திருப்புறம்பயம் வைத்தியலிங்கம் சதாசிவப் பண்டாரத்தார், வரலாற்றுப் புகழ்மிக்க வண்டமிழ்ப் பேரறிஞர்! தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருப்புறம்பயம் என்னும் சிற்றூரில் 15.08.1892ஆம் நாள் பிறந்தார்.

                Sathasiv Pandaratharதொடக்கக் கல்வியையும், நடுநிலைக் கல்வியையும் உள்ளூரிலும், புளியஞ்சேரியிலும் கற்றார். அதன் பிறகு குடந்தை நகரப் பள்ளியில் பள்ளி இறுதித் தேர்வில் சிறப்பாக வெற்றியடைந்தார். தமிழ்க் கல்வி மீதான ஆர்வம் காரணமாகத் தமிழ் இலக்கிய இலக்கணங்களைத் தாமே பயின்று புலமை பெற்று விளங்கினார்.

                உயர்நிலைப் பள்ளியில் பயிலும் போது பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், வலம்புரி க. பாலசுப்பிரமணியப்பிள்ளை ஆகிய தமிழறிஞர்களின் தொடர்பு ஏற்பட்டது. பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் தமிழ் இலக்கியத்திலும், தமிழ்க் கல்வெட்டுத் துறையிலும் மிகுந்த புலமையும் ஈடுபாடும் மிக்கவர். அவர்களிடம் பெற்ற பயிற்சியினால் பண்டாரத்தார் இலக்கியத்திலும், கல்வெட்டு ஆய்விலும் நல்ல புலமையையும், ஆராய்ச்சித் திறனையும் வளர்த்துக் கொண்டார்.

                குடந்தை வாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் 1917ஆம் ஆண்டில் தலைமைத் தமிழ் ஆசிரியராகப் பணியேற்று, 1942ஆம் ஆண்டு சூலைத் திங்கள் வரையில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குத் தமிழறிவு புகட்டினார். பின்னர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனர் அரசர் அண்ணாமலையாரின் அழைப்பிற்கு இணங்கிப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச்சித் துறையில் சேர்ந்து 1942 முதல்ர 1960 வரை பணியாற்றினார். அங்குப் பணியாற்றிய காலத்தில் “சோழர் வரலாறு” (மூன்று பாகங்கள்) ‘தமிழிலக்கிய வரலாறு’ (13, 14, 15ஆம் ஆண்டுகள்) ஆகிய அரும்பெரும் நூல்களைப் படைத்தார்.

                மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டு வந்த “செந்தமிழ்” இதழில் தமிழ் இலக்கியம் - வரலாறு பற்றிய பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார்.

                கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர், தமிழ்வேள் த.வே. உமா மகேசுவரனார் அளித்த ஊக்கத்தால் “தமிழ்ப்பொழில்” இதழில் தமிழக மன்னர்களின் வரலாறுகளைத் தொகுத்தார். மேலும், ஊர்ப்பெயர் ஆய்வு – ஊர்ப்பெயர் பொருத்தம் - கல்வெட்டுப் பதிப்பு – கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு இலக்கியங்களைக் கால நிருணயம் செய்தல் போன்றவை குறித்துப் பல கட்டுரைகள் வரைந்தார். அக்கட்டுரைகள் பின்னர் நூல்களாக வடிவம் பெற்றன.

                பண்டாரத்தார் எழுதிய சோழர் வரலாறு, தமிழ் எழுத்தாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

                முதற்குலோத்துங்க சோழன், பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர் சரித்திரம் (3 பாகங்கள்), காவிரிபூம்பட்டினம், கல்வெட்டுக்களால் அறியப் பெறும் உண்மைகள், பாண்டியர் பெருமாட்சி, இலக்கிய ஆராய்ச்சியும், கல்வெட்டுக்களும் ஆகிய வரலாற்று நூல்களைப் பண்டாரத்தார் தமிழர்களுக்கு வழங்கியுள்ளார். இவரின் வரலாற்று நூல்கள் யாவும் கல்வெட்டுக்களையும், சாசன செப்பேடுகளையும் அடிப்படையாகக் கொண்ட ஆய்வின் அடிப்படையில் எழுதப் பெற்ற சிறப்பான படைப்புகளாகும். மேலும், வரலாறு என்றால், அது மன்னர்களைப் பற்றி மட்டும் குறிப்பது அல்ல என்பதைப் பண்டாரத்தார் தெளிவுபடுத்தினார். மாறாக, வரலாற்றை சமூகவியல், மொழியியல், பொருளியல், இலக்கியம், அகழாய்வு முதலிய பல துறைகளையும் இணைத்து முழுமையான அளவில் வரலாற்று நூல்களை எழுதிப் படைத்துள்ள போற்றுதற்குரிய தமிழ்ப் பேரறிஞர் அவர்.               

                பண்டாரத்தாரின் பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர் வரலாறு நூல்கள் பாட நூல்களாகச் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முதலியவற்றில் வைக்கப்பட்டு கற்பிக்கப்பட்டன.

                தமிழ்ப் பல்கலைக் கழகம் காணவேண்டும் என்ற சிந்தனையை வெளியிட்ட அறிஞர்களில் பண்டாரத்தாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

                கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவில் தமிழ் மொழிக்கென ஒருதனிப் பல்கலைக் கழகத்தை நிறுவுவதற்கு பெருமுயற்சியும், போதிய உதவிகளும் செய்ய வேண்டும் என்று வழிமொழிந்தவர் பண்டாரத்தார்.

                பண்டாரத்தார் தனது கட்டுரைகளையும், நூல்களையும் வடமொழிச் சொற்கள் பெரிதும் கலவாமல், நல்ல தமிழ் நடையில் எழுதி அனைவருக்கும் பயன்படச் செய்துள்ளார்.

                பேராசிரியர் கார்மேகக் கோனார் இவருக்கு ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்னும் பட்டத்தை 29.03.1956ஆம் நாள் வழங்கி அதற்குரிய பொற்பதக்கத்தையும் அளித்ததார்.

                பண்டாரத்தாரின் தமிழ்த் தொண்டைப் பாரட்டித் தமிழ் எழுத்தாளர் சங்கம் 07.04.1956ஆம் நாள் கேடயம் வழங்கிச் சிறப்பித்தது. மதுரைத் திருவள்ளுவர் கழகம் இவருக்குப் பாராட்டு விழா எடுத்துப் பெருமைப்படுத்தியது.

                வரலாற்று இடங்களுக்குத் தாமே நேரில் சென்று களப்பணியும், ஆய்வும் செய்தவர். அடிப்படையற்ற எந்தச் செய்தியையும், கருத்துக்களையும் பண்டாரத்தார் ஏற்றுக் கொண்டதில்லை.

                தமிழகத்தில் ஏற்பட்ட அயலார் படையெடுப்புகளால் தமிழும், தமிழ் மக்களும் பாதிப்புக்கும், வீழ்ச்சிக்கும் ஆளாயினர். களப்பிரர் படையெடுப்பு, பாண்டிய நாட்டில் எத்துணையோ மாறுதல்களையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்தியது. பாலி மொழி, பிராகிருத மொழி ஆகிய பிற மொழிச் செல்வாக்கு தமிழ் மொழி, தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை வீழ்ச்சியுறச் செய்துவிட்டன. இவை போன்ற வரலாற்றுச் செய்திகளை வேள்விக்குடிச் செப்பேடுகளின் வாயிலாக ஆய்வு செய்து வெளிப்படுத்தினர்.

                சோழ மன்னர்களின் கல்வெட்டுகள், மெய்க்கீர்த்திகள், செப்பேடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று அடிப்படையில் ஒவ்வொரு மன்னரும் பட்டமேற்ற ஆண்டு, அவர்கள் புரிந்த போர்கள், அவர்கள் செய்த சமுதாயப் பணிகள், பெற்ற சிறப்புப் பட்டங்கள், அவர்தம் மனைவியர், புதல்வர்கள், அம்மன்னர்களுக்கு உதவிய அரசாங்க அதிகாரிகள் முதலானவர்கள் பற்றிய செய்திகளை விரிவாக விளக்கியுள்ளார்.

                மேலும், சோழர்களின் அரசியல், ஆட்சித் திறன், அவர்கள் விதித்த நிலவரிகள், செய்த கோயில்பணிகள், நடத்திய வாணிபம், நாட்டு மக்களின் பொருளாதார நிலை, சமுதாய வாழ்வு ஆகியவற்றை மிக விரிவாகவும், தெளிவாகவும் கொடுத்துள்ளார். அதேபோல் பிற்காலச் சோழர்களின் முழுமையான வரலாற்று நிகழ்வுகளை மிகச் சரியாகக் கொடுத்தவர், வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

                சதாசிவப் பண்டாரத்ததார் கல்வெட்டுகளில் நாட்டோடு இணைந்து வழங்கப் பெறும் எண்கள் – கல்வெட்டுகளைப் படிக்கும் ஆற்றல் – பதிப்பிக்கும் பயிற்சி – கால நிருணயம் செய்யும் வரலாற்று வரைவு முறை முதலியவற்றில் புலமையுடையவராக விளங்கினார்.               அறிஞர் சதாசிவப் பண்டாரத்தாரின் இடையறாத உழைப்பால் தமிழ்நாட்டு வரலாறு பெரிதும் விளக்கமுற்றது. ஆதனால், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் உரிய வரலாற்றறிவும், ஆராய்ச்சித் திறனும், மொழிப்புலமையும் பெற்றனர் என்றால் மிகையல்ல.

                பண்டாரத்தார் உடல் நலிவுற்று, 02.01.1960ஆம் நாள் அண்ணாமலை நகரில் இயற்கை எய்தினார். தனது இறுதிக்காலம் வரை ஆய்வும், எழுத்துமாகவே வாழ்ந்தார்.

- -பி.தயாளன்

Pin It