பழந்தமிழர்களுடைய கடல்வணிகம் குறித்து இரு வருடங்களுக்கு முன் எழுதிய முதல் கட்டுரையில் பண்டைய காலம் முதல் கி.மு. 7ஆம் நூற்றாண்டுவரையான பழந்தமிழர்களின் கடல்வணிகம் குறித்து எழுதியிருந்தேன். கி.மு. 7ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் பழந்தமிழர் கடல்வணிகம் குறித்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளேன். அதில் இது முதல் கட்டுரையாகும். இரண்டாவது கட்டுரை தமிழக வணிகத்தின் அளவீடைத் தெரிந்துகொள்ள நாணயங்கள் குறித்தும் வட இந்திய வணிகம் குறித்துமான கட்டுரையும், மூன்றாவது கட்டுரை சங்க இலக்கியத்தில் கடல்வணிகம் குறித்த கட்டுரையும் ஆகும்.

ship 270 “தங்களின் பண்டைய உருவாக்கமான சொந்தக் கப்பல்களைக் கொண்டு தமிழர்களின் கடல்வணிகம் பாதுகாப்பான முறையில் மிகச்சிறந்த வளர்ச்சி பெற்றிருந்ததோடு, இந்த வணிகத்தோடு கருத்துப்பரிமாற்றங்களும் தென்னிந்தியாவில் மட்டுமில்லாது, பாரசீக வளைகுடா, அரேபியக்கடற்கரை, ஆப்ரிக்க ஆகிய நாடுகளோடு தொடர்ந்து நடத்தப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்தன. புத்தமத, பிராமண நூல்கள் இந்த கடல்வணிகத்தின் காலத்தை கி.மு. 5ஆம் நூற்றாண்டு எனச்சொல்வதற்கு, இந்நூல்கள் வட ஆரியர்களுடையது என்பதும், உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்களது என்பதும், தமிழர்கள் நன்கு வளர்ச்சியடைந்த பின்னரே இவர்கள் தென்னிந்தியாவிற்கு வந்தனர் என்பதும் தான் காரணமாகும். ஆனால் இக்கடல்வணிகத்தின் காலம் மிக முந்தையது ஆகும்(R. SEWELL, HINDU PERIOD OF SOURTHERN INDIA, IN IMP. GAZ.., -2, 322)”

 “ஆரியமொழி இங்கு நுழையவில்லை. வட இந்தியாவிலிருந்து முழுமையாக வேறுபட்டு, இந்த நாடுகள் தங்கள் சொந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். பிற உலக நாடுகளோடு கடல்வணிகம் மூலமாகத் தொடர்பு கொண்டிருந்தனர். மிக ஆரம்பகாலம் முதல் அவ்வணிகம் மிகப்பாதுகாப்போடு நடைபெற்றுவந்தது. மன்னார் வளைகுடாவின் மிகச் சிறந்த முத்துக்களும், கோயமுத்தூரின் மணிக்கற்களும், மலபாரின் மிளகும் உலகின் வேறு எங்கும் கிடைக்காது, இங்குமட்டுமே கிடைக்கும். வெளிநாடுகளில் கி.மு. 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் இருந்து இவைகளுக்கு மிகப்பெரிய தேவை இருந்து வந்தது(VINVINCENT SMITH, EARLY HISTORY, 334)”.

  எரித்ரேயக்கடலில் பெரிப்ளஸ் என்கிற கிரேக்க நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் திரு.சுகாப் அவர்கள் (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.3), தனது நூலில்(பக்: 209, 210) பண்டைய தமிழர்களின் கடல்வணிகச் சிறப்பை வெளிப்படுத்துவதற்காக மேற்கண்ட இரு பகுதிகளை சுவெல், வின்சென்ட் சுமித் ஆகிய இரு புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களிடமிருந்து எடுத்து மேற்கோள்களாகத் தந்துள்ளார்.

திரு.சுகாப் அவர்களுடைய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளஸ்” என்கிற ஆங்கில நூல் மொத்தம் 325 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிப்ளஸ் அவர்களுடைய மூல நூலின் பக்கங்கள் 28 ஆகும்.(பக்:22-49). மீதி உள்ள பக்கங்களில் 234 பக்கங்கள்(பக்:50-283), சுகாப் அவர்களின் விரிவான விளக்கக் குறிப்புகளைக் கொண்டவை. பண்டையத் தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப்பொருட்கள் பற்றி மட்டும் 40 பக்கங்கள்(பக்:203-242) உள்ளன. பெரிபுளுசு அவர்கள் ஒரு கிரேக்கர். எகிப்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு உரோமக் குடிமகன். எகிப்திலிருந்து கங்கைவரையான அவரது பயணம் குறித்த குறிப்புகளை விட்டுச்சென்றவர். அக்குறிப்புகளுக்கு, பெரிப்ளஸ் காலத்தில் இருந்த நாடுகள், நகரங்கள், வணிகப் பொருட்கள் குறித்த முழுமையான வரலாறுகளையும், நிலவியல் தரவுகளையும், இன்ன பிறவற்றையும் திரு.சுகாப் அவர்கள் நன்கு அறிந்து, விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார். தமிழகம் குறித்துப் பல்வேறு நூல்களை நன்கு படித்து, ஆழ்ந்து புரிந்து கொண்டு சுகாப் எழுதியுள்ளார். ஆகவே பொதுவாக அவரது இந்த நூல், பண்டைய காலத்தியக் கடல் வாணிகம் குறித்த, முக்கியமாகத் தமிழர் கடல்வணிகம் குறித்த ஒரு அதிகாரபூர்வமான ஆவணம் எனலாம்.

  பிளினி, சுட்ராபோ, டாலமி போன்ற பண்டைய நூலாசிரியர்களை மட்டுமல்லாது வின்சென்ட் சுமித், சுவெல், கென்னடி போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்களையும் நன்கு ஆழ்ந்து படித்தே விளக்கக் குறிப்புகளை திரு. சுகாப் அவர்கள் எழுதி உள்ளார். அதனால்தான், சுகாப் என்னும் அறிஞரின் முடிவுகளை உண்மை என ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என கே.ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள் தனது சோழர்கள் என்கிற நூலில் குறிப்பிட்டுள்ளார்(சோழர்கள், புத்தகம்-1, தமிழாக்கம்: கே.வி. ராமன், மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2009, பக்: 114).

 தமிழர்கள் தொடக்ககாலத்திலிருந்தே மிகப்பெரியக் கடல்வணிகத்தை வளர்த்து வந்தனர் என்றும் அன்றைய வட இந்தியர்கள் மாலுமித் தொழில் தெரிந்தவர்களல்லர் என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார்(தமிழக வரலாறு, பக்.32). கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதலே மேலை நாடுகளுக்கும், சீனம் வரையிலுள்ள கீழை நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வணிகத் தொடர்பில் தென்னிந்தியாவின் பெரும்பங்கு நன்கு தெரிந்ததாகும் எனவும், தென்னிந்தியாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் கடல் வாணிகத் தொடர்பு கி.மு 6 அல்லது 7ஆம் நூற்றாண்டு முதலே இருந்திருக்க வேண்டும் என்கிற கென்னடியின் முடிவு சரியானதாகவே தோன்றுகிறது என கே.ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள் தனது சோழர்கள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்( பக்: 28, 38,).

  இந்தியாவில், கடல்வணிகத்தின் வளர்ச்சி என்பது அடிப்படையில் திராவிடர்களுடையது என்கிறார் சுகாப் அவர்கள்(பக்: 229). பழங்காலத்தில் வட இந்தியர்கள் கடல் வணிகம் செய்ததில்லை என்பதை, திராவிடியர்களே அதாவது தமிழர்களே கடல் வணிகம் செய்தனர் என்பதை வின்சென்ட் சுமித், சுகாப், கென்னடி, சுவெல் போன்ற பல உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். மேலும் சுகாப் அவர்கள், தனது நூலில் தமிழரச வம்சங்கள் இந்திய வரலாற்றில் 2000 வருடங்களுக்கும் மேலான மிக நீண்ட இடைவிடாதத் தொடர்ச்சியைக் கொண்டவைகளாக இருந்துள்ளன என்கிறார் (பக்:238).

ஜவகர்லால் நேரு:

  நேரு அவர்கள் தனது ‘உலக சரித்திரம்’ என்கிற நூலில், “வட இந்தியாவைவிடத் தென் இந்தியா கடலோடு அதிக உறவு கொண்டாடியது. வெளிநாட்டு வியாபாரம் பெரும்பாலும் தென் இந்தியாவுடன் தான் நடைபெற்று வந்தது. பழந்தமிழ்பாடல்களிலே யவனர்களைப்பற்றிய குறிப்புகள் மிகுந்து காணப்படுகின்றன. யவன தேசத்து மதுவகைகள், பூந்தாழிகள், அணிவிளக்குகள், முதலியனவற்றைப்பற்றி தமிழ் நூல்கள் கூறுகின்றன(பக்: 184). தென்இந்தியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நல்ல வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. முத்து, பொன், தந்தம், அரிசி, மிளகு, முதலியவைகளும், மயில்களும் குரங்குகளும் பாபிலோன், எகிப்து, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கும், உரோமாபுரிக்கும் அனுப்பப்பட்டன. திராவிடர்களால் ஓட்டப்பட்ட இந்தியக்கப்பல்களிலே இப்பொருள்கள் அனைத்தும் அல்லது பெரும்பாலும் கொண்டுபோகப்பட்டன. புராதன உலகத்தில் தென்இந்தியா எத்தகைய உன்னத இடத்தை வகித்ததென்று இதன்மூலம் அறிந்துகொள்ளலாம்(பக்: 153)” எனக் குறிப்பிடுகிறார். நேரு அவர்களும் தமிழர்கள் தங்கள் சொந்தக்கப்பல்களில் பாபிலோன், எகிப்து, கிரீஸ், உரோமபுரி போன்ற நாடுகளுக்கு பயணம் செய்து வணிகம் புரிந்தனர் என்பதையும், பெரும்பாலான பண்டைய வெளிநாட்டு வியாபாரங்கள் தென் இந்தியாவுடன்தான் நடைபெற்றன என்பதையும் இதன்மூலம் உறுதிப் படுத்துகிறார் எனலாம்.

கே. ஏ. நீலகண்ட சாத்திரி:

  “கிழக்கே மலேயா தீபகத்திற்கும், சுமத்திராவிற்கும், மேற்கே மலபார் பகுதிகளுக்குமிடையேயான வணிகமானது தமிழரிடமே இருந்தது” என கே. ஏ. நீலகண்ட சாத்திரி அவர்கள், ‘வார்மிங்டன் என்பவரது தி காமர்ஸ் பெட்வீன் தி ரோமன் எம்பயர் அண்ட் இந்தியா(கேம்பிரிட்ஜ், 1928) பக். 128-131’ என்கிற நூலை ஆதாரமாகக் காட்டி தனது ‘சோழர்கள்’ என்கிற தனது நூலில்(பக்: 112)’ குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பெரிபுளூசின் ஆசிரியர்(THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF ) கூறுவதாகக் கீழ்கண்ட தரவுகளைக் குறிப்பிடுகிறார்.

  மூவகைக்கப்பல்கள் தமிழகத்தில் இருந்தன. 1.கரையோரமாக உள் நாட்டுப்பகுதிகளுக்கு அதிகக் கனமில்லாத பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள்; 2.இவற்றைவிடச் சற்று பெரிய அளவில் கட்டப்பட்டு கூடுதலான பொருள்களை ஏற்றிச் செல்ல உதவும் சரக்குக் கப்பல்கள்; 3.கடல்கடந்து, மலேயா, சுமத்ரா, போனற நாடுகளுக்கும், கங்கை நதிவரையிலும் செல்லக்கூடிய பெரும் கப்பல்கள் ஆகிய் மூன்றுவகைக் கப்பல்கள் அன்று தமிழகத்தில் இருந்தன. அவர் பழந்தமிழ் இலக்கியங்களும், பெரிபுளுசின் ஆசிரியரும் ஒன்றுபோல் குறிப்புகளைத்தருவது மிகுந்த வியப்புக்குரிய சான்றாகும் என்கிறார். மேலும் அவர் “தென்னிந்தியா(தமிழகம்), ஈழம் ஆகிய நாடுகளின் துறைமுகங்கள், பெரிபுளுசு கூறுவதைப்போல, தூரக்கிழக்கு நாடுகளுடலான வணிகத்தின் கேந்திரங்களாக விளங்கி, எகிப்திலிருந்து வந்த கலங்களைவிட அதிக அளவிலும், மிகப்பெரிய கலங்களையும் பயன்படுத்தின” என்கிறார்( சோழர்கள், புத்தகம்-1, தமிழாக்கம்: கே.வி. ராமன், மூன்றாம் பதிப்பு, நவம்பர் 2009, பக்: 110-114).

  அதாவது அன்றைய மேற்கத்திய நாடுகளான, உரோம், எகிப்து, கிரேக்கம், அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த கப்பல்களைவிடப் பெரியகப்பல்களைத் தமிழகம் பயன்படுத்தியது. மேலும் அப்பெருங்கப்பல்கள் எண்ணிக்கையிலும் மேற்கத்திய நாடுகளைவிட அதிக அளவில் தமிழகத்தில் இருந்தன என்கிறார் பெரிபுளுசு அவர்கள். பெரிபுளுசு அவர்கள் ஒரு கிரேக்கர். எகிப்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு உரோமக் குடிமகன். எகிப்திலிருந்து கங்கைவரையான அவரது பயணம் குறித்த குறிப்புகளை விட்டுச்சென்றவர். அதாவது அன்றைய உலகில் தமிழர்களே மிகப்பெரிய கடலோடிகளாகவும், அதிக அளவிலான கடலாதிக்கமும், வணிக மேலாண்மையும் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்பதை இக்கூற்றுக்கள் வெளிப்படுத்துகின்றன எனலாம்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வின் காலம் தற்பொழுது கி. மு. 2000வரை செல்கிறது என அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் தனது தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு என்கிற நூலில் தெரிவித்துள்ளார்கள்(பக்: 61, 62). கொற்கை அதன் அருகில் தான் உள்ளது. ஆதலால் கொற்கைத் துறைமுகம் கி.மு. 1000 வாக்கில் இருந்துள்ளது என்பது உறுதியாகிறது. ஆகவே சாலமனின் கப்பல்கள் இங்கு வந்து பிற பொருட்களோடு 1)துகிம்-தோகை, அதாவது மயில்தோகை, 2). ஆல்மக் மரங்கள்-அகில் மரங்கள், 3.)கஃபி-கவி எனப்படும் குரங்கு ஆகியத் தமிழகப் பொருட்களைக் கொண்டு போனது உறுதிப்படுத்தப் படுகிறது எனலாம்.

 கால்டுவல், மேனாட்டார் மயிலுக்கு பயன்படுத்தும் துகி என்ற சொல் தோகை என்ற தமிழ் சொல்லிலிருந்து வந்தது எனவும், இது உவரித்(OOPHIR) துறைமுகத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது எனவும் இதற்கு பழைய ஏற்பாட்டில் ஆதாரம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்(திருநெல்வேலியின் சரித்திரம், பக்:23). இங்கு உவரித்துறைமுகம் என கொற்கையைக் கால்டுவல் குறிப்பிடுகிடுறார். தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல் நங்கூரம் ஒன்றினை தமிழகத்தின் குருசேடைத் தீவில்(CRUSADAI ISLAND) இருந்து கைப்பற்றியுள்ளது. சிசிலியைச்(SSICILY) சேர்ந்த வல்லுநர்கள் இதனை ஆராய்ந்து இந்நங்கூரம் பர்சியன்(PPERSIAN) வகையைச் சேர்ந்தது எனவும் இதன் காலம் கி.மு. 1000 எனவும் குறிப்பிட்டுள்ளனர் (TAMILS HERITAGE-102) . இஸ்ரேலை ஆண்ட சாலமனின் காலம் கி.மு. 1000. ஆகவே அதே கால கட்டத்தைச் சேர்ந்த கல் நங்கூரம் தமிழகத்தில் கிடைத்திருப்பது என்பது முக்கியத்துவம் பெறுகிறது.

 கி.மு. 1000 அல்லது அதற்கும் சற்று முற்பட்ட காலகட்டத்தில் தொடங்கி கி.மு. 500 ஆண்டளவில் நன்கு மிளிர்ந்து படிப்படியாக பல்வேறு நிலைகளில் தமிழர் நாகரிகம் உயர்நிலையை அடைந்தது என்கிறார் தொன்மைத் தமிழகத்தின் செங்கடல் வணிகத்தொடர்பு என்ற கட்டுரையை எழுதிய சு.இராசவேல் அவர்கள்(நிகமம்-வணிக வரலாற்றாய்வுகள், தமிழ் பல்கலைக்கழக வெளியீடு, பக்: 13). அதே நூலில் சங்ககாலத் தமிழகத்தில் வெளி நாட்டு வணிகம் என்கிற கட்டுரையை எழுதிய மா.பவானி என்பவர், கி.மு. 500 ஆண்டுகளில் ஐரோப்பாவுடனான இந்திய வணிகத்தில் கிரேக்கர்கள் இடைத்தரகர்களாகச் செயல்பட்டனர் எனவும் பல நாடுகளுக்கு இடையிலான இப்பரிமாற்றத்தால் வணிகப்பண்டங்களின் தமிழ் பெயர்கள் கிரேக்க மொழியில் இடம் பெற்றுள்ளன எனவும் அரிசி, ஒரைஸ் ஆகவும் கருவா, கார்பியென் ஆகவும் இஞ்சி, ஜிஞ்சிபெரோஸ் ஆகவும் கிரேக்க மொழியில் வழங்கப்பட்டது எனவும் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் கி.மு. 2ஆம் நூற்றாண்டு வரை பெரும்பாலும் உரோமுக்குச் செல்லாமல் கிரேக்கத்திற்கே சென்றன எனவும் அதன் பின்னரே அவை இரோமுக்கு நேரடியாகக் கொண்டு செல்லபட்டன(சீனிவாச ஐயங்கார். பி.டி., 1989 மு.சு.நூ) எனவும், கிரேக்கர்கள் தமிழகத்தோடு வணிகம் செய்ததற்கு அடையாளமாக கிரேக்க நாணயங்கள் பல தமிழகத்தில் கிடைத்துள்ளன(R. Krisnamurthy.R. 1994coins from Greek islands, Rhotes and Crete found at Karur Tamil Nadu studies in South India coins vol. 4.p. 95) எனவும் அவர் கூறியுள்ளார்.

  மேலும் பவானி அவர்கள் கிறித்துவ சகாப்தத்திற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னரே நறுமணப்பொருட்கள், சிறுத்தைப்புலி, தந்தம், நூலாடை, கருங்காலி, அரிசி முதலான பொருட்களை எகிப்தியர்கள் விரும்பி வாங்கினார்கள் எனவும் எகிப்தியர்களோடு தமிழர்கள் வணிகம் செய்ததற்குச் சான்றாக எகிப்தின் செங்கடல் துறைமுகங்களான குசிர் அல் குவாதிம், பெரனிகே ஆகிய இடங்களில் கி.மு. 1ஆம், கி.பி.1ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ள ஓடுகள் கிடைத்துள்ளன(சாதன், கணன், கொற்றப்பூமான், பனைஒறி என்கிற ‘தமிழி’ பொறிப்பு ஓடுகள்) எங்கிறார் அவர்(SOURCE: Iravatham Mahadevan, 2003, Early Tamil Epigraphy from the Earliest to the 6th Century A.D. Cre-A, Chennai p-16). மேலும் அவர், தமிழர்கள் கங்கையாறு கடலில் கலக்கிற துறைமுகத்தின் வழியாகக் கங்கையாற்றில் நுழைந்து பாடலிபுரம், காசி ஆகிய ஊர்களில் வணிகம் செய்துள்ளனர் என்பதை ‘கங்கை வங்கம் போகுவர் கொல்லோ’ என்கிற நற்றினைப் பாடல்(189:5) வெளிப்படுத்துகிறது என்பதையும் சீனா, தாய்லாந்து, சாவகம் போன்ற கிழக்கத்திய நாடுகளோடும் தமிழர்கள் மிக நீண்ட காலம் முதல் வணிகம் புரிந்து வந்துள்ளனர் என்பதையும் தக்க சான்றுகளோடு கூறியுள்ளார்(நிகமம்-வணிக வரலாற்றாய்வுகள், தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு, பக்: 25-36).

   தமிழகத்தில் புதிய கற்காலத்துக்கு முந்தைய, கடைக் கற்காலக் கட்டத்துக்கு உரிய கருவிகள் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் கிடைத்துள்ளது. அதன் காலம் கி.மு. 4000 ஆகும். கடற்பயணம் மேற்கொள்வதற்குரிய திறமை ஏதோ ஒரு வகையில் இக்கடைக்கற்காலத் தமிழக மக்களிடம் அமைந்திருந்தது என்றும், கடற்கலங்கள் இவர்களிடம் இருந்திருக்க வேண்டும் எனவும் தமிழகத் தொல்பழங்காலம் குறித்து ஆய்வு செய்த ஆல்சின்அம்மையார் கருதுகிறார்(தமிழ்நாட்டு வரலாறு-தொல்பழங்காலம், பக்:181). அதாவது கி.மு. 4000 வாக்கிலேயே கடற்பயணம் மேற்கொள்வதற்குரிய திறமை ஏதோ ஒரு வகையில் தமிழக மக்களிடம் அமைந்திருந்தது என்றும், கடற்கலங்கள் அவர்களிடம் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார் ஆல்சின் அம்மையார் அவர்கள். அதன் பின்னரே உலோகக் காலம் தொடங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை உலோக காலம் பிற இடங்களைப் போல் அல்லாமல், நேரடியாக இரும்புக் கால நாகரிகமாகவே தொடங்குகிறது(தமிழக வரைவுகளும், குறியீடுகளும்-இராசு பவுன்துரை, பக்: 85-86). அப்பொழுதே கடல் வணிகமும் தொடங்கி விட்டது எனலாம். 

(தொடரும்)

Pin It