உலக நாடுகளில் உயர்ந்த நிலையிலுள்ள ஜரோப்பிய நாடுகள் மறுமலர்ச்சியை அடுத்து பின்பற்றிய குடியேற்றக் கொள்கைகளினால் பல நாடுகள் கைப்பற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆதிக்கத்திற்குட்படுத்தப்பட்டு பின்பு சுதந்திரமும் வழங்கப்பட்டது. ஜரோப்பிய நாடுகளான போத்துக்கல், நெதர்லாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், ஸ்பெயின் முதலான நாடுகளினால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சிங்கப்ப+ர், மலேசியா, இந்தோனேசியா முதலான தென், தென் கிழக்காசிய நாடுகளுடன் ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளும் காலனித்துவத்திற்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 காலனித்துவமானது ஏகாதிபத்தியம் எனும் பதத்தடன் நெருங்கிய தொடர்புடையது. Webster என்கின்ற சமூகவியல் அகராதி காலனித்துவம் (colonialism) என்ற சொல் COLONIA எனும் உரோமச் சொல்லிலிருந்து பிறந்து எனக் குறிப்பிடுகின்றது. இது குடியமர்த்துதல், பண்ணை வளர்த்தல் எனும் பொருள்களைத் தருகின்றது. மற்றும் அதிகாரத்துடன் ஆக்கிரமிக்கப்பட்ட புதிய நிலங்கள், பிராந்தியங்களில் தமது வசதிக்கு ஏற்ப மக்களை குடியமர்த்துவது மற்றும் மையச் சமூகங்களோடு காலனித்துவப்பட்ட விளிம்பு நிலைச் சமூகங்களை இணைப்பது முதலான கருத்துக்களைத் தருகின்றது.

 காலனித்துவம் என்பது ஜரோப்பிய, ஜரோப்பியரல்லாத நாடுகள் பரந்த நிலப்பரப்பினைக் கையகப்படுத்தி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருதல் எனும் நோக்குடன் குறிப்பிட்ட நாடுகளை தமது அறிவாற்றல், அரசியல் நுட்பங்கள், இராணுவ தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி ஏகாதிபத்தியத்தின் கீழ்க் கொண்டுவருகின்ற செயன்முறையே காலனித்துவமாகும். அதாவது ஒருநாட்டின் எல்லைக்கு வெளியே உள்ள ஆட்சிப்பகுதி ஒன்றின் மீது குடியேற்றம் செய்வதன் மூலமோ, நிர்வாக முறையில் அடிமைப்படுத்துவதன் மூலமோ அதன் இறைமையை விரிவாக்கம் செய்வதனைக் குறிக்கின்றது. இதன்போது உள் நாட்டு மக்கள் நேரடியாக ஆளப்படுகின்றார்கள் அல்லது இடம்பெயரச் செய்யப்படுகின்றார்கள். காலனித்துவத்தின் நோக்கமே குடியேற்றப்பகுதிகளின் நிலங்கள், வளங்கள், உழைப்பு, சந்தைகள் முதலானவற்றில் ஆதிக்கம் செலுத்துவதாகும்.

 காலனித்துவமானது பல்வேறு வகைகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. அதாவது குடியேற்றக் காலனித்துவம், சுரண்டல் காலனித்துவம், பெருந்தோட்டம் சார்ந்த காலனித்துவம், அடக்குமுறை சார்ந்த காலனித்துவம், உள்ளக ரீதியான காலனித்துவம் முதலானவை முக்கியமானவையாகக் காணப்படுகின்றன.

 இலங்கையில் காலனித்துவமானது முக்கியமாக மூன்று காலகட்டங்களை கொண்டதாகக் காணப்படுகின்றது. அதாவது போத்துக்கீசரின் ஆட்சிக்காலப்பகுதி (1505-1658), ஒல்லாந்தரின் ஆட்சிக்காலப்பகுதி (1658-1796), பிரித்தானியரின் ஆட்சிக்காலப்பகுதி (1796-1948) முதலானவையாகும். இவற்றுடன் சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலப்பகுதி, இரண்டாம் உலகப்போர், உள்நாட்டுப் போர், தற்காலம் என்கின்ற பகுப்புக்களையும் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இலங்கையில் காலனித்துவத்தின் காரணமாக பல்வேறு பட்ட விளைவுகள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் இலங்கைக்கு ஏற்பட்ட சாதகமான விளைவுகள் பற்றி நோக்குகையில் அரசியல் கட்டமைப்பக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டமை, பொருளாதார விருத்தி ஏற்பட்டமை, தொழிற்சாலைகள் நிறுவப்பட்டமை, போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டமை, சமூக முன்னேற்றம் ஏற்பட்டமை, வாழ்க்கை முறைகளில் மாற்றம் ஏற்பட்டமை, மொழிக்கலப்புக்கள் ஏற்பட்டமை, கல்வி செயற்பாடுகள் விருத்தி செய்யப்பட்டமை, தொலைத் தொடர்பு சாதனங்களின் விருத்தி, அச்சுசாலைகள் நிறுவப்பட்டமை, இலக்கியப் படைப்புக்கள் வெளிக்கொணரப்பட்டமை முதலான நலன்கள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 அரசியல் கட்டமைப்பக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டமை தொடர்பாக நோக்குகின்ற போது கி.பின் 1815 காலப்பகுதிகளில் மன்னராட்சி முறையானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது, மற்றும் இலங்கையை சோசலிச நாடாகப் பிரகடனப்படுத்தியமை, இவற்றுடன் 1931இல் டொனமூர் யாப்பு முன்வைக்கப்பட்டதுடன் சர்வஜன வாக்குரிமை கொண்டுவரப்பட்டதுடன் 1945இல் ஊ.று.று கன்னங்கர இலவசக் கல்வியை முன்வைத்தமை முதலானவை காலனித்துவத்தினால் இலங்கை மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளாகும்.

 பொருளாதாரத்தில் விருத்தி ஏற்படுத்தியமை தொடர்பாக நோக்குகின்ற போது கறுவா, 1876களில் இறப்பர், 1939களில் தேயிலை, முதலானவற்றினை அறிமுகப்படுத்தியதுடன், இவற்றினைத் தமது நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தனர். இவற்றுடன் முத்து, இரத்தினக்கல், யானைகள், யானைத் தந்தங்கள், ஆமை ஓடுகள் முதலானவற்றினை தமது நாடுகளுக்கு ஏற்றமதி செய்து கொள்ளவும் தமது நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், அந்நியச் செலாவணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகுத்தமையினால் இலங்கைப் பொருளாதாரம் விருத்தியடைய ஏதுவாக அமைந்தது. மற்றும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அதாவது இரும்புத்தொழிற்சாலைகள், கைத்தொழிற்பேட்டைகள் நிறுவப்பட்டன. எடுத்துக்காட்டாக போத்துக்கீசரின் (1530) ஆட்சிக் காலத்தில் சீதாவாக்கையில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையின் மூலமாக உருக்கிலான போர்க்கவசங்கள், முகமூடிகள் முதலானவை உருவாக்கப்பட்டமையினைக் குறிப்பிடலாம்.

 போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக நோக்குகின்ற போது போத்தக்கீசர்கள் வீதிகளை அமைத்து தமது இலக்குகளை அடைந்தமை, ஒல்லாந்தர்கள் டச்சு வீதிகளை அமைத்தமை, எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்திலுள்ள நச்சிமார் வீதி(டச்சு) முதலானவற்றுடன் பிரித்தானிய கால வீதிகளாக 1825 காலப்பகுதிகளில் கொழும்பு - கண்டி வீதியும், 1830களில் குருநாகல் - கண்டி வீதியும் அமைக்கப்பட்டதுடன், கிழக்கு மாகாணத்தினை இணைக்கும் தம்புள்ள, கந்தளாய், திருகோணமலை வீதிகளும், வடமாகாணத்தினை இணைப்பதற்காக தம்புள்ள, அநுராதபுரம், பருத்தித்துறை, யாழ்ப்பாண வீதிகளும் மற்றும் 1853 - 1863 களில் கொழும்பு – கண்டி புகையிரதப்பாதையும், 1871இல் பேராதனை - நாவலப்பிட்டி, 1905இல் அநுராதபுரம் - யாழ்ப்பாணம், மாகோ – திருகோணமலை - மட்டக்களப்பு புகையிரதப்பாதைகளும் அமைக்கப்பட்டு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தியமையினால் மக்கள் பல்வேறு நலன்களைப் பெற்றுக்கொள்ள இலகுவாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 வாழ்க்கை முறைகளில் மாற்றம் ஏற்பட்டமை தொடர்பாக நோக்குகின்ற போது போத்துக்கீசர்களின் காலப்பகுதிகளில் தான் நிலையான திருமண முறையானது பின்பற்றப்பட்டமை மற்றும் மத சுதந்திரங்களும், சிந்தனைச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் வழங்கப்பட்டமை, பிரித்தானியராட்சிக் காலத்தில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டமை முதலானவைகளின் காரணமாக மக்களின் வாழ்க்கை முறையானது சிறப்பாகக் காணப்பட காரணமாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இலங்கையை ஆசியாவில் எழுத்தறிவில் இரண்டாவது நாடாக மாற்றிய பெருமைக்கு உரிமம் உடையவைகளாக காலனித்துவ நாடுகளே காணப்படுகின்றன. அதாவது போத்துக்கீசர்கள் கத்தோலிக்க மதத்தினைப் பரப்புவதற்காக கல்விக் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியமை, ஒல்லாந்தர்கள் புரட்டஸ்தாந்து மதத்தினைப் பரபு;பவதற்காக பாடசாலைகளைப் பயன்படுத்தியமை, பாடசாலைகளை மதகுருக்களின் அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தமை, ஆண்டு பூராகவும் பாடசாலைகள் இயங்கியமை முதலானவற்றுடன் பிரித்தானியர்கள் ஆங்கிலக் கல்வியை அறிமுகப்படுத்தியமை, மதக்கல்வியை கட்டாயப் படுத்தியமை முதலான செயற்பாடுகளின் காரணமாக மக்களின் கல்வித்தரம் உயர்வடைந்ததுடன் அவர்களினுடைய வாழ்க்கைத்தரம் உயர்வடைய காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 அச்சுசாலைகள் நிறுவப்பட்டமை தொடர்பாக நோக்குகின்ற போது 1737 காலப்பகுதியில் வான் இம்மோவ் என்பவரினால் கொழும்பில் முதலாவது அச்சு சாலை நிறுவப்பட்டது. இதன் மூலமாக சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு சட்டரீதியான அம்சங்கள் வெளியிடப்பட்டன. பிற்பட்ட காலங்களில் நூல்கள் வெளியிடப்பட்டன. எடுத்துக்காட்டாக ஒல்லாந்தராட்சிக் காலப்பகுதியில் யாழ்ப்பாண வைபவ மாலை(1736), தேசவழமை (1736), ஹெலேனா கதாவ (1708) எனும் நூல்களும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 வைத்தியத் துறைகளும் வளர்ச்சியடைந்திருந்தன. அதாவது இலங்கையில் காணப்பட்ட மூலிகைகளை போத்துக்கல் நாட்டுக்கு அனுப்பி பரிசோதனைகள் வருடாவருடம் இடம்பெற்றுவந்தன. இவ்வாறு 169 மூலிகைகள் அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பு அருங்காட்சியகம் குறிப்பிடுகின்றது. ஹேர்மன் என்பவர் இலங்கையின் முதலாவது தாவரவியற் துறையின் புலமையாளர் எனக் குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் வைத்திய சாலைகள், வைத்திய நூல்கள் என மக்கள் நலன் சார் விடயங்கள் முக்கியம் பெற்றன. உதாரணமாக கொழும்பு, யாழ்ப்பாணம், மயிலிட்டி (காச நோய்) வைத்திய சாலைகள், ஆங்கில மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 இவைமட்டுமல்லாது கட்டிடக் கலைகளிலும் சிறந்து விளங்கினார்கள். அதாவது பாதுகாப்பரண்கள், கோட்டைகள் முதலானவை அமைக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக கொழும்பு, காலி, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை முதலான இடங்களில் அமைக்கப்பட்ட கோட்டைகள் இ;ன்றும் காணப்படுகின்றன.

 இவ்வாறாக பல்வேறு நன்மைகளை காலனித்துவமானது ஏற்படுத்தியிருந்தாலும் பல்வேறு பாதிப்பக்களையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் பாதக விளைவுகளை நோக்குகையில் எடுத்தக்காட்டாக “ இங்கு (இலங்கையில்) எல்லாவகையான மரங்களும் மிகத் தாராளமாகக் உள்ளமையினால் கட்டிடங்களுக்கும், கப்பல் கட்டுவதற்கும் , நீங்கள் விரும்புகின்ற அளவுகளில் விதவிதமாக படகுகளுக்கு வேண்டிய பாய்மரக் கப்பல்களுக்குரிய மரங்கள், கயிறுகள் போன்றவற்றை இங்கிருந்து இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம். மற்றொரு சிறப்பான அம்சம் என்னவென்றால் இலங்கைக்கு மிகவும் அண்மையில் மாலைதீவுகளும் அமைந்துள்ளமையினால் அங்கிருந்தும் ஏராளமாக” என போத்துக்கீசத் தளபதி தெரிவித்திருந்தமையானது குடியேற்ற நாடுகளின் வளங்களை சுரண்டுவதன் நோக்கத்தினை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

 காலனித்துவ ஆட்சியாளர்களினால் நாட்டின் இறையாண்மை, நிர்வாகக் கட்டமைப்புக்களில் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டமை. அதாவது நாட்டின் தனித்தவம் இழக்கப்பட்டு அடிமை நிலை ஏற்படுத்தப்பட்டது. மற்றும் நிர்வாக கட்டமைப்பில் உரோம, டச்சு சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை, சுயாதினமாக செயற்பட முடியாத நிலமை முதலானவை நாட்டின் சுதேசியத்தை இழக்கச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவை காலனித்தவம் ஏற்படுத்திய பாதக விளைவாகும்.

 காலனித்துவ ஆட்சியாளர்களினால் கலாசார சீரழிவுகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதாவது தமது நாட்டுக்கே உரித்தான பழக்கவழக்கங்கள், மொழி, மதம் முதலானவை தமது சுயத்தினை இழந்து வருகின்றமையைக் குறிப்பிடலாம். அதாவது மேற்கத்தேய முறையிலான திருமண அமைப்பு முறைகள், குடும்பங்களின் கட்டமைப்பு மாறுதலடைந்து வருகின்றமை(தனிக்குடும்ப அமைப்பு), மக்களின் உடை அமைப்பானது பட்டுச்சேலை,சட்டையிலிருந்து நீங்கி மேற்கத்தேய சாயலைப் பின்பற்றுகின்றமை, உணவுப்பழக்கங்கள் நெல் அரிசியில் இருந்து தானிய வகைக்கு மாறிவருகின்றமை, வாழ்க்கை முறைகளில் உறவுமுறைகளின் தனித்துவம் இழக்கப்பட்டு வருகின்றமை, மற்றும் வேற்று மொழிக் கலப்புக்கள் இடம்பெற்று வருகின்றமை. அதாவது ஆங்கில மொழியின் ஊடுபரவல் , போத்துக்கீச, டச்சு மொழிகள் சுதேசிய மொழிகளுடன் கலத்தல், மதமாற்றங்கள் ஏற்படல். அதாவது கத்தோலிக்க , புரட்டஸ்தாந்து மதங்கள் பரவுதல், பல்வேறு இனக்கலப்புக்கள் ஏற்படல். எடுத்துக்காட்டாக பறங்கிய இனத்தினைக் குறிப்பிடலாம். மற்றும் உறைவிட அமைப்புக்கள் முதலானவை மேற்கத்தேயப் பாணிகளைக் பின்பற்றியதாகவே காணப்படுகின்றது. இதனால் நாட்டின் தனித்துவம் பாதிக்கப்படுகின்றது.

 இவற்றுடன் இனப்பிரச்சினைகள், சமூகப்பிணக்குகள் முதலானவற்றை ஏற்படுத்தியமை இவர்களின் முக்கிய தந்திரமாகும். தமது நாட்டிற்கு தளர்வு ஏற்படாத படி வளங்களைப் பெற்றுக் கொள்வதற்காக இவர்கள் நாட்டினை விட்டு செல்லும் போது பிணக்குகளை உருவாக்கிச் சென்றதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் விளைவாகவே இலங்கையில் இடம்பெற்று வந்த முப்பது வருட கால இனப்பிரச்சினையாகும்.

 இவ்வாறாக தற்காலத்திலும் காலனியாதிக்கம் என்பது நேரடியாக இடம்பெறாவிட்டாலும் மறைமுகமாக தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே காணப்படுகின்றது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அதாவது பல்தேசியக் கம்பனிகள் இன்றும் இலங்கையில் தமது செயற்பாட்டினை மேற்கொண்டிருப்பதுடன் , மதமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமையும், நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதனையும் காணக்கூடியதாக உள்ளது. மற்றும் பெருந்தோட்ட வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுவதுடன் இறக்குமதிப் பொருட்கள் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான நிலமையானது இலங்கையானது காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெறாத நிலையினை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.

 இவ்வாறாக காலனித்துவம் என்பது பலவீனமான மக்கள் தொகுதி அல்லது பிராந்தியக் குழுக்களின் மேலாதிக்கம் சார்ந்த அதிகாரம் அல்லது கட்டுப்பாட்டினைப் பிரயோகிக்கும் செயற்பாட்டுடன் தொடர்புடைய கொள்கைகளும், பிரயோகங்களும் காலனித்துவம் எனப்படுகின்றது. இலங்கையில் மூன்று காலகட்டங்களில் காலனிய ஆட்சி காணப்பட்டது. போத்துக்கீசரின் ஆட்சிக்காலப்பகுதி (1505-1658), ஒல்லாந்தரின் ஆட்சிக்காலப்பகுதி (1658-1796), பிரித்தானியரின் ஆட்சிக்காலப்பகுதி (1796-1948) முதலானவையாகும். இதனால் பல்வேறு சாதக, பாதக விளைவுகள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். சாதக விளைவுகளாக அரசியல் கட்டமைப்பக்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டமை, பொருளாதார விருத்தி ஏற்பட்டமை, தொழிற்சாலைகள் நிறுவப்பட்டமை, போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டமை, சமூக முன்னேற்றம் ஏற்பட்டமை, வாழ்க்கை முறைகளில் மாற்றம் ஏற்பட்டமை, மொழிக்கலப்புக்கள் ஏற்பட்டமை, கல்வி செயற்பாடுகள் விருத்தி செய்யப்பட்டமை முதலானவற்றுடன் பாதக விளைவுகளாக கலாசார சீர்குலைவுகள், வாழ்க்கை முறைகளில் மாற்றம், மதமாற்றங்கள் முதலான பாதிப்புக்களும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான பல்வேறு விடயங்களைக் கொண்டதாக இலங்கையில் காலனித்துவம் காணப்படுகின்றது.

உசாத்துணை நூல்கள்

1.            கிருஷ்ணராசா.செ, (2000), “இலங்கை வரலாறு”, பிறைநிலா வெளியீட்டகம், யாழ்ப்பாணம், பக்கம்(22-296).

2.            கைலாசபதி.க, (1992), “சர்வதேச அரசியல் நிகழ்வுகள் பற்றி”, புதிய பூமி வெளியீட்டகம், பக்கம்(184-187).

3.            அப்ஜாஸ் அகமத், (2001), “புரட்சிகளின் நூற்றாண்டு”, சவுத்விசன், சென்னை, பக்கம்(120-160).

4.            பார்த்தீபன்.சு,(2007), “வெளி”,கிழக்குப் பல்கலைக் கழகம், பக்கம்(26-27).

-    பிருந்தா.யோகராசா,  சமூகவியல் கற்கை, கிழக்குப் பல்கலைக் கழகம். (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It