“அரைவயிற்றுக் கஞ்சி குடித்தாலும்............. மனங்கொண்டது மாளிகையாக, மரத்தடியே வீடாக வாழும் மக்களைப் பற்றி, என் உள்ளம் அதிகமாக ஆராயும் தகுதியைப் பெற்றிருக்கிறது”- இவ்வரிகள் ‘பாட்டு பிறந்த விதம்’ பற்றி படித்துத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்கு பட்டுக்கோட்டையார் வெளிப்படுத்திய கட்டுரைப் பிரகடனம்!

pattukottai kalyanasundaramதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற சின்னக் கிராமமே, இவரது பூர்வீக பூமி! கவிராயர் அருணாசலம் பிள்ளையின் அருமைக் குமரனாய் 13.04.1930ல் பிறந்தார்! உள்ளுர் திண்ணைப் பள்ளியில் அரிச்சுவடி படித்ததோடு ஓராண்டுப் படிப்பு ஓடி இளமைக் காலம் முடிந்தது!.

தனது இளமைக் காலத்திலேயே பலரும், கேட்டுக் கிறுகிறுக்கும்படி பாட்டுக்கட்டிப் பாடுவார். தலைமறைவு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு உண்ண உணவு கொண்டு போய்க் கொடுப்பார்; ரகசியக் கடிதங்களை உரியவர்களிடம் சேர்ப்பார்; இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தியும் கொண்டார்!

கலையார்வம் கொண்டு சென்னை நோக்கி பயணமான கல்யாணசுந்தரம், சக்தி நாடக சபாவில் போய்ச் சேர்ந்தார். ‘கவியின் கனவு’ என்ற நாடகத்தில் நடித்தார். அனைவருடைய பாராட்டையும் அள்ளிக் கொண்டார்! அப்புறம் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவில் இணைந்தார். அங்கே ‘வானவில்’ என்ற மேடை நாடகத்தில் இவருக்கு முதலமைச்சார் பாத்திரம்!

திண்டுக்கல் நகரில் 1.8.1954ல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநாடு நடந்தது. அதில் அரங்கேறிய ‘கண்ணின் மணிகள்’ என்ற நாடகத்திற்கு கல்யாணசுந்தரம் பாடல்கள் எழுதினார். நாடகத்திற்கு தலைமை தாங்கிய தலைவர் ப.ஜீவானந்தம், நாடகத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களை வெகுவாகப் பாராட்டினார்! “மக்கள் கவிஞருக்குரிய தரஉயர்வு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடல்களில் ஒளி விடுகின்றன!” என்று உயர்த்திப் பேசினார்!

பாண்டிச்சேரி பொதுவுடமைத் தலைவர் வ.சுப்பையா மூலம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை நேரில் சந்தித்தார். உணர்ச்சிப் பெருக்கோடு கல்யாண சுந்தரத்தைத் தழுவி அணைத்துக் கொண்டார் பாவேந்தர். “நான் எழுதும் பாடல்களைப் படி எடுப்பதும், குயில் ஏட்டைப் பார்த்துக் கொள்வதும் உனது பணிகள்! சம்மதம் தானே!” என்றார். அதனைப் பெறற்கரிய பெரும் பேறாகக் கருதினார் கல்யாணசுந்தரம். பகலில் இல்லத்தில் பணி, இரவில் கட்சி அலுவலகத்தில் கண்ணயர்வு! கவிதையும்-கட்சிப் பணியும் அவருக்கு இரு கண்களாயின.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் 1955-ஆம் ஆண்டு தயாரித்த மகேஸ்வரி என்ற திரைப்படத்தில் கல்யாண சுந்தரத்தின் பாடல்கள் முதன் முதலாக இடம் பெற்றன.

“பாசவலை” என்ற திரைப்படத்திற்கு இவர் எழுதிய பாடல்கள் திரை உலகில் புகழைப் பெற்றுத் தந்தது.

குல தெய்வம், ரங்கோன் ராதா, சக்கரவர்த்தி திருமகள், அலாவுதீனும் அற்புத விளக்கும், புதையல், நாடோடி மன்னன், உத்தமபுத்திரன், அன்பு எங்கே, திருமணம், பதிபக்தி, தங்கப் பதுமை, கல்யாணப்பரிசு, நல்ல தீர்ப்பு உட்பட 57 திரைப்படங்களுக்கு 182 திரை இசைப் பாடல்களை எழுதியுள்ளார் கல்யாண சுந்தரம்.

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் தலைமையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கும் கௌரவாம்பாளுக்கும் 11.09.1957ல் திருமணம் நடைபெற்றது. ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு குமாரவேல் என்பது பெயர்.

பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் பொதுவுடைமைச் சிந்தனைகளையும், சமூக மாற்றத்திற்கான கருத்துக்களையும், தனது பாடல்களில், பொதிந்து வைத்து கவித்துவத்தோடு வெளிப்படுத்தியுள்ளார். அவர் பாடல்கள் நிலைத்து நிற்பதற்குக் காரணம் அவற்றின் எளிமையும், இனிமையும், கருத்தும் செறிவும் ஆகும்.

விவசாயிகளின் வாழ்க்கையை நாடோடி மன்னன் திரைப்படத்தில்,

“காடு வெளஞ்சென்ன மச்சான்
நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”

என்ற பாடல் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.

உழைப்பின் மேன்மையை திருடாதே திரைப்படத்தில்

“உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது – மனம்
கீழும் மேலும் புரளாது”

என்ற பாடல்கள் மூலம் உணர்த்துகிறார்.

மூட நம்பிக்கைகளை தங்கப் பதுமை திரைப்படத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

“செம்பும் கல்லும் தெய்வமென்று
நம்புவோர்கள் பித்தரென்று
சித்தர்கள் உரைத்த மொழி மெய்தானே?
சிற்பிகள் செதுக்கி வைத்த
சித்திரச் சிலைகளுக்குள்
தேவி வந்திருப்பதுவும் பொய்தானே?”

மேலும், அரசிளங்குமரி திரைப்படத்தில் வரும் கீழ்க் குறித்த பாடல் வரிகள் பாரதியின் நெஞ்சு பொறுக்குதில்லையே-வை நினைவூட்டும்.

“வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது
சொல்லிவைப்பாங்க – உன்
வீரத்தைக் கொளுந்திலேயே
கிள்ளி வைப்பாங்க..."

விதியை நம்பி வெம்பி வாழ்பவர்களைப் பார்த்து, உழைப்பின் மேன்மையை இவ்வாறு கூறுகிறார்.

“விதியின் உணர்வால் வீழ்ந்து
கிடக்கும் வீணரெல்லாம் வேலை
செய்து வீறுபெற வேண்டும்
தூங்காதே தம்பி தூங்காதே! நீயும்
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே!”

என்ற பாடல் வரிகள் மூலம் சோம்பித் திரியேல் என்பதை விரிவாகக் கூறுவதுடன் சோம்பலால் கல்வி, முதல், புகழ், வேலை என வாழ்வின் அனைத்தையும் இழக்க வேண்டிவரும் என்பதை அறிவுறுத்துகிறார்.

நாட்டில் தனிவுடமைக் கொடுமைகள் ஒழிந்து பொதுவுடமை மலர்ந்திடப் போராட வேண்டும் என்ற கருத்தை இப்படிப் பாடிக்காட்டுகிறார்!.

“தனிவுடமைக் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா! நீ
தொண்டு செய்யடா!
தானா எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா!– எல்லாம்
பழைய பொய்யடா!”

பெண்ணடிமைத் தனத்தை புதுமைப் பெண் என்ற திரைப்படத்தில் இப்படிச் சாடுகிறார்

“தன் கணவனை இழந்தவள் கட்டழகியானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமையுண்டு – இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர் திரண்டு!”

கைம்பெண்களின் நிலைமையினையும், சமூகம் கொண்டுள்ள மோசமான பார்வையையும் இங்கு அம்பலப்படுத்துகிறார்.

சோதிடம், கைரேகைப் பார்த்தல் ஆகிய மூட நம்பிக்கைகளை கீழ்க்கண்டவரிகள் மூலம் சாடுகிறார்.

“தன் ரேகை தெரியாத பொய்ரேகை காரரிடம்
கைரேகை பார்க்க வரும் முறையாலும் - அவன்
கண்டது போல் சொல்லுவதை ஆறறிவில்
நம்பிவிடும் வகையிலும் ஓரறிவு அவுட்டு
அறிவுக் கதவை சரியாய் திறந்தால்
பிறவிக் குருடனும் கண் பெறுவான்.”

தொழிற்சாலை கதவடைப்பைக் கண்டித்து இரும்புத்திரை படத்தில் இவ்வாறு எழுதினார்.

“பட்டினிக்கும் அஞ்சிடோம்!
நெஞ்சினைப் பிளந்த போதும்
நீதி கேட்க அஞ்சிடோம்!
நேர்மையற்ற பேர்களின்
கால்களை வணங்கிடோம்!.”

அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளையும், மக்களின் வறுமையையும்,

“தேனாறு பாயுது! செங்கதிர் சாயுது!
ஆனாலும் மக்கள் வயிறு காயுது”

என்ற பாடல் வரிகள் மூலம் காட்சியாக்குகிறார்.

குறுகிய காலமே வாழ்ந்தாலும் தன் கவிதை வாளால், திரை உலகை ஆண்ட முடி சூடாமன்னன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். மக்களுக்காகச் சிந்தித்த மகத்தான அக்கவிஞன், மூளை இரத்தக்குழாய் வெடித்துச் சிதறியதால் 08.10.1959 அன்று தனது 29 வயதிலேயே காலமானார். ஆனாலும் பட்டிதொட்டி முதல் பட்டணக்கரை வரை இப்பாருலகு எங்கும், அவரது பாடல் வரிகள் மக்கள் நெஞ்சில் நிலைத்து நிற்பவை......! என்றும் சாகாதவை.

மாமேதை லெனின் வாசகம் இப்படிக் கூறும்.

“கலை மக்களுக்குச் சொந்தமானது. அதன் வேர் வஞ்சிக்கப்பட்ட பெரும்பாலான உழைப்பாளி மக்களுக்கு இடையில் படர்ந்திருக்க வேண்டும். அது அவர்களை ஒன்றுபடுத்தி அவர் தம் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் நிறைவேறச் செய்வதாய், அவர் தம் கலையுணர்வைத் தூண்டுவதாய் அமைதல் வேண்டும்.”

லெனின் கூற்றுக்கு இல‌க்க‌ண‌மாக‌ ப‌டைப்புக‌ளை வ‌ழ‌ங்கியவ‌ர் ப‌ட்டுக்கோட்டையார்.

தமிழ் மொழியும் உலகமும் உள்ளவரை மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் புகழ் மறையாது!

- பி.தயாளன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It