factories pollutionவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

1. சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு (EIA-Environmental Impact Assessment) என்றால் என்ன?

இந்தியாவில் பெரு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்க வேண்டுமென்றால் சுற்றுச்சூழல் சட்டம் 1986ன் கீழ் அனுமதி பெற வேண்டும். ஒரு தொழிற்சாலைக்கோ, திட்டத்திற்கோ சூழலியல் அனுமதி வாங்க வேண்டும் என்றால், அந்தத் திட்டம் சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்ந்து அதை அறிக்கையாக அரசுக்கு அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், உங்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகே ஒரு ரசாயன நிறுவனம் கட்டப்பட விருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த தொழிற்சாலை அமையவுள்ள இடம், பரப்பளவு, அதிலிருந்து வெளியேறும் கழிவுகளின் அளவு மற்றும் கழிவின் தன்மை, அதனால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், அருகாமையில் வசிக்கும் மக்களின் உடல் நிலையில் அது ஏற்படுத்தப் போகும் பாதிப்புகள், மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள், இவற்றோடு சூழலியல் பாதிப்புகளைக் களைய சூழலியல் மேலாண்மைத் திட்டம் (EMP-Environmental Management Plan), பாதிப்புகளைக் குறைக்க தணிப்பு நடவடிக்கைகள் (Mitigation Measures), போன்றவற்றை விரிவான ஆய்வு செய்து பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனம் தனது சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசு சார்பில் அமைக்கப் பெற்ற நிபுணர் குழு அதை ஆய்வு செய்து, சுற்றுச் சூழலுக்கு ஆபத்து இல்லாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாத பட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும்.

சூழலியல் அனுமதி பெற தற்பொழுது இருக்கும் EIA 2006 Notification இல் உள்ள நடைமுறைகள் பின்வருமாறு:

தற்பொழுது இருக்கும் 2006 EIA வழிகாட்டுதலின்படி தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் A பிரிவு மற்றும் B பிரிவு என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

A – பிரிவுத் திட்டங்கள்: அணுமின் நிலையங்கள், பெட்ரோல் சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிகல் நிறுவனங்கள், இரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லி தயாரிக்கும் நிறுவனங்கள், எரிவாயுக் குழாய் பதிப்பு, பெரிய அளவிலான சுரங்கப் பணிகள், நிலத்தடி எண்ணெய் - எரிவாயு - நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் உட்பட முக்கியத்துவம் வாய்ந்த, அதே நேரத்தில் சூழலுக்கு அதிகம் கேடு விளைவிக்கக் கூடிய திட்டங்கள் A பிரிவுத் திட்டங்களாக வகைப் படுத்தப்பட்டிருக்கின்றன.

B – பிரிவுத் திட்டங்கள்: 50 ஹெக்டேருக்குக் குறைவான சுரங்கப் பணிகள், 500MW திறனுக்கு உட்பட்ட அனல் மின் நிலையங்கள், சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள், 500 ஹெக்டேர்கள் பரப்பளவிற்குள் இருக்கும் தொழில் மண்டலங்களில் இயங்கும் தொழிற்சாலைகள் முதலிய திட்டங்கள் B பிரிவுத் திட்டங்கள் என வரையறை செய்யப் பட்டிருக்கின்றன.

இவற்றில் A பிரிவுத் திட்டங்களுக்கு மத்திய நிபுணர் குழுவும் (EAC - Environmental Appraisal Committee) B பிரிவுத் திட்டங்களுக்கு மாநில நிபுணர் குழுவும் (SEAC-State Environmental Impact Assessment Committee) மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும்.

A, B எந்தப் பிரிவாக இருந்தாலும் சரி அனைத்துத் திட்டங்களுக்கும் சூழலியல் தாக்க மதிப்பீடும் (EIA) மற்றும் பொதுமக்கள் கருத்துக் கேட்பும் 2006 EIA வில் அவசியமாக இருக்கின்றன.

 2. EIA 2020 புதிய வரைவில் திட்ட வகைப்பாட்டில் (Project Category) செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் என்ன?

தற்போது அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வரைவில் திட்டங்கள் A, B1, B2 என மூன்று பிரிவுத் திட்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இதன் படி,

• A பிரிவுத் திட்டங்களை, மத்திய நிபுணர் குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும். இதற்கு EIA ஆய்வறிக்கை மற்றும் மக்கள் கருத்துக் கேட்பு அவசியம்.
• B1 பிரிவுத் திட்டங்களுக்கு சூழல் தாக்க மதிப்பீடு (EIA) மற்றும் பொது மக்கள் கருத்துக் கேட்பு அவசியம். ஆனால் மாநில நிபுணர் குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும்.
• B2 பிரிவுத் திட்டங்களை மாநில நிபுணர் குழு மதிப்பீடு செய்து அனுமதி வழங்கும். ஆனால் இதற்கு EIA ஆய்வறிக்கையோ, பொது மக்கள் கருத்துக் கேட்போ தேவையில்லை என்று வரையறை செய்யப்பட்டுள்ளது (பத்தி 5.6).

பொது மக்கள் கருத்துக் கேட்பும் சூழல் தாக்க அறிக்கையும் அவசியமில்லை:

முந்தைய சட்டத்தில் சூழலியல் தாக்க மதிப்பீடும், பொது மக்கள் கருத்துக் கேட்பும் அவசியமாக இருந்த 25 சிவப்பு மற்றும் ஆரஞ்சு வகை நிறுவனங்களை தற்பொழுது B2 பிரிவுக்கு மாற்றியிருப்பதன் மூலம் அவைகளைத் தொடங்குவதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்போ, சூழலியல் தாக்க மதிப்பீடோ செய்ய வேண்டியதில்லை என்கிறது இந்த புதிய வரைவு.

இந்த புதிய வரையறையின் படி B2 பிரிவில் குறிப்பிடபட்டிருக்கும் கனிம சுரங்கப் பணிகள் (5 ஹெக்டேர்கள் வரை), 100KM வரையிலான சாலை விரிவாக்கப் பணிகள், உள்நாட்டு நீர் வழிகள், நீர்ப் பாசன நவீன மயமாக்கல் (Modernization), அனைத்துக் கட்டுமானம் மற்றும் நகரியத் திட்டங்கள் (Township projects), அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சிமெண்ட் ஆலைகள், 25MW அளவிலான புனல் மின்சாரத் திட்டங்கள், தொழிற்பேட்டைகளில் (Industrial Estates) இயங்கும் தோல் தொழிற்சாலைகள் மற்றும் முக்கியமாக நீருக்கடியிலும் பூமிக்கடியிலும் இருக்கும் எரிவாயு - நிலக்கரி - எண்ணெய் வளங்கள் - நிலக்கரி படிம மீத்தேன் எடுத்தல் (off shore and onshore oil & gas including Coal bed methane and shale gas exploration) ஆகிய திட்டங்களுக்கு EIA வும் கருத்துக் கேட்பும் அவசியமில்லை (அட்டவணை பக்கம் 123).

தமிழ் நாட்டு மக்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் கடலூரில் இருந்து ராமநாதபுரம் வரை காவிரிப் படுகையில் நிலத்தடியிலும் நீருக்கடியிலும் இவர்கள் போடப் போகும் ஆயிரக்கணக்கான ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதியைப் பெற பொது மக்கள் கருத்துக் கேட்போ, சூழலியல் தாக்க மதிப்பீடோ தேவையில்லை. கடந்த ஜனவரி மாதம் இவர்கள் கொண்டு வந்த சட்டத் திருத்தமும் தற்பொழுது கொண்டு வந்திருக்கும் EIA2020 வரைவும் இதையேதான் சொல்கிறது.

விலக்களிக்கப்பட்ட ஆபத்தான திட்டங்கள்:

நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பனை சுத்திகரிக்கும் தொழிற்சாலையையும் (development production and transportation of gas including shale gas and Coal bed methane), எண்ணெய் வளங்களை சுத்திகரிக்கும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையையும் விட (Petroleum refining industries) அதை நிலத்தடியில் இருந்து எடுக்கும் (exploration) நீரியல் விரிசல் (Fracking) முறையே மிகவும் ஆபத்தானது. எடுக்கப்படும் எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைச் சுத்திகரிக்கும் நிறுவனங்களைத் துவங்க சூழலியல் தாக்க மதிப்பீடும், பொது மக்கள் கருத்துக் கேட்பும் அவசியம் என்று சொல்லி A பிரிவில் வைத்துவிட்டு, மிகவும் ஆபத்தான பூமிக்கடியில் இருந்து எரிவாயு - நிலக்கரி - எண்ணெய் வளங்கள் - நிலக்கரிப் படுகை மீத்தேன் எடுப்பதற்கு EIA & மக்கள் கருத்துக் கேட்பு தேவை இல்லை என்று B2 பிரிவில் சேர்த்திருப்பது முரண்பாட்டின் உச்சம்.

ஜனநாயக உரிமை மறுப்பு:

மக்கள் எவ்வளவு எதிர்ப்பு தெரிவித்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் EIA 2020 சட்டத்தின் அடிப்படையில் சட்டப்படி(!) திட்டத்தை அமல்படுத்தும் முழு அதிகாரத்தை அரசு பெறுகிறது. இத்திட்டங்களுக்கு சூழலியல் அனுமதி கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி தனி நபரோ அல்லது அமைப்புகளோ இயக்கங்களோ நீதிமன்றம் செல்ல முடியாதபடி புதிய வரைவில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக தேச நலன், பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள் (projects concerning national defense and security or involving other strategic considerations) மற்றும் கடலில் 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் செயல் படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்தவோ, பொது மக்கள் கருத்துக் கேட்கவோ தேவையில்லை என்றும் சொல்கிறது புதிய வரைவு. இந்த வரையறையின் கீழ், கடல் வளத்தை அழிக்கும் சாகர்மாலா திட்டமும், நாட்டின் லட்சிய திட்டமாக பா.ஜ.க அரசால் கருதப்படும் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் வரும் எட்டு வழி சாலைத் திட்டமும், தமிழகத்தை இராணுவ கேந்திரமாக்கும் திட்டமும், ஏன் நம் மலை வளத்தை நாசமாக்கத் துடிக்கும் நியூட்ரினோத் திட்டமும் கூட இதன் அடிப்படையில் மக்கள் கருத்துக் கேட்பு இல்லாமல் நடைமுறைப் படுத்தப்பட்ட வாய்ப்பிருக்கிறது.

இதே போன்று இந்திய எல்லைப் பகுதிகளில் இருந்து 100km வான் தூரம் (aerial distance) வரையிலான நிலப் பகுதிகளில் வர இருக்கும் தேசிய நெடுஞ்சாலை, குழாய் பதிப்புத் திட்டங்களுக்கு கருத்துக் கேட்பு தேவையில்லை என்று புதிய EIA வரைவில் பத்தி 14.2 இல் குறிப்பிட்டிருப்பது, குறிப்பாக வட கிழக்கு மாநிலங்களில் வாழும் மக்களுக்கு அவர்களின் இயற்கை வளங்களையும் வாழ்வாதாரத்தையும் கடுமையாக அச்சுறுத்தும் ஒன்றாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அதே போல் பெரிய அளவிலான சூரிய ஆற்றலில் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் பூங்கா திட்டங்களுக்கு EIA வில் இருந்தும் மக்கள் கருத்துக் கேட்பில் இருந்து விலக்கு அளித்திருக்கிறது புதிய வரைவு (பத்தி 26.14). புதுப்பிக்கத் தக்க மின்சாரமாக இருப்பினும் மையப்படுத்தப்படாத மின் சக்தியே வேண்டுமென்று சூழலியலாளர்கள் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், இது போன்ற பெரிய அளவிலான சூரிய மின்சாரத் திட்டங்களுக்கு அதிகப்படியான விவசாய நிலங்களே கையகப்படுத்தப்படும். ராமநாதபுரத்தில் அதானி துவங்க இருக்கும் 4500 கோடி ரூபாய் சூரிய ஆற்றல் மின்சார உற்பத்தி திட்டத்திற்காக விவசாய நிலங்கள் கையகப் படுத்துவதை எதிர்த்து அப்பகுதி விவசாயிகள் போராடி வருவது இங்கே குறிப்பிடத் தக்கது.

ஆபத்தான தொழிற் சாலைகளுக்கு வரவேற்பு:

பூச்சிக் கொல்லி தயாரிக்கும் தொழிற்சாலைகளை A பிரிவில் இருந்து B1 பிரிவுக்கு மாற்றியதன் மூலம் சூழலியல் பாதுகாப்பு முக்கியத்துவம் வெகுவாக குறைக்கப் பட்டிருக்கிறது. இந்தியாவின் மிக மோசமான தொழிற்சாலை விபத்தான போபால் விஷவாயு பேரிடர் நடந்த யூனியன் கார்பைடு நிறுவனம் ஒரு பூச்சிக் கொல்லி தயாரிக்கும் நிறுவனம் என்பதனை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது.

ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் தொழிற்சாலைகள் கூடுதல் விரிவாக்கம் செய்யவோ அல்லது தங்களது உற்பத்தி முறையினை நவீனப்படுத்துவதாக இருந்தாலோ அந்த மாறுதல் மொத்த உற்பத்தியில் 50% க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் அந்த விரிவாக்கத்திற்கான சூழலியல் அனுமதி பெற மக்கள் கருத்துக் கேட்பு தேவையில்லை என்று புதிய வரைவின் பத்தி 16.1 சொல்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், ஏற்கனவே மக்களையும் சூழலையும் பாதித்துக் கொண்டிருக்கும் Sterlite ஆலை விரிவாக்கம் செய்து கூடுதலாக உற்பத்தி செய்வதாக இருந்தால் அதற்கு மக்கள் கருத்துக் கேட்பு இல்லாமலே விரிவாக்கத்திற்கான அனுமதி வழங்கப்படும்.

Draft EIA 2020 இருக்கும் மற்ற முக்கிய பிரச்சனைகள்:

1. நீர்த்துப் போகும் பொது மக்கள் கருத்து கேட்பு நடைமுறை:

i.) ஒரு திட்டத்தின் மீது மக்கள் கருத்து சொல்லும் கால அவகாசம் 30 நாட்களில் இருந்து 20 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

ii.) மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதற்கான கால அவகாசம் 45 நாட்களில் இருந்து 40 நாட்களாக குறைக்கப் பட்டுள்ளது. (Appendix-1 பத்தி 7.1)

மக்களின் கருத்துகளைக் கேட்டறிய உரிய கால அவகாசம் வழங்கப்படாமல் போனால் திட்டத்தினால் பாதிக்கப்படப் போகும் மக்கள் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளவும், தங்கள் சந்தேகங்களைக் கேட்கவும், பரிந்துரைகளை முன் வைக்கவும், பிரச்சனைகளைச் சொல்லவும் அவகாசம் கொடுக்காமலேயே கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டால் அதன் நோக்கமே முழுமை அடையாது. அரசு முன்னெடுக்கும் கனிமச் சுரங்கங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், வனங்களை அழிக்கும் நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்தப் போகும் இடங்களில் வசிக்கும் மக்கள் (குறிப்பாகப் பழங்குடியினர்) தகவல் மற்றும் தொலைத் தொடர்பில் பின்தங்கி இருக்கும் நிலையில், கருத்துக் கேட்பின் கால அவகாசத்தைப் குறைப்பதென்பது இந்தியாவின் விளிம்பு நிலை மக்களின் ஜனநாயக உரிமையை முற்றிலும் மறுப்பதற்குச் சம்மாகும்.

2. வலுவிழக்கும் கண்காணிப்பு நடைமுறைகள் :

EIA வைப் பொருத்தவரை சூழலியல் அனுமதிக்குப் பிறகான கண்காணிப்பு நெறிமுறைகள் சூழலியல் பாதுகாப்பில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒரு நிறுவனம் தான் சூழலியல் அனுமதி பெறும் பொழுது தனது சூழலியல் மேலாண்மைத் திட்த்தில் குறிப்பிட்டவாறு நடந்து கொள்கிறதா என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தாங்கள் எந்த சூழலியல் சீர்கேடும் செய்யவில்லை என்பதை அறிக்கையாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

இப்படி 6 மாதங்களுக்கொரு முறை சூழலியல் இணக்க (Compliance) அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று இருந்ததை தற்பொழுது இந்த புதிய EIA 2020 வரைவின் மூலம் 1 வருடத்திற்கு ஒருமுறை என்று நீட்டித்துள்ளார்கள் (பத்தி 20.4). இதனால் ஒரு நிறுவனம் ஒரு வருடத்திற்கு தொடர்ந்து சூழல் சீர்கேட்டில் ஈடுபட்டாலும் அதிகாரிகளின் பார்வைக்கு அது வருடம் முடியும் வரை வராமல் போவதற்கான வாய்ப்புள்ளது. இங்கே கனிமச் சுரங்கம் போன்ற ஒரு செயல்பாட்டில் ஒரு வருடத்திற்கு விதிகளைப் பின்பற்றாமல் தொடர்ந்து இயங்கி வந்தால் அது திரும்பச் சரி செய்ய முடியாத சூழலியல் சீர்கேட்டிற்கு வழி வகுத்துவிடும் என்பதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

3. சூழலியல் அனுமதி உரிமத்தின் கால அவகாசத்தை கூட்டுதல்:

சுற்றுச் சூழல் அனுமதி (EC) வாங்கிய பின்னர் திட்டப் பணிகளை நடை முறைப்படுத்துவதற்கான கால அவகாசம் புதிய வரைவில் நீட்டிக்கப்பட்டுள்ளது (பத்தி 19.1.I). உதாரணமாக, சுரங்கப் பணிகளின் கட்டுமானம் மற்றும் ஆரம்பக் கட்டப் பணிகளுக்கான 30 வருட கால அவகாசத்தை 50 வருடங்களாக உயர்த்தி இருக்கிறார்கள். அதே போன்று ஆற்றுப் படுகை மற்றும் அணுவுலைத் திட்டங்களை நடைமுறைப் படுத்த 5 வருடங்களாக இருக்கும் தற்போதைய கால அளவை 15 வருடங்களாக உயர்த்தி இருக்கிறார்கள். தற்பொழுது இருக்கும் சூழலியல் தன்மையை வைத்து கொடுக்கப்படும் சூழலியல் அனுமதி 15 வருடங்களுக்கு பின்பும் அப்படியே பொருந்தும் என்பது எவ்வளவு தவறானது? இது நிச்சயம் சூழலியலில் சரி செய்ய முடியாத பாதிப்பினை ஏற்படுத்தும்.

4. சூழலியல் தாக்க மதிப்பீட்டின் தரத்தை குறைத்தல்:

i.) A பிரிவுத் திட்டங்களுக்கான சூழலியல் தாக்க மதிப்பீடு செய்யும் பொழுது 10 கிமீ சுற்றளவில் ஆய்வுகள் செய்யவும், B பிரிவுத் திட்டங்களுக்கு 5 கிமீ சுற்றளவில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் புதிய வரைவு பரிந்துரைக்கிறது. சூழலியல் தாக்கம் என்பது ஒவ்வொரு திட்டத்தின் அளவு, கழிவின் தன்மை, திட்டம் செயல்படுத்தும் பகுதியின் சூழலியல் முக்கியத்துவம் ஆகியற்றைப் பொருத்து மாறுபடும் என்பதால் அனைத்துத் திட்டங்களுக்கும் ஒரே வரையறையினை வைப்பது சரியாகாது.

உதாரணமாக எண்ணூர் அனல் மின் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக சூழலியல் தாக்க மதிப்பீடு செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் அனல் மின் நிலையத்தின் நுண் துகள்களினால் (Particulate matter) ஏற்படும் பாதிப்புகள் 25 கிமீ தாண்டியும் உணரப்படும் என்பதால், 10 கிமீக்கு மட்டும் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது முற்றிலும் தவறாகி விடும்.

ii.) சூழலியல் தாக்க மதிப்பீடு ஆய்விற்கான அடிப்படைத் தகவல்களை (Base line data) சேகரிக்கும் போது வெறும் ஒரு பருவத்திற்கான (season) தகவல்கள் போதுமானது என்கிறது புதிய வரைவு. ஆனால் உண்மையில் கோடை காலம், குளிர் காலம், பருவமழைக் காலம் என அனைத்துப் பருவங்களிலும் ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கும் போதுதான் திட்டத்தினால் ஏற்பட இருக்கும் சூழலியல் தாக்கத்தினை முழுமையாகக் கணிக்க முடியும்.

iii.) முந்தைய சட்டத்தின் படி நிபுணர் குழுவானது திட்டம் எந்தப் பிரிவின் கீழ் வருகிறது என்பதனை ஆராய்ந்து பரிசீலித்து உறுதி செய்வார்கள். சில சமயம் B பிரிவில் வரையறை செய்யப்பட்டிருக்கும் திட்டங்கள் கூட தேர்வு செய்யப்படும் இடம், அதன் சூழலியல் தாக்கம் ஆகியவை கருத்தில் கொண்டு A பிரிவிற்கு மாற்றப்படும். ஆனால் தற்பொழுது திட்டத்தின் பிரிவுகளைப் பரிசீலித்து உறுதிப் படுத்தும் நடைமுறை நீக்கப்பட்டு அனைத்துத் திட்டங்களும் முன் கூட்டியே வரையறை செய்யப்பட்டு விடுகிறது. இந்த மேம்போக்கான சூழலியல் பார்வை நிச்சயம் சூழலியல் சீர்கேட்டிற்கே வழி வகுக்கும்.

iv.) தொழிற் பேட்டைகளுக்குள் அமைந்திருக்கும் MSME (சிறு மற்றும் குறும் தொழில்கள்) அளவுகோலிற்குள் வரும் தொழிற்சாலைகளை B2 பிரிவு எனப் புதிய EIA2020 வரைவு குறிப்பிடுவதின் மூலம் அந்தத் தொழிற்சாலைகளுக்கு சூழல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டாம் என்கிறது. உண்மையில் MSME (Medium-Small-Micro-Enterprises) என்பது அந்தத் தொழிலின் முதலீட்டை மையமாக வைத்து வரையறை செய்யப்படுவது. முதலீடு குறைவாக இருப்பதனால் அந்த நிறுவனம் குறைவாக கழிவுகளை வெளிப்படுத்தும் என்பது கிடையாது. உதாரணத்திற்கு MSME வரையறைக்குள் வரும் சாயப்பட்டறைகள் நீர் நிலைக்கு அருகாமையில் அமைக்கப் பெற்றால் அது மோசமான சூழலியல் சீர்கேடு நடக்கக் காரணமாகி விடும்.

5. புகார் விதிமுறைகள் :

EIA 2020 வரைவில் தொழிற்சாலையின் சூழலியல் விதி மீறல்களை யார் யார் புகார் அளிக்கலாம் என்று விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் வந்த எந்த EIA சட்ட நடைமுறையிலும் இப்படி இல்லை.

i.) திட்டத்தை செயல்படுத்தக் கூடியவர்கள்
ii.) ஏதாவது அரசுத் துறையினர்
iii.) ஆய்வுக் குழுவோ மதிப்பீட்டுக் குழுவோ ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது.
iv.) ஏதாவது ஒரு ஒழுங்கு முறை விண்ணப்பத்தை செயலாக்க மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் சமயத்தில் தெரிய வந்தால்..

இவர்கள் எல்லாம் இது குறித்து சொல்லலாம் என்று EIA 2020 வரைவின் பத்தி 22.1ல் “DEALING OF VIOLATION CASES” என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு மற்ற சாமானியர்கள் புகார் அளிக்க முடியாது என்பது தான் அர்த்தம்.

6. தொழிற்சாலைகளின் விதி மீறல்களை தெரியப்படுத்துதல்:

திருடன் கையிலே சாவியைக் கொடுத்தது போல, தொழிற்சாலைகளில் நடந்த சீர்கேடுகளை சம்பந்தப்பட்ட நிறுவனமே மாசுக் கட்டுபாட்டு வாரியத்திடம் தெரியப் படுத்தினால் அபராதம் குறைப்பு செய்யப்படுவதாக புதிய EIA வரைவு சொல்கிறது (பத்தி 22.7). இதனால் விதிமீறல்களை தொழிற்சாலைகள் தெரிவிக்கும் பொழுது அதனைக் குறைத்து, கணக்குக் காட்டித் தப்பித்துக் கொள்ளவே இது வழிவகுக்கும். அரசாங்கத்தின் தீவிர கண்காணிப்பு மட்டுமே இதற்கான தீர்வாக அமையும்.

7. திட்டத்தின் சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான பிரத்யேக வழிமுறைகளை வகுத்தல் (SCOPING):

தற்பொழுதுள்ள 2006 EIA விதிமுரைகளின் படி சூழலியல் அனுமதிக்காக விண்ணப்பிக்கும் பொழுது, குறிப்பிட்ட திட்டத்திற்காக TOR-Terms Of Reference என்று சொல்லப்படக் கூடிய பிரத்தியேக ஆய்வு வரைமுறைகளை வழங்குவார்கள். இது ஒவ்வொரு திட்டத்தையும் தொழிற்சாலையையும் பொருத்து மாறுபடும். ஆனால் புதிய EIA 2020 வரைவிலோ அப்படி பிரத்தியேகமாக TOR விதிமுறைகளை வழங்காமல் மொத்தமாக அந்தப் பிரிவின் கீழ் வரும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் சேர்த்து ஒரே முன்கூட்டியே வரையறை செய்யப்பட்ட TOR அறிக்கையை வெளியிடும். உதாரணமாக விண்ணப்பித்திருப்பது ஒரு இரசாயன ஆலை என்றால் மொத்தமாக எல்லா இரசாயன ஆலைகளுக்குமான TOR ஐ பயன்படுத்தி சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கும். இது சூழலியல் தாக்க மதிப்பீடு முறையை மேலும் வலுவிழக்கச் செய்யும்.

8. திட்ட செயல்பாட்டிற்கு பிந்தைய சூழலியல் அனுமதி (Post Facto Clearance):

முன்பெல்லாம் சூழலியல் அனுமதி பெற்ற பிறகு தான் ஒரு திட்டத்தையோ தொழிற்சாலையையோ துவக்க முடியும். ஆனால் தற்போதைய வரைவு ஒரு தொழிற்சாலை அதற்கான சூழலியல் அனுமதி பெறுவதற்காக காத்திருக்காமல் தொழிற்சாலையை துவங்கிவிட்டு அதற்கான அபராதத்தையும் கட்டிவிட்டு பின்னர் சூழலியல் அனுமதியைப் பெறும் நடைமுறையை அறிமுகப் படுத்தியுள்ளது. இதே போன்று முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை நீண்ட நாட்கள் காக்க வைக்கக் கூடாதென்பதற்காக சூழலியல் அனுமதி வழங்குவதற்கான கால அவகாசம் கணிசமாகக் குறைக்கப் பட்டுள்ளது. இவை EIA சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.

இப்படியாகத் தொழில் நிறுவனங்கள் இலாபமீட்டவும், எளிமையாக தொழில் செய்வதற்காகவும் முதலாளிகளின் காத்திருப்பு காலத்தைக் குறைக்கவும் சூழலியல் பாதுகாப்பிலும் நாட்டின் நீடித்த வளர்ச்சிக் கொள்கையிலும் சமரசம் செய்யும் இந்த EIA 2020 வரைவு நிச்சயம் இந்த நாட்டின் இயற்கை வளத்திற்கும், மக்களின் நலத்திற்கும் பேராபத்து.

பிரச்சனைகளை வரும் முன்னர் நம்முடைய அரசுகள் செயல்பட்டதற்கான தரவுகள் இல்லை. 1984 ஆம் ஆண்டு போபால் விபத்திற்கு பிறகுதான் 'சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம்' 1986 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் சுனாமியால் ஏற்பட்ட அழிவிற்கு பிறகு 'பேரிடர் மேலாண்மை சட்டம்' இயற்றப்பட்டது.

கொரோனா போன்ற தொற்றுகள் அதிகமாவதற்குக் காரணம், காலநிலை மாற்றமும், காடுகள் அழிக்கப்படுவதும் தான் என உலகம் முழுவதிலும் வல்லுநர்கள் தெரிவித்த பிறகு உலக நாடுகள் தங்களுடைய சூழல் சட்டங்களையும், விதிகளையும் மேலும் கடுமையாக்கி வருகின்றன. ஆனால் இந்தியா தான் "தொழில்களை இலகுவாக நடத்த வேண்டும்" என்பதற்காக ஏற்கனவே நீர்த்துப் போய் உள்ள சட்டங்களை மேலும் நீர்த்துப் போகச் செய்ய #EIA2020 போன்ற அறிவிக்கைகளை வெளியிடுகின்றன.

#ScrapEAI2020

- பூவுலகின் நண்பர்கள்