ஜஸ்டிஸ் கட்சிக்கு இந்திய சட்டசபைத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டது என்பதினாலேயே அக்கட்சிக்குத் தலைவர்களாக இருந்து பெருமை பெற்றவர்களும், அனுதாபிகளாக இருந்து பயன் அடைந்தவர்களும் ஒரே அடியாக மனதை விட்டு விட்டார்கள்.

அதோடு மாத்திரமல்லாமல் எதிரிகளைத் தஞ்சமடைய தந்திரம் செய்கிறார்கள்.periyar on marriageஆனால் கட்சியின் பேரால் யாதொரு பயனும் அடையாமல் ஏதோ தங்களாலான அளவுக்கு உழைத்து வந்தவர்கள் பலர் மெய்மறந்து பொறுப்பற்று உறங்கிக் கொண்டிருந்த தலைவர்களுக்கு உணர்ச்சியும் ஊக்கமும் ஊட்ட "இத்தோல்விகள்" தக்கதொரு சாதனமாகுமென்று கருதி சிறிதும் உறுதியையும் தைரியத்தையும் விடாமல் நம்பிக்கையுடனேதான் இருந்து வருகிறார்கள்.

தோல்வி ஏற்பட ஏற்பட தலைவர்களாக இருந்து வருபவர்களுக்கு தோல்விக்குப் பரிகாரம் காங்கிரசில் சேருவதுதான் என்கின்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் தோன்றி இப்போது காங்கிரசில் சேர ஆளுக்காள் முந்துகிறார்கள்.

ஜஸ்டிஸ்காரர்கள் காங்கிரசில் சேருவதை ஜஸ்டிஸ் கொள்கையோ வேலைத் திட்டமோ எதுவும் குறுக்கே நிற்கவில்லை.

கோயமுத்தூரில் 1927ம் வருஷம் திவான் பகதூர் குமாரசாமி ரெட்டியார் தலைமையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சி ஸ்பெஷல் மகாநாட்டில் ஜஸ்டிஸ்காரர்கள் காங்கிரசில் சேரலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அத்தீர்மானம் அதற்குப்பின் நடந்த எந்த மகாநாட்டிலும் மாற்றப்படவில்லை.

அப்பொழுது அத்தீர்மானம் செய்யக் காரணம் என்னவென்பது பொது ஜனங்கள் அறிந்ததே.

அத்தீர்மானமாவது:

"பலவித அபிப்பிராய பேதமுள்ள பிராமணரல்லாதார் எல்லாருள்ளும் ஒற்றுமையை அதிகப்படுத்த வேண்டுவது மிக்க அவசியமாதலாலும், துரிதத்தில் சுயராஜ்யமடைவதற்காக இந்தியாவிலுள்ள பலவித ராஜீயக் கட்சிகளுக்கும் ஒற்றுமையை அதிகப்படுத்துவதற்கான முறைகளைக் கையாள வேண்டியிருப்பதாலும், காங்கிரஸை ஒரு தனி வகுப்பார் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்துவிட்ட சில சுயநலப்பிரியர்கள் பிராமணரல்லாதாரியக்கத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் திரித்து மாற்றிப் பொய்பிரசாரம் செய்து வருவதினாலும், அப்படிப்பட்ட பொய்ப்புரட்டுகளையும் விஷமப் பிரசாரத்தையும் மறுக்க வேண்டியது அவசியமாயிருப்பதினாலும், அதுவுமன்றி பிராமணரல்லாதார் இயக்கத்தின் நோக்கங்களையும் கொள்கைகளையும் சரியாய் விவரித்துக்கூறி ஜனங்களுக்குள் பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதி னாலும், இந்த மகாநாடு பிராமணரல்லாதார் எல்லாரும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் சேரவேண்டுமென்று வற்புறுத்தி வேண்டிக் கொள்வதுடன், காங்கிரசிலும் அது போன்ற சங்கங்களிலும் சேரப் பிரியமுள்ள தென்இந்திய நல உரிமைச்சங்கத்தின் அங்கத்தினர் அந்தப்படிச் சேரலாமென்றும் அனுமதிக் கொடுக்கிறது.

தென் இந்திய நலவுரிமைச் சங்கம் தனிச்சங்கமாய் நின்று தன்னுருக்குலையாமல் வேலை செய்யவேண்டுமென்றும் இந்த மகாநாடு தீர்மானிக்கிறது." (10-7-27 தேதி குடி அரசு)

ஆனால் அத் தீர்மானத்தின்படி ஜஸ்டிஸ்காரர் பலர் காங்கிரசில் சேர்ந்தும் அவர்களது உத்தேசம் சிறிதும் நிறைவேறவில்லை. இந்த முடிவை நாம் கோயமுத்தூர் கான்பரன்சில் எடுத்துக் கூறினோம்.

தோழர்கள் பனகால் அரசர், பி. வரதராஜுலு நாயுடு, திரு. வி. கல்யாண சுந்திர முதலியார் ஆகியவர்களுடைய ஆசைக்கு நாம் அடிமையாகி அதை எதிர்க்காமல் இருந்துவிட்டோம்.

இன்று அதுபோல ஒரு உணர்ச்சி ஜஸ்டிஸ்காரர்கள் அனேகருக்குத் தோன்றிவிட்டது.

காங்கிரசில் சேரவும் போகிறார்கள். பயனைப் பொறுத்தவரையில் முன் போலவேதான் முடிவு ஏற்படப் போகின்றது என்பது நமது அபிப்பிராயம்.

காங்கிரசுக்கு உள்ளே போய்ச் சேர்ந்து காங்கிரசுக்காரர்களின் யோக்கியதையை வெளியாக்கவோ, அல்லது நமது கொள்கைகளை அதிலிருந்து பிரசாரம் செய்யவோ முடியும் என்று நினைப்பது வீண் கனவேயாகும்.

பார்ப்பனர்கள் காங்கிரசை தேசாபிமானத்துக்கு ஆவது, தேச மக்களின் பொது பிரதிநிதித்துவத்துக்கு ஆவது வைத்திருந்தால் இந்த கொக்கு பிடிக்கிற வித்தையெல்லாம் வெற்றிபெறலாம்.

ஆனால் பார்ப்பனர்கள் காங்கிரசை தங்கள் சமூக நன்மைக்காகவே வைத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்றபடியே அவர்கள் அதை பந்தோபஸ்த்து செய்து மற்றவர்கள் உள்ளே நுழையாதபடிக்கு வேட்டை நாய்களை வாசல்படியில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதாவது பல அசாத்தியமானதும் மனச்சாட்சியும், பகுத்தறிவும் உள்ளவர்கள் ஒப்புக் கொள்ள முடியாததுமான திட்டங்கள் இருக்கின்றன.

இவ்வளவையும் கடந்து உள்ளே சென்றாலும் காரைக்குடி மகாநாட்டுத் தலைமை விஷயத்தில் தோழர் அவினாசிலிங்கத்துக்கும், தோழர் ருக்குமணி லட்சுமிபதிக்கும் நடந்த கதைகள் நடக்காமல் போகாது.

அவினாசிலிங்கத்துக்கும் அவர் போன்றாருக்கும் பார்ப்பனர்கள் கொடுக்கும் விளம்பரமும் பெருமையும் மற்றவர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது அறிவீனமேயாகும்.

காங்கிரசு பார்ப்பன ஸ்தாபனம் என்பதற்கு மற்றும் வேறு ஏதாவது உதாரணம் வேண்டுமானால் மிதவாதிகள் என்னும் பார்ப்பனர்களுக்கும் பூரண சுயேச்சைக்காரர்கள் என்னும் பார்ப்பனருக்கும் கொள்கையில் எவ்வளவு எவ்வளவு வித்தியாசமிருந்தாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் காங்கிரசில் உள்ள சலுகையும் அபிமானமும் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.

தோழர் மகாகனம் சீனிவாச சாஸ்திரி என்பவர் காந்தியாரை அராஜகர் என்று சொல்லி சர்க்காரிடம் கூலி பெற்றவர்.

காந்திக்கு அரசியல் ஞானம் இல்லை என்று சொல்லி வெள்ளையர் களிடம் நற்சாட்சிப்பத்திரம் பெற்றவர். இன்று காந்தியாரை மகா வலிமை பெற்ற ஆத்ம சக்தியுடையவர் என்று அவர் சொல்லுவதோடு "காங்கிரசை தோல்வியுற விட்டுவிடலாமா?" "ஜஸ்டிஸ் கட்சி வெற்றிபெறுவதை பார்த்துக் கொண்டு உயிருடன் இருக்கலாமா" என்பதோடு காங்கிரசில் தாங்களுக்கு இடம்கொடுக்க வேண்டும் என்று கெஞ்சுகிறார். தோழர்கள் சர். சிவசாமி அய்யர் என்கிறவரும் டி.ஆர். வெங்கிட்டராம சாஸ்திரியார் என்பவரும் காங்கிரசின் "மகிமையையும் பெருமையையும்" வானமளாவப் புகழ்ந்து பேசி மிதவாதிகள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்கிறார்கள்.

தோழர் சீனிவாசய்யங்கார் அவர்களைப்பற்றி பேசவேண்டியதே இல்லை. அவர் காந்தியாரை முட்டாள் என்று சொன்னதோடு "காந்தி கோஷ்டியார் எவரும் என் வாசல்படியை மிதிக்கக் கூடாது" என்று கட்டளை போட்டவர். தோழர் ஜம்னாலால் பஜாஜ் அவர்கள் சீனிவாசய்யங்கார் அவர்கள் வீட்டுக்கு வந்து பார்க்கிறேன் என்று சொன்னதற்குக் கூட பார்க்க முடியாது என்று சொன்னவர். மற்றும் அவர் தோழர் ராஜகோபாலாச்சாரியாரைக் காணுவதே பாவம் என்று கருதுபவர். இப்படிப்பட்டவர் இன்று காங்கிரஸ் தலைவர்களில் முதல் ஸ்தானம் பெற வருகிறார். காங்கிரஸ் பார்ப்பனர்கள் தலைமை ஸ்தானம் அளிப்பதாக உறுதி கூறி அழைக்கிறார்கள்.

இன்று இந் நாட்டில் எந்தப் பார்ப்பனர்களுடைய முகத்திலும் "லக்ஷிமி களை" தாண்டவமாடுகிறது.

காங்கிரசில் இல்லாத பார்ப்பனர்கள் இன்னார் என்று பூதக்கண்ணாடி வைத்துக்கூட காண முடியாது.

சர்க்கார் உத்தியோகத்திலுள்ள பார்ப்பனர்களும் காங்கிரஸ் வெற்றியை காலக்ஷேமமாகச் செய்கிறார்கள்.

அவர்கள் ஆண் பெண் குழந்தை குட்டிகள், கிழடு கிண்டுகள் சகிதம் காங்கிரஸ் தாங்கள் சொந்தப் பெரியவர்கள் தேடிவைத்த முதல் போல் கருதி ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

காந்தியார் ஒரு கோடி ரூபாய் தண்டுகிற காலத்தில் ஜனங்களுக்கு அதோ தெரிகிறது சுயராஜ்ஜியம், இதோ தெரிகிறது சுயராஜ்ஜியம் என்று சொன்னதை மக்கள் எப்படி நம்பி பணம் காசு கொடுத்து ஜெயிலுக்கும் போனார்களோ அதுபோன்ற நம்பிக்கையே இப்போது பார்ப்பனர்கள் எல்லோருக்கும் இருந்து வருகிறது.

அதாவது அதோ வந்துவிட்டது பார்ப்பன ராஜ்ஜியம், இதோ வந்துவிட்டது பார்ப்பன ராஜ்ஜியம் என்கின்ற உண்மையான நம்பிக்கையே எல்லோருடைய முன்னிலையிலும் தாண்டவமாடுகின்றது. ஜஸ்டிஸ் ஆட்சியின் பயனாய் தங்கள் பிள்ளைகுட்டிகளுக்கு உத்தியோகம் கிடைக்காது என்று கருதி வேறு தொழிலுக்கு தயார் செய்த குழந்தைகளைக்கூட அவற்றை விட்டுவிடச் செய்து இப்போது பள்ளியில் படிக்க வைக்க நெருப்புப்பிடித்த வீட்டுக்காரர் தன் சாமான்களை எடுக்க ஆத்திரப்பட்டு அலைவதுபோல் தோசை மாவு ஆட்டும் கிழவி முதல் அலைகிறார்கள்.

இப்படிப்பட்ட பார்ப்பனக் குடும்பச் சொத்தில் பங்கு கிடைக்கும் என்று கருதி ஒரு பார்ப்பனரல்லாதார் அதில் போய்ச் சேருவதென்றால் அது எப்படிப்பட்ட புத்திசாலித்தனமாய் இருக்கும் என்று நம்மால் விளக்கக்கூடவில்லை.

இவ்வளவும் ஒருபுறம் இருக்க, புழுத்ததின் மேல் சாணியைப் போட்டதுபோல் நமது நன்றி விசுவாசமுள்ள சர்க்காரின் காற்றும் பார்ப்பனர்களின் யாகத்துக்கு அனுகூலமாகவே அடித்து வருகின்றது.

வெள்ளைக்காரர்களுடைய "கடாக்ஷ"மும் பார்ப்பனர்கள் மீதே இறங்கி வருகிறது. வில்லிங்டன் துரை மகனார் கூட, சாகும் போது சிவ என்று சொல்லிவிட்டால் சகல பாபமும் தீர்ந்துபோகும் என்று நம்மவர்கள் கருதுவது போல், "காங்கிரஸ் குஷாலாக வந்து சர்க்காரை ஏற்று நடத்தட்டும் யாரும் அதற்குத் தடைசெய்யாதீர்கள்" என்று தனது கணங்களுக்கு அசரீரி அருளிவிட்டு வந்த இடத்துக்கு பயணமாகிறார்.

மாகாண கவர்னர்களும் அந்த அசரீரியை வெகு பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்கிறார்கள்.

இவற்றிற்கெல்லாம் காரணம் ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள், வைசியர் அண்டாவில் பால் ஊற்றினது போல் ஆளுக்காள் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் காங்கிரசுக்கு பயந்ததும், காங்கிரஸ்காரர்களிடம் திருட்டு நேசம் வைத்ததும், கோபம் வந்த போதெல்லாம் அதிருப்தி ஏற்பட்ட போதெல்லாம் காங்கிரசில் சேர்ந்திடுவேன் காங்கிரசில் சேர்ந்திடுவேன் என்று பிகுவு காட்டினதுமான காரியங்களே காங்கிரசை இவ்வளவு பூச்சாண்டி ஆக்கிவிட்டது.

இவற்றை யெல்லாம்விட ஒரு பெரிய அனுகூலம் காங்கிரசுக்கு எதனால் ஏற்பட்டது என்றால் ஜஸ்டிஸ் கட்சியார் பிரசாரம் செய்ய பத்திரிகை மூலமானாலும் சரி, பிரசங்கத்தின் மூலமானாலும் சரி சிறிதும் லட்சிய மில்லாமல் தங்கள் மார்பைப் பார்த்துப் பார்த்து உடல் பூரிக்கச் செய்து கொண்டதேயாகும்.

"மற்றும் காங்கிரஸ் என்பது கழுதையோ குதிரையோ அதை அடையாளம் பார்க்காதீர்கள். பார்க்கவும் விடமாட்டோம். சொல்வதை நம்புங்கள். நம்ப மாட்டேன் என்று சொல்லவும் உங்களால் முடியாது" என்று சொல்லி சண்டப்பிரசண்டமாய் காங்கிரஸ்காரர்கள் செய்துவந்த பிரசாரமுமேயாகும்.

இவைகள் எல்லாம் எதைக் காட்டுகின்றதென்றால் தலைவர்கள், பிரதானப்பட்ட புருஷர்கள் என்பவர்கள் பயந்து போயும் வேறுசில காரணத் தாலும் பாமர மக்களை சிறிதும் மதியாமல் கை விட்டு விட்டதேயாகும்.

ஆன போதிலும்கூட நாம் சிறிதும் அஞ்சவில்லை; அதைரியப்படவு மில்லை. நமது தோழர்கள் யாரும் மனமுடைந்து போகவேண்டியது மில்லை. நமது கொள்கையில், திட்டத்தில் ஏதாவது குறைகள் சூதுகள் இருந்தால் மாத்திரம்தான் நாம் பயப்படவேண்டும்.

நம் கொள்கை மந்திரி பதவியே அல்ல, நம் கொள்கை அதிகாரமும் சம்பளமுமேயல்ல, நமது திட்டம் நம் சமூகத்தைப் பொறுத்தது மாத்திரமுமல்ல, அரசாங்கத்தை நெருக்கி மனித சமூகம் ஒட்டுக்கும் சம உரிமை வழங்கச் செய்ய வேண்டியதாகும்.

ஆதலால் மந்திரி பதவி நம் கையை விட்டுப் போகுமானால் சகல சீர்திருத்தமும் உடைந்து எல்லா இலாக்காவும் அரசாங்கமே ஏற்று ஒழுங்காய் நடத்திக் கொடுக்கும்படியான நிர்பந்தத்தை உண்டாக்க நமக்குத் தெரியும். நம்மால் முடியும். நாம் கிளர்ச்சிசெய்ய ஆரம்பித்தால் பார்ப்பனர் கிளர்ச்சிபோல "நான் ஓயாமல் அழுகிறேன் நீ நோகாமல் அடி" என்கின்ற ஒப்பந்தக் கிளர்ச்சியாக இருக்க முடியாது என்பதோடு "தவளை கடிக்குமா பார்ப்பனப் படை வெல்லுமா" என்கின்ற பழமொழிப்படியல்ல என்பது உலகமறிந்து விடும். ஆதலால் இம்மாதிரி தோல்வியைப்பற்றி ஏன் மானமும் துணிவு முள்ளவன் கவலைப்பட வேண்டும்?

நம்மை பார்ப்பனர்கள் உத்தியோக வேட்டைக்காரர்கள் என்று சொன்னதையும், நாம் (பார்ப்பனரல்லாத கட்சியார்) ஜெயிலுக்குப் போக பயந்தவர்கள் என்று சொன்னதையும் எப்பொழுது தான் பொய்ப்பித்துக் காட்டுவது? அதற்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டாமா? என்று ஒவ்வொரு பார்ப்பனரல்லாத மக்களும் சந்தர்ப்பம் தேடிக் கொண்டு திரியும் இக் காலத்தில் ஒரு சில ஜஸ்டிஸ் தலைவர்களும் பதவியாளர்களும் எதிரியின் காலுக்குள் நுழைவது ஒருநாளும் இத்தோல்விக்கு மருந்து என்று எண்ணக்கூடா தென்பது தான் நமது அபிப்பிராயம்.

நமக்கு தோல்வி இதுவரையிலும் இன்று இந்நிமிஷ வரையிலும் ஏற்படவில்லை என்பது நமது உறுதி. இனியுமாவது ஏற்பட்டு விடுமா என்றும் நாம் கருதவில்லை. சர்க்காரும் பார்ப்பனர்களும் அவமானப்படும் படியான தோல்விதான் நமக்கு ஒரு சமயம் ஏற்பட்டாலும் ஏற்படலாமே ஒழிய, நாம் கவலைப்பட தக்க தோல்வி ஏற்படாது என்பது சரியான தீர்க்க தரிசனம் என்று சொல்லுவோம்.

ஆதலால் காங்கிரசுக்கு போகின்றவர்கள் போகட்டும், அதனால் சட்ட விரோதமோ கொள்கை விரோதமோ திட்ட விரோதமோ ஏற்பட்டு விடாது. நியாய விரோதம் இருக்கலாம். நியாயத்துக்கும் சட்டத்துக்கும் கொள்கைக்கும் சம்பந்தமில்லை. ஆதலால் மூன்று மந்திரிகளும், அவர்களது மூன்று காரிய தரிசிகளும், அவர்களது எடுபிடி ஆள்களும்கூட குஷாலாக காங்கிரசுக்குப் போகட்டும். நமக்கு அது விஷயத்தில் சிறிதும் கவலையில்லை. பார்ப்பனரல்லாதார் கட்சிக்கும் அதனால் சிறிதும் கெடுதி ஏற்பட்டு விடாது. ஆதலால் அந்த பிரச்சினையை விட்டு விட்டு மற்றதைக் கவனிப்போம்.

அதாவது என்னவென்றால் நம்மில் ஒரு கூட்டத்தார் பயந்து விட்டார்கள். இனி எந்தக் காரணம் கொண்டும் அவர்களது பயத்தை இப்போது தெளிவிப்பது லேசான காரியமல்ல.

மற்றொரு கூட்டத்தார் சுவரின் மேல் பூனை போல் இருக்கிறார்கள்; அவர்களை இனி சிறிது கூட நம்புவது புத்திசாலித்தனமாகாது.

மற்றொரு கூட்டத்தார் தோல்வி ஏற்பட்டால் வெட்கமே என்று ஒதுங்கி நிற்பவர்களாக காட்டிக் கொள்ளுகிறார்கள். இவர்களை சிறிது காலத்துக்கு மறந்து இருப்பதே நல்லது.

மற்றொரு கூட்டத்தார் ஜஸ்டிஸ் கட்சியார் ஒரு வேலையும் செய்வதில்லை, இவர்களோடு இருந்து கொண்டு என்னதான் செய்கின்றது என்கிறார்கள். இவர்களை அணாமத்தில் வைத்திருப்போம்.

ஆகவே இவர்கள் நீங்கிய ஒரு கூட்டம் "நாங்கள் எந்த தேர்தலுக்கும் எந்த பதவிக்கும் நிற்பதுமில்லை ஆசைப்படுவது மில்லை" என்கின்ற உறுதி உள்ளவர்கள் ஒன்று சேரவேண்டும்.

அவர்கள் இப்போதே எந்தப்பதவியில் இருந்தாலும் ராஜினாமா செய்ய வேண்டும்.

அப்படி ராஜினாமா செய்தவர்களே தலைமைவகித்து நடத்தத்தக்க வண்ணம் ஒரு சாரணர் படை திரட்ட வேண்டும்.

அதற்கு அதிகநிதி ஒன்றும் தேவையில்லாத மாதிரி பிரசாரம் வகுக்க வேண்டும்.

இவ்வளவுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய வேலையாகும்.

"உலகம் உயர்ந்தோர் மாட்டு" என்று சொல்லுவது பொருளற்ற பழஞ்சொல் உலகம் பிரசாரத்திற்கடிமை என்பதுதான் உண்மையான சொல்.

இதற்கு ஆவன செய்யவும் இதைப்பற்றி பல தோழர்களது அபிப்பிராயம் அறியவும் சமீபத்தில் ஒரு கூட்டம் கூட்டவோ அல்லது சிலர் சுற்றுப் பிரயாணம் செய்யவோ அவசியமென்று கருதுகிறோம். பல வழிகளிலும் தலைவர்கள் என்பவர்களால் தக்கபடியான முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்படும் என்றுகருதி ஏமாற்ற மடையும்படியான நிலைமை ஏற்பட்டு வருவதால் இம்மாதிரியான ஒருகாரியம் அவசியம் என்று படுகின்றது.

(குடி அரசு தலையங்கம் 19.01.1936)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.