உச்ச நீதிமன்றம் ஊழலுக்கு எதிரி போன்று ஊழல்வாதிகளை கண்டித்து அப்பாவி பொதுமக்களை காப்பாற்ற வந்த கல்கி அவதாரம் போன்ற ஒரு தோற்றம் ஊடகங்கள் வாயிலாகத் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இந்த அப்பாவி பொதுமக்கள் என்பவர்கள் யார்? குப்பனோ சுப்பனோ அல்ல... டாட்டாவும் அம்பானியும்தான் அவர்கள்! பாவம் அவர்கள் தான் என்ன செய்வார்கள்? தங்கள் அடிக்கும் கொள்ளை லாபத்தின் ஒரு பகுதியை அரசியல்வாதிகளிடம் பறிகொடுப்பது என்றால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்? அரசிடம் இருந்து தேவையான சலுகைகள் எல்லாம் பெறும்போது (இந்த சலுகைகளுக்கு மறுபெயர் மான்யம் அதை பற்றிக் கீழே காண்போம்) இனிப்பாய் இனிக்கும் அமைச்சர்கள் அதில் பங்கு கேட்கும் போது அவர்கள் கண்களுக்கு ஊழல்வாதிகளாக தென்படுகிறார்கள். தங்களுடைய ஓடும் நாய்களான ஊடகங்களைத் தட்டி விட்டு ஊழல் என்ற குரலெழுப்பி அவர்களின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு இரண்டு வகையில் பயன் கிடைக்கிறது.

1. அவர்கள் அரசிடமிருந்து மான்யம் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளை மறைக்கப்படுகிறது.

2. அவர்களுடைய போக்கிற்கு இணங்கி வராத அமைச்சர்கள் ஊழல்வாதிகள் என்ற முத்திரையிடப்பட்டு அவர்கள் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. இது எப்பொழுதும் இருந்து வரும் ஒன்றுதான். ஆனால் முன்பு டாடா குடும்பத்தின் சர்வாதிகாரம் மட்டும் கோலோச்சியது. பிர்லாவின் குடும்ப பூசல்கள் அவர்களைப் போட்டியில் இருந்து தள்ளி விட்டது. ஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக அம்பானி குடும்பம் வலுப்பெற்று விட்டது. டாடா குடும்பத்திற்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்துவிட்டது. புதிய பணக்காரனை மரபு மிக்க டாடாவினால் சகித்துக் கொள்ள முடியுமா? 2ஜி அலைக்கற்றை சிக்கல் என்பது டாடா அம்பானி சண்டையை விட அதிகமாக ஒன்றும் இல்லை. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு இருவருக்கும் சரிபாதியாக பகிர்ந்து அளித்து அவர்கள் அடித்த கொள்ளையில் பங்கு கேட்ட அரசியல்வாதிகளை கண்டிப்பதும் சிலரை தண்டிப்பதும் ஆகும்.

நமது நாட்டு பெருமுதலாளித்துவ குடும்பங்களுக்கு சோனியா மன்மோகன் அரசு வழங்கிவரும் மான்யங்களைப் பார்ப்போம். (காண்க திரு.பி.சாய்நாத் கட்டுரை இந்து நாளிதழ் 8/7/11)

பெருங்குழுமங்களுக்கு கார்ப்பரேட் வரி என்ற வரி விதிக்கப்படுவது உண்டு. ஆனால் சோனியா மன்மோகன் அரசு தான் அரசியலில் இருந்த இந்த 6 ஆண்டு காலத்தில் (சென்ற ஆட்சி+இந்த ஆட்சி) இந்த குழும வரியில் இருந்து நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளித்து வருகிறது. இந்த தொகை மட்டும் 21 லட்சம் கோடி ஆமாம் 210000000000000. இப்படியாக உங்களால் இயன்ற அளவிற்கு சுழியனைச் சேர்த்துக்கொண்டே போகலாம். அதாவது 6 ஆண்டு =21 லட்சம் கோடி ஆக ஆண்டிற்கு 3 லட்சம் கோடி சற்று அதிகம். வேறு வார்த்தையில் சொன்னால் மிகக் குறைந்த அளவு என்று வைத்துக் கொண்டாலும் 1 ஆண்டிற்கு 2 அல்லது 3, 2ஜி அலைக்கற்றை ஊழல் பணத்தை அரசு மானியமாக குழுமங்களாக கொடுத்து வருகிறது. அதுவும் ஒரு ஆண்டில் மட்டும் அல்ல. தொடர்ந்து 6 ஆண்டுகளாக அதற்கு முன்னர் காங்கிரசு பா.சா.க. அரசுகளும் குழும வரியில் வரி விலக்கு அளித்தது உண்டு. ஆனால் இந்த அளவிற்கு இல்லை. இதை சரியாக செய்வதற்கு என்றே அமெரிக்க ஆதரவுடன் பெருமுதலாளிகளின் பிரதிநிதியாக இந்தியாவின் முதன்மை அமைச்சராக இருக்கிறார் மன்மோகன்சிங்.!

இந்தியாவில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் (தனியாக) தன்னுடையை காப்புத் தொகையை கூட காப்பாற்றிக் கொள்ளுவதற்கு வகையறியாத இந்த பொருளாதார மேதை முதன்மை அமைச்சராக நீடிப்பதன் மர்மம் இதுதான். கட்டற்ற தாராளமயமாக்கல், குழுமங்களின் சுரண்டலுக்கு சோரம்போதல்.... அமெரிக்காவின் அடிவருடியாக விளங்குதல் ஆகியவற்றில் அவரை அடித்துக் கொள்வதற்கு ஆளில்லை. ஆனால் இந்த ஓசையற்ற திருட்டை ஊழலை இலவசத்தை எந்த ஊடகமாவது வெளியிட்டதா? பொதுவுடமைக்கட்சிகள் கூட 2ஜி அலைக்கற்றையைப்பற்றி பேசுகின்ற வேகத்தில்/ நேரத்தில் 1/100 பகுதியை இதற்கு செலவளித்து இருக்குமா? இல்லை. ஏனென்றால் அவர்கள் எல்லாமே இந்த பெருமுதலாளித்துவ பார்ப்பனீய அரசியலில் ஒன்று கலந்தவர்கள். எனவே ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக் கொள்ள மாட்டார்கள். சன் குடும்பத்தின் குடும்ப அரசியலைப் பற்றி பேசுபவர்கள் டாடா அம்பானி குடும்பங்களைப் பற்றி பேசமாட்டார்கள். அங்கு மட்டும் என்ன நடக்கிறது? அந்தக் குடும்பங்களின் தலைவர்களாகவும் வாரிசுகளாகவும் வருபவர்கள் யார்? குடும்ப ஆதிக்கம் தானே அங்கும் நடக்கிறது.

5000ரூ தொலைக்காட்சிப் பெட்டியை இலவசமாக அளித்தால் இலவசம் என்றால் இழிவு என்று இணைய தளத்திலும் தினமணி தினமலரிலும் பக்கம் பக்கமாக எழுதியிருப்பவர்கள் ஆண்டிற்கு 3லட்சம் கோடி அரசுக்கு வரவேண்டிய வரிப்பணத்தை (CORPORATE TAX) காங்கிரசு அரசு தள்ளுபடி செய்வதைப் பற்றி அறிந்தாவது வைத்திருக்கிறார்களா அல்லது அறிந்தும் அறியாதவர் போல் இருக்கிறார்களா?. இந்தியாவின் தலைமை கணக்குப் பிள்ளைக்கு இது தெரியாதா? தெரியும் ஆனால் இந்தக் கூட்டம் முற்றிலும் வடநாட்டைச் சேர்ந்தது. பார்ப்பனீயர்களைக் கொண்டது. உடனே சிலர் டாடா பார்ப்பனர் இல்லை, அம்பானி பார்ப்பனர் இல்லை என்று எதிர்ப்பார்கள். இவர்கள் பிறப்பால் பார்ப்பனர்கள் இல்லை. ஆனால் பார்ப்பனீயத்தின் சாரத்தை உள்வாங்கியவர்கள். இவர்கள் பூணூல் அணிவதில்லை. இவர்களுடைய நரம்புகளே பூணூல்களாக இருக்கும்பொழுது தனியாகப் பூணூல் வேறு எதற்கு? அரசு இத்தகைய "இலவசங்களை" வழங்குவதும் தன்னுடைய பொறுப்புகளை எல்லாம் தனியார் மயமாக்குவதும் தான் ஊழல் ஊற்றுக் கண்ணாகும்.

2ஜி அலைக்கற்றை என்பது என்ன? அதை யாராவது உற்பத்தி செய்கிறார்களா? இல்லை அது இயற்கையில் இருக்கிற பொருள் சூரிய ஒளி போல் காற்று போல் அதை ஏன் தனியாருக்கு என்று ஒதுக்க வேண்டும்? இந்திய அரசின் வசம் உள்ள .B S N L.........என்ற அமைப்பு அந்த அலைக்கற்றையை பயன்படுத்தி தொலைபேசி இணைப்புகள் நடத்தினால் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும்? அதைச் செய்ய அரசு மறுப்பதற்கு காரணம் என்ன? அதற்கான தொழில் நுட்பம் இல்லையா! ஆட்கள் இல்லையா? வேலைவாய்ப்பு எவ்வளவு பெருகும்? ஆனால் அரசுக்கு மனம் இல்லை. 2ஜி அலைக்கற்றை ஏலம் விடுவதில் உள்ள ஊழலே 17000000 என்றால் (இப்போது உச்ச நீதிமன்றத்தில் இது சுருங்கி.....32000 கோடி ஆகி விட்டது.) அதைப் பயன்படுத்தி கைபேசி சேவையை அரசே நடத்தினால் எவ்வளவு வருவாய் கிடைக்கும்? இது மட்டும் இல்லை. விவசாயம், குடிநீர், மருத்துவம் என்று எல்லாத்துறைகளிலும் நுழைக்கப்பட்ட தனியார் மயமாக்குதலே ஊழலுக்கு முதன்மையான காரணமாகும்.

மக்களுடைய செல்வத்தையெல்லாம் பிழிந்து எடுத்து குழுமங்கள் கையில் ஒப்படைத்தபின்பு புறங்கையை நக்கியவன் ஊழல்வாதி என்ற தேனைத் திருடியவன் கூறுவது நகைப்பிற்குரியது. அதைத்தான் உச்ச நீதிமன்றம் இன்றளவும் செய்து வருகிறது. சி.பி.ஐ. ரத்தன் லால் டாடாவை இதுவரை விசாரிக்கவில்லை. ஏன் விசாரிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றமும் கேட்கவில்லை. முகேஷ் அம்பானியை விசாரிப்பது போல் அழைத்து தேநீர் விருந்தளித்து அனுப்பியது. கனிமொழி ஒரு நிறுவனத்தின் (ஊழல் நிறுவனம் என்றே வைத்துக் கொள்வோம்) 20% பங்குதாரர் என்பதால் கைது செய்த சி.பி.ஐ. மற்ற நிறுவனங்களின் செயல் இயக்குனர்களை மட்டும் கைது செய்துள்ளது. அந் நிறுவனங்களின் பங்குதாரர்கள் அந்த நிறுவனங்களின் பின்னணீயில் நின்று இயக்குபவர்கள் இவர்களையெல்லாம் கண்டுபிடிக்கும் திறமை சி.பி.ஐக்கு இல்லையா? அல்லது உச்ச நீதிமன்றத்திற்கு இல்லையா? எல்லாம் இருக்கிறது. ஆனால் வர்க்கப் பாசமும் பார்ப்பனீயக் குறுக்கீடும்தான் தடுக்கிறது. இப்படி இயங்கும் உச்ச நீதிமன்றம் ஊழலை ஒழித்து விடும் என்பது வெறும் கண்துடைப்பே. உச்ச நீதிமன்றம் என்பது புனிதமானது என்பதோ அல்லது மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்படும் அமைப்பு என்று எண்ணுவது பிழையாகும். எப்படி என்று பார்ப்போம்.

இந்திய அரசு என்பது பெருமுதலாளித்துவ பார்ப்பனீய அரசாகும். இயற்கையாகவே இது சமூக நீதிக்கும் தேசிய இனங்களின் இறையாண்மைக்கும் எதிரானது ஆகும். இந்த இந்திய அரசு (INDIAN STATE) என்ற அமைப்பை தாங்கி நிற்கும் தூண்கள் நான்கு 1. இந்திய அரசாங்கம்:- நாடாளுமன்ற முறையில் நடத்தப்படும் இந்திய அரசு ஒரு முதலாளித்துவ சனநாயக அமைப்பாகும். தேர்தல் முறையில் யார் அதிக ஓட்டுகள் பெறுகிறாரோ (ஒரு வோட்டு வேறுபாடு இருந்தால் கூட போதும்) அவர் வெற்றி பெற்றவர். அவர்கள் கூடி முதன்மை அமைச்சரையும் அவருடைய அமைச்சரவையையும் தேர்ந்தெடுகின்றனர். இந்த அரசாங்கத்தில் ஆட்சி புரியும் கட்சிகள் மாறலாம். பெரும்பாலும் காங்கிரசு கட்சிதான் ஆண்டது; ஆண்டுகொண்டிருக்கிறது. சிறிது காலம் பாரதீய சனதா கட்சியும் மிக்க குறுகிய காலம் சனதா கட்சியும் ஆட்சியில் இருந்தது. ஆனாலும் எல்லா கட்சி அரசாங்கமும் இந்திய அரசை தாங்கிப் பிடிப்பனவே ஆகும். நாளைக்கு நாடாளுமன்றத்தில் காம்ரேட்கள் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களும் இந்திய அரசை தாங்கிப்பிடித்துதான் ஆட்சி செய்ய வேண்டும். அதற்கு மாறாக ஆட்சி செய்ய முயன்றால் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். நமக்கு மிக அருகில் உள்ள நேபாளத்தில் ஏறத்தாழ ஆயுதம் தாங்கிய புரட்சியை வெற்றிகரமாக நடத்தி, மன்னராட்சியை ஒழித்த பின்னரும், அங்குள்ள மாவோயிஸ்டுகளால் இன்றளவும் ஒரு நிலையான நேபாள அரசை நிறுவ முடியவில்லை. அப்படி என்றால் நேபாளத்தில் அரசாங்கமே இல்லையா? அரசாங்கம் இருக்கிறது. ஆனால் தெளிவாக வர்க்கரீதியாக வரையறுக்கப்பட்ட அரசு இல்லை.

2. நிர்வாகக் கருவி:- அரசாங்கத்தின் அன்றாட நடைமுறைகள் கவனிக்க உண்டாக்கப்பட்ட அமைப்பாகும். சில நேரங்களில் அதன் கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இதை ஒரு கட்டுகுலையாத அமைப்பாக ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேய காலனியாதிக்க சக்திகள். இன்றளவும் இது ஏறத்தாழ அப்படியே நீடிக்கிறது.

3. ஊடகங்கள்:- அரசாங்கங்களுக்கு எதிராக/சார்பாக/நடு நிலைமையுடன் எழுதுவது என்று எப்படி வரையறுத்துக் கொண்டாலும் 99.99% ஊடகங்கள் இந்திய அரசிற்கு சார்பாகவே உள்ளன. இந்திய அரசைத் தகர்க்கும் வகையில் எந்த ஊடகமும் நீண்ட நாள் வாழ்ந்துவிட முடியாது.

4. இறுதிக்கும் இறுதியாக இந்திய அரசை அதன் அரசியலமைப்பு சட்டத்தை கட்டி பாதுகாக்கும் அமைப்பு உச்ச நீதிமன்றமாகும். பெரு முதலாளித்துவ பார்ப்பனீய சாதிகளின் கடைசி புகலிடம் அவ்வப்பொழுது எளிய மக்களுக்கும் தேசிய இனங்களுக்கு சாதகமாக இயங்குவது போலத் தோன்றும். ஆனால் அடிப்படையில் இது ஒரு அடக்குமுறை அமைப்பே ஆகும்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் அல்லது கருத்துகள் எல்லாவற்றையும் நடுவண் அரசு அப்படியே செயல்படுத்தி விடுவதில்லை. தற்போதைய சோனியா அரசு உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் தலையிடக்கூடாது என்று புனிதர் வேடம் புனைந்து கொண்டு இருந்தாலும் உண்மை இதற்கு மாறாக இருக்கிறது. இரண்டு செய்திகளை மட்டும் நாம் கவனத்தில் கொள்வோம்.

1. உச்ச நீதிமன்றம் அரசின் உணவுக் கிடங்குகளில் எலிகள் உண்ணும் உணவுப் பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுங்கள் என்று பல முறை கருத்து தெரிவித்தது. ஆனால் நடுவண் அரசு செயல்படுவதில்லை. மென்மையான முதன்மை அமைச்சர் கூட சற்று சினங்கொண்டு உச்ச நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடக்கூடாது என்று முழங்கினார். ஆனால் உச்ச நீதிமன்ற ஆலோசனையை செயல்படுத்தவில்லை. அவருக்கு இந்திய நாட்டின் எலிகள் மீது அவ்வளவு கரிசனம்.

2. சல்வா ஜுடும் என்ற ஆயுதந் தாங்கிய அமைப்பு அரசியல் சட்டத்திற்கு எதிரானது; அதைக் கலைக்க வேண்டும் என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. ஆயின் மாநில, நடுவண் அரசுகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படி முறியடிக்கலாம் என்று மேல் முறையீடுகள் செய்து கொண்டுதான் இருக்கின்றன. அதை உளமாற ஏற்று செயல்படுத்தவில்லை. ஆனால் 2ஜி அலைக்கற்றை வழக்கில் உச்ச நீதிமன்றம் சொல்லுவதையெல்லாம் சொல்லாதவற்றையும் கூட நடுவண் அரசு தலையில் தாங்கி செய்து வருகிறது. இது தன்னை ஊழலுக்கு எதிரான அரசு என்றும் திருவாளர் பரிசுத்தம்/திருமதி பரிசுத்தம் என்றும் காட்டிக் கொள்வதற்கான ஒரு நடிப்பே அன்றி உண்மையல்ல. மேலும் இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் யாரும் நடுவண் அரசுக்கு உண்மையில் வேண்டப்பட்டவர்கள் அல்ல. அரசியல் நண்பர்கள் அவ்வளவுதான். முடிந்தால் கூட்டணியை முறித்துக் கொள்ளட்டும் என்ற போக்கில் செயல்பட்டு வருகிறது. கூட்டணியில் இருந்து தி.மு.க தற்போதைக்கு விலக இயலாது என்பது எல்லோரையும் விட நடுவண் அரசிற்கு தெளிவாகத் தெரியும். எனவே இங்கு நடப்பது அரசியல் நாடகமே அன்றி ஊழலுக்கு எதிரான போர் அன்று.

3. உச்ச நீதிமன்றம் மக்கள் உரிமைகளின் காவலாளி போன்று தோற்றம் அளிப்பதும் உண்மைக்கு மாறானது ஆகும். 1970களில் நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அரிவித்தார். அப்பொழுது இதே உச்ச நீதிமன்ற அமைப்புதான் அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது. நெருக்கடி நிலையில் இந்தியக் குடிமகனுக்கு உயிர் வாழும் உரிமை உள்பட எந்த அடிப்படை உரிமையும் கிடையாது என்று தீர்ப்பு அளித்தது. மீண்டும் ஒரு முறை நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டால் உச்ச நீதிமன்றம் வேறுவிதமாக நடந்து கொள்ளும் என்று நம்புவதற்கு வலுவான சான்றுகள் இல்லை.

4. காவிரி நீர் உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து பல ஆண்டுகளாகி விட்டன. அதை கருநாடக அரசு நடைமுறை படுத்தவில்லை. அது செல்க. ஆனால் நடுவண் அரசு அதை அரசிதழில் (GAZETTER) பதிவு செய்யக்கூட இல்லை.

2ஜி அலைக்கற்றை பற்றிய செய்திகளிலும் உச்ச நீதிமன்றம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. ஊழலின் அளவு பெரிது என்று (வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும்) அதனால் சட்டத்தின் வன்முறைகள் மாறிவிடப் போவதில்லை. குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பிணையில் வெளிவருவதற்கு உரிமை உள்ளது. அது அவருடைய அடிப்படை உரிமைகளில் ஒன்று. இதை உச்ச நீதிமன்றமே பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டி வேறு பல வழக்குகளில் பிணை வழங்கி உள்ளது. ஆனால் 2ஜி/காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆகியவற்றில் மட்டும் வேறு அளவுகோலைக் கடைப்பிடிக்கிறது.

நித்தியானந்தா போன்ற பேர்வழிகள் வெளியில் திரிந்து தங்களுடைய தொழிலை செய்து கொண்டிருக்க முடிகிறது. பிணையில் வெளியேவந்து தங்களுடைய பக்தியைப் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உச்ச நீதிமன்றம் ஊழல் என்பது பயங்கரவாதத்தை விடக் கொடியது என்ற புதிய கருத்தியலை உண்டாக்கிக் கொண்டு பிணை என்ற உரிமையை மறுத்து வருகிறது. இதன் மூலம் எந்த ஒரு மனிதரையும் கைது செய்து நீதிமன்ற விசாரணை என்ற பெயரில் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் சிறையில் வைத்துவிட முடியும். இந்த விசாரனைக் கைதிகளின் எண்ணிகை (ரிமாண்டு கைதிகள்) தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாகும். இவர்கள் மீது எந்த வித குற்றமும் பதிவு செய்யப்படாது. ஆனாலும் அவர்கள் சிறையை விட்டு வெளியே செல்ல முடியாது. இத்தகைய நிலையைக் கண்டித்து உச்ச நீதிமன்றமே வேறு இடங்களில் வேறு காலங்களில் தீர்ப்புகள் வழங்கி உள்ளது. ஆனால் தான் கண்டித்த அதே கொள்கையை உச்ச நீதிமன்றமே செய்து வருகிறது. இப்படி ஒரு சட்ட சிக்கல் இருக்கிறது என்பதையே உணராதது போல் நடிக்கிறது.

திரும்பவும் கூறுவதனால் ஊழலின் அளவு பெரியது என்பதன் காரணமாக சட்ட விதிகள் மாறிவிடுவதில்லை. ஆனால் உச்ச நீதிமன்றம் குற்றம் பதிவு செய்யப்பட்ட பிறகு பிணையைக் கோரி வாருங்கள் என்ற வாதத்தை முன்வைக்கிறது. இது ஒரு தவறான முன் உதாரணமாக பயன்படுத்தப்படும். குற்றம் சாட்டப்பட்ட ஆனால் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத நபர் அதுவரை சிறையில் வாட வேண்டும் என்பது இயற்கை நீதிக்கு புறம்பானது. உச்ச நீதிமன்றமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது அதில் உள்ள ஆழமான அரசியலைத்தான் காட்டுகிறது.

இதிலும் கூட சி.பி.ஐயின் வழக்கறிஞர் K.K.வேணுகோபாலன் முடிவே இறுதியாக இருக்கிறது. தயாநிதி மாறன் மீதும் சி.பி.ஐ குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் அவரை இன்றுவரை விசாரிக்கவில்லை; கைது செய்யவும் இல்லை. கனிமொழியையும் ராசாவையும் கைது செய்து விசாரித்த சிபிஐ அமைப்பு தயாநிதி மாறனிடம் இரண்டும் செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றமும் கேட்கவில்லை. தயாநிதி மாறன் பாதிப் பார்ப்பனர் என்பதாலா அல்லது சோனியாவின் அன்பிற்கு உரியவர் என்பதாலா? உச்ச நீதிமன்றத்தின் செய்கைகள் புதிராக உள்ளது. போபர்ஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் குட்டரேச்சியை இந்தியாவிற்கு கொண்டுவரும்படி பல முறை கரடியாய் கத்தியது; கட்டளையிட்டு களைத்துவிட்டது. ஆனாலும் சி.பி.ஐ. அசையவில்லை. மலேசியாவில் இருக்கும் அவரை கொண்டு வருவதற்கு இயலாது, மலேசிய அரசு அனுப்பாது என்று மழுப்பியது. ஆனால் வயது முதிர்ந்த தயாளு அம்மாவை ஏன் சிறைக்கு அனுப்பவில்லை என்ற உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றனர் வெட்கங்கெட்ட பார்ப்பனர்கள்.

Pin It