மனிதர்களிடையே அண்ணன்-தங்கை போன்ற நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு தவிர்க்கப்பட்டுள்ளது. இதைப்போன்றே சிலவகையான பறவை, எலி, பல்லி இனங்களிலும் நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் பாலுறவு தவிர்க்கப்படுகிறது என்பது ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது. கறுப்புக்கால்களை உடைய “கிட்டிவேக்” என்னும் கடற்கரைவாழ் பறவை நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு வைத்துக் கொள்வதில்லை என்பதை BMC Evolutionary Biology என்னும் ஆய்வு இதழ் ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளது.
மனிதர்களிடையே ஒருதாரமணத்தை பின்பற்றுபவர்கள், பலதாரமணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்றெல்லாம் பாகுபாடு இருப்பது நமக்கெல்லாம் தெரியும். இதைப்போலவே, பறவைகளில்கூட ஒரே நேரத்தில் பல பறவைகளுடன் பாலுறவு கொள்ளுதல் அல்லது ஒரு சமயத்தில் ஒரு பறவையுடன் மட்டுமே பாலுறவு கொள்ளுதல் என்ற கோட்பாடுகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. கறுப்புக்கால்களை உடைய kittiwake என்னும் கடற்கரையோரமாக வாழக்கூடிய பறவை மிகத்தீவிரமான ஏகபத்தினி விரதன். இவை நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு கொள்வதில்லை என்பதுதான் BMC Evolutionary Biology இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் சாரம். பல ஆய்வர்கள் கூட்டாக நடத்திய ஆய்வில் இருந்து பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
Kittiwake பறவைகள் நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு கொள்வதில்லை என்பதும் அவ்வாறு பாலுறவு கொள்ள நேரிட்டால் உயிர்பிழைக்கும் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்து போகிறது என்பதும் சுவையான செய்தி. கிட்டிவேக் பறவைகள் தங்களுடைய இரத்த உறவுகளை எத்தனை பெரிய பறவைக்கூட்டத்திலும் கண்டுபிடித்து விடுகின்றன. அப்படி தவறுதலாக ஏதேனும் பாலுறவு ஏற்பட்டாலும்கூட முட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை அல்லது பொரித்த குஞ்சுகளும் இறந்துபோய் விடுகின்றன.
குஞ்சுகளைப் பொரித்தவுடன் அவற்றின் பெற்றோர் நெருங்கிய இரத்த உறவில் வந்த குஞ்சு இது என்று இனங்கண்டுகொள்வது மட்டுமன்றி, குஞ்சுகளை வெறுக்கத் தொடங்குகின்றன. இந்த வகை குஞ்சுகள் நோய், உண்ணி இவற்றால் எளிதில் தாக்கப்படுகின்றன. இவற்றின் வளர்ச்சியும் மெதுவாக இருப்பதால் மற்ற பறவைகளுடன் போட்டியிட்டு வாழமுடிவதில்லை. கிட்டிவேக் பறவைகள் வாழ்க்கை முழுவதும் சேர்ந்தே வாழுகின்றன என்பதும் மணமுறிவு எக்காலத்திலும் ஏற்படுவதில்லை என்பதும் வியப்பான செய்தி. உடல் வாசனையைக் கொண்டு நெருங்கிய இரத்த உறவுகளை இந்த கிட்டிவேக் பறவைகள் அடையாளம் காண்கிறதா என்பதைப்பற்றி ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/06/090629200636.htm
- மு.குருமூர்த்தி (