1

பௌத்த விளக்க அரங்கில் குழப்பம் விளைவித்த திரு.வி.க

thiru v ka 350தமிழறிஞர் திரு. வி. கலியாணசுந்தரனார் சைவ மரபில் வந்தவர். சைவத்தில் தீவிரப் பற்றுமிக்கவர். சைவசமய சாரம், நாயன்மார் திறம், நாயன்மார் வரலாறு, சைவத் திறவு, பெரியபுராணம் குறிப்புரையும் வசனமும் முதலான நூல்களை எழுதியவர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கே பௌத்தம் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமான டாக்டர் லட்சுமி நரசு மற்றும் பொது உடைமைக் கருத்துக்களைத் தமிழகத்தில் அறிமுகம் செய்த அறிஞர் சிங்காரவேலர் ஆகியோர் பவுத்தம் குறித்து நடத்திய கூட்டங்களில் சென்று, தான் சிறுவனாக இருந்த காலத்திலேயே குழப்பம் விளைவிக்கும் அளவிற்கு அவருக்கு சைவத்தின் மீது பற்று இருந்தது. அவர் எழுதியுள்ள "வாழ்க்கைக் குறிப்புகள்" நூலில் அப்படியான தனது இளமைக்காலக் குறும்பு குறித்து திரு.வி.க கூறுவது:

"யான் மாணாக்கனாக இருந்தபோது கடலோரத்தில் விளையாடச் செல்வது வழக்கம். ஐஸ் அவுசுக்குப் பக்கத்திலேயுள்ள ஒரு கட்டிடத்தில் "மகாபோதி சங்கம்" என்று தீட்டப் பெற்ற ஒரு நீண்ட பலகையைக் கண்டேன். ஒருநாள் அங்கே கூட்டம் கூடியிருந்ததைப் பார்த்தேன். அக்கூட்டம் என்னை ஈர்த்தது. ஒருவர் புத்தர் பிறப்பைப் பற்றிப் பேசினார். இன்னொருவர் நன்றி கூறினார். அவர் இலட்சுமி நரசு நாயுடு என்றும் இவர் சிங்காரவேல் செட்டியார் என்றும் தெரியலானேன். அக்கூட்டங்கள் எனக்கு வெறியூட்டின.

வெறிகொண்டு சில மாணாக்கர்களைச் சேர்த்து ஒருநாள் பௌத்த சங்கக் கூட்டத்துள் நுழைந்தேன். அப்போது சிங்காரவேல் செட்டியார் பைபிள் சரித்திர சம்பந்தமான நூலாகாது எனப் பேசி முடித்தார். மறுவாரம் யான் பெருங்கூட்டம் கூட்டிச் சென்றேன். பௌத்தம் என்ற பகுதியில் சிங்காரவேல் செட்டியார் திருஞான சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கிய சரித்திரத்தை மறுத்து வந்தார். யான் குறுக்கிட்டேன். ஒரே கூக்குரல் எழுந்தது. யாரோ ஒருவர் "வானரங்கள்" என்றார். மாணாக்கர் சும்மா இருப்பரோ? பெருங்குழப்பம் விளைந்தது. அன்று முதல் பௌத்த சங்க சொற்பொழிவுகளுக்கு தொல்லை விளைத்தே வந்தோம்."

தமது "சிந்தனைச் சிற்பி சிங்காரவேலு வாழ்வும் சிந்தனையும்" நூலில் இம் மேற்கோளை எடுத்தாளும் பெரியவர்கள் கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர், இந்தச் சம்பவம் நிகழ்ந்த காலகட்டத்தில் கலியாணசுந்தரனாரின் வயது 10 அல்லது 15 வயதுக்குள் இருக்கலாம் எனக் கணக்கிடுகின்றனர். அந்த வயதிலேயே சென்னை மெரினாவில் மீனவர் மக்கள் வசிக்கும் பகுதியில் செல்வாக்கு மிக்க வழக்குரைஞரான சிங்காரவேலர் மற்றும் அப்போது பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக இருந்த அறிஞர் லட்சுமி நரசு, பண்டிதர் அயோத்திதாசர் ஆகியோர் நடத்திய கூட்டங்களில் இந்தச் சிறுவர்கள் புகுந்து குழப்பம் விளைவிக்கும் அளவிற்கு அன்று சைவம் தீவிரமாக இருந்துள்ளதை அறிகிறோம். திரு.வி.க அவர்கள் அயோத்திதாசரின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் "மகாபோதி சங்கம்" எனக் குறிப்பிடுவதிலிருந்து அது பண்டிதரின் ஏற்பாடு தான் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.

தனது வாழ்க்கைக் குறிப்புகளில் தொடர்ந்து திரு.வி.க சொல்வது:

"கோமளீசுவரன் பேட்டை புதுப்பேட்டையிலே ஒரு பௌத்த சங்கம் கூடிற்று. அதிலே இலட்சுமிநரசு நாயுடு, சிங்காரவேல் செட்டியார் முதலியோர் பேசு கின்றனர் என்று கேள்வியுற்றேன். யான் கூட்டத்துடன் அங்கு சென்றேன். அங்குக் குழுமியிருந்த சிலர் என்னை உறுத்து உறுத்து நோக்கினர். எனக்கு அச்சமுண்டாயிற்று. யான் பேசாமலமர்ந்தேன். சிங்காரவேல் செட்டியார் டார்வின் கொள்கையைத் தமிழில் விளக்கினார். என் உள்ளம் அதில் ஈடுபட்டது."

திரு.வி.க அவர்கள் தீவிரமாகச் சைவ நெறியைப் பின்பற்றியவர் ஆயினும் பின்னாளில் அவர் ஒரு தொழிற்சங்கச் செயல்பாட்டாளராகவும், சமயப் பொறை உள்ள தமிழறிஞராகவும் விளங்கியவர். எனவே அவர் மனமாற்றம் கொண்டதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

பின்னாளில் அவர் பௌத்தம் பற்றி ஆற்றிய உரை "தமிழ் நூல்களில் பவுத்தம்" எனும் குறுநூலாக வெளி வந்துள்ளது. எந்த லட்சுமி நரசு முதலானோர் கூட்டத்தில் அவர் குழப்பம் விளைவித்தாரோ அதே அறிஞர் நரசு அவர்கள் தலைமையில் நடந்த பௌத்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரை அது. அது குறித்து அந்நூலின் முன்னுரையில் திரு.வி.க சொல்வது:

"சன்மார்க்கக் கொள்கையுடைய அடியேனை தென்னிந்திய பௌத்த சங்கச் சார்பாகச் சென்னை சிந்தாதிரிப்பேட்டை "ஹைஸ்கூல் நிலையத்தில்" 1928ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி அறிஞர் இலட்சுமிநரசு நாயுடு அவர்கள் தலைமையின் கீழ் கூடிய தென்னிந்திய பௌத்த மாநாட்டில், தமிழ் நூல்களில் பௌத்தம் எனும் பொருள்பற்றிப் பேசுமாறு அச்சங்கத்தார் பணித்தனர். அப்பணி மேற்கொண்டு, ஆண்டுப் போந்து அடியேன் நிகழ்த்திய விரிவுரையே இந்நூலின் உள்ளுறை" (தமிழ் நூல்களில் பௌத்தம், இரண்டாம் பதிப்பு, சாது அச்சுக் கூடம், இராயப்பேட்டை, சென்னை-14, 1952).

தமிழறிஞர் திரு.வி.க அவர்கள் பௌத்தத்தை எவ்வாறு காண்கிறார் என்பதை அந்நூலின் வாயிலாகப் பார்ப்போம்.

2

இடைக்காலத் தமிழகத்தில் நடந்த சமயப் போர் பற்றி திரு.வி.க

tamil book 2 350திரு.வி.க அவர்கள் சைவத்தை வாழ்நெறியாக ஏற்றுக்கொண்டு வாழ்ந்தவர். பிற சமயப் பொறை என்பதை ஏற்றுக்கொண்டவர் ஆயினும் சைவமே சிறந்த ஒன்று என்பதை அவர் வெளிப்படுத்தத் தயங்கியவரும் இல்லை. அது மட்டுமன்று. தமிழகத்தில் நடந்த சமயப் போரின் ஊடாக சமணமும் பௌத்தமும் அழிக்கப் பட்ட வரலாற்றிலும் சைவத்தின் பக்கமே நியாயம் இருந்ததாகவும் கருதுபவர். எல்லாவற்றையும் தாண்டி பௌத்தத்தின் சில அடிப்படைக் கூறுகளை நுண்மை யாக அவர் எவ்வாறு கண்டு போற்றினார் என்பதைக் காண்பதே இங்கு நமது நோக்கம்.

"மெய்யறிவு விளங்கப் பெற்றால் எல்லாச் சமயங்களும் ஒன்றே. நாலா பக்கங்களிலும் தோன்றிய சமயக் குரவர்கள் யாவரும் அறிவுறுத்திய உண்மை ஒன்றே. ஆனால் அவ் உண்மைப் பேற்றுக்குரிய முறை களில் வேற்றுமை உண்டு. இந்த முறைகள் மாறக் கூடியவை" - என அவர் முன்னுரைப்பதிலிருந்து, எல்லாச் சமயங்களின் நோக்கும் இலக்கும் ஒன்றுதான். ஆனால் அவற்றை அடையும் நெறியும் முறையும்தான் வேறு வேறு என அவர் கருதுவது விளங்குகிறது.

இந்த இலக்கை அடையும் முறைகளில்தான் அவ்வப்போது மாசுகள் படிகின்றன எனவும், அவ்வாறு திரிபுகள் நேரும் போதெல்லாம் பெரியோர்கள் தோன்றி, திரிபுகளைப் போக்கி முறைகளைச் செம்மை செய் தார்கள் எனவும், அவ்வாறு செம்மை செய்தவர்களில் ஒருவர்தான் புத்தர் எனவும் திரு.விக தன் புரிதலை முன்வைக்கிறார்.

ஆனால் மற்ற மதங்கள் யாவும் கடவுளைப் பேசுகின்றன. போற்றுகின்றன. இறைவனடி சேர் வதையே இறுதிப் பயனாக உரைக்கின்றன. ஆனால் பௌத்தம் கடவுளைப் பற்றிப் பேசுவதே இல்லையே?

திரு.வி.க அதற்கு இப்படி விளக்கம் அளிக்கிறார்.

"புத்தர் கடவுளைப் பற்றி ஒன்றும் கூறாமையான் அவரை நாத்திகரெனச் சிலர் கருதுகின்றனர். புத்தர் அறமெனும் கடவுளைச் சீலம் எனும் வழிநின்று உணருமாறு அறிவுறுத்தல் போந்தார்."

பிற மதங்கள் கடவுளை வைக்கும் இடத்தில் பௌத்தம் அறத்தை வைக்கிறது என்பதையும். பிற மதங்கள் தம் இலக்கை அடைய பக்தி, வேள்வி, நோன்பு, புனித நீராடல் முதலான வழிமுறைகளை வைக்கும் இடத்தில் பஞ்சசீலம், தட்சீலம், எண்வழிப் பாதை முதலான அறவழிகளை மட்டுமே தன் இறுதி இலக்கை அடையும் நெறிகளாக பௌத்தம் முன் வைக்கிறது என்பதையும் திரு.வி.க மிக அற்புதமாகச் சொல்லிவிடுகிறார்.

அது மட்டுமல்ல, பௌத்தத்தின் தோற்றம் குறித்தும் திரு.வி.க மிகச் சரியான வரலாற்று உண்மை களை முன்வைக்கிறார். இலக்கை அடையும் வழிமுறை களில் மாசுகள் படியும்போது அவற்றை நீக்கி முறை களைச் செம்மை செய்ய வந்தவராகப் புத்த பெருமானை முன்வைக்கும் கலியாணசுந்தரனார் அந்த "மாசுகள்" குறித்தும், அந்த மாசுகளை நீக்கப் போந்தவர் குறித்தும் இப்படிச் சொல்கிறார்:

"கடவுளை வேதம் எனும் நூலாகவும், யாகம் எனும் கொலைக் குழியாகவும், சாதி எனும் சாக்கடையாகவும் மன்பதை கொண்டதை மாற்றப் போந்த அறவோன், பெருமான்..." அவரே புத்தர்.

ஆக வேதம், யாகம் முதலியவற்றால் திரிந்து கேடு சூழ்ந்த உலகத்தைத் திருத்தவந்த அருளாளர்தான் புத்தர் என்பதை திரு.வி.க ஏற்றுக் கொள்கிறார். ஆனால் இன்று புத்தம் தான் தோன்றிய காலத்து அறங்களை எல்லாம் மறந்து இலங்கை, மியான்மர் முதலான நாடுகளில் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதை நாம் பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். அது குறித்தும் திரு.வி.க.வின் பார்வை சரியாகவே அமைகிறது.

"...புத்தர் பெருமான் போதனை இப்போது பௌத்தரென்று சொல்லிக் கொள்ளும் பலரிடமுஞ் சாதனையில் இல்லை... சமயக் குரவர்கள் செல்வழி எப்போதும் உலகம் நடப்பதில்லை. சமயக்குரவர் உருவங்களுக்கு மட்டும் வந்தனை, வழிபாடுகள் நிகழ்த்தி, அவர்களின் அறவுரைகளைக் குழிவெட்டிப் புதைப்பது உலகின் இயல்பாகிவிட்டது. இதற்கு சமயக் குரவர்கள் என் செய்வார்கள்? சமயம் என் செய்யும்...?"

இப்படி இதுவரை எல்லாவற்றையும் மனமாரச் சொல்லிவரும் அறிஞர் கலியாணசுந்தரனார் தமிழக வரலாற்றின் இடைக்காலத்தில் இங்கு நடந்த சமயப் போரைச் சொல்லும்போது மட்டும் சற்றே நிலை தடுமாறுகிறார்.

சமண பௌத்த மதங்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டதை முதன்மைப்படுத்தியும், சமண பௌத்த மதங்களை அரசதிகாரத் துணையுடனும், கழுவேற்றல் முதலான வன்முறைகளினூடாகவும் சைவம் அழித்ததைத் தலைகீழாக்கியும் முன்வைப்பதைப் பார்ப்போம்.

"அறத்தில் பெரிதும் ஒற்றுமை வாய்ந்த சமண பௌத்த மதங்களே பின்னாளில் மறைந்து போரிட லாயின. பிற்காலத்திய சமண பௌத்தர்கள் போரைத் தம்மளவிலாவது நிறுத்திக் கொண்டார்களா? அவர்கள் தங்களுக்குரிய அறவொழுக்கங்களையும் முற்றாக மறந்து, கடவுள் இன்மை என்பதில் மட்டுமே கருத்தைச் செலுத்தி, மன்னர்களைத் தங்கள் வயப்படுத்திக் கடவுள் உண்மையில் உறுதியுடையவர்களைப் பலவாற்றாலும் துன்புறுத்தினார்கள்..."

"கண்டுமுட்டு, கேட்டுமுட்டு போன்ற கொடிய வழக்கங்கள் அவர்கள் வாழ்வில் நுழைந்த ஒன்றை ஈண்டுக் குறித்தல் தகும். சமண பௌத்தர்கள் என்று சொல்லக் கூடிய மக்கள் தங்களுக்குரிய சீலத்தை விடுத்துச் சீற்றத்தைக் கொண்டார்கள். இதற்கு சமணம் என் செய்யும்? பௌத்தம் என் செய்யும்?"

இது திரு.வி.க அவர்கள் இடைக்காலத்தில் இங்கு நடந்த சமயப் போர் குறித்துச் சொல்வன.

இங்கே ஒரு காலத்தில் அரச ஆதரவுடன் சமண பௌத்த அவைதீக மதங்கள் மேலெழுந்த நிலையில் சைவ சமயக் குரவர்களால் முன்னெடுக்கப்பட்ட பக்தி இயக்கம் மக்கள் ஆதரவையும் அரசாதரவையும் ஒருங்கே பெற்று அவற்றை வீழ்த்திய வரலாற்றை நாம் அறிவோம். இதன் பின்னணியில் பல வரலாற்றுக் காரணங்கள் இருந்தன. அதில் சமயம் சார்ந்த காரணிகளுக்கும் பங்குண்டு. சமயம் சாராத காரணிகளும் உண்டு. தமிழகத்தில் இக்காலகட்டத்தில் உருவான உறபத்தி முறை மாற்றங்கள், நிலவுடைமையின் வெளிப்பாடு முதலியன இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்தப் போரில் சமண பௌத்த மதங்கள் எந்தத் தவறுகளையும் செய்யவில்லை என நாம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் வன்முறைகளுக்கான எல்லாப் பொறுப்புகளையும் சிரமண மதங்களின்பாற் சுமத்தி சைவத்தைக் களங்கமற்றதாக முன்வைப்பதை நாம் ஏற்க இயலாது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் முதலா னோர் எத்தனை வன்மத்துடன் சமண, பௌத்தத் தையும், சிரமண முனிவர்களையும் இழிவு செய்தனர் என்பதையும், எத்தனை வன்முறையாக அவர்கள் வெளிப்பாடுகள் அமைந்தன என்பதையும் நாம் இங்கே பட்டியல் போடும் முயற்சியில் இறங்க வேண்டாம்.

எனினும் கலியாணசுந்தரனார் அவர்கள் "கண்டு முட்டு, கேட்டுமுட்டு" என்பது போன்ற கொடிய வழி முறைகளைப் பயன்படுத்திச் சமண பௌத்தர்கள், தமக்குரிய சீலங்களைக் கைவிட்டுச் சீற்றத்தைக் கைக் கொண்டு, சைவத்துடன் போரிட்டதாகச் சொல் கின்றனரே அதுவென்ன?

3

கண்டு முட்டும் கேட்டு முட்டும்

"கண்டுமுட்டு கேட்டு முட்டு" பற்றித் திருஞான சம்பந்தர்,

"நீற்றுமேனிய ராயினர் மேலுற்ற

காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்" (தேவாரம்)

எனக் கூறுவதை ஒட்டித்தான் திரு.வி.கவும் பௌத்த சமண மதத்தவரைச் சீலமற்றவர்கள் என்கிறார். திருநீறு பூசிய மேனியர் மீது படும் காற்றும் தங்கள் மீது படக் கூடாது என்கிற நிலையை அமண மதத்தினர் மேற் கொண்டதாகச் சம்பந்தர் கூறுவதுதான் இக்குற்றச் சாட்டின் அடிப்படையும் ஆதாரமும்.

ஆனால் இந்தக் "கண்டு முட்டு கேட்டு முட்டு" என்பதற்கு வேறு பொருளைச் சமணம் முன்வைக்கிறது. "முட்டு" என்பது தடை எனப் பொருள்படும் சொல். சமண முனிவர்கள் மக்களிடமிருந்து ஒதுங்கி மலைக் குகைகளில் படுக்கைகள் அமைத்து அங்கே தவமியற்றி வாழ்ந்தவர்கள் என்பதை அறிவோம். பட்டினி நோன்பு என்பது அவர்களின் வாழ்முறைகளில் ஒன்று. உணவு அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. எந்தெந்த முறை களில் எல்லாம் உணவைத் தவிர்ப்பது என அவர்களுக்கு நியதிகள் உண்டு. மலைக்குகைகளில் ஒதுங்கித் தங்கியுள்ள இவர்கள் தமக்குள் முறை வைத்துக் கீழிறங்கி மக்கள் வசிக்கும் தெருக்களில் அமைதியாகச் செல்வர். இல்லறத்தில் உள்ளோர் இப்படியான முனி - சாமிகளின் வருகைக்காகக் காத்திருந்து, அவர்கள் வரும்போது சென்று அவர்களின் கரங்களில் அமுதிடுவர். அவர்களும் வீதியில் நின்றவாரே அதை உண்டு தம் இருப்பிடம் திரும்புவர்.

சமண வழியினரான திருவள்ளுவர்,

"துறந்தார்க்கும் துவ்வா தார்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை"

"செல்விருந் தோம்பி வருவிருந்து-பார்த்திருப்பான்

நல்விருந்து வானத்த வர்க்கு"

எனக் கூறுவன இந்தப் பின்புலத்திலிருந்து சொல்பவை தான் என்கிற கருத்தும் உண்டு. "செல்விருந்து" என்பது இப்படித் தெருவில் செல்லும் புனிதர்களுக்கு அன்னம் அளிப்பதைக் குறிப்பதுதான் என்பதாக அவர்கள் விளக்கம் அளிப்பர்.

அப்படிப் பிச்சை ஏற்றுப் பசி தீர்த்துக் கொள் வதற்காகத் தம் ஒதுங்கிடங்களிலிருந்து இறங்கி வருங் காலை அவர்கள் சில காட்சிகளைக் காண நேர்ந்தால் பிச்சை ஏற்பதைத் தவிர்த்துப் பசி ஆறாமலேயே தம் இருப்பிடம் திரும்புவர். அப்படித் தவிர்ப்பதற்கு ஏதுவாகும் காட்சிகளைத்தான் சமணர்கள் "முட்டு" என்கின்றனர். "கண்டு முட்டு" எனில் காட்சியால் விளையும் தடை; "கேட்டு முட்டு" என்பது செவிப் புலனூடாக விளையும் தடை. இது குறித்துச் சமணர்கள் இவ்வாறு விளக்குவர்:

"தாம் உணவுண்ணும் முறைநாட்களில் தம் இருப்பிடங்களிலிருந்து கீழிறங்கி" வரும் வழிகளிலே கொலைகள், வேட்டையாடல்கள் போன்ற தீய செயல் களைக் கண்டால் உணவருந்த முட்டாகி விட்டதென மலையை நோக்கித் திரும்பி விடுவார்கள். அதே போன்று புலாலுணவு, கள் குடித்தல் போன்ற பேச்சுகளும், தீய சொற்களும் செவியில் விழுந்தால் முட்டெனத் திரும்பி விடுவார்கள். இவைகள் யாவும் நிகழாமல் ஊருக்குள் வந்து உணவேற்கும் நேரத்தில் காக்கை, கழுகுகள் வட்டமிட்டுக் கத்தினாலும் உணவைத் துறந்து நேரே சென்று விடுவார்கள். இவைகளையே கண்டு முட்டு, கேட்டு முட்டு என்று கூறுவதுண்டு."

இது குறித்துத் "தத்துவ நிஜானு போகசாரம்" என்ற நூல்,

"கொன்றல் வேட்டல் குறைத்தல் கூப்பிடல்

கோழி கூகைகள் காகமும்

தின்றல் சோறெனப் புலா லிறைச்சிகள்

தீய சொற்கள் செப்புதல்

என்ற சொற்கள் அனந்தமும் செவி

யெய்திடில் சரிகைத் திறம்

அன்று முட்டென வோதும் முக்குடை

ஆதிநாதர் ஆகமம்"

என விளக்கம் அளிப்பது இங்கே கருதத் தக்கது..

இதைத்தான் ஞானசம்பந்தர் அத்தனை வெறுப் புடன் குறிப்பிடுகிறார். திருநீரணிந்த மேனியரின் காட்சிகள், சொற்கள் ஆகியவற்றையே வெறுக்கும் அளவிற்குச் சமயப் பொறை அற்றவர்கள் என அமணர்கள் பற்றித் திரித்துரைக்கிறார்.

வேண்டுமானால் இப்படி நிகழ்ந்திருக்கலாம். சைவசமயத்தின் உட்சமயங்களாக அக்காலத்தில் விளங்கிய காபாலிகம், காளாமுகம், பாசுபதம் போன்ற பிரிவினர் குடித்தல், ஊன் உண்ணல், மண்டை ஓடுகளை மாலைகளாகவும், உண்ணும் பாத்திரங்களாகவும் தரித்துக் கொண்டும், வீதிகளில் பலவாறும் தீய சொற்கள் எனக் கருதுபவற்றைப் பேசிக் கொண்டும் அலைந்தனர் என்பதற்கு மகேந்திரபல்லவனின் "மத்தவிலாசப் பிரகசனம்" எனும் நாடக நூல் நமக்குச் சாட்சியமாகக் கிடைக்கிறது. அப்படியான காட்சிகளையும், சொற் களையும் வேண்டுமானால் அமண முனிவர்கள் தவிர்த் திருக்கக் கூடும்.

இங்கு இன்னொன்றையும் குறிப்பிடல் தகும். சமண முனிவர்கள்தான் இவ்வாறு ஒதுங்கி இருந்தனர். இத்தனை தீவிரத்துடன் தமது நோன்புகளைக் கடை பிடித்தனர். பௌத்தத் துறவிகள் அவ்வாறு ஒதுங்கி வாழ்ந்தது இல்லை. புத்தர் ஒரு ததாகதர், வழிப்போக்கர். தம் சீடர்களுடன் தம்மை ஆதரிப்போர் உவந்து அளிக்கும் ஜேதவனங்களில் தங்கிச் செல்லும் வழக்க முடையவராகவே அவரும் அவரது சீடர்களும் இருந்தனர். புத்தபிரான் எதையும் முட்டென ஒதுக்கியதில்லை. மக்கள் அன்புடன் அளிக்கும் எதுவாயினும், அது சுஜாதை தங்கக் கிண்ணத்தில் அளித்த பாற் சோறாயினும், சுந்தன் அளித்த இளம் பன்றிக் கறியானாலும் ஒதுக்காது ஏற்றுக் கொண்டு அவர்களின் அன்பிற்கு மரியாதை அளித்தவர்.

அதுமட்டுமல்ல, நடந்து கொண்டு இருப்பது நூற்றுக்கணக்கான உயிரினங்களை நெருப்பிலிட்டு நடத்தப்படும் வேள்வியாயினும் அதை முட்டென ஒதுங்கிச் செல்லாமல், அங்கு சென்று அந்த வேள்வியைச் செய்து கொண்டிருப்போருடன் பேசத் தயங்காதவர். அவர்களை வென்றெடுப்பதையே நோக்காகக் கொண்டு வாழ்ந்தவர்.

திரு.வி.கலியாணசுந்தரனார் இவற்றையெல்லாம் புறந்தள்ளி, சமணம், பௌத்தம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகளையும் கருத்தில் கொள்ளாமலே இச்செய்தி களைப் பெய்துள்ளார் என்றே நாம் கொள்ள வேண்டும்.

எனினும் அன்று இராயப்பேட்டை புத்த சங்கத்தில் ஆற்றிய அந்த உரையில் பௌத்தம் குறித்த வெறுப்பு ஏதுமின்றி மிக நல்ல புரிதல்களுடன் மிக நுணுக்கமாகப் பலவற்றையும் அவர் கூறியிருத்தலைத் தொடர்ந்து காண்போம்.

4

தமிழிலக்கியம் முழுமையிலும் பௌத்தத் தாக்கம் விரவிக் கிடக்கிறது

"ஈங்கொரு சமயக் கணக்கனாக நின்று கடனாற்றப் புகுகின்றேன் இல்லை. ஒரு ஆராய்ச்சிக்காரனாக நின்றே கடனாற்றப் புகுகின்றேன்" - என்று தன் உரையைத் தொடங்குகின்றார் திரு.வி.க. தான் சில உறுதியான சமய நம்பிக்கைகளைப் பின்பற்றுபவன் ஆனபோதிலும், தன் நம்பிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல். ஒரு ஆராய்ச்சியாளனாக நின்று, என் அறிவிற்குப் பட்டதை உரைப்பேன் என்பது பொருள். அந்த வகையில் தன் உரை முழுவதையும் தனது மத நம்பிக்கைகளின் தாக்கம் ஏதும் இன்றி இங்கே முன்வைக்கிறார்.

"தமிழிலக்கியங்களில் பௌத்தம்" எனும் தன் தலைப்பிற்கேற்ப தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், திருமுறைகள், கம்பராமாயணம், புராணங்கள், பிற்பட்ட நூல்கள் என்பதாகத் தமிழிலக்கியம் முழுமையையும் பிரித்துக்கொண்டு இவற்றில் வெளிப் படும் பௌத்தக் கருத்துக்களையும், தாக்கங்களையும் சுருக்கமாக முன்வைக்கிறார்.

தொல்காப்பியத்தைத் திரு.வி.க சங்கத்திற்கு முற்பட்டதாகக் கூறுகிறார். இது சர்ச்சைக்குரிய ஒன்று. தவிரவும் புத்தர் காலத்துக்கு முற்பட்ட நூலாகவும், அதாவது கி.மு 6ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகவும் அதை அணுகுகிறார். இக்கருத்து உண்மையாயின் பௌத்தத் தாக்கம் ஏதும் அதில் உண்டா எனத் தேடிப் பயனில்லை. இறைமை குறித்துத் தமிழர்களின் பூர்வ நம்பிக்கை எவ்வாறிருந்தது என அறிய மட்டுமே தொல்காப்பியம் பயன்படும் எனக்கூறும் திரு.வி.க, அது ஒருவகையான இயற்கை வழிபாடு என்கிறார். சேய், மால், வேந்து, வண்ணம் என்றெல்லாம் தொல்காப்பியம் உரைப்பது இந்த இயற்கை அழகைத்தான் என்கிறார். அப்போது தமிழர்கள் மத்தியில் சாதி உணர்வும் கிடையாது எனவும், "கந்தழி" எனக் குறிப்பிடப்படுவது அழுக்காறு, அவா, வெகுளி எனும் இம்மூன்று தீக்குணங்களும் அகன்ற ஒரு கட்டற்ற நிலைதான் என உரைக்கும் திரு.வி.க, பழந்தமிழர்களிடம் அறம், பொருள், இன்பம் எனும் சிந்தனைதான் இருந்ததே அன்றி "வீடு" எனும் கருத்தாக்கம் இல்லை எனவும் குறிப்பிடுகிறார். மொத்தத்தில் இறை, மதம், சாதி முதலான கருத்துக்கள் உருவாகாத, இயற்கையோடு இயைந்த ஒரு வாழ்வுக் குரிய காலமாக அவர் தொல்காப்பிய காலத்தைக் குறிப்பிடுகிறார்.

புத்தர் தோன்றிய காலத்தைச் சொல்ல வருகையில் அதைக் "கொலையும், குடியும், களவும், சாதிக் கொடுமையும்" வேள்வியின் பெயரால் உயிர்க்கொலை களும் நிறைந்த காலமென்கிறார். "இக்கொடுமைகளை ஒழிக்க அறக்கிளர்ச்சி" ஒன்றைச் செய்த ஒரு கிளர்ச்சி யானாகப் புத்தரை திரு.வி.க முன்னிறுத்துவது குறிப்பிடத்தக்கது. வேள்வி மற்றும் பிறப்பில் உயர்வு தாழ்வு, அதாவது வருணம் ஆகியவற்றை ஒழித்து, யாண்டும் ஜீவகாருண்யம், சீலம், சமரசம் ஆகியவற்றை ஓம்பிய கிளர்ச்சியாளர்தான் புத்தர் எனக் கூறுவதோடு, இதுவே தொல்காப்பியம் கூறும் பழந்தமிழர்க் கொள் கையும் கூட என முன்வைத்து மேலே நகர்கிறார் திரு.வி.க.

தொல்காப்பியம் குறித்த திரு.வி.கவின் கருத்தை நாம் ஏற்க வேண்டும் எனில் அதில் ஆங்காங்கு வெளிப் படும் இதற்கு முரணான கருத்துக்களைப் பிற்சேர்க்கை களாகவே கருத வேண்டும். அப்படியான பிற்சேர்க் கைகள் பழம் நூல்களில் மேற்கொள்ளப் பட்டுள்ளது உண்மையே.

சங்க இலக்கியங்களான பாட்டு, தொகை மற்றும் கீழ்க்கணக்கு நூல்களைப் புத்தருக்குப் பிந்தியவை என ஏற்கும் திரு.வி.க, அவற்றில் பௌத்த தாக்கங்கள் மிகத் தொடங்கின என வாதிடுகிறார். கொலை, கொல்லாமை, கள்ளுண்ணல், கள்ளுண்ணாமை, பிற சமயக் கோவில்கள், பவுத்தப் பள்ளிகள், ஊன்வேள்வி, ஊனமில்வேள்வி எனத் தமிழ்நாடு அப்போது பெரிய "கலம்பகமாக" இருந்த தென்றாலும் அவற்றுக்கிடையே கலகம் ஏதும் இல்லாத காலம் அது என்கிறார்.

"நாளடைவில் புத்தர் பெருமானின் அறநெறியே நாட்டில் ஓங்கி வளர்ந்தது. பதினெண்கீழ்க்கணக்கின் பாற்பட்ட நாலடியாரும் திருக்குறளும் இக்கருத்தை உறுதிப்படுத்தும். நாலடியாரும் திருக்குறளும் ஊன் வேள்வியையும், கொலையையும் எவ்வளவு உரமாகத் தடித்திருக்கின்ன என விரித்துரைக்க வேண்டியதில்லை. இதனால் விளங்குவதென்னை? புத்தர் பெருமானின் சென்னெறியின் வெற்றியே விளங்குகிறது" என பவுத்தக் கருத்துக்கள் பழந்தமிழ்க் கொள்கையினூடாகப் புகுந்து கலகம் விளைவித்ததன் ஊடாக வேள்விப் பண்பாட்டுத் தாக்கங்களை வீழ்த்தின என்கிறார் திரு.வி.க.

இங்கொன்றைச் சுட்டிக்காட்டுவது அவசியம். நாலடியார், திருக்குறள் ஆகியவற்றினடியாக வெளிப் படும் அறச் சிந்தனைகள் சமணம் சார்ந்தவை என்பது தான் இன்று பொதுவில் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்து. எனினும் இங்கு வி.க அதைப் பௌத்தத்தின் வெற்றியாகக் குறிப்பிடுகிறார்.

இதுகுறித்த நம் ஐயத்தை அவர் உடனடியாகப் போக்குகிறார்:

"சமணமும் பௌத்தமும் அறத்தில் பெரிதும் வேறுபடுவனவல்ல. மிகச்சில வேறுபாடுகளேயுண்டு. அவ்வேறுபாடுகளை ஈண்டுக் கருதல் அநாவசியம்" - என இதற்கான தன் விளக்கத்தை அளிக்கும் அவர் இரண்டுக்குமான முக்கிய வேறுபாடாகத் தான் கருதும் ஒன்றை மட்டுஞ் சுட்டிக் காட்டிவிட்டு மேற்செல்வார். அது:

"சமணர் உயிருண்மையை வலியுறுத்துவார்; பௌத்தர் அதை மறுப்பார்" எனக் கூறி அகலும் திரு.வி.க, "நாலடியாரைச் சமண நூல் எனவும், திருக்குறளை சமண அறம் சார்ந்த பொது நூல்" எனவும் மிகச் சரியாக மதிப்பிடுவார்.

"புத்தர் பெருமானின் அருளறம் திருக்குறளில் யாண்டுங் கமழ்ந்து கொண்டிருத்தலே ஈண்டுக் கருதற் பாலது. அறத்தில் சமன பௌத்த சமயங்களில் எவ்வித மயக்கமும் எவருங் கொள்ள வேண்டியதில்லை" என அவர் கூறும்போது சிரமண அவைதீக மதங்கள் வலியுறுத்தும் அறங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. உயிருண்மை முதலான தத்துவார்த்த வேறு பாடுகள் வேண்டுமானால் இருக்கலாம் என்றாகிறது. இதுவும் ஏற்புடையதுதான்.

ஐம்பெருங் காப்பியங்களில் சிந்தாமணி பௌத்த நூலாயினும் அதில் காணும் அறங்கள் யாவும் பௌத்தத்திற்கு அரண் செய்பவைதான் என்றும், சமண அறங்களில் பௌத்த அறங்களும் ஒன்றிவிடும் எனவும் கூறும் அவர் தொடர்ந்து சிலப்பதிகாரம், மணிமேகலை எனும் தமிழின் இரட்டைக் காப்பியங்கள் பற்றிச் சொல்வன நம் நெஞ்சை நெகிழ வைக்கும். அது:

"(அந்த) இரண்டு நூல்களின் நினைவு தோன்றும் போதே என் உள்ளம் இன்பக்கடலாடுகிறது. அவ் விரண்டு நூல்களையும் ஈன்ற தமிழ்நாட்டை மீண்டும் காணவேண்டும் என்பது என் தணியாக் காதல்."

சிலப்பதிகாரம் சமணநூல் என்பது ஆய்வாளர்களின் முடிபு. மணிமேகலை பௌத்த நூல் என்பதை விளக்க வேண்டியதில்லை. "சிலப்பதிகாரம் சமண நூலாயினுமாக; பௌத்த நூலாயினுமாக. அதில் பௌத்த அறம் மலிந்து கிடக்கிறது. பௌத்த தருமமே சிலப்பதிகாரம் எனும் நாடகத் தமிழ் நூலாக உருக்கொண்டதென நான் கூறுவேன்" என வியந்து மேற்செல்லும் திரு.வி.க கோவலனும் கண்ணகியும் சோழநாடு விடுத்து பாண்டி நாடு செல்லும் போதான வழிநடைக் காட்சிகள் உட்பட எங்கும் சிலப்பதிகாரத்தில் பவுத்த அறங்கள் ஒழுகி வழிகின்றன எனச் சொல்லி. "புத்த பெருமான் எல்லாவற்றையும் தர்மமயமாக்கிவிட்டார்" என்பார்.

சிலம்பை இப்படி வியக்கும் கலியாணசுந்தரனார் மணிமேகலையை ஒரு அறநிலையம் எனத் தொழுவார்.

"மணிமேகலையின் சொல்லெல்லாம் அறம். பொருளெல்லாம் அறம். மணிமேகலையின் நாடெல்லாம் அறம். காடெல்லாம் அறம். புத்தர் பெருமானைத் தமிழிற் காட்டும் ஒரு அற நிலையம் மணிமேகலை"  என நெகிழ்வார்.

பௌத்தம் அல்லாத பிற சமயத்தார்களின் கொள்கைகளை எல்லாம் ஒவ்வொன்றாகக் கேட்டு மறுப்பதாக அமையும் "சமயக் கணக்கர் திறங் கேட்ட காதை"யில் அக்காலத் தமிழகத்தில் மிளிர்ந்த சமயங் களை எல்லாம் காணக் கிடைப்பதைச் சொல்லி, பூத வாதத்திற்கும் (உலகாயதம்), பௌத்தத்திற்கும் இடை யிலான வேறுபாடாக மணிமேகலை முன்வைப்பதை மட்டும் சுட்டிக் காட்டுவார்.

"இம்மையும் இம்மைப்பயனும் இப்பிறப்பே / பொய்மை மறுமையுண்டாய் வினை துய்த்தல்" - எனப் பூதவாதி மறுபிறவி என்பதொன்றும் இல்லை என்பான். ஆனால் ஏற்கனவே புத்த பீடிகையின் மூலம் தன் முற்பிறப்பை உணர்ந்துள்ள மணிமேகலை உள்ளுக்குள் நகைப்பாள். அதற்கு முன்வரை பல்வேறு சமயக் கணக்கர் களின் திறங்களையும் அறிந்து, அவை தவறென்று உணர்ந்தாளென்றாலும் பதில் கூறாமல் அடுத்தவர் கொள்கையைக் கேட்கத் துவங்கும் மணிமேகலை இப்போது இந்த உலகாயதவாதியிடம் மட்டும் வாதிட்டு வெல்வாள். இதைச் சுட்டிக் காட்டும் திரு.வி.க. இங்கு சிலர் பௌத்தத் தத்துவம் உலகாயதம் தான் எனச் சொல்வதை நினைவூட்டி, அவர்கள் பௌத்த நூலாராய்ச்சி இல்லாதோர் என்பார். "இம்மை, மறுமை, நல்வினை, தீவினை, உயரிய நிர்வாண நிலை முதலியன பௌத்தத்திலுண்டு. இவ்வுண்மை மணிமேகலையை ஒருமுறை வாசிப்போர்க்கும் இனிது புலனாகும். மெய்யுணர்வு விளங்கியதும் பழம்பிறப்புணர்தல் என்பது பௌத்தத்தின் சிறந்த கொள்கைகளுள் ஒன்று" எனக் கூறி மணிமேகலைக் காலத்து அறஞ்செறிந்த தமிழ் நாட்டை மீண்டும் காண்போமா என வியப்பார்.

"மணிமேகலை நமக்கு வழங்கும் அமுதச் செம்பொருள்களைப் பருகாத மக்கள் மக்களா என்று வினவுகிறேன். மணிமேகலையில் எங்கணும் அறம்; எங்கணும் அன்பு; எங்கணும் அருள். மணிமேகலையில் சாதி கடிதல், பலி யழித்தல், உயிர்க்கொலை நிறுத்தம் முதலியன யாண்டும் யாண்டும் மிளிர்கின்றன. மணிமேகலையில் ஒப்புரவில்லா இடமுண்டோ. பழம் பிறப்புணர்வோ மணிமேகலையில் பரந்தொளிர்கிறது. அவ்வற நூலின் மாண்பை என்னென்று சொல்வேன்?" என நெஞ்சுருகிச் சொல்வார்.

வளையாபதி, குண்டலகேசி எனும் இரு பௌத்த காப்பியங்களும் இன்று முழுவதும் கிடைக்காமற் போனமைக்காக மனம் நெகிழும் திரு.வி.க, கிடைக்கும் பாக்களின் ஊடாகப் பார்க்கும்போது முன்னதில் பௌத்தம் உயிர்நாடியாக உள்ளதும், பின்னதில் "பழம் பௌத்தம்" ஒளிர்வதும் கண்கூடு என்பார்.

பழம் பௌத்தம் எனத் தான் சொன்னதற்கான காரணத்தையும் விளக்குவார். சமணம், பௌத்தம் இரண்டும் பின்னாளில் சமய வாதங்களில் ஈடுபட்டன என்றும், "அறம் எனும் உயிர்நாடி அறப்பெற்று வெறும் பெயர் எனும் உடலங்களாக மட்டும் உலவலாயின" என்றும் விளக்கி, காப்பிய காலத்திற்குப் பிந்திய பௌத்த சமண மதங்கள் தம் அறப் பண்பில் தாழ்ந்தன என உணர்த்துவார். எனினும் எல்லா சமயங்களுக்கும் நேரும் கதி இதுதான் எனவும், மக்களின் குறைபாடுகளே அதற்குக் காரணம் எனவும் ஆறுதல் கொள்வார்.

அடுத்ததாகத் திருமுறைகளில் பௌத்தம் குறித்துப் பேச உள்ள நிலையில் இப்படியான ஒரு முன்னுரைப்பு சைவ நெறியாளரான திரு.வி.க.வுக்குத் தேவைப் படுவதைப் புரிந்து கொள்கிறோம். எனினும் அவர் சொன்னதை நம்மால் முற்றிலும் மறுக்கவும் இயலாது. அரச மதங்களாக இன்று இலங்கையிலும், மியான் மரிலும் கோலோச்சும் பௌத்தம் அவ்வாறு தன் அற அடிப்படைகளை இழந்து நிற்பதைப் பார்க்கிறோம் தானே.

தொடரும்

Pin It