bacteria seawaterவாழ்விற்கானப் போராட்டம் சாதாரணமானது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் சமீபத்திய கண்டுபிடிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. கடற் படுகைக்கு அடியில் 10 கோடி ஆண்டுகளுக்கு மேலாக, குறைந்த ஆக்ஸிஜனோடு தங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்ந்து வந்த நுண்ணுயிரிகளை அறிவியலாளர்கள் தற்போது கண்டு பிடித்திருக்கின்றனர். இவை இறைச்சி உண்ணும் டினோசார்களான ஸ்பினோசாரஸ் உலகில் சுற்றித் திரிந்த நாட்களுக்கு முன்பே உருவானவை.

இவை கடலுக்கு அடியில் புதையுண்டதற்க்குப்பின் இந்த உலகில் கண்டங்கள் இடம் விட்டு இடம் நகர்ந்திருக்கின்றன; கடல் மட்டங்கள் மேலெழும்பி தாழ்ந்திருக்கின்றன; மனிதக் குரங்குகள் தோன்றியிருக்கின்றன; பின்னர் மனிதனும் தோன்றியிருக்கிறான். இத்தனை காலங்களையும் கடந்து அவை இப்போது விழித்தெழுந்திருக்கின்றன.

உயிர் வாழத் தேவையான ஆக்சிஜனும், உணவும் கிடைப்பது மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் உயிர்கள் எந்த அளவுக்கு தாக்குப்பிடிக்கின்றன என்பதைப் பற்றி ஆய்வு செய்ய ஒரு அறிவியல் குழு முனைந்திருக்கிறது.

ஜப்பானின் கடல்சார் புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமை (Japanese Agency for Marine - Earth Science and Technology - JAMSTEC) அய் சேர்ந்த புவிசார் நுண்ணுயிரி ஆய்வாளர் (geo-mirobiologist) யூகி மொரோனோ (Yuki Morono), ரோட் ஐலான்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவென் டி ஹான்ட் (Steven D’Hondt) என்ற அறிவியல் அறிஞர்கள் தலைமையில், அமெரிக்காவின் யூ.ஆர்.ஐ கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் ஓஷனோகிராபி (URI Graduate School of Oceanography), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ்ட் இண்டஸ்ட்ரியல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, (National Institute of Advanced Industrial Science and Technology), ஜப்பானைச் சேர்ந்த கொச்சி பல்கலைக்கழகம் (Kochi University), ஜப்பானின் கடல்சார் ஆய்வு நிறுவனம் (Marine Works - Japan) ஆகியவை இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டன. JOIDES Resolution என்ற ஒரு துளையிடும் கப்பலை இந்த ஆய்வுக்கு பயன்படுத்தினர்.

அவர்கள் ஆய்விற்காக மேற்கொண்ட பகுதி ஆஸ்திரேலியாவிற்கு கிழக்குப் பக்கமாக உள்ள தென் பசிபிக் சுழல் (South Pacific Gyre) என்று அழைக்கப்படும், பெரும்பாலான கடல் நீரோட்டங்கள் ஒன்றாக இணையும் ஒரு பகுதி. அது கடலின் பாலைவனம் என அழைக்கப்படுகிறது. அதாவது அங்கு உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் கனிமப் பொருட்கள் குறைந்த அளவிலேயே கிடைக்கக் கூடிய பகுதி. எனவே உயிர்கள் வாழத் தகுதியற்ற கடுமையான சூழ்நிலையில் உயிர் நிலைத்திருக்கக் கூடிய தன்மையை ஆராய சரியான இடம் இதுவேயாகும் என்பது அவர்களது கணிப்பு.

10 வருடங்களுக்கு முன் இந்தப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மண் மாதிரிகளில் இருந்து பிரித்து அறியப்பட்ட பாக்டீரியாக்களை ஆய்வு செய்து நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (Nature Communications) என்னும் ஆய்வு-இணையதளத்தில் 2020 ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி ஆய்வு கட்டுரையினை இந்த ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர்.

களிமண்ணும், மண்ணின் வீழ்படிவுகளும் இணைந்த இந்த மண் மாதிரிகள் கடல் நீர் மட்டத்திலிருந்து 5700 மீட்டர் அடியில், கடல் படுகைக்கு கீழே 74.5 மீட்டர் தூரத்தில் எடுக்கப்பட்டிருக்கிறன. வழக்கமாக ஒரு கன சதுர சென்டி மீட்டர் அளவுள்ள இந்த மண் மாதிரிகளில் ஒரு லட்சம் செல்களைக் காணக்கூடிய இடத்தில், இவர்கள் எடுத்த மண் மாதிரியில் ஆயிரம் பாக்டீரியாக்களைக் கூட காண முடியவில்லை.

இந்த நுண்ணுயிரிகள், ஏறக்குறைய தங்களது செயல்பாடுகளை குறிப்பிடத்தக்க அளவிற்கு நிறுத்தி விட்டு இருந்தன. ஆனால் அவற்றுக்கு ஊட்டச்சத்தும், உயிர் வாழத் தேவையானவற்றையும் அளித்தபோது அவை மீண்டும் செயல்படத் துவங்கின.

இந்த பேக்டீரியாக்களை 557 நாட்கள் அடைகாத்தலில் (Incubation) வைத்திருந்து அதற்கு உணவாக அம்மோனியா, அசிட்டேட், அமினோ ஆசிட் ஆகியவற்றை வழங்கியிருக்கின்றனர். செயலற்று இருந்த அவை வளர்ந்து, இனப்பெருக்கம் செய்திருக்கின்றன. அவை மிகுந்த அளவில் நைட்ரஜனையும் கார்பனையும் உட்கொண்டு 6,986 என்ற எண்ணிக்கையில் இருந்தது 68 நாட்களில் நான்கு மடங்காக அதிகரித்தன. 

முதலில் ஆய்வாளர்களுக்கு நம்ப முடியாததாக தோன்றினாலும், அவர்கள் கண்டறிந்ததில் முக்கியமானது 99.1 சதவீதம் பாக்டீரியாக்கள் 101.5 மில்லியன் வருடங்களுக்கு முன்பு (சுமார் 10 கோடி ஆண்டுகள்) இந்த மண் படிவுகளில் புதையுண்டதுதான். ஆய்வுகளில், இந்த நுண்ணுயிரிகள் மிக மெதுவாக தனது செயல்படுகளைக் கொண்டிருந்து, அவை இவ்வளவு காலம் உயிரோடு இருந்ததற்கு முக்கிய காரணமாக அறியப்படுவது கடலுக்கு அடியில் ஏற்பட்ட வீழ்படிவு மிக மெதுவாக அதாவது கிட்டத்தட்ட ஒவ்வொரு மில்லியன் வருடங்களுக்கு இரண்டு மீட்டர் அளவு நிகழ்ந்ததுதான். இது அங்கு ஆக்ஸிஜன் சிறிதளவு எப்போதும் கிடைக்க ஏதுவாக இருந்திருக்கிறது. 

ஆய்வுக் குழு, இந்த மண் மாதிரிகளில் கண்டறிந்ததில் 10 வகையான பரவலாக அறியப்பட்ட பாக்டீரியாக்களும் மற்றவை அந்த அளவுக்கு அதிகமாக அறியப்படாத சிறிய வகை பாக்டீரியாக்களும் அடங்கும். இதில் காணப்பட்டப் பாக்டீரியாக்கள் பெரும்பாலும் உப்பு நீரில் காணப்படும் பாக்டீரியாக்களான ஏரோபிக் வகை என அறியப்படுபவை. அதாவது அவை வாழ்வதற்கு ஆக்சிஜன் மிக அவசியத் தேவையாகும். சாதாரணமாக புதையுண்டு இருக்கும் காலத்தில், பாக்டீரியாக்கள் செயலற்ற (dormant) நிலைக்குத் தங்களை மாற்றிக் கொண்டு தங்களைச் சுற்றி விதை உறையினை (spores) உருவாக்கிக் கொள்ளும். ஆனால் இவை அப்படிப்பட்ட விதை உறைகளை உருவாக்கவில்லை.

ஆய்வின்போது ஒருவேளை பயன்படுத்தும் கருவிகளில் இருந்து ஏதேனும் இந்த மாதிரிகளில் சமீபத்திய பாக்டீரியாக்கள் கலந்து விடக்கூடாது என்பதற்காக மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட உபகரணங்களையும், மிக பாதுகாக்கப்பட்ட சூழலையும் கொண்டு இவை ஆய்வு செய்யப்பட்டன.

கடலுக்கு அடியில் கடற்ப் படுகையில் உயிரினங்கள் 15 வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றன என்பது ஆய்வாளர்கள் அறிந்ததுதான். ஆனாலும் யூகி மொரோனோ கடுமையான சூழ்நிலைகளில் அத்தகைய உயிரினங்களின் வாழ்க்கைச் சூழலில் அவற்றின் தாக்குப்பிடிக்கும் திறனை, காலத்தை அறிய முயற்சித்தார்.

இந்த ஆய்வுகள் புவியியலின் காலத்தோடு ஒப்பிடும் போது அவற்றை மிக நீண்ட நாட்களுக்கு முன்தள்ளி இருக்கின்றன. ஏற்கனவே 2000ஆம் வருடத்தில் நடத்தப்பட்ட ஒரு முந்தைய ஆய்வில், டெக்ஸாஸில் கண்டுபிடிக்கப்பட்ட உப்பு படிகங்களில் உள்ள பாக்டீரியாக்கள் 250 மில்லியன் பழமையானது எனக் கூறப்பட்டது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. 

இந்த ஆய்வின் முடிவுகள் நுண்ணுயிரிகள் எத்தகைய கடினமான சூழ்நிலையிலும் உயிர் வாழத் தகுதியானவை என்பதையே காட்டுகின்றது. இதுவே பரிணாமத்தில் மிக முன்னதாக தோன்றிய நுண்ணுயிர்கள், சாதகமற்ற சூழ்நிலையில் அவற்றுக்கே உரித்தான முறையில் உயிர் வாழ்வதற்கான அவசியமான காரணியாகும்.

அதேபோல சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களிலோ அல்லது இந்த பிரபஞ்சத்தின் ஏதாவது ஒரு பகுதியிலோ உயிர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதையும் இந்த ஆய்வு முடிவுகள் காண்பிக்கின்றன. நாம் காணும் கோள்களில் மேற்பகுதியில் உயிர் இல்லாவிட்டாலும் அதன் உட்புற பகுதிகளில் உயிர் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதையும் இந்த ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

(நன்றி: livescience.com, bbc.com, theprint.in, in.reuters.com, sciencedaily.com, sciencemag.org இணைய தளங்கள்)

- இரா.ஆறுமுகம்

Pin It