பண்டைய தமிழ் மரபின் அறிவியல் அடிப்படை:

 தமிழ் மரபு என்பது காலம், வெளி எனப்படும் இடம் ஆகியனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த மரபு. அதனால்தான் தொல்காப்பியர்

முதல்எனப் படுவது நிலம்பொழு திரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந் தோர (பொருள், 4ஆம் பாடல்)

எனக் கூறியுள்ளார். இங்கு 'பொழுது' என்பது காலத்தைக் குறிக்கும். 'நிலம்' என்பது வெளி, இடம், பொருள் தோன்றக் காரணமான நிலம் முதலான ஐம்பூதங்கள் ஆகியனவற்றைக் குறிக்கும். வெளி என்பது இடம், நிலம் முதலான ஐம்பூதங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். எனவே இங்கு வெளி என்றாலும் இடம் என்றாலும் நிலம் என்றாலும் ஒன்றுதான். இந்த 'இரண்டின் இயல்புகள்' என்பது அவற்றின் இயக்கம், பரிணாமம் போன்றனவற்றைக் குறிக்கும். 'மொழிப இயல்புணர்ந்தோரே' என்பது இவற்றைக் கூறிச் சென்ற எண்ணிய மூலவரான தொல்கபிலர் போன்ற தமிழ் அறிவர்களைக் குறிக்கும். இந்த முதற்பொருள் தான் அனைத்திற்கும் அடிப்படை. இதிலிருந்துதான் கருப்பொருள் முதலான அனைத்தும் தோன்றுகின்றன. இந்தக் கருப்பொருளில் தெய்வம், மனிதன், விலங்குகள் செடிகொடிகள், கருவிகள் போன்ற அனைத்து இயற்கைப் பொருட்களும், செயற்கைப் பொருட்களும் வருகின்றன.time in historyகாலம், வெளி ஆகிய இரண்டும்தான் (Time & Space) இன்றைய நவீன அறிவியலுக்கான அடிப்படையாக இருக்கிறது. இதனை முழுமையாக அறிந்து கொண்டிருந்த தமிழ் அறிவு மரபின் தந்தையும் எண்ணிய மெய்யியலின் மூலவருமான தொல்கபிலர் இவை குறித்து 2750 ஆண்டுகளுக்கு முன்பே விரிவாகக் கூறிச்சென்றுள்ளார். சான்றாக காலம், வெளி, இயக்கம் ஆகியன பருப்பொருளின் கூறுகள் எனவும் அவற்றைப் பருப்பொருளிலிருந்து பிரிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். ஆகவே தமிழ் மரபு என்பது காலம், வெளி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட ஒரு அறிவியல் மரபாகும்.

 தொல்காப்பியர் அடுத்த ஒரு பாடலில் கேரும நிகழ்ச்சி இடமென மொழிப' எனக் கூறுகிறார் (பொருள், செய்ள்ளியல்-17). அதாவது வினை நிகழ்ச்சியை இடம் எனத் தம் முன்னோர் கூறுவர் எனக் கூறுகிறார். வினை நிகழ்ச்சியை இடம் எனக் கூறிய தொல்காப்பியர் அடுத்த பாடலில் (செய்ள்ளியல்-18), அந்த நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையாக இருப்பது காலம் எனக் கூறுகிறார். ஆகவே இடம் எனப்படும் வெளி, காலம் ஆகிய இரண்டும் கரும நிகழ்ச்சிக்கு அடிப்படை என்பதும் தமிழ் மரபாகும். அடுத்த ஒரு பாடலில் நிகழ்ச்சிகள் இல்லாமல் போனால் காலமும் இல்லாமல் போகும் என அவர் கூறுகிறார்.

இமையோர் தேஎத்தும், எறிகடல் வரைப்பினும்

அவையில் காலம் இன்மையான (பொருளியல் - 244)

 இப்பாடல் பொருளதிகாரத்தின் பொருளியலின் இறுதிப் பாடல். இப்பாடல், தேவருகலத்திலும், கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலும் மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் இல்லை என்றால் காலமும் இல்லை என்கிறது. அதாவது நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் இல்லை என்கிறார் தொல்காப்பியர். காலமும் வெளியும் ஒரு பொருளாகவே கருதப்படுகிறது. ஆகவே அவரது கருத்துப்படி காலம், வெளி ஆகிய இரண்டும் கரும நிகழ்ச்சிக்கு அடிப்படை என்பதால் நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலம், வெளி ஆகிய இரண்டும் இல்லை என ஆகிறது. இது ஒரு நவீன அறிவியல் கோட்பாடாகும்.

நவீன அறிவியலின் பொதுசோர்பியல் கோட்பாடு (General Relativity), அண்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பேசக் காலமும் வெளியும் வேண்டும் எனவும், அண்டத்தின் எல்லைகளுக்கு அப்பால் நிகழ்ச்சிகள் இல்லை என்பதால் அங்கு காலமும் வெளியும் குறித்துப் பேசுவது பொருளற்றதாகி விடுகிறது எனவும் ஆகவே நிகழ்ச்சிகள் இல்லாமல் காலமும் வெளியும் இருக்க முடியாது எனவும் கூறுகிறது. அந்த நவீன அறிவியல் கருத்தைத்தான் தொல்காப்பியர் அன்றே கூறிச் சென்றுள்ளார் (1). ஆகவே பழந்தமிழ் மரபு என்பது அறிவியல் அடிப்படையைக் கொண்டது என்பதை இத்தரவுகள் உறுதி செய்கின்றன.

வரலாற்றின் அறிவியல் அடிப்படை:

 பழந்தமிழ் மரபு, இடம், காலம் ஆகிய இரண்டும் அனைத்திற்கும் அடிப்படை என்கிறது. ஆகவே 'வரலாறு' என்பதற்கும் காலம், இடம் ஆகியன அடிப்படை. அத்துடன் பின்புலம் என்பதும் முக்கியம். ஆகவே காலம், இடம், பின்புலம் ஆகிய மூன்றும் இல்லாத வரலாறு என்பது அறிவியல் அடிப்படையற்றது. அதாவது வரலாற்றில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் அல்லது ஒவ்வொரு செயலும் ஒரு காலத்தை, ஒரு இடத்தை, ஒரு பின்புலத்தை அல்லது ஒரு காரணத்தைக் கொண்டிருக்கும் என்பதே அறிவியல். அந்த அடிப்படையில் எழுதப்படும் வரலாறே அறிவியல் அடிப்படையிலான வரலாறு. பொதுவாக வரலாறு குறித்த முக்கியத்துவம் உணரப்படவில்லை என்பதோடு, தமிழக வரலாறும், வரலாற்று ஆய்வுகளும், வரலாறு சார்ந்த இலக்கிய ஆய்வுகளும் கூடக் காலம் குறித்தத் தெளிவு இல்லாமலும், காலம் குறித்த உணர்வோ, அக்கறையோ இல்லாமலும் எழுதப்படுகின்றன.

பண்டைய இந்திய வரலாறு:

 காலம் குறித்தத் தெளிவு என்பது வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் வரலாற்றை மறைக்கவும், புதைக்கவும் விரும்பிய பிராமணியம் வரலாற்றில் காலம் குறித்தத் தெளிவின்மையை, வரலாற்று நிகழ்வுகள் குறித்த குழப்பத்தை உருவாக்கி வந்தது. அதன் மூலம் தங்கள் கருத்தைத் தொன்மையும், உயர்வும், புனிதமும் கொண்டதாக ஆக்கிக் கொண்டது. அதனால், ஐரோப்பியர் வருகைக்கு முந்தைய இந்திய வரலாறு என்பது புராணங்கள், இதிகாசங்கள், கதைகள், பல்வேறு பாடல்குறிப்புகள் என்றுதான் இருந்தது. இவைகளை எல்லாம் விரிவாக ஆய்வு செய்த சர். வில்லியம் ஜோன்சு (Sir William Jones) என்ற ஐரோப்பியக் கீழ்த்திசை ஆய்வாளர் இந்தியாவின் முதல் வரலாற்றை தொகுத்தளித்தார். ஆனால் அதில் அவர், மகத நாடு மௌரியர்களால் கி.மு. 1492 முதல் கி.மு. 1365 வரை ஆளப்பட்டது எனவும் அதன் மூன்றாவது அரசன் அசோகன் எனவும் குறிப்பிட்டிருந்தார். அசோகன் குறித்த வேறு எந்த செய்தியும் அதில் இருக்கவில்லை. அதன் பின் அவர் தொடர்ந்து ஆய்வு செய்து இந்திய வரலாற்றுக் காலத்தை சான்றாதாரங்களைக் கொண்ட கிரேக்க வரலாற்றுக் காலத்தோடு 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இணைத்தார்.

 ஆனால் அப்பொழுதும் அசோகர் ஒரு சாதாரண அரசராக மட்டுமே இருந்தார். இன்னபிற இந்திய வரலாற்று நிகழ்வுகளும் ஆய்வு செய்யப்படாமல்தான் இருந்தது. அதன்பின் ஒரேசு எய்மான் வில்சன் (Horace Hayman Wilson), பிரான்சிசு புக்கானன் (Francis Buchanan), காலின் மெக்கன்சி (Colin Mackenzie), பிரின்செப் (Princep), அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham), மில் டர்னோர், பிரையன் ஆட்ஜ்சன் (Brian Hodgson), வெட்டல் (L. A. Weddel), வின்சென்ட் சுமித் (Vincent Smith), இரைசு டேவிட்சு (Rhys Davids) ஆகிய ஐரோப்பியக் கீழ்த்திசை வல்லுநர்கள் பலரின், 20ஆம் நூற்றாண்டு வரையான 200 ஆண்டுகால மிக நீண்ட நெடிய கடினமான வரலாற்று ஆய்வுகளால்தான் அசோகரும் அவரது புத்தமதமும், பிற இந்திய வரலாற்று நிகழ்வுகளும் வெளிசேத்துக்கு வந்தன (2).

பழந்தமிழக வரலாறு: ஐரோப்பியக் கீழ்த்திசை ஆய்வாளர்களின் 200 ஆண்டுகால கடின முயற்சியால் எழுதப்பட்ட நவீன இந்திய வரலாறு, வட இந்திய வரலாறாகத்தான் இருந்தது. அதில் தென் இந்திய வரலாறு என்பது சிறிதளவே இருந்தது. அதிலும் பண்டைய தமிழக வரலாறு முழுமையாக ஆய்வு செய்யப்படவே இல்லை. இதன் பின்னரும் இன்றைய நாள் வரையிலும்கூட பண்டைய தமிழக வரலாற்றுக்கான காலவரையறை, சான்றாதாரங்களைக் கொண்ட உலக வரலாற்றுக் காலவரையறையோடு இணைக்கப்படவே இல்லை. அதன் காரணமாக, கீழடி அகழாய்வுக்குப் பின், இதுவரை எழுதப்பட்டு வந்த பழந்தமிழக வரலாறு பலவகையிலும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. பழந்தமிழக வரலாற்றில் காலவரையறை குறித்தத் தெளிவு என்பது இல்லாமல் போனதுதான் இதற்குக் காரணம்.

வரலாற்றில் காலம்

இந்தியாவின் வரலாற்றில் கி.பி. 1700 ஆம் ஆண்டையும், கி.பி. 2000 ஆம் ஆண்டையும் எடுத்துக் கொள்வோம். இரண்டுக்கும் இடையே 300 ஆண்டுகால இடைவெளி உள்ளது. 1700 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதையும் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் ஆண்டு வந்தார். 2000 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு குடியரசு நாடாகி 50 ஆண்டுகள் ஆகி இருக்கிறது. அதே சமயம் இந்திய நாடு என்பது பல்வேறு தேசிய இனங்களின் சிறைக் கூடமாகவும் இருக்கிறது. இந்த இரு காலகட்டச் சமூகம், அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், உற்பத்திமுறை, அறிவியல், கல்வி போன்றவைகளும், இவற்றில் இருக்கும் மக்களின் வாழ்நிலையும், இன்னபிறவும் பேரளவான வேறுபாடுகளைக் கொண்டவை.

1700 ஆம் ஆண்டில் வாழ்ந்த ஒரு நடுத்தர வர்க்க மனிதனையும், 2000 ஆம் ஆண்டில் வாழ்ந்த ஒரு நடுத்தர வர்க்க மனிதனையும் கற்பனை செய்து பாருங்கள். உலகம், சமயம், அறிவு, கல்வி, நாடு, சுதந்திரம், அரசியல், பொருளாதாரம், தொழில், அவர்களின் வாழ்நிலை போன்ற பல்வேறு பொருள்கள் குறித்த அவர்களின் கருத்துகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்பது மலைக்கும் மடுவுக்கும் இடையேயான வேறுபாடுகளாக இருக்கும். கி.பி. 3000 ஆண்டைய எதிர்கால மனிதன் ஒருவன், காலம் குறித்தத் தெளிவு இன்றி, இந்த இரு காலகட்டத்தையும் ஒரு காலகட்டமாகக் கொண்டு வரலாறு எழுதுவதும், இந்த இரு மனிதனையும் ஒரு மனிதனாகக் கொண்டு இலக்கியம் படைப்பது என்பதும் மிகப்பெரிய தவறுகளை, குழப்பங்களை உருவாக்கும். அது போன்றதுதான் காலம் குறித்தத் தெளிவும் புரிதலும் இன்றிப் பண்டைய கால வரலாற்றைக் கட்டமைப்பதாகும்.

 இந்தக் காலவேறுபாடு குறித்தப் புரிதல் இல்லாத வரலாற்றுக் கதைகளால் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கல்லணை கட்டிய சங்ககாலச் சோழ வேந்தன் இரண்டாம் கரிகாலனைவிட, 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சிறு பாளையக்காரன் வீரபாண்டிய கட்டபொம்மனை மிகப் பெரிய ஆளுமையாகக் கருதும் சூழல்தான் நமது தமிழகத்தில் நிலவி வருகிறது. அது போன்றே புராண மாந்தர்களை வரலாற்று மனிதனாகக் கருதுவதற்கும் காலம் குறித்தத் தெளிவும் புரிதலும் இல்லாததுதான் முக்கியக் காரணம். இதிகாசங்களும், காப்பியங்களும், புராணங்களும், இன்னபிற கதைகளும், வாய்மொழிப்பாடல்களும் குறிப்பிடும் கடந்த கால மனிதன் குறித்துப் பேசும் போது அவன் எங்கு வாழ்ந்தான், எந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தான், அவனது பின்புலம் என்ன ஆகியன குறித்த அறிவியல் அடிப்படையிலான சான்றுகளுடன் கூடிய ஒரு தெளிவு இல்லாத போது அவனை ஒரு வரலாற்று மனிதனாக ஏற்கக்கூடாது என்பதும் அதுவே வரலாற்று அறிவு என்பதும் பள்ளி கல்லூரிகளில் கற்றுத்தரப்பட வேண்டும். புராணக் கதை மாந்தர்கள் வரலாற்று மனிதர்கள் அல்ல என்பதும், வரலாற்றில் காலத்தின் முக்கியத்துவம் குறித்தும் கற்றுத்தரப்பட வேண்டும்.

பழந்தமிழக வரலாற்றில் காலவேறுபாடு:

 மகாவம்சம் குறிப்பிடும் இலங்கை மன்னன் கயவாகு கண்ணகி விழாவில் கலந்து கொண்டான் என்கிற சிலப்பதிகாரக் காப்பியத்தின் பதிகத்தில் வரும் குறிப்பைக் கொண்டு, கயவாகுவின் காலமான கி.பி. 2ஆம் நூற்றாண்டுதான் சேரன் செங்குட்டுவனின் காலம் எனக் கணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சங்ககால அரசர்களின் காலம் இதுவரை கணிக்கப்பட்டு வருகிறது. இக்காலம் அடிப்படை வரலாற்றுச் சான்றுகள் இல்லாதது என்பதோடு இக்காலம் சான்றாதாரங்களைக் கொண்ட உலக வரலாற்றுக் காலத்தோடு இணைக்கப்படாதது. அதனால்தான் வரலாற்று ஆசிரியர் வின்சுடன் சுமித் மகாவம்ச நூலின் தொடக்ககால 600 ஆண்டுகால வரலாற்றை, அதன் ஆண்டுகளை முழுமையாக நிராகரித்தார். தென்னிந்தியக் கல்வெட்டுகள் (South Indian Inscription) என்கிற 27 தொகுதிகளை மிகக் கவனமாக தொகுத்தளித்த புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் உல்ட்ச் (Hultzsch), முதலாம் கயவாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் ஒரே காலத்தவர் என்கிற கருத்தை ஏற்கவில்லை. இருந்த போதிலும் அவற்றைக் கண்டு கொள்ளாது, தமிழ் நாட்டு வரலாற்று அறிஞர்கள் சேரன் செங்குட்டுவனின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கொண்டுதான் பழந்தமிழக வரலாற்றைக் கணித்து வந்தனர். சங்ககாலம் என்பது கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை எனக் கணித்தனர். சங்ககால வேந்தர்கள் அனைவரும் கி.பி. க்குப் பிந்தையவர்கள் எனக் கணிக்கப்பட்டது.

 அதே சமயம் தமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில், முக்கியமாக நாணயங்களில் குறிப்பிடப்பட்ட ஒரு சில வேந்தர்களின் காலம் என்பது கி.பி. க்கு முந்தையதாக இருந்தது. சான்றாக முதுகுடுமிப்பெருவழுதி நாணயத்தின் காலம் 3ஆம் நூற்றாண்டு, செழிய நாணயங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டு, மாக்கோதை நாணயம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். எனினும் இந்தக் கால வேறுபாடுகளை வரலாற்று அறிஞர்களும் இன்னபிறரும் கண்டுகொள்ளவில்லை. காலம் முக்கியம் என்பதை உணராது தொடர்ந்து பழைய கணிப்புகளையே அவர்கள் பயன்படுத்தி வந்தனர். கீழடி அகழாய்வு அறிக்கை 2019 ஆம் ஆண்டு வெளிவந்தபின், சங்ககாலம் என்பது கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்குப்பதில், கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது எனப் பலரும் ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் அதன் பின்னரும் பலரும் என்றும் போல் பழைய கணிப்புகளையே தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கீழடி அகழாய்வுக்கு முன்பே 2016 ஆம் ஆண்டில் வெளியான ஆசிரியரது, 'பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்' என்ற நூல் சங்ககாலம் என்பது கி.மு. 750 - கி.மு. 50 வரையான நகர அரசுகளின் காலகட்டம் எனவும், சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 - கி.பி. 250 வரையான பேரரசுகளின் காலகட்டம் எனவும், சேரன் செங்குட்டுவனின் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு எனவும் சங்ககால இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுத் தரவுகள், வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்களின் குறிப்புகள் ஆகிய பலவற்றைக் கொண்டு கணித்து உறுதி செய்துள்ளது.

காலவேறுபாடுகளின் விளைவுகள்:

இதுவரையான கணிப்பான சேரன் செங்குட்டுவனின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு என்பதற்கும் ஆசிரியரது கணிப்பான கி.மு. 3 ஆம் நூற்றாண்டு என்பதற்கும், அதுபோன்றே சங்ககாலம் குறித்த கணிப்பிற்கும் இடையே 400 ஆண்டுகளுக்கு மேல் இடைவெளி இருக்கிறது. இந்தக் காலவேறுபாட்டால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயல்வோம்.

 (1) சங்ககால வேந்தர்கள் அனைவரும் கி.பி. க்குப் பிந்தையவர்கள் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அனைத்துச் சங்ககால வேந்தர்களும் கி.மு. 50 க்கு முந்தையவர்கள். சான்றாக கல்லணை கட்டிய இரண்டாம் கரிகாலனின் காலம் கி.மு. 190-170. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் காலம் கி.மு. 270-245. பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் காலம் கி.மு. 320-290. சேரவேந்தன் மாக்கோதையின் காலம் கி.மு. 135-100. உசேயினி நகரை வென்ற சோழன் நலங்கிள்ளியின் காலம் கி.மு. 100-75.

 (2) பழைய கணிப்புப்படி சங்ககாலம் என்பது கி.பி. 250 வரை வருவதால், முன்னோர் மரபு கூறிய சங்கம் மருவியகாலம் என்பது கி.பி. 250 க்குப் பிந்தைய களப்பிரர் காலம் எனத் தவறாகக் கணிக்கப்பட்டது

 (3) நமது முன்னோர் மரபு, சிலப்பதிகாரம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகியன சங்கம் மருவிய கால நூல்கள் என்கிறது. சங்கம் மருவிய காலம் என்பது களப்பிரர் காலம் எனத் தவறாகக் கருதியதால் அந்நூல்கள் அனைத்தும் களப்பிரர் கால நூல்கள் எனத் தவறாகக் கணிக்கப்பட்டது.

 (4) அதன் காரணமாக பேரழிவுக் காலமாக இருந்த களப்பிரர் காலம் மிகச் சிறந்த இலக்கியங்களைக் கொண்ட அறநெறிக்காலமாகக் கருதப்பட்டது. களப்பிரர் காலம் மிகச் சிறந்த காலம் எனக் காட்டுவதற்காக, இதுபோன்ற பல தவறான சான்றுகளைக் கொண்டு நூல்கள் எழுதப்பட்டன.

 (5) வேந்தர்கள், அரசர்கள் ஆகியோரின் கல்வெட்டுக் காலங்கள் சில நூற்றாண்டுகள் பிற்காலத்ததாகக் கணிக்கப்பட்டன. சான்றாக அதியமானின் சம்பைக் கல்வெட்டு கி.பி. 1 ஆம் நூற்றாண்டு எனப்பட்டது. ஆனால் அதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு. அதுபோன்றே மூன்று சேர வேந்தர்களைக் குறிப்பிடும் புகளூர்க் கல்வெட்டின் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டது. உண்மையில் அதன் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு.

(6) பொதுவாகவே அனைத்துக் கல்வெட்டுகளும் 2 முதல் 4 நூற்றாண்டுகள் வரை பிற்காலத்ததாகக் கணிக்கப்பட்டது. சான்றாக அரசேலூர் இசைக் கல்வெட்டு கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆனால் அதன் காலம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு எனத் தவறாகக் கணிக்கப்பட்டது.

 (7) அதன் காரணமாகக் களப்பிரர் காலத்தில் இசை மிகவும் வளர்ச்சி பெற்று இருந்தது எனக் கூறப்படுகிறது. இப்படிச் சங்கம் மருவிய காலத்திற்கு உரிய பலவும் களப்பிரர் காலத்திற்கு உரியதாகத் தவறாகக் கணிக்கப்பட்டு களப்பிரர் காலம் மிகச்சிறந்தகாலம் என வரலாறு எழுதப்படுகிறது.

 (8) தமிழி எழுத்தை ஓலைகளில் எழுதுவது கடினமாக இருந்ததால், சங்கம் மருவிய காலத்தில் வட்டெழுத்து முறையை உருவாக்கி அதனை முதலில் ஓலைகளில் எழுதப் பயன்படுத்தினர். சிலகாலம் கழித்துத்தான் அவை கல்வெட்டுகளிலும் பயன்படுத்தப்பட்டன. கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த அரசேலூர் கல்வெட்டில் முதல் முதலாக வட்டெழுத்து பயன்படுத்தப் பட்டது. அதன் பின்னர் சங்கம் மருவியகாலக் கல்வெட்டுகள் பலவற்றில் வட்டேழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் சில அரசேலூர் கல்வெட்டு போல களப்பிரர் காலத்ததாகத் தவறாகக் காட்டப்பட்டுள்ளது. ஆகவே வட்டேழுத்து முறை என்பது சங்கம் மருவிய காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது களப்பிரர், பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டதாக வரலாறு எழுதப்படுகிறது.

 (9) சங்ககாலக் கல்வெட்டுகள் பலவும் பிற்காலத்ததாகக் கணிக்கப்பட்டது. சான்றாக மாங்குளம் கல்வெட்டின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப்பட்டது. ஆனால் அதன் காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு. கி.மு. 5ஆம் நூற்றாண்டில் கண்டிப்பாகச் சமணச் செல்வாக்கு இல்லை என்பதால் அக்கல்வெட்டு தமிழ் அறிவர் அல்லது ஆசிவகரின் கல்வெட்டுதான் என உறுதிப்படுத்த முடியும். ஆனால் அதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்பட்டு சமணக் கல்வெட்டாகக் கருதப்பட்டது. உண்மையில் இந்தியாவில் எங்குமே சமணர்களுக்கு எனக் கற்படுக்கைகள் வெட்டப்படவில்லை. ஆசிவகர்கள் அல்லது தமிழ் அறிவர்களுக்கு மட்டுமே வெட்டப்பட்டது. சமண, பௌத்த மதங்கள் கி.பி. 250 வரை தமிழகத்தில் மிகச்சிறிய அளவில்தான் இருந்தன. ஆகவே சங்கம் மருவிய காலம் வரையான 99 கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ் அறிவர்கள் அல்லது ஆசிவகர்களுக்கானவை. சமணர்களுக்கானவையல்ல.

 (10) சங்க காலத்தின் தொன்மை கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனக் கணிக்கப் பட்டதால், சமணத் துறவிகளால்தான் தமிழ் மொழிக்கு எழுத்து அறிமுகப்படுத்தப்பட்டது எனவும், தமிழ்நாட்டில் இருந்த பரவலான கல்வியறிவுக்கும் எழுத்தறிவுக்கும் சமண, பௌத்தத் துறவிகளே காரணம் எனவும் தவறாகக் கணிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் நகர அரசுகளும், மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளும்தான் இவற்றுக்குக் காரணம்.

 (11) சங்கம் மருவிய காலத்தை, களப்பிரர் காலம் எனத் தவறாகக் கருதியதால், சங்கம் மருவிய காலத்தில் உருவான சிலப்பதிகாரம், பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் போன்றவை சமண, பௌத்தத் துறவிகளால் படைக்கப்பட்டவை என இன்றும் தவறாகக் கணிக்கப்படுகிறது. அவை தமிழ் அறிவர்களாலும் ஆசிவகர்களாலும் படைக்கப்பட்டவை.

 (12) சங்க காலத்தின் தொன்மை கி.மு. 3ஆம் நூற்றாண்டு எனக் குறைத்துக் கணிக்கப்பட்டதாலும், காலம் குறித்த முக்கியத்துவம் உணரப்படாததாலும் அதன் தொன்மையைக் கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெறாமல் போனது. அதன் தொன்மை முன்பே கி.மு. 750 எனக் கணிக்கப்பட்டிருந்தால் அன்றே சங்க இலக்கியங்கள் உருவாகி இருந்தன என்பதும், அவை வட இந்திய ஆரிய நாகரிகத்துக்கு மிக முந்தையது என்பதும் சிறப்பு மிக்கது என்பதும் உறுதியாகியிருக்கும். வட இந்திய நகர நாகரிகம் கி.மு. 600 வாக்கில் தொடங்கியது எனினும் அதன் இலக்கியம் மகதப்பேரரசு காலத்தில் உருவாகவில்லை. மகதப் பேரரசுக்கான எழுத்து என்பது கி.மு. 250இல் தமிழி எழுத்தில் இருந்து தான் உருவானது. அதன் இலக்கியங்கள் குப்தர் காலத்தில் கி.பி. 4ஆம் நூற்றாண்டில்தான் உருவாகின. ஆனால் தமிழ் மொழிக்கான எழுத்து என்பது கி.மு. 1500 வாக்கில் குறியீடுகளாகவும், கி.மு. 800 வாக்கில் தமிழி எழுத்தாகவும் இருந்தது. அதனால்தான் கி.மு. 750 வாக்கில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் உருவாகி இருந்தன. ஆகவே தமிழில் நூல்கள், இலக்கியங்கள் உருவாகத் தொடங்கி 1000 வருடம் கழித்துத்தான் சமற்கிருத இலக்கியங்கள் உருவாகின. அதன் காரணமாகத் தமிழ் மொழியில் இருந்த நூல்கள் பலவற்றைச் சமற்கிருத மொழி கடன் வாங்கித்தான் அது ஒரு தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப மொழியாக, இலக்கிய மொழியாக உருவானது. இவை போன்ற தமிழர் நாகரிகத்தின் பல்வேறு சிறப்புகளும் தொன்மையைக் குறைவாகக் கணித்ததால் வெளிவர இயலவில்லை.

 (13) கி.மு. 50 முதல் கி.பி. 250 வரையான சங்கம் மருவிய காலம் எனப்பட்ட பேரரசுக்காலத்தில் மூவேந்தர்களும் பேரரசாக உருவாகி பல துறைகளிலும் மிக வேகமான வளர்ச்சியைக் கொண்டு வந்ததோடு, உரோமப் பேரரசோடு நேரடியாக வணிகம் செய்து வந்தனர். பெரிப்ளசு நூலும் (கி.பி.75), முசிறி-அலெக்சாண்ட்ரியா ஒப்பந்தமும் (கி.பி.150) இக்காலத்தவை. மேலும் இக்காலகட்ட இசுட்ராபோ, பிளினி, தாலமி போன்ற கிரேக்க உரோம எழுத்தாளர்களின் குறிப்புகளும், உரோம நாணயங்களும் மிக அதிக அளவு கிடைத்துள்ளன. ஆகவே இக்காலம் பேரளவு வளர்ச்சி பெற்ற காலம். இக்காலகட்டத்தில் உலகின் பெரு நகரங்களையும் பெரும் கப்பல்களையும் கொண்டதாகவும் பேரளவான பொருள்வளமும் செல்வ வளமும் கொண்டதாகவும் உலகின் முன்னணிச் சமூகமாகவும் தமிழ்ச் சமூகம் இருந்தது. ஆனால் பழந்தமிழக வரலாற்றில் ஏற்பட்ட கால வேறுபாடுகளால் இந்தச் சங்கம் மருவிய காலம் என்ற ஒன்று இல்லாமல் போனது. அது களப்பிரர் காலமாக ஆகிப்போனது.

(14) பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம் கி.பி. 250 வாக்கில் அநாகரிக மக்களான களப்பிரர்களால் பேரழிவுக்கு உள்ளானது. தமிழகத்தின் அனைத்து நகரங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்டன. அதன் பிந்தைய தமிழ்ச் சமூகம் ஒரு பின்தங்கிய, பிற்போக்கான, சமயச் சார்பான, கிராமச் சமூகமாக ஆகிப்போனது. தமிழில் இருந்த எண்ணியம் (பொருள்முதல்வாத மெய்யியலின் முன்னோடித்தத்துவம்) முதலான நூற்றுக்கணக்கான தத்துவார்த்த அறிவியல் தொழில்நுட்ப நூல்கள் அனைத்தும் இல்லாமல் போயின. இலக்கிய நூல்களில் 10% க்கும் குறைவான நூல்களே மிஞ்சின. களப்பிரர் காலம் மிகச் சிறந்தகாலம் எனச் சொல்லப்படுவதன் மூலம் பழந்தமிழகத்தின் பேரளவான சிறப்புகளும் அதன் பேரழிவும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. அதற்கு இந்தக் காலவேறுபாடு மிகப்பெரும் துணையாக இருந்து வருகிறது.

இவ்விளைவுகள் அனைத்தும் சங்ககாலத் தொன்மையை 400 முதல் 500 ஆண்டுகள் பிற்காலத்ததாகக் கணித்ததால் ஏற்பட்டவை. ஆனால் இன்றும் கூட உண்மைக் காலங்கள் ஏற்கப்படாமல் தவிர்க்கப்பட்டு வருவதுதான் தமிழக வரலாற்றின் அவலம். பொதுவாக வரலாற்றை மறைக்க, புதைக்க விரும்பும் பிராமணியம் வரலாற்றில் காலம் குறித்த உணர்வோ, அக்கறையோ இன்றிச் செயல்படும். அதன் மூலம் தங்களது கருத்துகளை தொன்மையும் புனிதமும் மிக்கதாக மாற்றிக்கொள்ளும். இந்தியாவிலும், தமிழகத்திலும் அதைத்தான் அது செய்து வந்தது. ஆனால் தமிழர்களும் அந்த பிராமணியக் கருத்தை உள்வாங்கி, காலம் குறித்த உணர்வோ அக்கறையோ இன்றிச் செயல்படுவது என்பது தமிழகத்தில் பிராமணிய ஆதிக்கம் வலிமையாக இருந்ததை உறுதி செய்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழக வரலாற்றில் ஏற்பட்ட 400 முதல் 500 ஆண்டுகள் இடைவெளி என்பது தமிழ்ச் சமூகம் பேரளவான பின்னடைவைச் சந்தித்த காலகட்டத்தில் வருகிறது. களப்பிரர் படையெடுப்பால் தஞ்சைப் பகுதி உட்பட பெரும்பாலான தமிழகப் பகுதிகள் கால்நடை மேய்க்கும் பகுதிகளாக மாறிப்போயின. அதன் நகரங்களும், ஊர்களும், வேளாண்மையும் காணாமல் போயிருந்தன. அக்கால அகழாய்வும் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டதை உறுதி செய்கிறது. ஆகவே களப்பிரர் படையெடுப்பால் பேரளவான அழிவும், பேரளவான சமூக மாற்றமும் ஏற்பட்டது என்பது உண்மை. ஆனால் அவை குறித்து எவ்வித ஆய்வும் இல்லாத ஒரு சூழல் உருவாக இந்தக் கால வேறுபாடும், 1000 ஆண்டுகாலப் பழந்தமிழக நகர நாகரிகத்தின் சிறப்பு குறித்தப் புரிதல் இன்மையும் முக்கியக் காரணங்களாகும்.

காலவேறுபாடும் வடமொழி ஆதிக்கமும்:

 19 ஆம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டு வரலாறு பிற்காலத்ததாகக் கணிக்கப்பட்ட நிலையில், வட இந்திய வரலாறு முற்காலத்ததாகக் கணிக்கப்பட்டு அனைத்துச் சிறந்த கருத்துகளும், இலக்கணம் முதலான இன்ன பிறவும் வட இந்தியாவிலிருந்து வந்ததாகக் கணிக்கப்பட்டது. சான்றாக சமற்கிருத மொழிக்கு இலக்கணம் எழுதிய பாணினியின் காலம் தொல்காப்பியருக்கும் முந்தையது எனவும் அவரிடம் இருந்துதான் தொல்கப்பியர் பலவற்றையும் எடுத்துக்கொண்டார் எனவும் கூறப்பட்டது. சமற்கிருத மொழி கி.பி. 2ஆம் நூற்றாண்டில்தான் எழுத்து கொண்டு எழுதப்படுகிறது. அதன் இலக்கியங்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்துதான் உருவாகின. ஆனால் தொல்காப்பியருக்கும் முந்தையவர் பாணினி எனக் கணிக்கப்பட்டது. பாணினியின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டது. அவரது நூலில் உள்ள பல விடயங்கள் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை பிறரால் எழுதிச் சேர்க்கப்பட்டது. ஆனால் தொல்காப்பியரின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு. சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும், பரத நாட்டிய சாத்திரம் என்ற இசை இலக்கண நூலும், கட்டடக்கலை, சிற்பக்கலை நூல்களான மயமதம், மானசாரம் முதலியனவும், கணித வானவியல் நூலான ஆரிய பட்டியமும் கி.பி. 3ஆம் நூற்றாண்டிற்குப்பிறகு களப்பிரர், பல்லவர் காலத்தில் தமிழிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டவை அல்லது தமிழ்வழி நூல்கள். இந்நூல்கள் வட இந்தியாவில் தோன்றுவதற்கான பின்புலம் அங்கில்லை.

 ஆனால் அவை இன்றும் வடமொழியில் உள்ளன. இவற்றின் தமிழ் மூல நூல்கள் அழிந்து போயின. ஆகவே இந்த வடமொழி நூல்களில் இருந்துதான் இது சார்ந்த கருத்துகள் தமிழுக்கு வந்தன எனச் சொல்லப்பட்டது. இசை சார்ந்த அனைத்தும் தமிழில் இருந்து சென்றவைதான். அவையும் வடமொழியில் இருந்து வந்ததாகவே சொல்லப்படுகிறது. மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபுக்குரிய தொல்கபிலரின் எண்ணியம், கணாதரின் சிறப்பியம் போன்றவைகளும் வடமொழி சார்ந்தவை எனக் கருதப்பட்டது. இவை அனைத்தும் காலவேறுபாடுகளாலும், தவறான காலக் கணிப்புகளாலும், பின்புலம் குறித்தப் புரிதல் இன்மையாலும் வந்தவை. இவை போன்றவற்றின் காரணமாக வடமொழி தொன்மையானது, உயர்ந்தது எனவும் அதிலிருந்துதான் அனைத்தும் தமிழுக்கு வந்தன எனவும் கூறப்பட்டது. வரலாற்றில் காலம் குறித்த அக்கறையின்மை, அதன் முக்கியத்துவம் உணரப்படாதிருப்பது, அதில் பின்புலத்தின் பங்கு பற்றிய புரிதலின்மை போன்றனவற்றின் காரணமாக தமிழ்நாட்டின் வரலாற்றுக்கும், அதன் பண்பாட்டுக்கும், அதன் மொழிக்கும், அதன் மக்களுக்கும் பேரளவான இழப்பும், தீமைகளும்; அளவிட முடியாத வீழ்ச்சியும், அழிவும் நடந்துள்ளன. ஆகவே வரலாற்றில் காலம் குறித்து அக்கறை செலுத்துவோம். அனைத்தையும் காலக்கண் கொண்டு ஆய்ந்து உண்மையைக் காண்போம். காலத்தால் இழந்ததை, காலம் கொண்டே மீட்டெடுப்போம்.

சான்று நூல்கள்:

(1) பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன் பாலன், NCBH வெளியீடு, 2023, புத்தகம், 1 - 2.

(2) மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன்பாலன், தமிழினி, 2018.

(3) தமிழ்மொழி, கணியன்பாலன், NCBH வெளியீடு, 2024.

(4) பழந்தமிழ்நாட்டின் கல்வெட்டுப் பொறிப்புகள், கணியன் பாலன், கீற்று இணையதளக் கட்டுரை, சூன்-2025.

- கணியன் பாலன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.