இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா அணுகுண்டு வீசி ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் பேரழிவு ஏற்படுத்தியதை எதிர்த்து குரல் எழுப்பியவர்; அணு ஆயுதங்களை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர்; ‘அமைதியா அணு ஆயுதப் போரா?' என்ற தமது நூலின் வாயிலாக அணு ஆயுதத்திற்கு எதிராக அணிதிரள வேண்டுமென துணிச்சலுடன் மக்களுக்கு அறைகூவல் விடுத்தவர்; தமது உயிர்மூச்சுள்ளவரை உலக அமைதிக்காகவும், மக்களின் நலவாழ்விற்காகவும் பாடுபட்டவர். அவர்தான் ஆல்பர்ட் ஸ்வைட்சர்!

albert schweitzer 330ஆல்பர்ட் ஸ்வைட்சர் 1875 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 –ஆம் நாள் ஜெர்மனியில் பிறந்தார். ஸ்ட்ரான்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் பயின்றார். அப்பல்கலைக் கழகத்திலேயே தத்துவத் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1899 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.

ஸ்ட்ரான்ஸ்பர்க்கில் உள்ள செயின்ட் நிக்கோலாய் தேவாலயத்தில் பாஸ்டராகப் பணி புரிந்தார். இறையியல் துறையில் ஆய்வு மேற்கொண்டு முதுநிலைப் பட்டம் பெற்றார்.

மனித குலத்தின் மேம்பாட்டிற்காகவும், நலவாழ்விற்காகவும் பாடுபட வேண்டுமென்ற சிந்தனை அவரது மனதில் ஏற்பட்டது. மேலும், வெள்ளையர்களால் ஆப்பிரிக்க நாட்டில் வாழும் கறுப்பின மக்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டு வருவதை அறிந்து, கறுப்பின மக்களுக்கான சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

மேலும், கறுப்பின மக்களின் நலவாழ்வில் ஈடுபாடு கொண்டு, மருத்துவக் கல்வி பயின்று மருத்துவராக வேண்டும் என விருப்பம் கொண்டார். தமது விருப்பத்தின் அடிப்படையில் முப்பதாவது வயதில் ஸ்ட்ரான்ஸ்பர்க் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்று எம்.டி., பட்டம் பெற்றார்.

அவர் ஆப்பிரிக்க நாட்டில் லாம்பரின் என்னும் இட‌த்தில் 1917 ஆம் ஆண்டு மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். அவரது மனைவி ஹெனைர் சிறந்த செவிலியர். அவரும் தமது கண‌வரின் இலட்சியப் பணியில் பெரும் பங்கு வகித்தார். மருத்துவமனையை நடத்துவதற்கு தமது நண்பர்களிடம் நிதி சேக‌ரித்தார். அவரது நண்பர்களும் உற்சாகத்துடன் நிதியுதவி அளித்து, மருத்துவப் பணி தொடர ஆதரவு நல்கினார்கள். அந்த மருத்துவமனையில் தமது மனைவியுடன் இணைந்து கறுப்பின மக்களுக்கு மருத்துவச் சேவை புரிந்தார்.

லாம்பரினில் ஆல்பர்ட் ஸ்வைட்சர் இருந்தபோது, முதல் உலகப் போர் மூண்டது. ஜெர்மனியக் குடிமகனான ஸ்வைட்சர் பிரஞ்சு காலனி நாட்டில் மற்றவர்களுக்கு எதிரியாக காணப்பட்டார். போர்க் கைதியாக அவர் செயின்ட் ரெமிக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தமது நேரம் முழுவதையும் நூல்கள் படிப்பதிலும், எழுதுவதிலும் செலவிட்டார். அப்பொழுது ‘Civilization and Ethics’ என்ற புகழ் பெற்ற நூலை எழுதி வெளியிட்டார்.

சுவீடன் நாட்டில் சொற்பொழிவு ஆற்ற 1920 ஆம் ஆண்டு சென்றார். அங்குள்ள ஓகோன் நதியில் படகு பயணம் செய்யும்போது, அவரது மனதில் திடீரென தோன்றிய ‘உயிரின் தொழுதகைமை’ (Reverence for life) என்ற கருத்தை வெளியிட்டார். மனிதப் பண்பும், மனிதாபிமானமும், முடிவு பெறுவது அல்ல. அவைகள் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட வேண்டும். அடிமை நிலையில் வாழும் மக்களுக்கு விடுதலை உணர்வை ஏற்படுத்த வேண்டும். மனித உறவுகள் மேம்படுத்தப்பட்டு, ஆழமானதாகவும், உண்மையானதாகவம் உறவுகள் அமைய வேண்டும். அன்பை உலக மக்கள் அனைவருக்குமானதாக ஆக்க வேண்டும் முதலிய கருத்துகக்களை முன் வைத்தார்.

வாழ்க்கை என்பது பிறருக்கும் பயன்படக்கூடியதாக அமைய வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்து, உயிரின் மதிப்பை உணர்ந்து வாழ்வதே உண்மையான வாழ்க்கையாகும். இவற்றை தமது வாழ்க்கையில் பின்பற்றி முன் மாதிரியாக வாழ்ந்து காட்டினார். சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாத வாழ்க்கையை மேற்கொண்டார்.

ஆல்பர்ட் ஸ்வைட்சர் தமது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் தினமும் நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதையும், நல்லுரைகள் கூறுவதையும் அன்றாடக் கடமையாகக் கொண்டிருந்தார்.

ஒவ்வொரு உயிரினத்திற்கும் மதிப்பு உண்டு. உயிரினும் மேலான விஷயத்துக்காக அன்றி புறக்கணிக்கத்தக்க சுயநலமான, பொருட்படுத்தத்தகாத செயல்களினால் உயிரிழப்பு எதுவும் நிகழக் கூடாது என்பதை தமதுக் கொள்கையாக அறிவித்தார்.

‘One the Edge of the primeval Forest’, ‘The Decay and Restoration of civilization’ ‘christianity and the Religions of the world’ முதலிய நூல்களை எழுதி உலகிற்கு அளித்துள்ளார்.

தமது தீவிர முயற்சியிலும், உழைப்பாலும், நண்பர்களின் உதவியாலும், மக்கள் அளித்த நன்கொடையாலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் எழுபதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை ஏழை மக்களுக்காக கட்டி எழுப்பினார்.

அவரது தீவிர முயற்சியால், அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து முதலிய நாடுகள் 1959 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் நாள், அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

அமெரிக்கா, அணு ஆயுத சோதனைகளை மீண்டும் துவக்கியதை அறிந்த ஆல்பர்ட் ஸ்வைட்ஸர், அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடிக்கு, அணு ஆயுத சோதனைகளை நிறுத்துமாறு 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் கடிதம் எழுதினார்.

கியூபா நாட்டின் மீது அமெரிக்காவில் தாக்குதலும், அச்சுறுத்தலும், பொருளாதார நெருக்கடியும், நிர்ப்பந்தமும் உச்சக்கட்ட நிலையில் இருந்தபோது, ஆல்பர்ட் ஸ்வைட்சர் அவசியமேற்பட்டால் கியூபா மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்கா தயங்காது என அறிவித்த அமெரிக்க இராணுவத் துறைச் செயலிர் மெக்நமாராவிற்கு பகிரங்கக் கடிதம் எழுதி எச்சரித்தார். இது, அவருக்கு மனித குலத்தின் மீது இருந்த பற்றை வெளிப்படுத்தும் வரலாற்றுக் குறிப்பு ஆகும்.

அமெரிக்க அதிபர் ஜான்எஃப் கென்னடிக்கும், இரஷ்ய அதிபர் குருச்சேவுக்கும் மாங்கோ நகரில் ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத சோதனைக்கான தடை ஒப்பந்தம் 1963 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அந்த ஒப்பந்தம் ஏற்பட தீவிர முயற்சிகளை மேற்கொண்டவர் ஆல்பர்ட் ஸ்வைட்சர்.

ஆல்பர்ட் ஸ்வைட்சர் உலக அமைதிக்காக பாடுபட்டதற்காகவும், மனிதநேயமிக்க தொண்டிற்காகவும் 1952 ஆம் ஆண்டு உலகின் மிக உயர்ந்த நோபல் பரிசை பெற்றார். நோபல் பரிசை பெற்றுக் கொண்டு, அவர், “ஒவ்வொரு மனிதனும் தாம் தொண்டாற்ற வேண்டிய களத்தை அறிந்து தொண்டு புரிய வேண்டும்” என்றார்.

மதபோதகர், மருத்துவர், அறிவார்ந்த நூல்களை எழுதிய எழுத்தாளர், சமகால வரலாற்று விமர்சகர், இசை வல்லுநர், மனித நேயப் பற்றாளர், உலக அமைதிக்காகப் போராடியவர், அணு ஆயுத எதிர்ப்பாளர் - என பன்முகத் திறமை கொண்டு விளங்கிய ஆல்பர்ட் ஸ்வைட்சர் 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி லம்பார்னில் காலமானார்.

- பி.தயாளன்

Pin It