தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்காகப் பாடுபட்டவர். பொதுத் தொண்டில் அரை நுhற்றாண்டுக் காலம் ஈடுபட்டவர். கம்பன் காப்பியத்தை செவிநுகர் கனியாக்கி, அனைவருக்கும் வழங்கியவர். செந்தமிழின் வளர்ச்சிக்கு இறுதிவரை உழைத்தவர். மதம், சாதி கடந்து மனிதநேயம் பரப்பியவர். தனது பாடல்கள் மூலம் மக்களிடையே தேடரிய நல்ல பல கருத்துக்களை எடுத்துரைத்தவர். ‘சீரிய செந்தமிழ்ச் செல்வன்’ என கவிமணியால் பாராட்டப்பட்டவர். அவர்தான் செய்குத்தம்பி பாவலர்.
நாகர்கோவில், கோட்டாறு அருகில் உள்ள ‘இளங்கடை’ என்னும் சிற்றுhரில், பக்கீர் மீறான் (மீரான்) - ஆமினா வாழ்விணையருக்கு மகனாக 31-07-1874 ஆம் நாள் பிறந்தார் பாவலர்.
பாவலர் பிறந்த போது, அத்தமிழ்ப் பகுதியில் அரசாங்க மொழியாக மலையாளமே ஆட்சிசெய்தது. அதனால் தனது தொடக்கக் கல்வியை மலையாளமொழியில் கற்றார்.
மாணவப் பருவத்திலேயே, திருக்குரான் மட்டுமின்றி ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், தேசிங்குராஜன் கதை, அல்லி அரசாணி மாலை ஆகியவற்றையும் பள்ளிப்பாடமாகவே படித்தார்.
சங்கரநாராயண உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கணம் இலக்கியம் முதலியவற்றைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், தேவாரம், ஆழ்வார் பாடல்கள், கம்பராமாயணம், திருவிளையாடற் புராணம், பெரிய புராணம், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடற்திரட்டு, பட்டினத்தார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், திரவருட்பா ஆகிய இலக்கிய நுhல்களையும், வரிசையாகவும், விரிவாகவும் வாசித்தார்.
தொல்காப்பியம், நன்னூல் முதலிய இலக்கண நுhல்களையும் நுணுகிக் கற்றுத் தேர்ச்சி பெற்றார்.
பிற சமயத்தவர்கள் வெறுப்படையாத வகையில் சமய நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்கக் கருத்துரை வழங்கினார். இந்தியர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்திட வலியுறுத்தினார். செந்தமிழில் சமய தத்துவங்களைப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் பட்டிதொட்டியெல்லாம் பரப்பினார்.
இந்து மதத்தைச் சேர்ந்த ஆறுமுகநாவலர் போன்ற பேரறிஞர்கள் சிலர், வள்ளலாரின் அருட்பாவை, ‘மருட்பா’ எனக் கூறி மறுப்புரை செய்தனர். அதை அறிந்து, மனம் வருந்தினார் பாவலர். காஞ்சிபுரத்தில், வள்ளலாரின் பாக்கள் அருட்பாக்களே என நிலைநாட்டினார்! நெஞ்சைத் தொடும் உரையாற்றினார்! காஞ்சி மக்கள் பாவலரைப் பாராட்டிச் சிறப்பித்தனர்.
பாவலர் மெய்ஞ்ஞான இலக்கியமாகிய கல்வத்துநாயகம் இன்னிசைப் பாமாலை, சம்சுத்தா சீன் கோவை, கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி ஆகிய செய்யுள் நுhல்களை செந்தமிழில் இயற்றியுள்ளார். நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம், சீறாப்புராணப் பொழிப்புரை, வேதாந்த விவகாரப் பழிக்குற்ற வழக்கு போன்ற உரைநடை நுhல்களையும் தமிழுலகுக்கு படைத்தளித்துள்ளார்.
நாகைக் கோவை, அழகப்பக் கோவை, நீதி வெண்பா, தனிப்பாடல்கள், உத்தமபாளையம் முகம்மது இஸ்மாயில் கோவை போன்ற பாவலரின் அரிய நூல்கள் இன்றுவரை அச்சில் வரப்பெறவில்லை. அந்நூல்களை இசுலாமிய இலக்கிய அமைப்புகளோ, தமிழக அரசோ அச்சிட்டு வெளியிட்டால் தமிழ்த்துறை போற்றிப்புகழும். இலக்கிய உலகம் பயன் பெறும்!
பாவலர், பெண்ணின் பெருமை, தமிழ்த்தாய் வாழ்ந்து, நோன்பை மறவாதே, கள்ளைக் குடியாதே போன்ற தலைப்புகளில் மக்கள் மேம்பாட்டு, வாழ்வியல் சிந்தனைகளையும் பாடியுள்ளார்!
கோட்டாற்றில் ஆற்றங்கோயாத்தங்கள் தலைமையில், 1. இறை நாம உச்சரிப்பு, 2. கைப்பணி, 3. தலைவரோடு உரையாடல், 4. இலக்கியம், 5.இலக்கணம், 6. இருமுறை கேட்டு வெண்பாவை ஒப்புவித்தல், 7.கண்டத்பத்திரிகை, 8. கவிபாடல், 9. கண்டத்தொகை, 10. கிழமை கூறுதல், 11.நுhறு நிரப்புதல், 12. சுவைப்புலன் அறிதல், 13. ஒலி வேறுபாடு உணர்தல், 14.நெல் எறிதல், 15. கல் எறிதல், 16. சீட்டாடல் எனப் பதினாறு வகைகளில் பாவலர் தம் திறமையை வெளிப்படுத்தினார். அதனால், சதாவதான அரங்கச் சான்றோர், பாவலருக்கு ‘சதாவதானி’ எனப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர்.
மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் கண்ட பாண்டித் தரைத்தேவர், பாவலரை, ‘தமிழின் தாயகம்’ எனப் பாராட்டி மகிழ்ந்தார்.
தமிழ்த்தென்றல் திரு. வி. க., ‘என் ஆசான் பாவலரே’ எனவும், மக்கள் தலைவர் ஜீவா, ‘என் இலக்கிய ஆசான் பாவலரே’ எனவும் நெஞ்சுருக நினைவு கூர்ந்துள்ளனர்.
பாவலர், ‘யதார்த்தவாதி’, ‘இஸ்லாமிய மித்திரன்’ என்ற மாத இதழ்கள் மூலம் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளார். தமிழ், மொழி தமிழர்களுக்கு அறிவும் பண்பாடும் உணர்வும் ஊக்கமும் தரும் மொழி என்பதை உணர்ந்தவர் பாவலர்! தாய்மொழியாம் தமிழ் மீது தணியால் பற்றுக் கொண்டதால் செந்தமிழ் வளர்த்த செய்குத்தம்பி ‘பாவலராக’ விளங்கினார்.
“ ‘அறுத்தால் கட்டு’ என்ற வேளாண்மொழிக்கு இணங்க, பெண், தன்வாழ்வை இழந்தால், மீண்டும் மணவாளனைக் கட்டிக் கொள்ளத் தடையில்லை; சமுதாயம் பெண்டிர்க்குத் தடை போடக்கூடாது” - என்பதைப் பாவலர் பேசியதுடன், மறுமணத்தை ஆதரித்துச் செயல்பட்டார்.
இந்திய விடுதலையில் நாட்டங்கொண்டு, காந்தியடிகள் தலைமையில் போராடினார். கதரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ததுடன், தனது வாழ்நாள் முழுவதும் கதர் ஆடைகளையே அணிந்தார்.
மனித சமுதாயத்தை மேம்படுத்தவும், சாதி, சமய வேறுபாடுகள் கடந்து, கடைசி மனிதனைக் கடைத்தேற்றவும், கண்ணயராது பாடுபட்டார். தனது இறுதி மூச்சுள்ள வரை செந்தமிழழைப் பாடிய செய்குத்தம்பிப் பாவளர், 13-02-1950 ஆம் நாள் இம்மண்ணைவிட்டு மறைந்தார்.
பாவலர் புகழ், பாருள்ளவரை நின்று நிலைக்குமாக.
- பி.தயாளன்