tha.pandiyan51961-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். அன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டக் கிளைத் தொடக்க விழா இரண்டு நாட்கள் மாநாடாக தூத்துக்குடியில் நிகழ்ந்தது.

அம்மாநாட்டில் தோழர் ஜீவா, தோழர்கள் நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன், தோழியர் சிவகாமசுந்தரி ஆகியோருடன் தோழர் தா.பாண்டியனும் கலந்து கொண்டார்.

அவரை நேரில் காண்பது அதுதான் முதல்முறை. தொ.மு.சி.யின்சிறப்பான அறிமுக உரையுடன் அவர் உரையாற்ற அழைக்கப்பட்டார். மேடையில் அவர் ஒருவர்தான் அப்போது இளைஞராகக் காட்சியளித்தார். அவர் உரையாற்றத் தொடங்கியதும் அனைவரையும் ஈர்த்துவிட்டார். தொ.மு.சி.யின் அறிமுக உரை பொய்க்கவில்லை.

பாரதியும் பாரதிதாசனும் தம் கவிதை வரிகளை உரைநடையாக மாற்றி அவரிடம் ஒப்படைத்துவிட்டது போன்ற பிரமிப்பு ஏற்பட்டது. இடையிடையே கம்பனும் அவர் நாவில் களிநடனம் புரிந்தார்.

மாநாடு முடிந்து செல்லும்போது, ஜீவா, தொ.மு.சி.யை அடுத்து, சிறப்பான வாரிசு ஒருவர் கிடைத்துவிட்டார். பொருத்தமான ஒருவரைத்தான் க.இ. பெருமன்றத்தின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

பின்னர் ஆண்டுதோறும் செப்டம்பர் திங்களில் இரண்டு நாட்கள் நிகழும் எட்டையபுரம் பாரதி விழாவில் அவர் கலந்து கொள்வது வழக்கமாயிற்று. அப்போது அவரது மேடைப் பேச்சை மட்டுமின்றி, கலந்துரையாடல்களையும் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது.

விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி மாலைதான் தொடங்கும்.காலையுணவு முடிந்ததும் க.இ. பெருமன்றத்தின் தலைவர்களும் மூத்த தோழர்களும் தாம் தங்கியிருக்கும் பெரிய அறை ஒன்றில் வரைமுறைப்படுத்தப்படாத மிகவும் இயல்பான முறையில் இலக்கியச் சர்ச்சையில் ஈடுபடுவார்கள்.

சில நேரங்களில் விவாதம் சூடுபிடித்துவிடுவதும் உண்டு. பார்வையாளர்களாக ஓரமாக அமர்ந்து இவற்றையெல்லாம் உன்னிப்பாகக் கவனிப்பவர்களில் நானும் ஒருவன். அப்போதுதான் தா.பா.வின் வாதத்திறனையும், இலக்கியப் புலமையையும் உணரும் வாய்ப்பு பலருக்கும் கிட்டியது.

சிறந்த பேச்சாளராக மட்டுமே அவர் பெரும்பாலும் முன்னிறுத்தப்படுகிறார் என்ற ஆதங்கம் எனக்குண்டு. அவரது பேச்சாற்றலின் அடிநாதமாக அமைவது அவரது ஆழ்ந்த வாசிப்புத் திறனும் இலக்கியப் புலமையும்தான் என்பது என் கருத்து.கிரேக்கப் புராணக் கதைகளை அவர் கூறத் தொடங்கும்போது கதை கேட்கும் உணர்வு தோன்றும். திடீரென்று அக்கதையை நிகழ்காலப் பிரச்சினையுடன் பொருத்தி விடுவார்.

கம்பன் காவியம் படைக்கும் போது தமிழ்ச்சொற்கள் அணிவகுத்து நின்று ‘என்னை எடுத்துக்கொள், என்னை எடுத்துக்கொள்’ எனக் கெஞ்சும் என்று கம்பனில் ஈடுபாடு கொண்ட முதியவர்கள் கூறக் கேட்டுள்ளேன், தா.பா. உரையாற்றும்போது இக்கூற்று நினைவுக்கு வருவதுண்டு.

இலக்கியத் தொடர்களை மிக எளிதாக உரைநடையாக மாற்றி உரையாற்றும் பாங்கு அவருக்கே உரிய ஒன்று. அதே நேரத்தில் வெறும் சொல்லடுக்காக அமையாது, அவர் பேசும் அரசியல், பொருளாதாரச் சிக்கல்களைக் கேட்போர் உள்ளத்தில் நிலைநிறுத்தவும் செய்யும்.

மிகெய்ல் சோலோகோவின் ‘கன்னி நிலம்' என்ற அற்புதமான நாவலையும் சிங்கிஸ் ஐத்மாத்தாவின் ‘லாரி டிரைவரின் கதை’ என்ற நாவலையும் அவர் மொழிபெயர்த்துள்ளார். மூல நூலைப் படிப்பதுபோன்ற உணர்வை இவ்விரு மொழிபெயர்ப்புகளும் வழங்குவதுடன் அவரது மற்றொரு பரிமாணத்தையும் உணரச் செய்கின்றன.

தோழர் தா.பா. தமது மேடைத் தமிழில் பயன்படுத்தும் சொற் புதிது! சுவையும் புதிது! இதற்கு அடிப்படைக் காரணம் அவருள் மறைந்து கிடக்கும் இலக்கியத் தேடல்தான். இலக்கிய உணர்வு கொண்டவர்களை ஓரங்கட்டும் மனநிலை அப்போதைய மூத்த தோழர்கள் பலருக்கும் இருந்தது.

இலக்கிய உணர்வானது அரசியல் உணர்வை மழுங்கடித்துவிடும் என்ற பொருளில் “அரசியல் போய்விடும்,” என்பார்கள். சிலர் தாம் எப்போதோ படித்து மனனம் செய்த கவிதை வரிகளை மனப்பாடமாக ஒப்பித்துவிட்டு இது என்ன பெரிய வித்தையா என்பார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்தபோது கட்சியின் மாநிலச் செயலாளராக அப்போதிருந்த தோழர் மணலி கந்தசாமி பொதுக்கூட்டத்தில் உரையாற்ற சிதம்பரம் நகருக்கு வந்திருந்தார். மாலை நான்கு மணியளவில் நானும் தோழர் மே.து.ராசுகுமாரும் அவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தோம்.

அப்போது தனக்கும் இலக்கியம் தெரியும் என்று கூறினார். நாங்கள் இருவரும் ஒரே குரலில் அதை ஏன்தொடராது விட்டுவிட்டீர்கள் என்று உண்மையான உணர்வுடனேயே கேட்டோம். அரசியல் போய்விடும் என்று மிக இயல்பாகக் கூறியதுடன் ஜீவானந்தத்துக்கு இப்படித்தான் அரசியல் போய்விட்டது என்றார்.

மேலும் தமதுஇலக்கியப் புலமையை வெளிப்படுத்தும் வகையில் தாம் எப்போதோ மனனம் செய்திருந்தசெய்யுள்களையும் கவிதைகளையும் மளமளவென எங்களிடம் ஒப்பித்தார். தோழர் மே.து.ரா.வும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். வேறு வழி!

இக் கருத்துநிலை மிகவும் தவறு என்பதற்குத் தோழர் தா.பா. ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கினார். நேர்காணலின்போது நறுக்குத் தெறித்தாற்போன்று அவர் அளிக்கும் பதில்களில் அவரது அரசியல் கூர்மை தெற்றெனப் புலப்படும். கட்சி உறுப்பினர்களுக்காக அவர் நடத்திய அரசியல், தத்துவ வகுப்புக்கள் எளிமையும் ஆழமும் மிக்கவை. தேர்ந்த பேராசிரியர் ஒருவரின் வகுப்பில் அமர்ந்திருக்கும் உணர்வை ஏற்படுத்திவிடுவார்.

அவர் எழுதிய அரசியல் நூல்களில் சிறப்பான ஒன்றாக அமைவது 2017 இல் அவர் வெளியிட்ட ‘பொதுவுடைமையரின் வருங்காலம்' என்ற நூலாகும். நாற்பத்தியன்று கேள்விகளை எழுப்பி அவற்றுக்கு விடையளிக்கும் தன்மையில். இந்நூல் அமைந்துள்ளது. இருப்பினும் கேள்வி பதில் வடிவில் இந்நூல் அமையவில்லை.

தாம் உருவாக்கிய கேள்விகளை மையமாகக்கொண்டு விவாதித்துச் செல்லும் போக்கில் இந்நூலை எழுதியுள்ளார். அவரது ஆழ்ந்த வாசிப்பாற்றல், அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட இயக்க அனுபவம், அவரது விவாத ஆற்றல் என்ற மூன்றும் இழையோடியுள்ளன. நூலின் அணிந்துரையில் பேராசிரியர் ந.முத்துமோகன் குறிப்பிட்டுள்ளது போன்று, இந்நூலின் முதலிலிருந்து முடிவுவரை சனநாயகத்தின் குரலாக ஒலித்துள்ளார்.

தோழர் தா.பா.வின் சொற்களும் அவை ஊட்டும் சுவையும் மட்டும் புதியன அல்ல. பொருளும் புதியது. அவரை உணர்ந்தோர் “இலக்கியம் பயின்றால்அரசியல் போய்விடும்” என்று கூறார்.

- ஆ.சிவசுப்பிரமணியன்

Pin It