உலகம் முழுவதும் உள்ள பதினைந்தாயிரம் விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து மனிதகுலத்திற்கு எச்சரிக்கை என்ற பெயரில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். கடந்த 200 ஆண்டுகளாக முதலாளித்துவம் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சீரழித்த சுற்றுப்புற சூழல் மற்றும் வளிமண்டல பாதிப்பு காரணமாக நாம் இந்த பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு உள்ளோம். இதனைப் பற்றி நாம் விரிவாகக் காண்போம். பொதுவாக சூரியனில் இருந்து வரும் கதிர்கள் நேரடியாக பூமியின் மீது பட்டு எதிரொளிக்கிறது. இதனால் சூரியனில் இருந்து வரும் கதிர்கள் புவியில் பட்டு எதிரொளிப்பதால் பூமியின் மீது அதிகமான வெப்பம் சூரிய ஒளி பூமியின் மீது விழும்போது மட்டுமே இருக்கும். இந்த வெப்பமானது பூமியில் தக்க வைக்கப்படுவதில்லை.
ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட முதலாளித்துவ வளர்ச்சியின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரட்சி ஏற்பட்டது. இந்த தொழில் புரட்சியில், தொழிற்சாலை எரிபொருட்களாக புதைபடிம நிலக்கரி, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு மற்றும் மீத்தேன் அதிக அளவில் உபயோகப்படுத்தப் பட்டன. அதன் விளைவாக அதிகமான பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் கலந்தன. இந்த பசுமை இல்ல வாயுக்கள் வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றது. கார்பன்( கரியமில வாயு), நைட்ரஸ் ஆக்ஸைடு, மீத்தேன், க்ளோரோ ப்ளுரோ கார்பன், ஹைட்ரொ புளுரோ கார்பன் மற்றும் ஓசோன் போன்ற வாயுக்கள்தான் பசுமை இல்ல வாயுக்கள் எனப்படும். இந்த வாயுக்களை வளிமண்டலம் உறிஞ்சி எடுத்துக் கொண்டு வெப்ப அகச்சிவப்பு கதிர்களை உமிழ்கிறது. இந்த நிகழ்வைத்தான் நாம் பசுமைஇல்ல விளைவு என்று கூறுகிறோம்.
பொதுவாக பூமியின் சராசரி வெப்பநிலை -18 டிகிரி செல்ஸியஸ் ஆகும். ஆனால் இந்த நிகழ்வின் காரணமாக பூமியின் சராசரி வெட்பநிலை +15 டிகிரி செல்சியசு அளவு உயர்ந்து உள்ளது. பொதுவாக இந்த பசுமை இல்ல வாயுக்கள் வெப்பநிலையை தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் படைத்தவை. இதன் காரணமாக சூரியனில் இருந்து வரும் வெப்பம் பூமியில் பட்டு எதிரொளிப்பது இல்லை. இவை வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களால் தக்க வைக்கப்படுகிறது. இதனால் பூமியின் வெப்பம் பலமடங்கு உயருகிறது. இதனைத்தான் நாம் புவி வெப்பமைடைதல் என்று கூறுகிறோம். இந்த புவிவெப்பமடைதலில் அதிகமாக பல்வேறு வாயுக்கள் முதன்மையான பங்கு வகிக்கின்றன. அவற்றில் முதன்மையாக உள்ளது நீராவி ஆகும். இந்த நீராவியால் 36 சதவீதம் முதல் 72 சதவீதம் புவி வெப்பமடைகிறது. அதற்கு அடுத்த நிலையில் கரியமில வாயுவினால் 9% முதல் 26% சதவீதமும், மீத்தேன் வாயுவினால் 4% முதல் 9% சதவீதமும், ஓசோன் வாயுவினால் மூன்று முதல் ஏழு சதவீதமும் வெப்பநிலை உயருகிறது.
வளிமண்டலத்தில் கார்பனின் அளவு 250 மில்லியனில் ஒரு பங்கு என்ற அளவில்தான் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் தற்போதைய சூழலில் 400 மிலியனில் ஒரு பங்கு என்ற அளவுக்கு உயர்ந்து உள்ளது. இந்த கார்பன் துகள்கள் ஆனது சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியில் பட்டு எதிரொளித்து வெளியே செல்லாமல் தடுக்கிறது. இதன் காரணமாக வெப்பம் வளிமண்டலத்திலேயே தக்க வைக்கப் படுகிறது. இந்த நிகழ்வுதான் புவி வெப்பமடைதல் என்று பெயர். இந்த புவி வெப்பமடைதல் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்த நிகழ்வு ஆகும். இவ்வாறு புவி வெப்பமடைதல் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இந்த புவிவெப்பமடைதலுக்கு முதன்மையான காரணம் புதைப்படிம எரிபொருட்கள் ஆகும். அது மட்டுமல்லாமல் காடழிப்பு போன்ற மனித நடவடிக்கைகளால் உருவாகிறது.
மேற்கண்ட படம் புவி வெப்பமடைதலை விளக்கும் படம் ஆகும் இந்தப் படத்தில் 1880 களில் எவ்வாறு பூமி இருந்தது என்பது பற்றியும், தற்போது உள்ள சூழலில் எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் விளக்குகிறது.
கி.பி 2000 ஆம் ஆண்டுக்கு பின் வந்த ஒவ்வொரு ஆண்டும் வெப்பமான ஆண்டாக இருந்து உள்ளது. கடந்த 17 ஆண்டுகளும் வெப்பமான ஆண்டாக உள்ளது. 1880 ஆம் ஆண்டுகளில் இருந்து புவி வெப்பநிலை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 0.8 டிகிரி செல்சியஸ் அளவு உயர்ந்துள்ளது. அதில் மூன்றில் இரண்டு பாகம் 1975 ஆம் ஆண்டுக்கு பின் தான் இந்த வெப்பநிலை உயர்வு ஏற்பட்டது.
சூரியனில் இருந்து வரும் வெப்பமானது 70% பூமியினால் உறிஞ்சப்படுகிறது. மீதமுள்ள 30% வளிமண்டலத்தில் எதிரொளிக்கப்படுகிறது. இந்த 70% வெப்பமானது நிலம் மற்றும் கடலினால் உறிஞ்சப்படுகிறது. இந்த வெப்பம் குளிர்ந்த பூமியை மீண்டும் வெப்பப்படுத்த உதவுகிறது. 1750 பின் ஏற்பட்ட தொழில் புரட்சியின் காரணமாக புதைப்படிம எரிபொருட்களான நிலக்கரி, டீசல், பெட்ரோல், மீத்தேன் போன்றவற்றின் அதிக அளவு பயன்பாட்டின் காரணமாக புவி வெப்பநிலை உயர்ந்து உள்ளது. தொழில்புரட்சியின் காரணமாக கார்பன் அளவு 38% அதிகமாவும், மீத்தேன் வாயு அளவு 148% அதிகமாகவும் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து ள்ளனர். இன்று வளிமண்டலத்தில் அதிக அளவு பசுமை இல்ல வாயுக்கள் நிறைந்து உள்ளன. இந்த வாயுக்கள் சூரியனில் இருந்து வரும் அகச்சிவப்பு கதிர்களை ஈர்த்து கொள்ளும். அதன்பின் அந்த வெப்பத்தை மீண்டும் பூமியின்மீதே விடும். இதனால்தான் பூமியின் வெப்பநிலை அதிக அளவு உயருகிறது. இந்த புவி வெப்பமடைதல் என்பது பனியுகத்தில் இருந்து இன்றைய புவி வெப்பநிலைக்கு மாறியபோது இருந்த வெப்பநிலை உயர்வைக் காட்டிலும் இருபது மடங்கு அதிகமாக உள்ளது. கடல் நீரின் வெப்பநிலை கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரு டிகிரி செல்ஸியஸ் அளவு உயர்ந்து உள்ளது. இந்த வெப்பநிலை காரணமாக அதிக அளவு நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்கு செல்லும். இதனால் அதிக அளவு மழை பொழிவு ஏற்படும். இதனால் வெள்ள பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
( தொடரும்... )