இரண்டாம் மொழிப்போர் 1948 - 1952

ஆங்கிலேயரிடம் அடிமையாய் இருந்த 1938-ஆம் ஆண்டிலேயே, தமிழரை அடிமைப்படுத்தும் முயற்சியை இந்தி வெறியர்கள் தொடங்கிவிட்டனர். எதிர்ப்பின் வலிமையால் கைவிடப்பட்ட, 'கட்டாய இந்தித் திணிப்பின்' விடுதலை பெற்ற இந்தியாவில் மீண்டும் தொடங்கினர்.

senthalai gouthaman bookபள்ளிகளில் இந்தி கட்டாயப்பாடம் என 20.6.1948 இல் மறுபடி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மதம், சாதி, கட்சி கடந்து தமிழினம் எழுப்பிய எதிர்ப்புப் புயல், அன்றைய கல்வியமைச்சரைப் பதவி விலக வைத்தது. கட்டாய இந்தி ஆணை மறுபடி திரும்பப் பெறப்பட்டது. 

புதிய கல்வியமைச்சர் பொறுப்பேற்றார். 2.5.1950 இல் மீண்டும் இந்தியை கட்டாயப் பாடமாக்கும் அதே முயற்சியைத் தொடங்கினார். எதிர்ப்புப்புயல் மீண்டும் எழுந்தது. இந்தி கட்டாயப்பாடம் என்னும் அரசாணையைத் திரும்ப பெற்றுக் கொண்டு, 'இந்தி விருப்பப் பாடம்' என்ற முகமூடி அறிவிப்பு வந்தது.

இந்திய அரசியல் சட்டம் இந்திக்குத் தரும் தனிச் சலுகையைக் கண்டிக்கும் வகையில், தொடர்வண்டி நிலைய இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் 1.8.1952 இல் தொடங்கியது. தொடர்ந்து கறுப்புக் கொடிப் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. 

'இந்தி திணிக்கப்பட மாட்டாது' எனக் குடியரசுத் தலைவரும் தலைமையமைச்சரும் அறிவித்தபின் போராட்ட அலை அடங்கியது.

மூன்றாம் மொழிப்போர் - 1965

தமிழக மொழிப்போர் வரலாற்றில் முற்றிலும் வேறுபட்ட வகையில் நிகழ்ந்தது 1965 மொழிப்போர்! பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை எதிர்த்து நடந்தவை இதற்கு முந்தைய மொழிப்போராட்டங்கள்.

'இந்தி மட்டுமே 26.1.1965ஆம் நாளிலிருந்து இந்திய ஆட்சி மொழியாக இருக்கும்' என்னும் அரசியல் சட்டத்தின் 243 ஆம் விதியைத் திருத்த வலியுறுத்தி நடந்தது மூன்றாம் மொழிப்போர்.

மாணவர்களே திட்டமிட்டு, மாணவர்களே ஒருங்கிணைத்து, மாணவர்களே செயல்படுத்திய மிகப் பெரும் மாணவர் போராட்டம்! உலக வரலாற்றில் இப்படியொரு மொழிப் போராட்டம் இதற்கு முன் நடந்ததாகச் செய்தியில்லை.

தீக்குளித்து மாண்டார்கள்! நஞ்சுண்டு மாண்டார்கள்! குண்டடிபட்டு மாண்டார்கள்! இறந்தவர்கள் எண்னிக்கை ஆயிரத்திற்கும் மேல்! உலக நாடுகள் ஒன்றிய (ஐ.நா) சபையில் பேசப்பட்டது, 1965 ஆம் ஆண்டு மொழிப்போர்!

இந்த மொழிப்போரில் தான் முதன்முறையாக இராணுவம் வந்தது. முதன் முதலாய்த் தமிழர்கள் குவியல் குவியலாய்க் கொன்று புதைக்கப்பட்ட கொடூரம் நடந்தது. உலக வரலாற்றிலேயே மொழிக்காக முதன் முதலாய்த் தீக்குளித்த துயரம் நிகழ்ந்தது. முதன் முதலாய்த் தமிழகம் ('உள்நாட்டுப்போர்' என அறிவுக்கும் வகையில் )பதினெட்டு நாள்கள் செயலிழந்து நின்றது.

கீழப்பழுவூர் சின்னச்சாமி தமிழுக்காகத் தன்னைச் சாம்பலாக்கிக் கொண்ட அவல நிகழ்ச்சி 25.1.1964ஆம் நாள் திருச்சியில் நடந்தது. நாட்டை நடுங்க வைத்த அடுத்த சனவரி 25 ஆம் நாளில், (ஓராண்டிற்கு பின்) 25.1.1965இல் இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போர் தொடங்கியது. தொடங்கிய மொழிப்போர் 15.3.1965ஆம் நாள்வரை (50 நாள்)தொடர்ந்து நடந்தது.

ஐம்பது நாள்களும் இரத்தம் சிந்திய நாள்கள்! 

அரசியல் கட்சிகளின் தலையீடு இல்லை. 

  • கோரிக்கைப் பேரணி
  • அமைதிப் பேரணி
  • உண்ணா நோன்பு
  • அஞ்சலக மறியல்
  • தொடர் வண்டி மறியல்
  • பொது வேலை நிறுத்தம் - என மாணவர்களே திட்டமிட்ட போராட்ட வடிவங்கள்! நாடுதழுவி ஒருங்கிணைக்கப்பட்ட செயல்திட்டம்! "தமிழ்நாடு மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புக் குழு" என மையப்படுத்தப்பட்ட அமைப்பு, அரசின் கவனத்தை ஈர்க்கப் படிப்படியாய் எடுத்த முயற்சிகள்! 

"தமிழை இழக்க மாட்டோம்" எனத் தமிழ்ச் சமூகத்தின் இல்லாத தரப்பினரும் தம்மை இழக்க முன் வந்து 1965இல் போராடினர்" 

இந்தியத் தலைவர்கள் வழங்கிய உறுதிமொழிகளை நம்பி, 1965 மொழிப்போர் ஒத்திவைக்கப்பட்டது. அந்த ஆண்டு நடைமுறைக்கு வரஇருந்த ஆட்சிமொழிச்சட்டம், மூன்றாண்டுகளுக்குத் தள்ளிப் போடப்பட்டது மட்டும்தான் கண்ட பலன்! 

‘ஆட்சிமொழி’ என்பது பயிற்று மொழி, தேர்வு மொழி, அலுவல் மொழி, தொடர்பு மொழி, எனும் நான்கு கூறுகளை உள்ளடக்கியது. 

‘இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சிமொழியாக நடுவண் அரசால் பயன்படுத்தப்படும்’ என்னும் திருத்தச்சட்டம் 1968இல் கண் துடைப்பாகச் சேர்க்கப்பட்டது. 

இந்தியுடன் ஆங்கிலம் நடுவணரசின் 16 துறைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்கிறது அந்தத் திருத்தச் சட்டம்! உண்மையில் நடுவண் அரசிடம் இருப்பதோ 97க்கு மேற்பட்ட துறைகளுக்கான அதிகாரம்! வழங்கிய திருத்தத்தில் உயிரில்லை.

உயிரை இழந்து நடத்திய போராட்டத்தால், உயிரில்லாத திருத்தத்தை மட்டுமே நிறைவேற்ற முடிந்தது.

எந்த மொழியின் செல்வாக்கு ஆட்சித் துறையில் ஓங்குகிறதோ, அந்த இனத்தின் வல்லாண்மையும் மதிப்பும் ஓங்கி விடும். சமத்துவம் மொழிகளுக்கிடையே நிலவும்போது, சமுதாயத்திலும் நிலவ முடியும். 

மொழிப்போர் நினைவில் கண்கள் கலங்கி நெஞ்சம் கசிவோர், நடுவண் அரசின் வழியாக இப்போது நிறைவேற்ற வேண்டிய உடனடிச் செயல்கள் உள்ளன. 

  • இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொண்டுள்ள 22 தேசிய மொழிகளையும் சமமாய் நடத்த வேண்டும்.
  • இந்தியைத் 'தேசிய மொழி' என்றும் தமிழை 'வட்டார மொழி' என்றும், அரசியல் சட்டத்திற்கு எதிராகப் பாகுபடுத்தும் போக்கைக் கைவிட வலியுறுத்த வேண்டும்.
  • அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளையே முழுமையான ஆட்சிமொழி ஆக்க வேண்டும்.
  • (இந்தியை 1983 -இல் ஏற்றுக் கொண்டதுபோல்) 22 தேசிய மொழிகளையும் திட்டக்குழுவின் திட்டப்பொருளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது இந்தியைத் திட்டப் பொருள் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.
  • 1976க்கு முன்பு இருந்ததுபோல், கல்வி உரிமையை மாநிலப் பட்டியலுக்கு வழங்க வேண்டும்.

  செல்ல வேண்டிய திசையை அறிந்து நடைபோடட்டும் நமது கால்கள்! 

தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் 

‘வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே? 

மொழிப்பபற் றெங்கே? விழிப்புற் றெழுக!' 

  • எனப் பாவேந்தர் பாரதிதாசன் பாட்டால் கேள்வி எழுப்பித் தமிழுணர்வை எழுப்பினார்.

வாழ்வால் கேள்வி எழுப்பி, நம்மை விடை காணச்  சொல்கிறது மொழிப்போர் வீரர்கள் வரலாறு! 

சிறையில் மாண்டோர் 

15.1.1939 - நடராசன் 

12.3.1939 - தாளமுத்து 

தீக்குளித்து மாண்டோர் 

25.1.1964 - கீழப்பழுவூர் சின்னச்சாமி 

26.1.1965 - கோடம்பாக்கம் சிவலிங்கம் 

27.1.1965 - விருகம்பாக்கம் அரங்கநாதன் 

27.1.1965 - கீரனூர் முத்து 

11.2.1965 - அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் 

11.2.1965 - சத்தியமங்கலம் முத்து 

15.3.1965 - மயிலாடுதுறை சாரங்கபாணி

துப்பாக்கிச் சூட்டில் மாண்டோர்

27.1.1965 - சிவகங்கை இராசேந்திரன்

10.2.1965 - கோவை, குமாரபாளையம், வெள்ளக்கோவில், திருப்பூர். கரூர், மணப்பாறை முதலிய 40 இடங்களுக்கு மேல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 பேருக்குமேல் இறந்தனர்.

12.2.1965 - ஒரே நாளில் நூற்றுக்கனக்கானோர் இராணுவத்தால் சுடப்பட்டு, குவியல் குவியலாய் உடல்கள் குழிக்குள் தள்ளி மறக்கப்பட்ட ஊர் பொள்ளாச்சி.

நஞ்சுண்டு மாண்டோர்

25.2.1965 - விராலிமலை சண்முகம்

2.3.1965- கோவை பூளைமேடு தண்டபாணி

வாளெடுத்துக் கொள்ளுங்கள்

தோளெடுத்துப் பொங்குகின்ற தமிழ்மறவீர்!

இந்தியினைத் தொலைத்தற் கென்றோர்

நாளெடுத்துக் கொள்ளுங்கள்; தாய்மனைவி

மக்கள்முன் தமிழைக் காக்கச்

சூளெடுத்துக் கொள்ளுங்கள்; வடவர்நெறி

மேன்மேலும் சூழின், கூர்த்த

வாளெடுத்துக் கொள்ளுங்கள்; வந்தமையும்

செந்தமிழ்த்தாய் வாழ்வும் அன்றே!

- கனிச்சாறு. பெருஞ்சித்திரனார்

- புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர், பாவேந்தர் பேரவை, கோவை

     (தொடரும்...)

Pin It