண்டேன். சீமா ஆசாத் வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என நீதிமன்றம் விடுவிப்பதற்குள் அவர் ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளை சிறையில் கழித்திருந்தார்.

கார்டூனிஸ்ட் ஆசிம் திரிவேதி என்பவர் வரைந்த கேலிச்சித்திரம் தொடர்பாக அவர் தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனாலும் மக்களிடம் வெளிப்பட்ட எதிர்ப்பு காரணமாக அவர் நான்கே நாட்களில் செப்டமபர் 12 தேதி விடுதலையாக முடிந்தது. அவர் தொடர்பான‌ நிகழ்விலும் மும்பையில் பிரஸ் கிளப்பில் பங்கு கொண்டேன்.

தேசத் துரோகக் குற்றச்சாட்டு என்பது அரசுக்கு எதிராக செயல்படும்போது எழுகின்றது. நமது மகாத்மா காந்தி 1922 ஆண்டு பிரிட்டீஸ் அரசுக்கு எதிராக செயல்பட்டார் என தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளானார். அவர் தன் வழக்கை தானே வாதாடினார். பிரிட்டீஸ் அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்றும் அது எனது கட‌மைகளில் ஒன்று எனவும் கூறினார். ஆங்கிலேய நீதிபதி காந்தியைத் தண்டித்த போதிலும் தனிப்பட்ட முறையில் அவரைத் தண்டிக்க வேண்டிய நிர்பந்தத்திற்காக மன்னிப்பு கோர விரும்பினார்.

தேசத் துரோகக் குற்றச்சாட்டுகள் குறித்த அதன் வரலாற்றில் இவ்விதமான பல கதைகள் உள்ளன. எனது நெடிய சிறை அனுபவத்தில் நான் ஒன்றை உணர்ந்தேன். ஏராளமான எளிய மக்கள் 'உண்மை' என்ற ஓர் ஆயுதத்தின் வழி பிரமாண்டமான அரசினை எதிர்த்துப் போராடி, தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகின்றனர். இதற்கு நல்ல உதாரணம்தான் சாமானிய கூடங்குள மக்கள் தங்களின் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் தேசத் துரோகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருவதாகும்.

அரசு தற்போது அனைத்துக்கும் பாதுகாவலாக நிற்கின்றது. பரந்துபட்ட அதிகாரம் அதன் கரங்களில் உள்ளது. இதனால் இயற்கை வளங்களான நீர், நிலம், காடு, கனிமங்கள் மற்றும் பாரம்பரிய வாழ்க்கைமுறை என எல்லாவற்றிலும் அரசு கை வைக்கின்றது. தனது விருப்பம் போல பிறர்வசம் மாற்ற அதனால் முடிகின்றது. ஆனால் இந்த வளங்களுடன் தங்களின் வாழ்க்கையினைப் பிணைத்துள்ள மக்களுக்கு, தங்களின் உயிர் வாழ்தல் என்பதே இதற்கு எதிரான போராட்டம் என்பதாக மாறுகிறது. அரசோ மக்களை நசுக்க தேசத் துரோகக் குற்றச்சாட்டு என்ற சாட்டையினை சுழட்டுகின்றது. அதற்காக அது தன்னை ஆயுதரீதியாகவும் சட்டரீதியாகவும் தகவமைத்துக் கொண்டுள்ளது.

தேசத் துரோகக் குற்றச்சாட்டு என்பது அடிப்படையில் சனநாயக விரோதமானது. மாற்று அரசியல் என்பது சனநாயகத்தின் அடிப்படை. ஆள்பவர்களை விமர்சிப்பது, அவர்களின் கருத்துக்கு எதிராக செயல்படுவது என்ற சனநாயக விழுமியங்களை இந்த சட்டம் இல்லாது செய்துவிடப் பார்க்கின்றது. 'தேசத் துரோகம்' ஆள்பவர்களுக்கு மட்டுமே வசதியானது. ஏனெனில் எதிர்ப்பாளர்களே இல்லாத நிலையினை இது உருவாக்க உதவுகிறது.

நாடு முழுதும் மனித உரிமை ஆர்வலர்கள், சனநாயக சக்திகள் இந்த தேசத் துரோக சட்டத்திற்கு எதிராக பல்வேறு வடிவங்களில் இயக்கம் எடுக்க இணைய வேண்டிய தருண‌மிது. நாட்டில் நடப்பிலுள்ள, சனநாயகத்திற்கு எதிரான சட்ட வடிவங்களை எதிர்ப்போம். ஏனெனில் இது சனநாயக சூழலினைப் பாதுகாக்கும்.

(டாக்டர் பினாயக் சென் மக்கள் சிவில் உரிமைக் கழக தேசிய துணைத்தலைவர்களில் ஒருவர். குழந்தைகள் மருத்துவர். 16.9.2012 டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வந்த அவரின் கட்டுரை தமிழாக்கம்)

தமிழாக்கம் - ச.பாலமுருகன்

Pin It