டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் ‘மந்திரிசபை’ என்னும் தலைப்பிட்டு தமிழ்நாடு பத்திரிகையில் எழுதி இருக்கும் வியாசம் பாமர மக்களை குழப்பமடையச் செய்யக் கூடியதாயிருப்பதால் நிலைமையைத் தெளிவுபடுத்த வேண்டி அவ்வியாசத்தின் போக்கைப் பற்றிச் சிறிது ஆராய வேண்டியிருக்கிறது. டாக்டர் நாயுடுகாரு வியாசத்தில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கிய விஷயங்களை இதில் குறிப்பிடுகிறோம். “ஸ்ரீவில்லிபுத்தூர் மகாநாட்டில் நான் வேண்டிக் கொண்டபடியும், தேசீய சங்கத்தின் அறிக்கைப் படியும் சுயராஜ்யக் கட்சிக்கோ ஜஸ்டிஸ் கட்சிக்கோ பெரும்பான்மையான ஸ்தானங்கள் கிடைக்க முடியாமல் செய்து விட்டதைக் கண்டு நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்” என்று எழுதியிருக்கிறார். இதில் கடுகளவு உண்மையாவதிருக்கிறதா?
டாக்டர் நாயுடுகாரு கணக்குப் படிக்கே சுயராஜ்யக் கட்சிக்கு 46 ஸ்தானங்கள் என்று போட்டிருக்கிறார். ஒட்டு மொத்தம் தொண்ணூற்றாறு என்றும் போட்டிருக்கிறார். இவர்களில் கட்சி இல்லாத ஐரோப்பியர்களை நீக்கிவிட்டால், டாக்டர் கணக்குப்படியே சுயராஜ்யக் கட்சிக்காரர் மெஜாரிட்டியாகி இருக்கிறார்கள் என்பதை நாயுடுகாரு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அப்படி இருக்க தனது வார்த்தையை தேசத்தார் கேட்டு அதன்படி நடந்தார்கள் என்று பெருமை பாராட்டிக் கொள்வதில் எவ்வளவு அசட்டுத் தனம் இருக்கிறது என்பது அறிஞர்களுக்குத் தெரியாமல் போகாது. இதனால் டாக்டர் நாயுடுகாரு அடையும் பெருமையைப் பற்றி நமக்கு சந்தோஷமே ஆனாலும், பாமர மக்களை இது ஏமாற்றுகிறதே என்கிற விஷயத்தில் உண்மையை வெளிப்படுத்தாமல் இருக்கக் கூட வில்லை.
முதலாவது நாயுடுகாரு ஸ்ரீ வில்லிபுத்தூரிலும் தேசீய அறிக்கையிலும் யோக்கியர்களுக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று வெளிப்படுத்தினாரே அல்லாமல் ஒரு கட்சியும் மெஜாரிட்டியாராக வராமல் இருக்கும்படி ஓட்டுச் செய்யுங்கள் என்று சொல்லவும் இல்லை. இந்நிலைமையில் டாக்டர் எக்கட்சியைத் தனக்கு பிடித்த யோக்கியமானவர்கள் என்கிறார்? ஜனங்கள் எக்கட்சியை அயோக்கியமானவர்கள் என்று தள்ளிவிட்டதாகச் சொல்லுகிறார்? பெரும்பான்மையானவர்கள் தெரிந்தெடுக்கப்பட்டதாய் நாயுடுகாரே சொல்லும் கட்சியான சுயராஜ்யக் கட்சியை நாயுடுகாரே பிராமணக் கட்சி என்கிறார். அல்லாமலும் அது கட்டுப்பாடாக பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் பிரசாரம் செய்வதின் பலனாய் ஜாதித் துவேஷம் வளருவதோடு தேசீய வாழ்க்கைக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது என்றும் தனது தனி தேசீய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி இருக்க அக்கட்சியை பெரும்பான்மையாய் தெரிந்தெடுப்பதாய் நாயுடுகாரே ஒப்புக் கொண்டிருக்கையில் நாயுடுகாரு வார்த்தையை தேசம் மதித்ததாக பெருமை பாராட்டிக் கொள்ள இடமெங்கே?
தவிர ஜஸ்டிஸ் கட்சி தோல்வியைப் பார்த்து பலர் அதிலிருந்து விலகி சுயேச்சைக் கட்சியில் சேர்ந்திருப்பதாகவும், சுயராஜ்யக் கட்சி வெற்றியைப் பார்த்து சுயேச்சைக் கட்சியார் சிலர் சுயராஜ்யக் கட்சியில் சேர்ந்திருப்பதாகவும் சொல்லுகிறார். இதனாலும் நாயுடுகார் சொல்லியபடி ஜனங்கள் ‘தக்க யோக்கியர்களை’ பெருவாரியாகவும் தெரிந்தெடுத்ததாக அவரே ஒப்புக் கொள்ளவும் முடியாது. தவிர “ராஜீய விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கைகளை நான் எப்போதும் ஆதரித்தது கிடையாது. ஜஸ்டிஸ் கட்சியை விட சுயராஜ்யக் கட்சியே சிலாக்கியமானது என்று பல தடவை சொல்லியிருப்பது போலவே இப்போதும் ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபை அமைப்பதைவிட சுயராஜ்யக் கட்சி அமைப்பதே சிலாக்கியமானது என்று நினைக்கிறேன்” என்று சொல்லுகிறார். இதிலும் கொஞ்சமாவது யோக்கியப் பொறுப்பு இருக்கிறதா என்பதை வாசகர்களே உணர வேண்டும். தோற்றுப் போனதாகச் சொல்லும் கட்சியை குறை சொல்லுவதற்கு நாயுடுகாரைப் போன்றவர்களே வேண்டுமென்பதில்லை. தெருவில் போகும் பிச்சைக்காரன்கூட தாராளமாய்ச் சொல்லிவிடலாம். பொறுப்புள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாயுடுகாரைப் போன்றவர்கள் காரணம் காட்டி இரண்டிற்குமுள்ள தாரதன்மையையும் காட்டிச் சொன்னால் அது அழகாயும் கண்ணியமாயுமிருக்கும்.
டாக்டர் நாயுடுகாரவர்களே மற்றொரு சமயத்தில் “சுயராஜ்யக் கட்சி பிராமணக் கட்சி, அடுத்த தேர்தலில் அது வெற்றி பெற்றால் பிராமணரல்லாதாருடைய கதி அதோகதியாய்ப் போய்விடும் என்பது நமது பலமான நம்பிக்கை” என்று சொல்லி இருக்கிறார். அல்லாமலும் சுயராஜ்யக் கட்சியால் தேசீய வாழ்க்கைக்கு ஆபத்தேற்பட்டு வருகிறது. கட்டுப்பாடாக பிராமணரல்லாதாருக்கு விரோதமாய் பிரசாரம் செய்து வருகிறது. அது வெற்றி பெற்றால் பிராமணரல்லாதாருடைய கதி அதோகதியாய்ப் போய் விடும் என்று சொல்லியும் எழுதியும் இருக்கும் டாக்டர் நாயுடுகாரு அவர்கள் இப்போது “சுயராஜ்யக் கட்சி மற்றெல்லாவற்றையும் விட மேலானது. அக்கட்சி மந்திரி சபை அமைப்பதே சிலாக்கியமானது” என்று சொல்லுவதானால் டாக்டர் நாயுடுகாருக்கு தேசீயக் கவலையாவது பிராமணரல்லாதார் அபிமானமாவது இருக்கிறதாக யாராவது சொல்லமுடியுமா?
மறுபடியும் “தேசீய வாழ்க்கைக்கு ஆபத்தானதும் பார்ப்பனரல்லாதார் கதியை அதோகதியாக்கும் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய்க் கட்டுப்பாடாய் வேலை செய்யும் பிராமணக் கட்சியுமான (இவை நாயுடுகாரே சொன்ன வார்த்தைகள்) சுயராஜ்யக் கட்சியார் மந்திரி பதவிகளை ஒப்புக்கொள்ள மறுப்பார்களானால் ஜஸ்டிஸ் கட்சியார் பெற்று விடுவது நிச்சயம். அப்படிச் செய்வது நாட்டிற்கு நன்மை அல்ல” என்று எழுதுகிறார். ஜஸ்டிஸ் கட்சிக்காரர் மந்திரி பதவி ஒப்புக் கொண்டால் சுயராஜ்யக் கட்சிக்காரரைவிட நாட்டிற்கோ தேசீயத்திற்கோ என்ன கெடுதி வந்து விடும் என்று நாயுடுகாரு பயப்படுகிறார் என்பதும், சுயராஜ்யக் கட்சியாரால் என்ன நன்மை எதிர்பார்க்கிறார் என்பதும் விளங்கவில்லை. தவிர சுயராஜ்யக் கட்சியார் மந்திரி சபை அமைக்க மறுப்பார்களானால் முன்னால் சட்டசபை பஹிஷ்காரத்தால் ஏற்பட்ட கெடுதல் வந்து சேருமென்று எச்சரிக்கை செய்கிறேன் என்று எழுதுகிறார். சட்டசபை பஹிஷ்காரத்தால் என்ன கெடுதி ஏற்பட்டது? சென்ற மூன்று வருஷமாக சட்டசபை ஏற்பினால் என்ன நன்மை விளைந்தது? டாக்டர் நாயுடுகாரு சட்டசபை பஹிஷ்காரத்திற்கு பிரசாரம் செய்தாரா இல்லையா? சட்டசபையில் பலனில்லை என்று சொன்னாரா இல்லையா?
தவிர, “தான் சுயராஜ்யக் கட்சிக் காரரல்லவானாலும் மகாத்மா காந்தி எப்படி சுயராஜ்யக் கட்சிக்காரரல்லாத காங்கிரசுக்காரரோ, அது போன்ற காங்கிரசுக்காரர்” என்று தனது நிலையை விளக்கியிருக்கிறார். அப்படியானால் மகாத்மா சட்டசபைக்குப் போய் சுயராஜ்யக் கட்சியை (நாயுடுகாரு கொள்கையில்) மந்திரி பதவிகளை ஒப்புக் கொள்ளச் சொன்னாரா? ஆதலால் நாட்டிற்கு என்ன கெடுதி? எப்படி நேரிடும் என்று பயப்படுகிறார் என்பது வாசகர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டியதாயிருக்கிறது. தவிர “மந்திரிசபையை அமைக்கும்படி சத்தியமூர்த்தியைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதியிருக்கிறார். மந்திரிசபை அமைக்க சத்தியமூர்த்திக்கு என்ன பாத்தியமிருக்கிறது என்று கருதினாரோ தெரியவில்லை. சட்டசபையில் சுயராஜ்யக்கட்சித் தலைவரா? அல்லது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கிற பொது மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவரா? அல்லது கவர்னரால் கூப்பிட்டுக் கேட்கப்பட்டவரா? எந்த முறையில் அவர் மந்திரிசபை அமைக்க வேண்டியவர்? எந்த முறையில் நாயுடுகார் கட்டளை இட வேண்டியவர்? என்பது வாசகர்கள்தான் உணர வேண்டும்.
தவிர “சுயராஜ்யக் கட்சியார் தேவஸ்தான சட்டத்தை எதிர்ப்பார்களே; பிராமணரல்லாதாருக்கு விரோதம் செய்வார்களே என்று சிலர் பயப்படலாம். சுயேச்சைவாதிகள் பலமில்லாமல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. சுயேச்சைவாதிகளில் ஒன்று இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பிராமணரல்லாதார். ஆகையால் தேவஸ்தானச் சட்டத்தைத் தொலைக்கவோ பிராமணீயத்திற்காக வேலை செய்யவோ சுயராஜ்யக் கட்சியார்களால் ஒரு நாளும் முடியாது” என்று சொல்லுகிறார். அப்படியானால் சுயராஜ்யக் கட்சியார் எல்லோரும் பார்ப்பனர்களா? நாயுடுகாரு கணக்குப்படி வெள்ளைக்காரர்களை நீக்கி 13 பேர்கள்தான் சுயேச்சைக் கட்சியிலிருப்பதாய் ஏற்படுகிறது. இந்த பதின்மூன்று பேர்களில் சில பார்ப்பனர்களை நீக்கிவிட்டால் 10 பேர்தான் ஆகிறது. நாயுடுகார் கணக்குப்படிக்குள்ள ஜஸ்டிஸ் கட்சி 28 பேரும் சுயேச்சை 10 பேரும் சேர்ந்தாலும் சுயராஜ்யக் கட்சியை வெல்ல முடியாத மைனாரிட்டியில் தானே இருக்கிறது. அப்படிக்கு இருக்க தேவஸ்தான சட்டத்தை ஒழிக்கவோ பிராமணீயத்திற்கு வேலை செய்யவோ ஒரு நாளும் முடியாது என்று எந்தக் கணக்கில் சொல்லுகிறார் என்பதும் வாசகர்கள்தான் உணர வேண்டும்.
இது தவிர “சுயராஜ்யக் கட்சியார் தேவஸ்தானச் சட்டத்தை எதிர்க்காமல் இருந்தால் பெரும்பான்மையான ஸ்தானத்தைப் பெற்று இருக்கலாம். இப்பொழுதாவது சுயராஜ்யக் கட்சிக்கு புத்தி வந்திருக்குமென்று நம்புகிறேன்” என்று சொல்லுகிறார். அப்படியானால் தேவஸ்தானச் சட்டத்தைக் கொண்டு வந்து ஆதரித்தவர்கள் பெரும்பான்மையாய் வந்திருக்கிறார்கள் என்று நாயுடுகாரு கருதுகிறாரா? என்பதையும் வாசகர்கள்தான் முடிவு கட்ட வேண்டும். தவிர, “மேலும் ஜஸ்டிஸ் கட்சியைவிட நமது மாகாணத்தில் ராஜீய விஷயத்தில் சிலாக்கிய மானது சுயராஜ்யக் கட்சியை விட வேறில்லை என்று தான் நான் சொல்லுகிறேனே ஒழிய அதில் சேர்ந்திருப்பவர்கள் அனைவரும் பரிபூரண யோக்கியர்கள் என்று நான் சொல்ல வரவில்லை” என்கிறார். தேசீய வாழ்விற்கு ஆபத்தை விளைவிக்கிறவர்களாகவும் பார்ப்பனரல்லாதார் கதியை அதோகதியாக்கக் கூடியவர்கள் என்றும் நாயுடுகாராலேயே ஒப்புக் கொள்ளப்பட்டவர்கள் எப்படி ராஜீய விஷயத்தில் சிலாக்கியமானவர்கள் என்று நாயுடு காரு எப்படி கருதுகிறார் என்பதும் நமக்கும் விளங்கவில்லை.
தவிர “1929 ம் வருஷத்தில் அதிக சுதந்திரங்கள் கொடுப்பதைப் பற்றி யோசிக்க ராயல் கமிஷன் நியமிக்கப்படுமாகையால் அச்சபையில் தேசாபி மானமுள்ள மந்திரி சபையிருப்பதுதான் நாட்டிற்கு நன்மையாகுமாதலால் இதை சுயராஜ்யக் கட்சியார் யோசிக்க வேண்டுமென்று” அவர்களைக் கெஞ்சுகிறார். ராயல் கமிஷனில் நாயுடுகாரே ஒப்புக்கொள்ளும் பார்ப்பனக் கட்சியாகிய சுயராஜ்யக் கட்சியால் நாட்டிற்கு என்ன நன்மை விளையும். பார்ப்பனீயத்தை வளர்க்க வந்த சுயராஜ்யக் கட்சியால் நாட்டிற்கு என்ன நன்மை எதிர்பார்க்கிறார் என்பதும் விளங்கவில்லை. தவிர, “ராமநாதபுரம் ராஜா மந்திரிசபை அமைக்க சுயராஜ்யக் கட்சியார் உதவி செய்யவேண்டும்” என்று பிரார்த்திக்கிறார். ராஜா அவர்களின் தேசீயக்கொள்கை என்ன? ஒத்துழையாமையா? ஜஸ்டிஸ் கட்சிக் கொள்கையில் எதற்கு மாறுபட்டவர்? சுயராஜ்யக் கட்சிக் கொள்கையில் எதை ஒப்புக் கொண்டவர்? ராஜா அவர் களிடம் எவ்விதமான தேசீயக் கொள்கைகளைக் கண்டு நாயுடுகாரு மயங்கு கிறார் என்பதும் நமக்கு விளங்கவில்லை.
இம்மாதிரி இன்னமும் என்ன என்னமோ எழுதி இருக்கிறார். அவற்றை எல்லாம் ஒரே சமயத்தில் ஆராய்வது முடியாத காரியம். இவரைப் போலவே ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் அவர்களும் பலவிதமாக எழுதி இருக் கிறார். மற்றும் பல ஒத்துழையாதார் என்போர்களும் என்ன என்னமோ பேசியிருக்கிறார்கள். ஆகவே இவர்கள் நாட்டின் பெரிய நெருக்கடியும் கலாட்டாவும் ஏற்படுகிற சமயத்தில் பொதுமக்கள் தங்களை மறந்துவிட்டால் என்ன செய்கிறது என்று ஏதாவது எழுதுவதன் மூலம் தலையைக் காட்டிக் கொள்வதில் நமக்கு ஆnக்ஷபனை இல்லை. ஆனால் வஞ்சகர்களாலும் சூழ்ச்சிக்காரர்களாலும் ஏற்கனவே ஏமாந்து கிடக்கும் நமது பாமர ஜனங்கள் இவ்வித அர்த்தமற்றதும் சமயத்திற்குத் தக்கதுமான விஷயங்களால் எவ்வ ளவு தூரம் இன்னமும் ஏமாற்றப்படுவார்கள் என்பதைப் பற்றித் தான் நாம் கவலைப்பட்டு விளக்கவேண்டி இருக்கிறதே தவிர வேறில்லை.
முதலாவது ஸ்ரீமான்கள் நாயுடுகாரும் ஜார்ஜ் ஜோசப்பும் இப்போது ஏற்பட்ட வெற்றி யையும் தோல்வியையும் நமது நாட்டின் உண்மையான பிரதிநிதித்துவம் என்றும் நாணயமான காரியங்களால் ஏற்பட்ட வெற்றி தோல்வியென்றும் மனப் பூர்த்தி யாய் ஒப்புக்கொள்ளுகிறார்களா? மந்திரி பதவிகளைப் பற்றி இவர்களுக்கு ஏன் இவ்வளவு கவலை? சட்டசபை உபயோகமற்றது என்றும் மந்திரிகளுக்கு சுயேச்சை அதிகாரமில்லை என்றும், அரசியல் கொள்கை களோ, கட்சிகளோ, வகுப்புக் கொள்கைகளோ, கட்சிகளோ நாட்டின் நன் மைக்கு உற்றதாக இல்லையென்றும் சொல்லி வருகிறவர்கள், விலகினவர் கள், நீயே வா, நீயே வா, நீ எடுத்துக்கொள் மந்திரி பதவியை; நீ எடுத்துக் கொள் பதவி அமைப்பை என்று சொல்லுவதில் என்ன நியாயமும் பொறுப்பும் இருக்கிறது?
உண்மையில் இவர்களுக்குப் பொறுப்போ நாட்டினிடம் பக்தியோ இருக்குமானால் “இப்போதைய நிலைமையில் ஜனப் பொறுப்பாட்சிக்கு தக்க திட்டங்கள் ஒன்றும் அரசியலில் இல்லை; ஜனப் பொறுப்பாட்சியை வகித்து நடத்தத்தக்க கட்சியோ மக்கள் செல்வாக்கிலும் இல்லை; ஆதலால் மந்திரி சபை வேண்டியதில்லை. மந்திரிசபையின் மூலம் சர்க்காரார் மக்களை ஏமாற்றித் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும்படி விடக்கூடாது; தேசீயக் கவலை உள்ளவர்கள் யாரும் பதவியை ஒப்புக்கொள்ளாமல் ‘ஜஸ்டிஸ் கட்சியும்’ அரசாங்க அடிமைக் கட்சியும் சர்க்காரும் சேர்ந்து அமைக்கப் போகும் மந்திரிசபையை எதிர்த்து ‘வங்காளம்’, ‘மத்திய மாகாணம்’ போல் மந்திரிகளை ஒழிக்க வேண்டும்” என்று சொல்வார்களானால் ஏதோ வார்த்தை அளவிலாவது சீர்திருத்தத்தை வெறுக்கிறோம் என்றாவது காட்டிக் கொள்ள இடமுண்டாகும். பாமர ஜனங்களுக்கும் ‘தேசீயத்தில்’ கவலையுண்டாகும். அதை விட்டு விட்டு நாக்கில் தண்ணீர் சொட்டிக் கொண்டு “நீ ஒப்புக் கொள், நீ ஒப்புக் கொள்” என்று சொல்லுவதின் அருத்தமென்ன? சுயராஜ்யக் கட்சியார் மந்திரி பதவியை ஒப்புக்கொண்டால் ‘தேசீயம்’ வளர்ந்து விடுமா? “வகுப்புத் துவேஷம்” ஒழிந்துவிடுமா? “வகுப்புக் குறைகள்” நீங்கி விடுமா? என்பது நமக்கு விளங்கவில்லை. இவைகளையெல்லாம் நினைக்கும் போது நமது நாட்டின் விடுதலைக்கும் மக்களின் சுயமரியாதைக்கும் நாளுக்கு நாள் எதிரிகளும் தடைகளும் அதிகமாய்க் கொண்டு வருகிறது என்று எண்ண வேண்டியிருக்கிறதே தவிர அநுகூலம் ஏற்பட்டுக் கொண்டு வருகிறதென்று சொல்லுவதற்கே இடம் இல்லையென்றே வருந்துகிறோம்.
(குடி அரசு - துணைத் தலையங்கம் - 28.11.1926)