உலகளவில் பாம்புக்கடியால் இறப்போரில் பாதிப்பேர் இந்தியர்கள். ஆண்டுதோறும் சுமார் 46,000 இந்தியர்கள் பாம்புக் கடிபட்டுச் சாகிறார்கள். அதைவிட மும்மடங்கினர் உடற்குறையால் வாழ்க்கை முழுக்க அல்லற்படுகிறார்கள்.

இந்தியாவில் சுமார் முந்நூறு வகைப் பாம்புகள் உள்ளன. அவற்றில் பதினைந்து வகை மட்டுமே மனிதர்களைக் கொல்லுமளவு நஞ்சுள்ளவை. தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில் நாகப் பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய நான்கு மட்டுமே நஞ்சுள்ளவை. சாரை, கொம்பேறி, பச்சைப் பாம்பு, மண்ணுளிப் பாம்பு ('இரண்டு தலைப் பாம்பு') உள்ளிட்ட பிற பாம்புகள் நஞ்சற்றவை.

ஏழைகளே பாம்புக் கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, ஊர்ப் புறங்களில் வாழ்வோர்; அதிலும் குறிப்பாக உழவர்கள். ஆனால், கூடுதல் விழிப்புடன் இருப்பதன் மூலம் பாம்புக் கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையைப் பெருமளவு குறைக்க முடியும்.

snakes in box

(நான்கு நாள்களுக்கு முன்னர் வீட்டுக்கு வெளியில் ஒரு சிறு பெட்டியில் (10 செ.மீ. விட்டம், 7 செ. மீ. ஆழம்) இரண்டு (நஞ்சில்லாத) பாம்புகள் சுருண்டு படுத்திருந்தன. அந்தப் பெட்டியில் எரிவளி அடுப்பு 'வால்வுகள்' ஏழு உள்ளிட்ட சில இரும்புச் சாமான்கள் ஏற்கெனவே இருந்தன!

பெட்டியைக் கையில் எடுத்து ஒரு வாளியில் வைத்து வீட்டில் இருந்து சுமார் அறுபது மீட்டர் தொலைவில் கொண்டுபோய் விட்டோம். அதுவரை அசையாமல் இருந்த பாம்புகள் நாங்கள் அங்கிருந்து அகன்றபின் அவை காட்டுக்குள் சென்று விட்டன.)

உலகில் பாம்புக் கடியால் இறப்போர் அல்லது முடமாவோர் எண்ணிக்கையை 2030-க்குள் பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது உலக நலக் கழகத்தின் (World Health Organization (WHO)) எதிர்பார்ப்பு. இந்தியாவைப் பொருத்தவரை நடுவணரசும் மாநில அரசுகளும் அதிக அக்கறை காட்டினால் மட்டுமே இது நிறைவேறும்.

வீடுகளின் கதவுகள், சன்னல்கள் ஆகியவற்றுக்கு வலைப் பின்னல்களுள்ள கதவுகளைப் பொருத்துவதன் மூலம் பாம்புகள் மட்டுமின்றி நம்மைப் பல நோய்களுக்கு உள்ளாக்கும் கொசுக்களில் இருந்தும் பாதுகாக்கலாம். பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். இதை உடனடியாகச் செய்வது நாட்டுக்கு நல்ல பலன் தரும்! (ஆனால், செய்து முடித்ததாக வெற்றிக் 'கணக்குக் காட்டுவதையும்' இடைத் தரகர்கள் பணம் கறப்பதையும் தவிர்க்க வேண்டும்!)

அதுபோலவே, உழவர்கள், உழவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு முழங்கால் வரை பாதுகாப்புத் தரும் மூடணிகளையும் ('பூட்சு') மலிவு விலையில் அல்லது இலவயமாக அரசு தருவது மிகுந்த பலனளிக்கும்.

நஞ்சுமுறிப்பு (anti-venom) மருந்து தான் பாம்புக்கடிக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரே தீர்வு. நாம் முன்னர் குறிப்பிட்ட நான்கு வகை நச்சுப் பாம்புகளின் நஞ்சுகளை ஒன்று சேர்த்து அதிலிருந்து நஞ்சுமுறிப்பு உருவாக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் நஞ்சுமுறிப்பு தமிழ்நாட்டில் மட்டும் தயாரிக்கப்படுகிறது. அதில் இருளர் கூட்டுறவு அமைப்புகள் பெரும்பங்கு வகிக்கின்றன. (இருளர்கள் இந்தியாவின் தொல்குடிகள்; ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் / ஒடுக்கப்பட்டவர்கள்.)

இதில் சிக்கல் என்னவெனில், ஒரே வகைப் பாம்பின் நஞ்சு இந்தியா முழுவதிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, சிந்துப் பகுதியில் வாழும் கட்டுவிரியனின் நஞ்சு பிற கட்டுவிரியன்களின் நஞ்சைக் காட்டிலும் ஐந்து மடங்கு வீரியமுள்ளது! ஒற்றைச் சக்கர நாகப் பாம்பைப் பொருத்தவரை, மேற்கு வங்கத்தில் உள்ளவற்றின் நஞ்சும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளவற்றின் நஞ்சும் வெவ்வேறு வேதிப் பொருள்களைக் கொண்டவை!

இந்தக் காரணத்தாலும் இருளர் சங்கங்களின் நஞ்சுமுறிப்பு உருவாக்கும் முறைகள் நவீனப்படுத்தப்படாத காரணத்தாலும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் நஞ்சுமுறிப்புகள் இந்தியா முழுமையிலும் பயன்படுத்தத் தக்கன அல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இருளர்களின் செயல்முறைகளை நவீனப்படுத்துவதில் தமிழக அரசு உடனடியாக கவனஞ் செலுத்த வேண்டும் என்கிறார் இருளர் கூட்டுறவுப் பண்ணைகளைத் தொடங்கியதில் பங்கு வகித்த ரோமுலஃச் விட்டேகர் (Romulus Whitaker).

இயற்கையின் படைப்பில் பாம்புகளுக்கும் முதன்மையான இடமுள்ளது. எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் பாம்புகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. எலிகள் பெருகினால் நமக்கு உணவுத் தட்டுப்பாடு, எலியால் பரவும் நோய்கள் ஆகியவை பெருகும் (ப்ளேக் - plague உள்ளிட்ட சுமார் பத்து வகை நோய்கள்; இவற்றில் சில நோய்கள் அணில்களாலும் பரவும். விவரங்களுக்கு: https://www.cdc.gov/rodents/diseases/direct.html.

எலிகளால் இந்தியாவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள உணவு தானியங்கள் ஆண்டுதோறும் வீணாகின்றன. வீணாவது பணம் மட்டுமன்று; அந்த உணவு தானியங்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்திய உழைப்பு, மின்னாற்றல் உட்படப் பிற ஆற்றல்கள், உற்பத்தியால் நேர்ந்த சூழல் கேடுகள் ஆகிய அனைத்தும் தேவையற்றவை ஆகின்றன.

ஆனால், பாம்பைப் பார்த்தவுடன் அஞ்சி ஓடுவது அல்லது அதை அடித்துக் கொல்வதுதான் நம் உடனடிச் செயல்களாக உள்ளன. எந்தப் பாம்பும் தானாக நம்மைத் துரத்தவோ, கொத்தவோ செய்யாது. அதை நாம் மிதித்தால் அல்லது தாக்கினால் மட்டுமே திருப்பித் தாக்கும். இல்லையேல் நம்மிடமிருந்து தப்பி மறைவதற்கே முயலும்.

எலிகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பூனை வளர்க்கலாம் என்பது பரவலான கருத்து. ஆனால் பூனைகள் பல வகைப் பறவைகளையும் ஒழித்துவிடும். (வளர்ப்பு நாய்களும், பூனைகளும் பறவையின அழிப்பில் பெரும்பங்கு வகிப்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.) பறவைகள் நமக்கும் பயிர்களுக்கும் தீங்கு செய்யும் புழு பூச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன; பூந்தூள் ('மகரந்தம்') சேர்க்கையில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன என்பதை நாம் மனத்தில் கொள்ள வேண்டும்.

பாம்புகளை மட்டுமின்றி, வீட்டருகே வரும் தவளைகளையும் பலர் கொன்று விடுகின்றனர்; அவற்றைப் பிடிப்பதற்குப் பாம்பு வரும் என்கிற காரணத்தால். ஆனால், தவளைகள் நமக்கும் பயிர்களுக்கும் தீங்கு செய்யும் பூச்சிகளை உண்பதன் மூலம் நமக்கு மிகவும் நன்மை செய்கின்றன.

உலகில் இயற்கையாகத் தோன்றி வளரும் அனைத்து உயிரினங்களுக்கும் உயிர் வாழும் உரிமையும் இயற்கைச் சுழற்சிகள், உணவு வளையங்கள் போன்றவற்றில் பங்கும் உள்ளது. இவை நமக்குப் பல்வேறு விதங்களில் அளப்பரிய உதவி செய்கின்றன. இவற்றைப் பற்றி நாம் அறிந்தது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு. ஆனால், நம் செயல்பாடுகளால் நாள்தோறும் நூற்றுக் கணக்கான வகை உயிரினங்களைப் பூண்டோடு ஒழித்து வருகிறோம் என்றும், இதன் விளைவுகள் நம் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி விட்டன என்றும் சூழலியல் அறிஞர்கள் தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.

எடுத்துக்காட்டாக, நாம் வெறுக்கும் உயிரினங்களில் கொசுவும் ஒன்று. உலகிலுள்ள 3,500 வகையான கொசு வகைகளில் ஒரு சில மட்டுமே - குறிப்பாக, அந்தச் சில வகைகளின் பெண் கொசுக்கள் மட்டும் - நம்மைக் கடிப்பதிலும் அதன் மூலம் நோய்களைப் பரப்புவதிலும் பங்கு வகிக்கின்றன. ஆனால், (1) மீன்கள், தட்டான்கள், தவளைகள், சில வகைப் பறவைகள் போன்றவற்றுக்கு உணவாவதன் மூலம் இயற்கையின் உணவு வளையத்தைப் பேணுதல், (2) பல வகை மலர்ச் செடிகளின் பூந்தூள்ச் சேர்க்கையில் முதன்மைப் பங்கு வகித்தல், (3) உயிரியத் தொகுதியை (biomass) நீர் நிலைகளில் இருந்து தரைப் பகுதித் திணைக் களங்களுக்கு (terrestrial ecosystem) மாற்றுதல் போன்றவற்றில் கொசுக்களுக்குப் பங்குள்ளது. [உயிரித் தொகுதியை மாற்றுதல் என்பதன் விளக்கம்: கொசுவின் தோற்றுவளரிகள் - 'லார்வாப்' புழுக்கள் - நீர் நிலைகளில் வளர்கையில் அவற்றிலுள்ள அழுகிய புதலிகளை ('தாவரங்களை') உட்கொள்கின்றன. பின்னர், அவை கொசுவாக மாறிப் பறந்து செல்வதால் நீர் நிலைகளில் இருந்த அழுகிய உயிரிப் பொருள்கள் வேறு வடிவில் தரைப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. உலகளவில் இவ்வாறு கொசுக்களால் மாற்றப்படும் பொருள்களின் எடை சில கோடி கிலோ இருக்கும்!]

சூழல் கேடுகளால் வேளாண்மை பல வகைகளில் மிக அதிகம் பாதிக்கப்படுகிறது. இது பின்னர் அனைத்து மக்களையும் பாதிக்கும் என்பது வெளிப்படை. பொருளாதார வசதி அதிகம் உள்ளோர் சூழலைக் கெடுப்பதில் அதிகப் பங்கு வகிக்கின்றனர். உழவர்களும் வேதி நஞ்சுகளையும் உரங்களையும் பயன்படுத்துவதன் மூலமும் பிற வகைகளிலும் உயிரினப் பன்மயத்தை ஒழித்தல், நில - நீர் வளங்களை மாசுபடுத்துதல் ஆகிய சூழல் கேடுகளுக்குக் காரணிகளாக உள்ளனர்.

ஆனால், இவையனைத்துக்கும் அடிப்படைக் காரணம் முதலாண்மைப் பொருளாதார முறைமையே என்பது தெளிவு. ஆகவே, அதை அடியோடு மாற்றாதவரை நம் துன்பங்கள் அதிகரிக்குமேயொழியக் குறைய மாட்டா!

பாம்புகள் பற்றிய பல தகவல்களுக்கு மூலக் கட்டுரை: Aathira Perinchery, "India Has a Big Problem: Its Snake Anti-Venoms May Not Work Properly", The Wire, 2019 Dec 06, https://thewire.in/the-sciences/snakebites-anti-venom-irula-cooperative-cobra-krait-viper-romulus-whitaker.

கொசுக்கள் பற்றிய தகவல்களுக்கு மூலக் கட்டுரை: Daniel AH Peach, "The secret world of mosquitoes reveals their larger role in our environment", Scroll, 2019 Dec 04, https://scroll.in/article/945673/the-secret-world-of-mosquitoes-reveals-their-larger-role-in-our-environment

 - 'பரிதி' (ராமகிருச்ணன்), சத்தியமங்கலம், ஈரோடு (மா)

Pin It