varanda traditional house 350‘மனை’ என்று இலக்கியங்களில் குறிப்பிடப்படும் குடியிருப்புகள் திண்ணை, தூண், அட்டில், முற்றம், படிக்கட்டு, சாளரம், வாயில், மாடம் என்ற அமைப்பு களுடன் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவ்வமைப்புகள் குடியிருப்புக் கட்டமைப்பின் வளர்ச்சிக் காலங்களில் இடம் பெற்றிருந்தன. இவை பொருளாதாரத்தில் சற்று உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் குடியிருப்புக் கட்டமைப்புகளாக இருந்திருக்கக்கூடும் எனக் கருத முடிகிறது.  

மனை விளக்கம்

‘மனை’ என்ற சொல்லிற்குக் குடியிருப்புடைய வீடு, குடும்பம், இல், சிற்றில், பேரில், நற்றாய், பசுதொழுவம், சூதாடு பலகையின் அறை, நிலஅளவு வகை, மனைவி, வாழ்க்கை, வெற்றிடம், 2400 சதுரடி அல்லது குழி, நிலப்பகுதிகள் எனப் பல பொருள்கள் காணப்படு கின்றன. ‘மனை’ என்ற சொல் பதினைந்து பொருள்களை குறிப்பிடுகின்றது.” பொதுவாக மனை என்பதற்கு வீடு என்னும் பொருள்தான் மிகுதியாகக் கூறப்படுகின்றது. மனைவியின் மாட்சி, மனை அமைவிடச் சிறப்புப் பற்றி இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. இப்பதிவுகள் மூலம் மனைகள் கட்டப்பட்டிருந்த முறைகள், சுற்றுப்புறச் சூழல் போன்றவற்றை அறியமுடிகின்றன. முறைப் படுத்தப்பட்ட ஒழுங்கான கட்டமைப்பில் அமைந்த குடியிருப்புகளை மனை என்று இலக்கியங்களில் சுட்டப்படுகின்றன. இதனை,

“கூரை நல்மனைக் குறுந்தொடி மகளிர்” (நற்79:2)

“............நளிமனை நெடுநகர்” (ஐங்குறு.324:3)

“மனைக் கொண்டு புக்கனன் நெடுந்தகை” (அகம்.384:13)

“நெடு நா ஒள; மணி கடிமனை இரட்ட” (நற்.40:1)

“திருவுடைத் திருமனை ஐது தோன்று கமழ் புகை

வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்

குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே”

(புறம்.379:16-18)

“துஞ்சு மனை நெடுநகர் வருதி” (ஐங்குறு.60)

என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.

சிற்றில்

‘சிற்றில்’ என்பதற்கு சிறுகுடில், சிறுவீடு, சிறுமியர் கட்டி விளையாடும் மணல்வீடு, சிற்றில் பருவம் எனத் தமிழ் அகராதி பொருள் கூறுகின்றது. சிறுவடிவமைப்பை யுடைய வீடுகளைச் சிற்றில் என இலக்கியங்கள் கூறுகின்றன. சிறுமிகள் மணலில் கட்டி விளையாடும் சிறுமணல் வீடும் என்று அழைக்கப்படுகிறது. இதனை,

“சிற்றில் நல் தூண்.......................” (புறம்.56:1)

“வரிபுனை பரி சிறந்து ஓடி” (நற்.123:8)

ஏன்ற பாடலடிகள் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய வீடுகள் தூண்களுடன் கூடிய அமைப்புடன் இருந் துள்ளன. வளைந்த கால்களைத் தூண்களாகக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. இதனை,

“இடுமுள்வேலி முடக்கால் பந்தர்

புதுக்கலத்து அன்ன செவ்வாய் சிற்றில்”

(அகம்.394:9-10)

வீட்டின் முன் பந்தல் அமைப்புடன் கூடிய காய்ந்த முள் குச்சிகளைக் வேலியாகக் கொண்டு அமைக்கப் பட்ட வீட்டின் கட்டமைப்பைத் தெளிவாக அறிய முடிகிறது. பாடலடிகளில் செவ்வாய் சிற்றில் என்று கூறப்பட்டுள்ளதால் செம்மண் பூசப்பட்ட சிறிய மனைகளாகத் தெரிகிறது.

பேரில்

பெரிய அளவில் கட்டமைக்கப்பட்டிருந்த வீடு களைப் பேரில் என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. குடியிருப்பதற்குரிய வீட்டின் உறுப்புகள் குலைந்து செல்களால் சிதைக்கப்பட்டிருந்தாலும் ஒழுகாத நிலையில் பெரிய அளவிலான வீடுகள் இருந்துள்ளன. இதனை,

“அந்தோ! எந்தை அடையாப் பேரில்” (புறம்.261:1)  

என்ற பாடலடிகள் மூலம் அறியலாம்.

முன்றில் அமைப்பும் பயன்பாடும்

முன்றில் என்பது வீட்டின் முன்பகுதியாகும். வீட்டின் முன்நில அமைப்பு இன்றைய நாளில் நாகரிக வாழ்விடத்தின் உயர்நிலையாக விளங்குகிறது. பழந்தமிழ் மக்கள் பண்பாட்டினை அறியும் போது முன்றில் பயன்பாடு மிகுதியாக இருந்திருக்கிறது எனலாம். ஏனெனில் முன்றில் பயன்பாடு பற்றிச் சிறப்பாக வாழ்விடச் சூழலுடன் இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. குரம்பை, குடில், மனை, வீடு, அரண்மனை போன்ற குடியிருப்புகளின் கட்ட

மைப்பில் முன்றில் அமைப்பையும் அதன் பயன் பாட்டையும் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. இப்பதிவுகள் வீட்டின் முன் அமைப்பில் பயனுள்ள திறந்தவெளி இடமாக இருந்ததைச் சுட்டுகின்றன. நில பாகுபாட்டிற்கேற்ப வாழ்ந்த மக்களுக்கு பயன்படுமாறு குடியிருப்பின் ஒரு பகுதியாகவும் இருந்ததை அறிய முடிகிறது. வளர்ச்சிக் காலங்களில் உள்ள வீட்டின் கட்டமைப்புகளின் இடம் பெறுகின்ற இப்பகுதி முற்றம் என்று அழைக்கப்படுகிறது.

குறிஞ்சி நிலக்குடியிருப்பு கட்டமைப்பில் முன்றில் அமைப்புகள் திறந்தவெளி இடமாகக் காணப்படு கின்றன. இவ்வமைப்பில் செடி கொடிகள் வளர்ந்து பந்தல் போல இருப்பதால் உறங்கி ஓய்வெடுப்பதற்குரிய இடமாக இருந்துள்ளது. முன்றிலின் முன் பலா, வேங்கை, மல்லிகை போன்ற தாவரங்கள் இடம் பெறுகின்ற செய்தியால் இக்கட்டமைப்புகள் இயற்கைச் சூழலுடன் அமைந்திருந்ததை அறிய முடிகிறது. இதனை,

முன்றில் முஞ்ஞையடு முசுண்டை பம்பி

பந்தர் வேண்டா பலர் தூங்கு நீழல் (புறம்.320:1-2)

“...................................செவ்வேர்ச்

சினைதொறும் தூங்கும் பயம் கெழு பலவின்

களையுடைய முன்றில்” (நற்.77:4-6)

Òகூதளம் கவினிய குளவி முன்றில்

செழுங்கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்”

(புறம்.168:12-13)

என்ற பாடலடிகள் மூலம் அறிய முடிகின்றது. குறிஞ்சி நிலமுன்றில் கட்டமைப்பின் பயன்பாட்டினை,

“குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்

வாங்கமைப் பழுவினிய தேறல் மகிழ்ந்து

வேங்கை முன்றில் குரவை அயரும்” (புறம்.129:1-3);

“தேம் பிழி நறவின் குறவர் முன்றில்” (அகம்.78:7)

என்ற பாடல்வரிகள் விளக்குகின்றன.

இறப்பை அமைப்பு

தாழ்வாரத்தின் இறங்கிய பகுதி இறப்பை எனப்படும். இவ்வமைப்பு இறை, இறவாணம் என்று சுட்டப்படுகின்றது. குரம்பைகளின் வடிவமைப்பில் இறப்பையின் தோற்றம் ஒரேமாதிரி அமைவதைக் காணமுடிகிறது. நிலப்பாகுபாட்டிற்கேற்ப அமைந்த குரம்பைகளின் கூரையமைப்புகள் தாழ்வான குறுகிய இறப்பையினை உடையதாக இருந்தன.

“முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை” (நற்.207:2)

“குறியிறைக் குரம்பை” (புறம்.129:1)

“...............................................செல்வர்

வகை அமர் நல்இல் அகஇறை உறையும்

வண்ணப் புறவின் செங்காற் சேவல்” (நற்.71-6-8)

“உள் இறைக் குரிஇக் கார் அணற் சேவல்” (நற்.181:1)

என்ற பாடலடிகள் உணர்த்துகின்றன. பற்பல பிரிவு களாக அமைந்த மாடக்குடியிருப்புகளின் இறவாணம் புறாக்கள் உறங்குவதற்குரிய இடமாக இருந்துள்ளன. தீக்கடைக்கோல் பயன்படுத்தப்படாதக் காலங்களில் வீட்டின் முன் அமைந்துள்ள கூரையின் அடிப்பகுதியில் செருகி வைக்கப்பட்டிருந்தது. இதனை,

“இல் இறைச் செரிஇய ஞெலிபோல்” (புறம்.315:4)

என புறநானூறு கூறுகின்றது. பயன்பாட்டிற்குரிய சில பொருட்களை செருகி வைக்கின்ற பகுதியாக இருந்தது. இப்பழக்கம் இன்றும் மரபுதொடர்ச்சியாகக் காணப் படுகிறது.

திண்ணை அமைப்பு

தமிழரின் பண்பாட்டில் பழங்காலம் தொட்டு இன்றுவரை வீட்டமைப்பில் திண்ணை என்பது ஒரு இன்றியமையாதக் கட்டமைப்பாகக் காணப்படுகிறது. வீட்டின் முன்பகுதியில் மேடை போன்று அமைக்கப் படும் இடத்திற்குத் திண்ணை என்று பெயர். இக் கட்டமைப்புத் திணை, திண்ணை, தெற்றி, வேதிகை, பீடிகை, என்னும் சொற்களால் குறிப்பிடப்படுகின்றது. திண்ணை வீட்டின் முன்பகுதியில் இடம் பெறும் கட்டமைப்பாக உள்ளதால் முற்றத்தின் விரிவாக்கமாகக் கருதமுடிகிறது. திறந்தவெளி முற்றங்களிலிருந்து திண்ணைக் கட்டமைப்பு சற்று மாறுபட்டதாக உள்ளது. ஏனெனில் அமர்வதற்கு, உறங்குவதற்கு ஒய்வெடுப் பதற்கு, விளையாடுவதற்கு என்ற தேவைகளின் அடிப் படையில் கட்டப்பட்ட அமைப்பாகத் திகழ்கின்றது. இதனை,

“தெற்றிப் பாவை திணி மணல் அயரும் (புறம்.283:1;;2)

என புறநானூறு சுட்டுகிறது. கல்லால் நிறுத்தப்பட்ட திண்ணைக் கட்டமைப்புப் பற்றிய செய்திகளும் தாவரங்களை வளர்த்த செய்திகளும் கிடைக்கின்றன.

Pin It