1934-ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய சட்டசபைக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில் நீதிக்கட்சி படுதோல்வியடைந்தது. சட்டசபைத் தலைவராயிருந்த சர்.சண்முகம் தோற்றார். சென்னையில் சர்.ஏ.ராமசாமி முதலியார் தோற்றார். இன்னும் நீதிக்கட்சியின் பேரால் நின்றவர் அனைவரும் தோற்றனர். இச்சமயத்தில் சுயமரியாதைக்காரர்கள் ஈ.வெ.ரா.வின் மேல் வெறுப்புற்றனர். காங்கிரசோடு சேர்வதே மேல் என்று கூறினார். சிலர் சேர்ந்தும் விட்டனர். ஆயினும் தலைவர் ஈ.வெ.ரா. சிறிதும் இதைப் பொருட்படுத்தவே இல்லை! தோல்வியை மனதார ஒப்புக் கொண்டார். தோல்வியால் தளர்ச்சியடைதல் வீரர்க்கு அழகன்று; இனி அத்தகைய தோல்விக்கு இடந்தராமலிருப்பதே ஆண்மையென்பதை எடுத்துக் காட்டினார்.

"நல்ல தோல்வியடைந்து விட்டோம் என்பதை ஒப்புக் கொள்ளத்தக்க தைரியம் நம் எல்லோருக்கும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். தேர்தல், சூதாட்டத்திற்கு ஒப்பானது. சூதில் ஏற்படும் வெற்றியும் தோல்வியும் மனிதனுடைய பெருமையையோ, புத்திசாலித்தனத்தையோ, சக்தியையோ பொறுத்ததல்ல. வெற்றியா? தோல்வியா? என்கின்ற வெறும் உச்சரிப்பை மாத்திரம் பொறுத்ததேயாகும்.

ஆதலால், இந்தத் தோல்விக்காக ஏன் விசனப்பட வேண்டும்? ஓட்டத்தில் களைத்துப் போனவன் பந்தயத்தில் தோற்றவனாவானே ஒழிய, வாழ்க்கைக்கு உதவாதவனாகிவிட மாட்டேன்.

எனவே, பார்ப்பனரல்லாத வாலிபர்களே! உங்கள் வீரத்தையும், ஊக்கத்தையும் இந்தத் தோல்வியென்னும் உலையில் வைத்துக் காய்ச்சித் தட்டித் தீட்டிக் கூர்மையாக்குங்கள்! வகுப்புவாதத்தால்தான் சமதர்மம் அடைய முடியும் என்று நினையுங்கள்! இத்தோல்வியால் ஒன்றும் முழுகிப் போவதில்லை. அதை வரவேற்றுக் கொண்டு, பார்ப்பனர்கள் நம்மைத் தட்டி எழுப்பி விட்டதற்காக அவர்களுக்கு நன்றி கூறுங்கள்! எல்லாம் நன்மைக்கே என்றெண்ணுங்கள்! எல்லாவற்றையும் நன்மைக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! ஜெயம்! ஜெயம்! ஜெயம்!! (!18/1/1934  பகுத்தறிவு தலையங்கம்)

பெரியாரிடம் நேர்மை இருந்தது அதனால் தேர்தல் தோல்விகண்டு துவளவில்லை ஆனால் இன்று???

Pin It